கோக-கோலா பானங்களில் நச்சுப்பொருள் வரம்பளவு மீறப்படவில்லை: கோக் தகவல்
புதுதில்லி, ஆக. 12: ஐரோப்பிய ஒன்றியம் நிர்ணயித்துள்ள தரமுறைகளின்படி பார்த்தால் கோக-கோலா பானங்களில் நச்சுப் பொருள்களின் வரம்பளவு மீறப்படவில்லை என கோக் கூறியுள்ளது.
கோக், பெப்சி உள்ளிட்ட 14 வகையான பானங்களில் நச்சுப்பொருள்களின் அளவு அனுமதிக்கப்பட்டதை விட அதிகமாக உள்ளதாக தகவல்கள் வெளியானதை அடுத்து ராஜஸ்தான், பஞ்சாப், கர்நாடகம் உள்ளிட்ட பல மாநில அரசுகள் இந்த பானங்களுக்கு தடை விதித்தன. கேரளத்தில் உற்பத்தி, விற்பனை இரண்டுக்குமே தடை விதிக்கப்பட்டது.
இதையடுத்து கோக் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “ஐரோப்பிய ஒன்றிய தரநிர்ணயத்தின் படி, தனியே ஆய்வகங்களில் நடத்திய சோதனைகளில் இந்திய மென் பானங்களில் கண்டறியத்தக்க அளவு நச்சுப் பொருள்கள் இல்லை’ எனக் கூறியுள்ளது.
“பிரிட்டிஷ் அரசின் ஆய்வகமான மத்திய அறிவியல் ஆய்வகத்தில் (சிஎஸ்எல்) மென்பானங்கள் தொடர்ச்சியாகப் பரிசோதிக்கப்பட்டு உறுதிப்படுத்தப் படுகின்றன’.
“உலகம் முழுவதும் பின்பற்றுவதைப் போலவே இந்தியாவிலும் எங்களது பானங்களில் பாதுகாப்பு, தரம் விஷயத்தில் சமரசத்துக்கு இடமில்லாமல் செயல்படுவதாக’ கோக் கூறியுள்ளது.