தமிழகத்தில் பிரபலமாகாத சுற்றுலாத் தலங்கள்- அரசு புது முடிவு
தமிழகத்தில் நன்கு அறிமுகமில்லாத 18 சுற்றுலாத் தலங்களை பிரபலப்படுத்த தமிழக அரசு புதிய முடிவு எடுத்துள்ளது.
இச் சுற்றுலாத் தலங்களில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த முன்வரும் தனியார் தொழில் அதிபர்களுக்கு ரூ. 1 கோடி வரை மானியம் வழங்க அரசு முடிவு செய்துள்ளது.
27.09.2007-அன்று இதற்கான உத்தரவை அரசு வெளியிட்டதாக சுற்றுலாத் துறை செயலர் வெ. இறையன்பு தெரிவித்தார்.
மேலும் அவர் கூறியது: உதகை, கொடைக்கானல் போன்ற சுற்றுலாத் தலங்கள் நன்கு பிரபலமானவை. ஆனால் அதைப்போல் நல்ல கோடை வாசஸ்தலங்கள் தமிழகத்தில் நிறைய உள்ளன இங்கு ஆண்டு முழுவதும் நல்ல தட்ப வெட்பம், சுற்றுச்சூழல் நிலவுகின்றன. ஆனால் இவை மக்களிடம் பிரபலமாகவில்லை.
தற்போது அரசு இதுபோன்ற 18 சுற்றுலாத் தலங்களை தேர்ந்தெடுத்து அவற்றை பிரபலப்படுத்த முடிவு செய்துள்ளது. இங்கு பயணிகள் தங்கிச் செல்லும் வகையில் ஹோட்டல் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்படும்.
பிரபலப்படுத்தவுள்ள சுற்றுலா தலங்கள்:
- பெரியபாளையம் மற்றும்
- பழவேற்காடு (திருவள்ளூர் மாவட்டம்),
- ஏலகிரி (வேலூர்),
- திருக்கடையூர்,
- வேதாரண்யம் மற்றும்
- தரங்கம்பாடி (நாகப்பட்டினம்),
- திருமணஞ்சேரி (தஞ்சை),
- சித்தனவாசல் (புதுக்கோட்டை),
- புளியஞ்சோலை (பெரம்பலூர்),
- தாரமங்கலம் (சேலம்),
- கொல்லிமலை மற்றும்
- ஒகேனக்கல் (தருமபுரி),
- பவானி கூடுதுறை (ஈரோடு),
- வால்பாறை (கோயம்புத்தூர்),
- மேகமலை (தேனி),
- சிறுமலை (திண்டுக்கல்),
- திருப்புடைமருதூர் (திருநெல்வேலி),
- திருப்பரப்பு (கன்னியாகுமரி).
மேற்கண்ட சுற்றுலாத் தலங்களில் பொழுதுபோக்கு பூங்காக்கள், கோல்ஃப் மைதானம், ரோப் கார், படகுத்துறை உள்ளிட்ட சுற்றுலாத் திட்டங்களை செயல்படுத்தும் தொழில் முனைவோருக்கு மொத்த முதலீட்டில் 10 சதவீத மானியம், அதாவது ரூ. 1 கோடிக்கு மிகாமல் மானியம் வழங்கப்படும்.
மேலும், பாரம்பரிய மிக்க கட்டடங்களைப் பாதுகாப்பது, ஸ்டார் ஓட்டல்கள் கட்டுவது ஆகியவற்றுக்கும் மானியம் தரப்படும்.
புதிய சுற்றுலாத் தலங்களை பிரபலப்படுத்துவதன் மூலம் அப் பகுதி மக்களுக்கு வேலைவாய்ப்பும், பொருளாதார முன்னேற்றமும் உறுதி செய்யப்படும்.
இந்த 18 சுற்றுலாத் தலங்களை காலண்டரில் அச்சடித்து வடமாநில ஹோட்டல்களுக்கும், சுற்றுலா வழிகாட்டிகளுக்கும் விநியோகிக்க உள்ளோம்.
மாஸ்டர் பிளான்
தமிழக சுற்றுலா துறையில் தனியார் துறையினரை ஈடுபடுத்தும் முக்கிய முடிவை கடந்த ஆண்டு அரசு வெளியிட்டது.
அதன்படி தமிழக சுற்றுலா மையங்களை வெளிநாட்டில் மிகப்பெரிய அளவில் பிரபலப்படுத்த மாஸ்டர் பிளான் தயாரிக்கப்பட்டுள்ளது.
கடந்த நிதி ஆண்டில் தமிழக சுற்றுலா துறை மேம்பாட்டுப் பணிகளுக்கு ரூ. 12 கோடி செலவிடப்பட்டது. இந்த ஆண்டு நவம்பர் வரை ரூ. 6 கோடி வழங்கப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன என்றார் இறையன்பு.