“அரியக்குடி’யின் அரிய “சிஷ்யதிலகம்’
நீலம்
“”தோன்றிற் புகழுடன் தோன்றுக” என்ற பொய்யாமொழிப் புலவரின் அருள்வாக்கிற்கு ஒரு சிறந்த சான்றாக, கர்நாடக சங்கீத வானில் ஜொலித்த அற்புதக்கலைஞர் அமரர் சங்கீத கலாநிதி பேராசிரியர் கே.வி. நாராயண ஸ்வாமி.
பிறப்பாலும், குரு பக்தியுடன் ஆற்றிய அயராத உழைப்பாலும், அர்ப்பணிப்பு உணர்வாலும் கலைத்துறையின் சிகரத்தை எட்டிப்பிடித்த வித்வானாகத் திகழ்ந்த அவரது 84-வது பிறந்தநாள் விழா நவம்பர், 16, 17, 18 தேதிகளில் சென்னையில் கொண்டாடப்பட்டது.
கலைக் குடும்பத்தில் தோன்றிய கே.வி.என். 5-வது வயதிலேயே தமது பாட்டனார், தந்தையாரிடம் அடிப்படைப் பயிற்சி பெற்றார். பாலசிட்சைக்குப் பிறகு மிருதங்க மேதை பாலக்காடு மணி ஐயர், வயலின் வித்தகர் பாப்பா வேங்கடராமய்யா ஆகியவர்களிடமிருந்து மேற்கொண்டு கலைநயங்கள், நுட்பங்களைக் கற்றறிந்தார்.
பாலக்காடு மணி ஐயர் மிருதங்கத்தைப் பாடவைத்த மேதை. அதுமட்டும் அல்ல; அவரே அழகுபடப் பாடும் ஆற்றலையும் படைத்திருந்தார். தாம் கேட்டுச் சுவைத்த உருப்படிகளை நாராயண ஸ்வாமிக்கு கற்பித்து உதவினார். இதில் ஹரி காம்போதி, அடாணா ராகத்தில் அமைந்திருந்த பாடல்கள் குறிப்பிடத்தக்கவை.
பூர்வாங்கப் பயிற்சிகள் நிறைவுபெற்ற பின், சுயேச்சையாகச் சுவையுடன் கச்சேரிகள் செய்யும் பக்குவம் பெற்றுவிட்ட காலத்தில், கே.வி.என். பாட்டில் மேலும் மெருகும் நளினமும் இடம்பெறச் செய்ய வேண்டும் என்று அக்கறை கொண்டார் மணி ஐயர்.
அவரைச் சங்கீத சக்ரவர்த்தியாக மிளிர்ந்த காயக சிகாமணி “அரியக்குடி’ ராமானுஜ அய்யங்காரிடம் பரிந்துரை செய்து, குருகுல வாசம் செய்ய ஏற்பாடு செய்தார். இதை கே.வி.என். இசை வாழ்க்கையில் கிட்டிய பேரதிருஷ்டம் என்றே கூற வேண்டும்.
முன்னதாக 1940-ம் ஆண்டு திருவையாற்றில் ஸ்ரீதியாகராஜர் ஆராதனையில் சங்கீதாஞ்சலி செய்த அவர், 1947-ல் சென்னை மியூசிக் அகாதெமி கலை விழாவில் இளம் பாடகர்கள் பட்டியலில் இடம்பெற்று “அரியக்குடி’ அவர்களுக்குத் தாமே வாரிசாக வரப்போவதாக முன்கூட்டியே செயல்பட்டுப் பாடினார்.
மற்றும் ஒரு மனோகரமான வாய்ப்பு அவருக்குக் கிட்டியது. அதை அவர் நாடியோ தேடியோ போகவில்லை. வலுவில் அவரைத் தொடர்ந்து வந்தது அந்தச் சந்தர்ப்பம்.
சுமார் அரை நூற்றாண்டுக்கு முன் மியூசிக் அகாதெமியின் ஆண்டு இசை விழாவில் பெரிய பக்கவாத்தியங்களோடு “”அரியக்குடி” கச்சேரிக்கு வழக்கம்போல் ஏற்பாடாகியிருந்தது. ஆனால் நிகழ்ச்சிக்கு முதல் நாள் அவர் பங்கேற்க முடியாமல் தடங்கல் ஏற்பட்டது.
இந்த இக்கட்டான நிலையை எப்படிச் சமாளிப்பது என்ற பிரச்னை அகாதெமி நிர்வாகிகளுக்கு எழுந்து கவலைப்பட்டனர். இதை எதிர்கொள்ள சமயசஞ்சீவியாகப் பாலக்காடு மணி ஐயர் யோசனை கூறினார்.
அது என்ன யோசனை? ஐயங்காரைப்போலவே பாடி, மகிழ்விக்கக்கூடியவாறு உருவாகியிருந்த நாராயண ஸ்வாமியையே பாடச் செய்யலாம் என்றார் அவர். உடனே அகாதெமி நிர்வாகிகள் அதை ஆமோதித்தார்கள்.
இதுகுறித்த அறிவிப்பை அகாதெமி நிர்வாகிகள் ஒலிபெருக்கி வழியாக வெளியிட்டதைக் கேட்ட கே.வி.என். திகைத்தார்; திடுக்கிட்டார். ஒருபுறம் மகிழ்ச்சியும், இன்னொருபக்கம் கவலையும் அவரைப் பற்றிக் கொண்டன.
தமது குருவின் புகழுக்கு ஊறுநேராவண்ணம் எப்படி அவருக்குப் பதிலாக அமர்ந்து பாடிக் கரை சேர்வது என்பதே அவர் முதல் கவலை.
இத்தகைய அவரது மனநிலையை நுட்பமாகக் கண்டறிந்த மணி ஐயர், கே.வி.என். னிடம் போய் “”நீ கவலைப்பட வேண்டாம், தைரியமாக ஐயங்காரைத் தியானித்துக் கொண்டு பாடு!. நானும், பாப்பா ஐயரும்தான் உனக்கு வாசிக்கப் போகிறோம்!” என்று தைரியமூட்டினார்.
அவரது அறிவுரையை ஏற்று, குருவை மனதில் தியானித்துக் கொண்டு அவர் நிகழ்த்திய அந்தக் கச்சேரி ஓங்கி, சுக உச்சம் எட்டி, “”அரியக்குடி”யின் “”சிஷ்யதிலகம்!” கே.வி. நாராயண ஸ்வாமியே என்பதற்கு அடையாளமாக ரசிகர்கள் ஒருமுகமாகக் கரவொலி எழுப்பி மகிழ்ந்தார்கள்.
எப்படி தமது தமயன் ராமனுக்கு பரதன் பாதுகா பட்டாபிஷேகம் செய்து அரசு நடத்தினாரோ அதேபோல் நாராயண ஸ்வாமியும் தமது குருவுக்குப் பதிலாக அமர்ந்துபாடி, அவருக்கு “”பாட்டாபிஷேகம்!” செய்து தம்மைச் சங்கீத பரதனாக்கிக் கொண்டார்.
அமெரிக்காவிலும், பிற வெளிநாடுகளிலும் நமது சங்கீதத்தின் சிறப்பைப் பல்வேறு பதவிகள் மூலமும் செயல்பாடுகளின் வாயிலாகவும் அருந்தொண்டு புரிந்த கலைஞர் அவர். இளம்தலைமுறையினருக்கு அவர் முன்மாதிரி.
“அரியக்குடி’ தமது அந்தரங்கத்தில் நாராயண ஸ்வாமியே தமக்குப் பின் பெயர் சொல்லக்கூடிய சீடராக வருவார் என உறுதி கொண்டிருந்தார். இதற்குப் பல சான்றுகள் உண்டு.
ஆனால் இக் கருத்தை அவர் வெளிப்படையாகக் கூறியதில்லை. காரணம் அவருடைய சங்கீதத்தைப் போலவே அவரிடம் நிலைகொண்டிருந்த இங்கித இயல்பு. இருப்பினும் ஒருசிலரிடம் மட்டும் தம் கருத்தைத் தெரிவித்ததும் உண்டு.
வயது முதிர்ந்த காலகட்டத்தில் “அரியக்குடி’ தமது சிஷ்யரான நாராயண ஸ்வாமியின் பின்பலத்தில் பூரணமாக நம்பிக்கை கொள்ளலானார். இதற்கும் அனேகம் சான்றுகள் உண்டு. சோதிடத்தில் குருபலம் என்று குறிப்பிடுவதுபோல் “அரியக்குடி’யிடம் உதித்த இந்த விருப்பத்தை “சிஷ்யபலம்’ என்று கூறலாம் அல்லவா?
கே.வி.என். விரிவான பாடாந்தரம் உள்ளவராக ஒளிர்ந்தார். குறிப்பாக கோபாலகிருஷ்ண பாரதியாரின் நந்தனார் சரித்திரப் பாடல்களை அவர்போல் பாடி ரசிகர்களை உருக வைத்தவர்கள் அபூர்வம். அப்பாடல்கள் யாவுமே இன்பமயம்.
குறிப்பாக மாஞ்சி ராகத்தில் “”வருகலாமோ ஐயா!” என்ற பாடலை அவர் வழங்கும்போது ரசிகர்கள் மெய்சிலிர்த்துப் பக்தி வெள்ளத்தில் மூழ்கிப் போவார்கள். பட்டமரமும் பாலாக உருகிப்போகும், மிகை இல்லை.
கே.வி.என். பாடிய இசை சுகந்தத் தென்றலுக்கு இணை. அவரது சங்கீத வழங்கல் ரசிகர்களைச் சுகபாவத்துடன் வருடிக் கொடுத்தது. என் வேண்டுகோளை ஏற்று “அரியக்குடி’ மெட்டுப் போட்டுத் தந்த திருப்பாவை, அருணாசலக் கவியின் பாடல்கள், குலசேகர ஆழ்வார் அருளிய ராமகாவியப் பாசுரங்கள் ஆகிய அனைத்துக்கும் ஸ்வர, தாளங்கள் வரைந்து தமது குருவுக்கு உறுதுணையாக நின்று தமிழிசைக்கும், கலை அன்னைக்கும் நாராயண ஸ்வாமி புரிந்துள்ள சேவை நித்திய சிரஞ்சீவியாக நிலைப்பது உறுதி.
வாழ்க கே.வி.என். புகழ்.
(கட்டுரையாளர்: சுதேசமித்திரன் பத்திரிகையின் முன்னாள் செய்தி ஆசிரியர்)