Archive for the ‘Performers’ Category
Posted by Snapjudge மேல் பிப்ரவரி 4, 2008
ஆவணம்: நாடக இராமானுஜம்!
நாடகங்கள் என்றதும் சபா நாடகங்கள்தான் ஞாபகத்துக்கு வருகின்றன. நவீன நாடகங்கள் என்ற பிரயோகம் சிலருக்கு அறிமுகமாகியிருக்கலாம்.
“”நடிப்பவர் தனியாகவும் பார்வையாளர் தனியாகவும் இரண்டு பகுதிகளாகச் செயல்படுவதை நவீன நாடகங்கள் மாற்றுகின்றன. சொல்லப் போனால் பார்வையாளர்களையும் அந்த நாடகத்தின் ஓர் அங்கமாகவும் அவர்களையும் படைப்பாளியாகவும் மாற்றும் சக்தியாக நவீன நாடகங்கள் இருக்கின்றன”- என்கிறார் நவீன நாடகத்தின் முக்கிய நபரான சே. இராமானுஜம்.
இவரைப் பற்றி ஆவணப்படம் ஒன்று சமீபத்தில் வெளியாகியிருக்கிறது. எழுதி இயக்கியிருப்பவர் சி.அண்ணாமலை. இந்த ஆவணப்படத்தைக் குறித்து அவரிடம் கேட்டோம்.
“”வசிஷ்டர் வாயால் பிரம்மரிஷி பட்டம் என்பது போல இந்திய நாடக மேதையான இப்ராபீம் அல்காசியிடம் சிறந்த மாணவர் என்று பெயர் எடுத்தவர் இராமானுஜம்.<
நாடகம் என்பது இன்னொரு வாழ்க்கை. நாடகம் என்பது நாடக ஆசிரியன், நடிகன், பார்வையாளனை ஒருங்கிணைப்பது என்பது இவருடைய நாடகத் தன்மையின் முக்கியமான வித்தியாசம். கடந்த 45 ஆண்டுகளாக இவர் நவீன நாடகத்துக்காகப் பாடுபட்டுவருகிறார்.
ஷேக்ஸ்பியர், டி.எஸ். எலியட், பிரெக்ட், தாகூர், பாதல் சர்க்கார், விஜய் டெண்டுல்கர், இந்திரா பார்த்தசாரதி, ஜி. சங்கரபிள்ளை, ந.முத்துசாமி, ஜெயந்தன் உள்ளிட்டோரின் நாடகங்களை இவர் இயக்கியிருக்கிறார்.
தமிழில் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு, ஆங்கிலம், ஹிந்தி ஆகிய மொழிகளில் நாடகங்கள் இயக்கியிருக்கிறார். நாடகத்தை எழுத்தில் பார்ப்பதற்கும் நடிப்பில் கொண்டு வருவதற்கும் நிறைய வித்தியாசம் உண்டு. நடிப்பு என்பது உடல் செயல்பாடு, உச்சரிக்கும் மொழியின் ஓசை, அதற்கான காட்சியின் பின்புலத்தில் நாடகம் நிகழ்த்தப்படுகிறது” என்கிறார் இராமானுஜம்.
பல மொழி நாடகங்களை இயக்கியிருப்பது குறித்து அவரிடம் கேட்டபோது “”நான் பல மொழி நாடகங்களை இயக்கி வருகிறேன். அத்தனை மொழிகளிலும் எனக்குப் பாண்டித்யம் இருக்க வாய்ப்பில்லை என்றாலும் அந்தந்த மொழியின் ஓசையை வைத்தே சரியாக வந்திருக்கிறதா என்பதைப் புரிந்து கொள்ள முடியும் என அவர் உறுதியாகக் கூறுகிறார்.
தேசிய நாடகப் பள்ளியில் முறையாகப் பயின்ற நாடக இயக்குநர்களில் முக்கியமானவராக இன்று நம்மிடையே இருப்பவர் ராமானுஜம்.
கேரளம், மைசூர், ஆந்திரம் போன்ற மாநிலங்களில் ஏராளமான நாடகங்களை அரங்கேற்றியவர்- பல நாடக எழுத்தாளர்களுடன் சேர்ந்து பணியாற்றியவர் என்பதால் அங்கெல்லாம் சென்று ஆவணங்கள் சேகரித்தோம். ஏறத்தாழ ஓராண்டுகாலத்துக்கு மேல் இந்த ஆவணத்துக்கு அவகாசம் தேவைப்பட்டது.
அவருடைய நாடகத்துக்கான நடிகர்கள் குறித்து அவரிடம் கேட்டபோது, கிடைத்த நடிகர்களை வைத்துதான் நாடகம் செய்கிறேன். ஒரு நடிகனைப் பிறக்க வைக்க முடியாது, உருவாக்கத்தான் முடியும். அவனிடம் மறைந்து இருக்கும் திறமைகளை வெளிக்கொணர பயிற்சி தேவைப்படுகிறது என்கிறார்.
நாற்காலிக்காரர், வெறியாட்டும், மெüனபுறம், கருப்புத் தெய்வங்கள் இவருடைய நாடகங்களில் முக்கியமானவை. இப்போது 400 ஆண்டு பழைமையான கைசீக நாடகத்தை ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதம் ஏகாதசி அன்று திருக்குறுங்குடி கோவிலில் அரங்கேற்றி வருகிறார். ஆண் டுதோறும் அந்த நாடகத்துக்கான பழைய வரலாறுகள் கிடைக்கும்போதெல்லாம் அவற்றையும் அதில் சேர்த்து வருகிறார்.
72 வயதான பேராசிரியர் ராமானுஜத்துக்கு உண்மையான காணிக்கை இந்தப் படம்” என்று நெகிழ்ச்சியோடு குறிப்பிடுகிறார் சி. அண்ணாமலை
. முத்தையா வெள்ளையன்
Posted in Contemporary, Drama, IPa, IPaa, Modern, Muthusami, Performance, Performers, Ramanujam, Stage, Theaters, Theatres | Leave a Comment »
Posted by Snapjudge மேல் ஜனவரி 25, 2008
பிரணாப், டாடா, டெண்டுல்கருக்கு பத்மவிபூஷண் விருது
சென்ற வருடம்: Padma Vibooshan, Padma Bhooshan, Padmashree awards announced « Tamil News: “பொள்ளாச்சி மகாலிங்கத்துக்கு பத்மபூஷன்; கவிஞர் வாலிக்கு பத்மஸ்ரீ விருது”
- மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி ,
- கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர்,
- தொழிலதிபர்கள் ரத்தன் டாடா,
- லட்சுமி மித்தல்,
- இன்ஃபோசிஸ் தலைவர் என்.ஆர். நாராயணமூர்த்தி
உள்ளிட்ட 13 பேர் பத்ம விபூஷண் விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
- பத்ம பூஷண் விருதுக்கு அமெரிக்கவாழ் இந்திய விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்ட 35 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
- பத்மஸ்ரீ விருதுக்கு பல்வேறு துறைகளைச் சேர்ந்த 71 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
- தொடர்ந்து ஏழாவது ஆண்டாக இந்த ஆண்டும் நாட்டின் மிக உயரிய விருதான “பாரத ரத்னா’ விருதுக்கு எவரும் தேர்வு செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
“பாரத ரத்னா’ விருதை முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு அளிக்கலாம் என எல்.கே. அத்வானி பரிந்துரைத்து கடிதம் எழுதினார். இதையடுத்து கம்யூனிஸ்ட் கட்சியினர் ஜோதிபாசுவுக்கும், உத்தரப்பிரதேச முதல்வர் மாயாவதி தங்கள் கட்சித் தலைவர் கான்சி ராமுக்கும் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
2001-ம் ஆண்டு பாரத ரத்னா விருது லதா மங்கேஷ்கர் மற்றும் பிஸ்மில்லா கானுக்கு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மத்திய அமைச்சராக உள்ள ஒருவர் பத்ம விபூஷண் விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.
பத்மவிபூஷண் விருது பெறுவோர்:
- மத்திய அமைச்சர் பிரணாப் முகர்ஜி,
- தொழிலதிபர்கள் ரத்தன் டாடா,
- லட்சுமி மித்தல்,
- இன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தி,
- ஹோட்டல் அதிபர் பிஆர்எஸ் ஓபராய்,
- சுற்றுச் சூழல் ஆர்வலர் ஆர்.கே. பச்செüரி,
- தில்லி மெட்ரோ ரயில் தலைவர் இ. ஸ்ரீதரன்,
- உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ஏ.எஸ். ஆனந்த்,
- பிரபல பின்னணிப் பாடகி ஆஷா போஸ்லே,
- கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த்,
- டெண்டுல்கர்,
- இந்திரா காந்தியின் முதன்மைச் செயலராக பணியாற்றிய பி.என். தர்.
எவரெஸ்ட் சிகரத்தை முதலில் தொட்ட எட்மண்ட் ஹிலாரிக்கு மரணத்துக்கு பின்பு பத்ம விபூஷண் வழங்கப்படுகிறது.
- நாகா தீவிரவாதிகளுடன் பேச்சு நடத்தியதில் முக்கிய பங்காற்றிய முன்னாள் மத்திய உள்துறைச் செயலர் கே. பத்மனாபையா,
- பிரபல வர்ணனையாளர் ஜஸ்தேவ் சிங்,
- சிட்டி வங்கி தலைவர் விக்ரம் பண்டிட்,
- ஐசிஐசிஐ தலைவர் கே.வி. காமத் ஆகியோர் பத்ம பூஷண் விருது பெறுவோரில் முக்கியமானவர்களாவர்.
பத்மஸ்ரீ விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில்
- டி.வி. நிருபர்கள் பர்கா தத்,
- ராஜ்தீப் சர்தேசாய்,
- வினோத் துவா,
- ஜம்மு காஷ்மீர் பல்கலைக் கழகத்தின் துணை வேந்தர் அமிதாப் மட்டூ,
- பின்னணிப் பாடகர் ஜவஹர் வட்டாள் ஆகியோரும் அடங்குவர்.
திரைப்படத் துறையில்
- நடிகை மாதுரி தீட்சித்,
- இயக்குநர் மனோஜ் நைட் ஷியாமளன்,
- நடிகர் டாம் ஆல்டர்,
- கால்பந்து வீரர் பாய்சுங் புடியா,
- நீச்சல் வீராங்கனை புலா செüத்ரி,
ஆகியோர் பத்மஸ்ரீ விருது பெறுவோரில் முக்கியமானவர்களாவர்.
- தமிழகத்தைச் சேர்ந்த நரம்பியல் மருத்துவ நிபுணர் சி.யு. வேல்முருகேந்திரன்,
- “தினத்தந்தி’ அதிபர் சிவந்தி ஆதித்தன்,
- பிரபல பாடகரும் டாக்டருமான சீர்காழி சிவசிதம்பரம் ஆகியோரும் பத்மஸ்ரீ விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டோரில் அடங்குவர்.
Posted in Anand, Arts, Asha, Asha Bhosale, astronaut, Awards, Baichung Bhutia, Bharat Ratna, Bhooshan, Bhosale, Bhushan, Bollywood, Booshan, Business, Chess, Citi, Dailythanthi, Dixit, Edmund, Edmund Hillary, Football, Hillary, Hotels, ICICI, Infosys, IT, Madhuri, Mittal, Mukherjee, Narayana Murthy, Narayanamurthy, Oberoi, Padhma, Padma, Padma Bhushan, Padma Vibhushan, Pathma, Performers, Pranab, Pranab Mukherjee, Prizes, Ratan, Ratan Tata, Sachin, Shyamalan, Singer, Soccer, Sports, Sunita Williams, Susheela, Sushila, Susila, TamilNadu, TATA, Tendulkar, Thanthi, Thanthy, Thinathanthi, Vibhooshan, Vibhushan, Vibooshan, Vibushan, Vikram Pandit, Viswanathan, Viswanathan Anand | 1 Comment »
Posted by Snapjudge மேல் ஜனவரி 11, 2008
“சீசன்’ சிந்தனைகள்
சாருகேசி
தனி ஆவர்த்தனத்தின்போது எழுந்து வெளியே செல்வோரின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்திருக்கிறது என்பது உண்மையே. அதற்குப் பல கலைஞர்களும் அவ்வப்போது விடுத்த வேண்டுகோள்கள் (அல்லது நாசூக்கான மிரட்டல்கள்) ஒரு காரணமாக இருக்கக்கூடும். ஆனால் உமையாள்புரம் சிவராமன், மன்னார்குடி ஈசுவரன், திருச்சி சங்கரன் ஆகியோர் வாசிக்கும் “தனி’ போல மற்ற மிருதங்க வித்துவான்களின் வாசிப்பு இதமாக இருக்கிறது என்று சொல்ல முடியவில்லை.
சம்பர் சங்கீத மழை ஒரு வழியாக ஓய்ந்துபோய்விட்டாலும், மழைச்சிதறல் போல இங்கேயும் அங்கேயுமாக நடன நிகழ்ச்சிகள் ஜனவரியில் சில சபாக்களில் தொடரும்.
கிருஷ்ண கான சபாவில் பொங்கல் நாதசுர இசைவிழா மட்டும்தான் இனி குறிப்பிடத்தகுந்த நிகழ்ச்சி. நாலு நாளைக்குத் தொடர்ந்து நாதசுர இசை இங்கே மட்டும்தான் கேட்க முடியும். இந்த நாதசுர இசை விழாவில், ஒரு சிறந்த நாதசுர மேதைக்கு “சங்கீத சூடாமணி’ விருது கூடக் கொடுக்கத் தொடங்கினார்களே, பிறகு நிறுத்திவிட்டார்களோ? அப்படி நிறுத்தப்பட்டிருந்தால் அது வருத்தத்துக்குரியதுதான்.
நாதசுர இசை என்னும்போது, எல்லாச் சபா இசைவிழா துவக்க நாளிலும் நாலு மணி சுமாருக்கு நாதசுர வித்துவான் ஒருவரின் மங்கள இசை நிகழ்ச்சி கட்டாயம் இருக்கும். (பெரும்பாலும் இதில் நாதசுர வித்துவான்கள் சோரம்பட்டி சிவலிங்கமோ, மாம்பலம் சிவாவோதான் பங்கு கொள்வார்கள்.) மங்கள இசை வாசிக்கிற நாதசுர வித்துவான், ஐந்தரை அல்லது ஆறு மணி வரை மேடையில் வாசித்துக் கொண்டிருப்பார். விழாவுக்குத் தலைமை வசிக்கும் பிரமுகர் வந்து சேர்ந்ததும் ஒரு வினோத பரபரப்பு உண்டாகும். மேடையில் நாதசுர இசை வழங்கிய வித்துவானுக்கு பாட்டை முடித்துக் கொள்ள சைகை மூலம் குறிப்பாக உணர்த்தப்படும். அவரும் நிறுத்திக் கொண்டுவிடுவார். அதற்குப் பிறகு அவர் அவசரமாக மேடையிலிருந்து வெளியேறுவார். (அல்லது மேடைக்குள் மறைந்து போவார்.) “அன்செரிமோனியஸ்’ என்பதற்குக் கண்கூடாக ஒரு நிகழ்ச்சியை உதாரணம் காட்ட வேண்டுமென்றால், இதைவிட வேறு ஒன்று இருக்க முடியாது. சில நாதசுர ரசிகர்கள் அரங்கிலிருந்து எழுப்பும் கரவொலியோடு அந்த நிகழ்வு நிறைவடையும். அத்தனை நேரம் மங்கள இசை வாசித்தாரே, அவருக்கு மேடையில் மரியாதை செய்து, முறையாக அனுப்பி வைத்தால் என்ன என்று கேட்கத் தோன்றுகிறது.
தனி ஆவர்த்தனத்தின்போது எழுந்து வெளியே செல்வோரின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்திருக்கிறது என்பது உண்மையே. அதற்குப் பல கலைஞர்களும் அவ்வப்போது விடுத்த வேண்டுகோள்கள் (அல்லது நாசூக்கான மிரட்டல்கள்) ஒரு காரணமாக இருக்கக்கூடும். ஆனால் உமையாள்புரம் சிவராமன், மன்னார்குடி ஈசுவரன், திருச்சி சங்கரன் ஆகியோர் வாசிக்கும் “தனி’ போல மற்ற மிருதங்க வித்துவான்களின் வாசிப்பு இதமாக இருக்கிறது என்று சொல்ல முடியவில்லை. சிகை கலைந்து, நிலை குலைந்து, கிட்டத்தட்ட ஒருவித ரயில் அல்லது விமான விபத்துபோல ஒரு பயங்கர சத்தத்தை அந்தத் “தனி’யின் போது உண்டாக்கிவிட்டால், அது “தனி’யே அல்ல என்று நினைக்கிறார்களோ என்னவோ? ஆனால், உப-பக்கவாத்தியமான கஞ்சிரா அல்லது கடம் அல்லது மோர்சிங் வாசிக்கிறவருக்கு அந்தத் “தனி’யின் போதுதான் ஏதோ கொஞ்சம் வாய்ப்புக் கிடைக்கிறது. இல்லை என்றால், வயலின் கலைஞர் வாசிக்கும்போதுகூட உப பக்கவாத்தியக் கலைஞர்களை வாசிக்க பெரும்பாலான மிருதங்க வித்துவான்கள் பெருந்தன்மையோடு இடம் கொடுப்பதில்லை. சில இளம் வித்துவான்கள் உரிமை எடுத்துக் கொண்டு ஒரு கை பார்ப்பது வேறு விஷயம்.
ரசிகர்களுக்கு நாகரிகம் கருதி சில கட்டுப்பாடுகள் வலியுறுத்தப்படுவது போல், மேடை நாகரிகம் கருதி சில கட்டுப்பாடுகளைக் கொண்டு வரலாம். குறிப்பாக, ஒரு ட்ரேயில் நாலு காபியை காண்டீனிலிருந்து எடுத்துக்கொண்டு ஒருவர் வருவது. ஏதோ அந்த இரண்டு மணி நேரத்தில் மேடையில் குடிக்கிற காபியில்தான் அவர்களுக்கு உயிரே இருப்பது போலவும், அது இசை வழங்கிக்கொண்டிருக்கிற முக்கிய கலைஞருக்குத் துளியும் இடைஞ்சல் இல்லை என்பது போலவும் நடந்து கொள்வது வருத்தத்துக்குரியது. இசை நிகழ்ச்சியின் கவுரவத்தைப் பாதிக்கிறது என்பதைப் பக்கவாத்தியக் கலைஞர்கள் உணர்ந்தால் சரி.
கச்சேரி தொடங்கிவிட்டால், மைக் அறை நோக்கிக் கலைஞர்கள் காண்பிக்கும் சைகைகள், புதிய பரதநாட்டிய முத்திரை வகையைச் சேர்ந்தவை. ஒழுங்கான ஃபீட்பேக் வசதி செய்து கொடுக்கப்பட்டுவிட்டால், பாதி பிரச்னை தீர்ந்துவிடலாம்.
ஒரு பாட்டு முடிந்த பிறகுதான் எழுந்துசெல்ல வேண்டும் என்று ரசிகர்களிடம் வேண்டுகோள் வைக்கப்பட்டாலும், நிரவலின்போதோ, சுவரப் பிரஸ்தாரத்தின்போதோ எழுந்து போவதையும் சிலர் ஒரு வழக்கமாகவே கொண்டிருக்கிறார்கள். அதைத் தடுப்பது சிரமம்தான்.
சீசனின் விழா நடக்கும் சபாக்களுக்கு வருகிற ரசிகர்கள் பிற மாதங்களில் கச்சேரிகளுக்கு வரும் வழக்கமான ரசிகர்களிடமிருந்து முற்றிலும் மாறுபட்டவர்களாக இருக்கிறார்கள். ஊர் முழுக்க ஓர் உற்சவம்போல நடத்தப்படும்போது உண்டாகிற உத்வேகம் உந்தித் தள்ளுவது போன்று, ரசனையைப் பிற மாதங்களில் வெளிக் காட்டிக் கொள்ள விரும்பாத ரசிகர்கள் சீசனில் மட்டும் சபாக்களில் வந்து இசைவிழாவை ரசிக்கிறார்கள். வருடத்துக்கு ஒரு முறை கர்நாடக இசை கேட்டு, தங்களை சார்ஜ் செய்து கொண்டால் போதும் என இவர்கள் நினைக்கலாம்!
இந்த ராகம்-தாளம்-பல்லவியை எப்போது “மேன்மேமரி’ (கட்டாயம்) என்று சீசன் கச்சேரிகளுக்கு வலியுறுத்தினார்களோ அப்போது அதன் தனித்தன்மையும் போய்விட்டது. 20,30 நிமிடத்தில் ராகம்-தாளம்-பல்லவி பாடிவிட்டு, “அப்பாடா, பல்லவி பாடியாகிவிட்டது!’ என்று கடனை நிறைவேற்றுகிற அளவுக்கே இசைக்கலைஞர்கள் இதற்கு இடம் கொடுத்திருக்கிறார்கள். நொம்தனம் நொம் என்று என்னவோ ஒரு பதத்தை வைத்துக்கொண்டு சரியான இம்சையாக்கி விடுகிறார்கள். (அதிலும் பல்லவிக்கு அதிகபட்சம் முருகா வா, சண்முகா வா, வடிவேலவா வாதான். வேறு எந்தக் கடவுளும் இவர்கள் ஏவலுக்கு வரமாட்டார்கள் போலும்!) ராகம்-தாளம்-பல்லவியை சோலோ வயலின் அல்லது வீணைக்கு விட்டுவிடலாம்.
பாட்டை ஆரம்பித்தவுடன் ரசிகர்களிடையே அது என்ன ராகம் என்று அறிந்துகொள்ளும் ஆவல் தோன்றியிருப்பது நல்ல அறிகுறி. எஸ்.கண்ணன் தொகுத்து, “நல்லி’ வெளியிட்டிருக்கும் இந்தக் குட்டிப் புத்தகம் கிட்டத்தட்ட எல்லா ஹேன்ட்பேக்கிலிருந்தும் பாட்டுத் தொடங்கியவுடன் வெளிப்பட்டு, அலசப்படுவது இயல்பாகிவிட்டது.
சஞ்சய் சுப்பிரமணியம், டி.எம்.கிருஷ்ணா நிகழ்ச்சிகள் சம்பிரதாய சுத்தமாகவும், கனமான கச்சேரிகளாகவும் எல்லா வகையிலும் ரசிகர்களைத் திருப்திப்படுத்தும்படியாகவும் இருந்தது என்று நண்பர்களின் கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. இவர்களுக்கு மனப்பூர்வமான வாழ்த்துகள்.
எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதி நாரத கான சபாவில் எல்லா மாலை நேரக் கச்சேரிகளுக்கும் தவறாமல் வந்திருந்து கேட்டார். வெளிநாட்டில் வசிக்கும் இரா.முருகன், நித்யஸ்ரீயின் கச்சேரி கேட்ட கையோடு, ஞானானாம்பிகா கான்டீனில் சூடாக அடை சுவைத்துக் கொண்டிருந்தார். பாம்பே ஜெயஸ்ரீயின் கச்சேரியை (அதிலும் சுனாதவினோதினி ராகம்-தாளம்-பல்லவியையும் துக்கடாக்களையும்) ரசித்துக் கேட்டுக்கொண்டிருந்தார் இயக்குநர் வசந்த்.
இத்தனை கச்சேரிகளையும் ஊர் முழுக்கப் போய்க் கேட்டுவிட்டு, ஆங்கில விமர்சனங்களைப் படித்தீர்களானால் “இதுக்குத்தானா இத்தனை பாடு!’ என்று கேட்கத் தோன்றும். அது பாட்டுக்கு அது, இது பாட்டுக்கு இது!
Posted in Arts, Carnatic, Chaarukesi, Charukesi, Classical, Concert, Culture, Dinamani, Heritage, Margazhi, music, Musicians, Performances, Performers, Saarukesi, Saba, Sabha, Sarukesi, Season, Shows, Singers, Special, Stage | 1 Comment »
Posted by Snapjudge மேல் திசெம்பர் 17, 2007
பட்டம்மாள் போட்ட பாதை – கல்கி (கர்னாடக இசை சிறப்பிதழ்)
கர்நாடக சங்கீத மேடையில், இன்று அரை டஜன் ஐச்வர்யாக்கள், ஒரு டஜன் காய்த்ரிகள், கால் டஜன் அம்ருதாக்கள், சங்கீதாக்கள், இன்னும் சாருலதாக்கள்… வண் ணமும் வனப்பும் விஷயதானமும் வழங் கிக்கொண்டிருக்கிறார்கள்.
இத்தனைக்கும் அஸ்திவாரம் போட் டவர், தமது எண்பத்தெட்டாவது வயதில் நம்மிடையே இசைபட வாழ்ந்து, சங்கீதக் கலையைக் கற்பித்து மகிழ்ந்துகொண் டிருக்கும் கான சரஸ்வதி டி.கே.பட்டம் மாள். பட்டம்மாளின் அம்மா ராஜம்மாள், ஒரு கல்யாணத்து நலங்கில் பாடியதைக் கூட பொறுக்காமல் அதட்டி நிறுத்தச் செய்துவிட்டார் அவருடைய மாமனார் – அதாவது டி.கே.பி. யின் தாத்தா. ‘குடும்பப் பெண்கள் சங்கீதம் பாடக்கூடாது – அதெல் லாம் தேவதாஸிகளின் பணி’ என்று ஆதிக் கமும் அனர்த்தமும் மிக்க சட்ட திட்டங்கள் நிலவிய காலம். ஆனால், குழந்தை பட்டாவுக்குப் பாட்டு வெகு இயல்பாக வந்தது.
பள்ளிக்கூட நாடகம், போட்டிகளில் பாடி, வெற்றி பெற, பட்டாவின் போட்டோ பேப்பரில் பிரசுரமானபோது, அப்பா தாமல் கிருஷ்ணசாமி அய்யர் வெல வெலத்துப் போனார்! ‘பெண்ணுக்குக் கல்யாணம் நடக்குமா?’
பட்டம்மாளுக்குக் கல்யாணமும் ஆயிற்று; அவரது சங்கீதமும் தழைத்து வளர்ந்தது. ஈசுவர அய்யரைத் திருமணம் செய்துகொண்ட பிறகும் தாமல் கிருஷ்ண சாமி அய்யர் பட்டம்மாள் (டி.கே) என்றே அவரது பெயர் நீடித்தது.
அன்று பட்டம்மாள் போராடி மேடை ஏறியதனால்தான் இன்று சுதாக்களுக்கும் ஜெய்ஸ்ரீகளுக்கும் ஐச்வர்யாக்களுக்கும் பாதை சுலபமாகியிருக்கிறது.
சங்கீத உலகில் அழகும் அமைதியும் மிக்க ஒரு சகாப்தத்தைப் படைத்த டி.கே.பி. கடந்து வந்த பாதை என்ன? அதன் வளைவு – நெளிவுகள், ஏற்ற – இறக்கங்கள், சுக – துக்கங்கள் என்று ஆராய்ந்து அழகான நூல் ஒன்றை வெளியிட்டிருக் கிறது பாரதிய வித்யா பவன். அற்புதமான, அரிய புகைப்படங்கள் வரலாற்றுப் பதிவு களாக இடம் பெற்றுள்ள இந்நூல், உயர்ரக தாளில் அச்சிடப்பட்டுக் கரம் கூப்பிச் சிரிக்கும் டி.கே.பி.யின் கனிந்த முகத்தை அட்டையில் தாங்கி, உடனே எடுத்துப் படிக்கத் தூண்டுகிறது.
நாற்பத்து நான்கு ஆண்டுகளாக டி.கே.பி. வீட்டில் சமையல் செய்து வரும் கிருஷ்ணமூர்த்தி, மலேஷியா விலிருந்து வந்துள்ள சீன சிஷ்யர் சோங் சியூ சென் (இவ ருக்கு சாய் மதனா என்று பெயர் மாற்றம் செய்துள்ளார் டி.கே.பி…) என்று குட்டி சுவாரஸ் யங்கள்…
டி.கே.பி.யுடன் பாடுவதற் காக, தம்பி டி.கே.ஜெயராமனும் மருமகள் லலிதா சிவகுமாரும் எவ்வாறு தங்கள் சுருதியை மாற்றிக்கொண் டார்கள் என்பது போன்ற தீர்க்கமான விஷயங்கள்…
புத்தகத்தைச் சுவாரஸ்யமாகத் தொகுத்து எழுதியிருக்கிறார் நித்யா ராஜ். விஷய கனம் டி.கே.பி.யின் பல்லவி அளவுக்கு இருக்க, ஆங்கில மொழி நடைமட்டும் சர்வதேச தரத்தில் அமையாதது சற்றே நெருடல்.
(தொடர்புக்கு: பாரதிய வித்யா பவன், கோயமுத்தூர் கேந்திரா, 352, ஈ.ஆ. சாலை, ஆர்.எஸ்.புரம், கோவை – 641 002.)
Posted in Biosketch, Books, Carnatic, Faces, Females, Kalki, Ladies, Legends, Margazhi, Margazi, music, Nithiyashree, Nithiyasri, Nithyashree, Nithyasri, Pattammaal, Pattammal, people, Performers, Reviews, Shows, Singers, Stage, TKP | 2 Comments »
Posted by Snapjudge மேல் நவம்பர் 30, 2007
முகங்கள்: கரகாட்டத்தில் திருக்குறள்!
வி. கிருஷ்ணமூர்த்தி
ஆண்டு: 1957; இடம்: வந்தவாசி அருகே மங்கலம் கிராமம்; கையில் எப்போதும் இருக்கும் திருக்குறள் புத்தகம். எதற்கும் திருக்குறள் மேற்கோள். சீனிவாசனை உறவினர்கள் மட்டுமல்லாது ஊரில் உள்ளவர்களும் திருக்குறள் பைத்தியம் என கிண்டலடித்தனர். ஆனால் அவரைப் பைத்தியம் என்று ஒதுக்கவில்லை, அவரது சகோதரி மகளான செல்லம்மாள்.
திருக்குறள் சொல்பவரை பைத்தியம் என்கிறார்களே ஏன்? அப்படி திருக்குறளில் என்னதான் இருக்கிறது என்ற ஆர்வத்தில் திருக்குறளை படிக்க ஆரம்பித்தார் அவர். 10 வயதில் ஏற்பட்ட திருக்குறள் ஆர்வம், செல்லம்மாவை குறளுக்கு அடிமையாக்கிவிட்டது என்றே சொல்லலாம். திருக்குறள் மீது ஆர்வம் வருவதற்குப் பலருக்குப் பல காரணங்கள் உண்டு. செல்லம்மாளுக்கு ஏற்பட்ட ஆர்வம் இந்த வகையில் வித்தியாசமானதுதானே?
6-வது படிக்கும் போது செல்லம்மாள் கரகாட்டத்தைக் கற்றுக் கொண்டார். திருக்குறளும், கரகாட்டமும் தனது வாழ்க்கையை எந்த அளவுக்கு ஆட்கொள்ளப் போகிறது என்பது அப்போது தெரியாது செல்லம்மாளுக்கு. இந்த இரண்டிலும் ஏற்பட்ட ஆர்வம் திருக்குறளுக்குக் கரகாட்டம் ஆடும் அளவுக்கு அவரை உயர்த்தியது.
- திருக்குறள் மாமணி,
- திருக்குறள் தூதர்,
- திருக்குறள் செம்மல்,
- திருக்குறள் திருத்தொண்டர்
என ஏராளமான விருதுகளைப் பெற்ற, பெற காரணமாக இருந்த தனது அனுபவங்களை நம்முடன் பகிர்ந்து கொள்ளும் புலவர் கோ.ப. செல்லம்மாள் இனி உங்களுடன்…
“”திருக்குறள், கரகாட்டம் இவற்றுடன் எனது பள்ளிப்படிப்பு நல்லபடியாக முடிந்தது.
பள்ளிப்பருவத்தில் கரகாட்டம் ஆடியும், திருக்குறளை பாடியும் பல்வேறு போட்டிகளில் ஆர்வத்துடன் பங்கேற்று வெற்றிப் பெற்றதால் ஆசிரியர்கள் மட்டுமல்லாது சக மாணவர்களிடமும் பாராட்டுகளைப் பெற முடிந்தது. பள்ளிப்படிப்பு முடித்து ஆசிரியர் பயிற்சி அதுவும் திருக்குறள், கரகாட்டத்துடன் வெற்றிகரமாக முடிய ஆசிரியர் பணி கிடைத்தது.
ஆசிரியர் பணிக்கிடையே கரகாட்டத்துடன் எம்.ஏ., எம்.ஃபில், பிஎச்.டி., டி.டி.எச். என படிப்பிலும் பல்வேறு சிகரங்களைத் தொட திருக்குறள் அடிப்படையாக இருந்தது.
படிப்பில் ஏற்பட்ட உயர்வு எனது பணியின் நிலையையும் மேம்படுத்தியது. உதவி ஆசிரியையாக, தலைமை ஆசிரியை வரை பல்வேறு உயர்வுகள் கிடைத்தன.
ஆசிரியர் பணியில் இருந்த 33 ஆண்டுகளும் எனது வாழ்க்கையில் மறக்க முடியாத அனுபவங்களாக அமைந்துவிட்டன. ஆசிரியர் பணியில் ஈடுபட்டிருந்தபோது, என்னிடம் படித்த மாணவர்கள், மாணவிகளுக்குக் கரகாட்டத்தைச் சொல்லிக் கொடுத்து அவர்களைக் கல்வி மட்டுமல்லாது கலையிலும் வல்லவர்களாக உருவாக்கினேன்.
வெறுமனே கரகாட்டத்தை எப்படி ஆடுவது என சொல்லிக் கொடுக்காமல் மாணவர்களுக்குக் கரகாட்டத்தின் தோற்றம், வளர்ச்சி, சிறப்புகள், தற்போதைய நிலை ஆகியவைக் குறித்துச் சொல்லிக் கொடுப்பதால் நான்படித்தக் கலையை மற்றவர்களுக்கு முழுமையாகக் கொண்டு சேர்த்த திருப்தி கிடைத்துள்ளது.
ஆசிரியர் பணியின்போது நூற்றுக்கணக்கான மாணவர்களுக்குக் கரகாட்டத்தைக் கற்றுக் கொடுத்திருந்தாலும் அதில் மது, சந்திரா உள்ளிட்ட சில மாணவமணிகள் இந்தக் கலையில் பெரிய அளவில் சிறப்பு பெற்றிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
கரகாட்டம் கற்றுக் கொடுக்கும்போது மாணவர்களுக்குத் திருக்குறளையும் கற்றுக்கொடுத்தேன். அனைத்து மாணவர்களையும் திருக்குறளை முழுமையாகப் படிக்கச் செய்து, அதில் போட்டிகள் நடத்தியும், மற்ற இடங்களில் நடக்கும் போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெறும் அளவுக்குத் தயார்படுத்தினேன்.
இந்தச் சமயத்தில், கரகாட்டத்துக்கு வழக்கமான கிராமியப் பாடல்கள், பக்திப் பாடல்களுக்குப் பதிலாக திருக்குறளின் சில பகுதிகளைப் பாடலாக மாற்றி கரகாட்டம் நடத்தினேன். பார்வையாளர்களிடம் இதற்குக் கிடைத்த வரவேற்பு இதனை மேலும் சிறப்பாகச் செய்யத் தூண்டியது. இதனால், பக்தி மற்றும் கிராமியப் பாடல்களே இல்லாமல் அவற்றின் மெட்டில் திருக்குறளையும் அது வலியுறுத்தும் கருத்துகளையும் பாடலாக அமைத்து கரகாட்டம் நடத்த தொடங்கினோம். பல மாணவர்களுக்கு இதனை கற்றுக் கொடுத்தேன்.
உலகத் திருக்குறள் மையத்தில் இணைந்தது, எனது திருக்குறள் பணியை மேலும் விரிவுப்படுத்தியதுடன் என்னை திருக்குறள் தூதராக்கியது. திருக்குறள் கருத்துகளை மக்களிடம் விளக்க பல இடங்களுக்குச் சுற்றுப்பயணம் சென்றேன். 1996-ம் ஆண்டில் திருச்சி மாவட்டம் நடுப்பட்டியில் திருக்குறள் கருத்து விளக்கத்துக்காகச் சென்ற போது திருக்குறள் இசைப் பாடலுக்குக் கரகாட்டம் ஆடியது பலராலும் பாராட்டப்பட்டது.
திருக்குறள் பிரசாரம் தொடர்பான பணியில் ஈடுபட்டுள்ள ஏராளமான மன்றங்கள், மையங்களில் என்னை இணைத்துக் கொண்டேன். இது எனது திருக்குறள் பணியின் எல்லையை மேலும் விரிவுபடுத்தியது. தமிழகம் மட்டுமல்லாது, மற்ற மாநிலங்கள் அதனைத் தொடர்ந்து சிங்கப்பூர், மலேசியா, நேபாளம் உள்ளிட்ட நாடுகளிலும் திருக்குறள் பிரசார மாநாடுகளில் பங்கேற்றேன்.
ஒரு கட்டத்துக்கு பின்னர் எனது அன்றாட செயல்களில் ஒன்றாகவே திருக்குறள் பிரசாரம் மாறிவிட்டது. எனது மகன் மகள் இருவருக்கும் திருக்குறளுடன் கரகாட்டத்தைக் கற்று கொடுத்து மேடை ஏற்றிவிட்டேன். வீட்டுக்கு வெளியில் மட்டுமல்ல, வீட்டுக்குள்ளும் எந்த நிகழ்ச்சியும் திருக்குறள் இல்லாமல் இல்லை என்ற நிலை உருவாகிவிட்டது.
திருக்குறள் பிரசாரத்தில் கிடைத்த சந்தோஷம் அதிகம் இருந்தாலும், கரகாட்டத்தின் தற்போதைய நிலை கவலை அளிப்பதாக உள்ளது. நமது கலாசாரத்தில் நடைமுறை வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு உருவானது கரகாட்டகலை. ஒரு சமயத்தில் கடவுள் வழிபாடாக மட்டும் இருந்த கரகாட்டகலை பிற்காலத்தில் பொழுதுபோக்காகவும் மாறியது. இந்தக் காலகட்டத்தில் பொழுதுபோக்காக இருந்தாலும் அதன் அடிப்படை புனிதத்தன்மை பாதிக்கப்படாமல் இருக்க பல்வேறு விதிகள் வகுக்கப்பட்டன. அதன்படி ஆடும்போது பல்வேறு சாகசங்கள் செய்து மக்களை அசத்துவதோடு ஆச்சரியப்பட வைத்தனர் கரகாட்ட கலைஞர்கள். ஆனால், தற்போது கரகாட்டத்தை முறையாகக் கற்றுக் கொண்டு வருபவர்களின் எண்ணிக்கை குறைந்து விட்டதாலும் மற்ற பொழுதுபோக்குகளில் இருந்து மக்களை தங்கள் பக்கம் ஈர்ப்பதற்காகவும் கரகாட்டக் கலைஞர்கள் பல தவறான அணுகுமுறைகளைக் கையாளத் தொடங்கியுள்ளனர். ஆபாச சைகைகள் போன்றவற்றால் இந்தக் கலையின் எதிர்காலம் கேள்விக்குறியாக மாறியுள்ளது கவலை அளிக்கிறது” என்றார் செல்லம்மாள்.
Posted in Artistes, artists, Arts, Chellammal, Couplets, Cultural, Culture, Dancers, Dances, Folk, Heritage, Instructor, Karaga, Karagam, Karagattam, Kural, Literature, Performances, Performers, Shows, Stage, Students, Teacher, Temple, Theater, Theatre, Thirukkural, Thiruvalluvar, Tradition, Traditional, Valluvar | Leave a Comment »
Posted by Snapjudge மேல் நவம்பர் 29, 2007
தவில் வித்வான் ஜி.முத்துகுமாரசுவாமி பிள்ளை காலமானார்
கும்பகோணம், நவ. 29: கர்நாடக சங்கீத இசையுலகின் பிரபல தவில் வித்வான் திருச்சேறை முத்துக்குமாரசாமி பிள்ளை (86) புதன்கிழமை இரவு திருச்சேறையில் அவரது இல்லத்தில் காலமானார்.
சிறிது காலம் அவர் உடல் நலமின்றியிருந்தார். அவருக்கு மனைவியும் 3 மகன்களும் 3 மகள்களும் உள்ளனர்.
நாகசுர இசையுலகின் மிக மூத்த தவில் கலைஞரான அவர் இளம் வயதில் தன் தந்தை கோவிந்தசாமிப் பிள்ளையிடமே தவில் கற்றார்.
பின்னாளில் நாகசுர மேதைகளான டி.என்.ராஜரத்தினம், குழிக்கரை பிச்சையப்பா, காருகுறிச்சி அருணாசலம், ஷேக் சின்ன மெüலானா உள்ளிட்ட பல கலைஞர்களுக்கு தவில் வாசித்தார்.
திருவையாறு தியாகப் பிரம்ம சபை துணைத் தலைவராக இருந்தவர். கலைமாமணி உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்றவர்.
இன்று மிகப் பெரும் தவில் வித்வானாக விளங்கும் ஹரித்வாரமங்கலம் ஏ.கே. பழனிவேல் உள்பட ஏராளமான சீடர்களைத் தயார் செய்த பெருமைக்குரியவர்.
Posted in Anjali, Artiste, Artistes, artists, Arts, Carnatic, G Muthukumarasami, G Muthukumarasamy, G Muthukumaraswami, G Muthukumaraswamy, Isai, music, Musician, Muthukumarasaami, Muthukumarasaamy, Muthukumarasami, Muthukumarasamy, Muthukumaraswami, Muthukumaraswamy, Performer, Performers, Shows, Stage, Thavil | 3 Comments »
Posted by Snapjudge மேல் ஜூன் 29, 2007
புதிய பார்வை: “”நாட்டுப்புறக் கலைகளை பிசினஸ் ஆக்கிவிட்டார்கள்!”
உலகமயத்தினால் கிராமப்புறம் அழிந்து கொண்டிருக்கிறது. நாட்டுப்புறக் கலைகள் அழிந்து கொண்டிருக்கின்றன. நமது நாட்டைத் தொழில்மயம் ஆக்கவேண்டும் என்பதற்காக மேற்கத்தியமயமாக்கி விட்டார்கள்.
நமக்கு நல்ல ரோடே இல்லை. ரோல்ஸ்ராய்ஸ், ஃபோர்டு, பென்ஸ் போன்ற கார்கள் இங்கு அவசியமா?”
-இப்படியெல்லாம் ஆவேசப்படுகிறார், World cultural forum் என்கிற அமைப்பின் உறுப்பினரான சாரதா ராமநாதன்.
இவர் ஒரு திரைப்பட இயக்குநரும் கூட. தேவதாசிகளின் வாழ்வை மையமாக வைத்து இவர் எடுத்த திரைப்படம் “சிருங்காரம்’ சென்ற ஆண்டு கோவாவில் நடந்த சர்வதேசத் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது.
அவரை அவருடைய இல்லத்தில் சந்தித்துப் பேசினோம்.
உலகமயத்தால் நாட்டுப்புறக் கலைகள் அழிந்து வருகின்றன என்று எப்படிச் சொல்கிறீர்கள்?
உலகமயம், தொழில்மயம் என்கிற பெயரில் நாம் கிராமப்புறங்களைக் கவனிக்க மறந்துவிட்டோம். அதனால் கிராமப்புறங்களில் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கிறார்கள். வேலை தேடி நகர்ப்புறங்களுக்கு வருகிறார்கள். இதனால் கிராமப்புறக் கலைகள் அழிந்து வருகின்றன.
உலகமயத்தால் ஓரளவுக்கு பலன் பெற்றது நடுத்தர மக்கள்தாம். நடுத்தர மக்கள் மட்டும்தான் இந்தியாவா? எல்லாரும் கம்ப்யூட்டர் வேலைக்கு வர முடியுமா? அப்படி வந்து விட்டால் விவசாயம் செய்வது யார்? உணவு எப்படிக் கிடைக்கும்?
தொழில்மயத்திற்கு கொடுத்த முக்கியத்துவத்தை நாம் விவசாயத்திற்குக் கொடுக்கவில்லை. நம்மிடம் தண்ணீரைச் சீராகப் பயன்படுத்துவதற்கான உருப்படியான திட்டங்கள் எதுவுமில்லை.
கிராமப்புறம் நசிந்து போனால் நாட்டுப்புறக் கலைகள் உயிர்வாழ்வது எப்படி? நமது பாரம்பரியச் செவ்வியல் கலைகள் கோயில் குளத்தைச் சுற்றி வளர்ந்தவை. நாட்டுப்புறக்கலைகள் கிராமப்புறத்தையும் அங்குள்ள மக்களின் வாழ்வைச் சுற்றியும் வளர்ந்தவை. நாட்டுப்புறக் கலைகள் மேம்பட வேண்டுமானால் நாட்டுப்புறம் மேம்பட வேண்டும்.
சினிமாவிலும் டிவியிலும் இன்று நாட்டுப்புறப் பாடல்கள் பயன்படுத்தப்படுகின்றன. பலர் நாட்டுப்புறப் பாடல்களைப் பதிவு செய்து ஆடியோ கேசட் வெளியிடுகிறார்கள். அப்படியானால் நாட்டுப்புறக் கலைகள் வளர்வதாகத் தானே அர்த்தம்?
டிவியிலும் சினிமாவிலும் நாட்டுப்புறக் கலைகளைப் பிசினஸ் ஆக்கிவிட்டார்கள். இதனால் நாட்டுப்புறக் கலைகளில் ஒரிஜினாலிட்டி போய்விட்டது. நாட்டுப்புறக் கலைகள் சுயமாக வளர வேண்டும்.
நாட்டுப்புறப் பாடல்களை ஆடியோ கேசட்களிலும், சிடியிலும் சிலர் பதிவு செய்து விற்கிறார்கள். ஆனால் அது தாத்தா போட்ட பாட்டு. இவர்கள் என்ன நாட்டுப்புறப் பாடலுக்குப் புதிதாகச் செய்தார்கள்? என்பதுதான் கேள்வி. சினிமாவில் கானாப் பாட்டு அதன் தனித்தன்மையை இழந்துவிட்டது.
கானாப்பாட்டில் சினிமாத்தனம் வந்துவிட்டது. மக்கள் பாடும் கானாப் பாட்டில் இருந்த அந்த உயிர்ப்பு எங்கே? உணர்வு எங்கே?
கிரியேட்டிவிட்டிக்கு முழுச் சுதந்திரம் அவசியம். நாட்டுப்புறக் கலைகள் வளர எந்தத் தடையும் இல்லாத முழுச்சுதந்திரம் அவசியம். சினிமாவுக்கோ, டிவிக்கோ லாபம்தான் முக்கியம். லாப நோக்கம் வருகிறபோது சுதந்திரம் அடிபட்டுப் போகிறது. லாப நோக்குடன் இயங்கும் சினிமாவால் கிரியேட்டிவ் கலைகளான நாட்டுப்புறக் கலைகளை எப்படி வளர்க்க முடியும்? இயல்பான அகத் தூண்டுதலால் ஒருவர் பெயின்டிங் பண்ணுவது என்பது வேறு. பெயின்டிங் பண்ணினால் லண்டனில் நல்ல விலை கொடுத்து வாங்குவார்கள் என்பதற்காகப் பெயின்டிங் பண்ணுவது என்பது வேறு. அது இயல்பானதல்ல; அங்கே கிரியேட்டிவிட்டிக்கு இடமில்லை. பணத்துக்குத்தான் இடம். பணம் பண்ணும்போது கிரியேட்டிவிட்டி அடிபட்டுப் போகிறது.
உலகமயத்தின் விளைவாக நமது நாட்டில் கம்ப்யூட்டர் தொழில் வளர்ந்திருக்கிறது. பலருக்கு வேலைவாய்ப்பு கிடைத்திருக்கிறது? வளர்ச்சியை மறுக்க முடியுமா?
உலகமயத்தால் கம்ப்யூட்டர் தொழில் வளர்ந்திருக்கிறது என்பது உண்மை. இதனால் பலன் பெற்றோர் நடுத்தர வர்க்க மக்களே. நடுத்தர வர்க்க மக்கள் கோட், சூட், டை அணிவதற்காக கிராமப்புற மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். கிராமப்புறத்தை நாம் அமுக்கினோம் என்றால் நாமும் சேர்ந்து அமுங்கிவிடுவோம் என்பதைப் பலர் மறந்துவிடுகிறார்கள்.
“இந்தியா கிராமங்களில் வாழ்கிறது’ என்றார் மகாத்மா காந்தி. அவர் சொன்னதை நாம் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை. கிராமப்புறத்தை மேம்படுத்த வேண்டும் என்பதுதான் காந்தியின் குறிக்கோள்.
ஆனால் நமது அரசியல்வாதிகள் ஏழை மக்களை ஏழைகளாகவே வைத்திருக்க ஆசைப்படுகிறார்கள். அப்போதுதான் ஐந்து வருடத்துக்கு ஒரு முறை பொய்யான வாக்குறுதிகளைக் கொடுத்து அவர்களின் வாக்குகளைப் பெற முடியும்.
இன்றையச் சூழலில் நாட்டுப்புறக் கலைகளை வளர்க்க வாய்ப்பே இல்லையா?
நம்மிடம் பழம்பெருமை பேசும் பழக்கம் உள்ளது. பழம் பெருமை பேசுவதைவிட பழைமையை உயர்த்த என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்ய வேண்டும்.
நமது பரதநாட்டியம், கர்நாடக சங்கீதம் போன்ற செவ்வியல்கலைகள், நாட்டுப்புறப் பாடல், ஆடல் போன்ற நாட்டுப்புறக் கலைகள், நமது பாரம்பரிய இலக்கியங்கள் இவற்றைப் பாதுகாக்க வேண்டும்.
“நமக்காகப் பணம்’ என்பது போய் “பணத்திற்காக நாம்’ என்று ஆகிவிட்டதுதான் பிரச்சினை.
உலகமயம் வந்தபின்னால் எதுவுமே இயற்கையாக இல்லை. நல்ல தண்ணீர் கிடைக்கிறதா? ஆக்சிஜன் கிடைக்கிறதா? எதுவுமே இயற்கையாகக் கிடைத்து நூறாண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது.
நாட்டுப்புறக் கலைகளை வளர்க்க நேரடியாக அவற்றை மக்களிடம் எடுத்துச் செல்வதுதான் வழி. அது போல கிராமப்புற மேம்பாட்டிலும் கவனம் செலுத்த வேண்டும். மக்கள் நாட்டுப்புறக் கலைகளில் ஆர்வமாக இருக்கிறார்கள்.
அதைவிடக் கிராமப்புறத்தில் வளர்ச்சி ஏற்பட்டால்தான் நாட்டுப்புறக் கலைகளும் அதன் இயல்பான போக்கில் வளர்ச்சி அடையும்.
கிராமப்புறங்களில் தண்ணீர் பிரச்சினையைத் தீர்ப்பது வளர்ச்சிக்கு மிக முக்கியமானது. நமது அரசியல்வாதிகள் கொஞ்சநாட்கள் உலகமயத்தை மறந்துவிட்டு கிராமப்புறத்தின் பக்கம் தங்கள் கவனத்தைத் திரும்பினால்தான் இதற்கு விடிவு ஏற்படும்.
கம்ப்யூட்டர் தொழில் அதிபர் நாராயணமூர்த்தி தேசிய ஹீரோவா? நமது கிராமப்புற மக்கள் தேசிய ஹீரோவா? என்பதுதான் இப்போதைய முக்கியமான கேள்வி.
Posted in Artistes, artists, Arts, Chrungaram, Cinema, Crafts, Culture, Dance, Docu Drama, Documentary, Faces, Films, Folk, Folklore, global, Globalization, Goa, Heritage, Interview, Mime, Movie, people, Performance, Performers, Pride, Sarada, Saradha, Saratha, Sharada, Sharada Ramanathan, Sharadha, Sharatha, Srungaram, Srunkaram, Street, Tradition | Leave a Comment »