உறுத்து வந்து ஊட்டும் ஊழல் வினை!
க. ரகுநாதன்
வங்கதேசத்தின் முன்னாள் பிரதமர்கள் ஷேக் ஹசீனா, கலீதா ஜியா, பிலிப்பின்ஸின் முன்னாள் அதிபர் ஜோசப் எஸ்ட்ரடா, தாய்லாந்தின் முன்னாள் பிரதமர் தக்ஷின ஷினவத்ரா – இவர்கள் அனைவருக்கும் ஓர் ஒற்றுமை உண்டு. எல்லோரும் அந்தந்த நாடுகளின் இப்போதைய அரசுகளால் ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளானோர்.
இவர்களுள் தக்ஷின ஷினவத்ரா தவிர மற்ற மூவரும் ஊழல் குற்றச்சாட்டு காரணமாக கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதற்கு அரசியல் ரீதியாக பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும் வெளிப்படையான காரணமாக இருப்பவை – ஊழல் மற்றும் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துதல் ஆகியவையே.
வங்கதேசத்தின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா தமது ஆட்சிக்காலத்தில் தஜுல் இஸ்லாம் ஃபரூக் என்ற தொழிலதிபரை மிரட்டி சுமார் 4 லட்சத்து 41 ஆயிரம் டாலர்கள் பெற்றது, எதிர்க்கட்சியினரைக் கொலை செய்யத் திட்டமிட்டது உள்ளிட்ட புகார்களின் பேரில் கைது செய்யப்பட்டார்.
கலீதா ஜியா தமது இளைய மகன் அராஃபத் ரஹ்மான் கோகோவின் நிறுவனத்துக்கு அதிகாரத்தை, தவறாகப் பயன்படுத்தி சலுகை வழங்கியதாக அந்நாட்டு இடைக்கால அரசால் கைது செய்யப்பட்டார்.
தாய்லாந்தின் ஷின் கார்ப்பரேஷன், தொலைபேசி சேவை உள்பட பல்வேறு தொழில்களைக் கொண்ட மிகப்பெரிய நிறுவனம். இது அந்நாட்டின் முன்னாள் பிரதமர் தக்ஷின ஷினவத்ராவின் குடும்பத்துக்குச் சொந்தமானது. இதை விற்றபோது 190 கோடி டாலர்கள் வரிஏய்ப்பு செய்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து நடந்த பல்வேறு அரசியல் குழப்பங்கள், எதிர்ப்பை அடுத்து, கடந்த ஆண்டு ராணுவப் புரட்சி மூலம் ஆட்சியில் இருந்து தூக்கி எறியப்பட்டார் ஷினவத்ரா. ராணுவ வீரர்களுடன் நின்று புகைப்படம் எடுத்துக் கொள்ளும் அளவுக்கு ராணுவப் புரட்சிக்கு மக்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்தது.
எல்லோருக்கும் உண்டு அரசியல் ஆசை; குறிப்பாக, திரைப்பட நடிகர்களுக்கு. சினிமாவில் சூப்பர் ஸ்டாராக இருந்து அரசியல் ஆசையில் களம் கண்டு வெற்றியும் பெற்று இறுதியில் வீழ்ந்தவர் பிலிப்பின்ஸின் முன்னாள் அதிபர் ஜோசப் எஸ்ட்ரடா (70). அண்மையில் அந்நாட்டு நீதிமன்றம் அவருக்கு ஆயுள்தண்டனை விதித்தது; அதுமட்டுமன்றி, அவர் இனி எந்த ஒரு பதவியையும் வகிக்க முடியாதபடி தடை விதிக்கப்பட்டது.
பிலிப்பின்ஸின் ஏழைப் பங்காளனாகவே பார்க்கப்பட்டவர் ஜோசப் எஸ்ட்ரடா. ஏழ்மையில் இருக்கும் ஒவ்வொரு பிலிப்பின்ஸ் குடிமகனுக்கும் எஸ்ட்ரடாவைத் தெரியும் என்பார்கள். காரணம், சுமார் 100 திரைப் படங்களில் ஏழைகளின் பாதுகாவலனாக நடித்து அதன்மூலம் சூப்பர் ஸ்டாராக வலம் வந்தவர் அவர்.
அவருக்கும் வந்தது அரசியல் ஆசை!. 1969-ம் ஆண்டு தலைநகர் மணிலா அருகே உள்ள ஸôன் ஜுவான் நகரத்தின் மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது துவங்கியது அவரது அரசியல் பயணம். ஏறக்குறைய 16 ஆண்டுகள் அந்நகரின் மேயராக இருந்தார்.
அடுத்து அவர் வைத்த குறி, அதிபர் பதவி. 1998-ம் ஆண்டு நடந்த தேர்தலில், நம் ஊர் போலவே அதிக வாக்கு வித்தியாசத்தில் அவரை வெற்றிபெறச் செய்து அதிபர் பதவி அளித்தனர் அந்நாட்டு மக்கள்.
பதவிக்கு வரும் வரை ஏழைப் பங்காளனாக இருப்பேன் என்று கூறுவோர், பதவி கிடைத்தும் பின் ஊழல், அதிகார துஷ்பிரயோகத்தில் திளைப்பது வழக்கம்தான். இதற்கு இந்த முன்னாள் நடிகர் ஜோசப் எஸ்ட்ரடாவும் விதிவிலக்கல்ல.
நாட்டில் சட்டவிரோதமாக நடந்த சூதாட்டத்தை ஆதரித்தார் எஸ்ட்ரடா. சூதாட்டக்காரர்கள் வென்ற பணத்தில் இருந்து 80 லட்சம் அமெரிக்க டாலரை அவர் லஞ்சமாகப் பெற்றார். “அதை நான் வாங்கிக் கொடுத்தேன்’ என அந்நாட்டின் மாகாண ஆளுநர் லூயிஸ் ஸிங்ஸன் கூறியபோதுதான் வந்தது வினை. புகையிலை விவசாயிகள் கூட்டுறவு சங்கத்துக்கான அரசு மானியத்தில் 26 லட்சம் டாலர் ஊழல் செய்ததாகவும் எஸ்ட்ரடா மீது புகார் எழுந்தது.
இதையடுத்து 2000-ம் ஆண்டு எஸ்ட்ரடாவைப் பதவிநீக்கம் செய்ய முயன்றது பிலிப்பின்ஸ் நாடாளுமன்றம். எனினும் அது நிறைவேறவில்லை.
2001-ம் ஆண்டு ராணுவம் அவரைப் பதவியில் இருந்து விரட்டிவிட்டு, துணை அதிபர் குளோரியா மகபாகல் அரோயாவை அதிபர் ஆக்கியது.
மொத்தம் 8 கோடி டாலர் ஊழல் தொடர்பாக நடந்த வழக்கில் எஸ்ட்ரடாவுக்கு 40 ஆண்டு சிறைத்தண்டனை வழங்கியுள்ளது அந்நாட்டு நீதிமன்றம். பிலிப்பின்ஸின் முன்னாள் அதிபர் ஃபெர்டினாட் இமானுவல் மார்கோஸ், வங்கதேசத்தின் முன்னாள் ராணுவத் தளபதியும் அதிபருமான எர்ஷாத், தனது அமைச்சரவை சகாக்களின் மீதான ஊழல் புகார்களை அடுத்து அண்மையில் ராஜிநாமா செய்த ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே, பெரு நாட்டில் மனித உரிமை மீறல் மற்றும் ஊழல் செய்தததை அடுத்து, சிலியில் தஞ்சம் புகுந்து, அந்நாட்டு நீதிமன்றத்தால் அண்மையில் வெளியேற்றப்பட்ட பெரு நாட்டின் முன்னாள் அதிபர் அல்பெர்ட்டோ ஃபுஜிமோரி என – பலரைக் குறிப்பிடலாம். ஊழல் விஷயத்தில் நம் நாட்டின் தலைவர்கள் பற்றி நீண்ட பட்டியலே போடலாம்!.
நல்லவர்களாகத் தெரியும் இத் தலைவர்கள் ஆட்சிக்கு வந்தால் வல்லவர்களாக இருப்பர். நம்மைச் சூழ்ந்துள்ள இன்னல்களைக் களைவர் என்று நம்பும் சாதாரண மக்களின் நம்பிக்கை சிதைக்கப்படும் போது அவர்களுக்கு ஆறுதலாக இருப்பது இதுபோன்ற நீதிமன்றத் தீர்ப்புகளே.
முன்னர் செய்த செயலுக்குரிய விளைவுகள் ஒருவனை வந்தடைந்தே தீரும் என்பதற்காக “ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும்’ என்றது சிலப்பதிகாரம். ஊழ்வினை மட்டுமல்ல, “ஊழல்’ வினையும்தான் உரிய தண்டனையைப் பெற்றுத் தரும்.