பி.எப். வட்டி
நாட்டிலுள்ள 4 கோடி தொழிலாளர்கள், ஊழியர்கள் ஆகியோரின் சம்பளத்திலிருந்து மாதாமாதம் கட்டாயமாகப் பிடித்தம் செய்யப்படும் வருங்கால வைப்புநிதிக்கு (பி.எப்.) எவ்வளவு வட்டி அளிப்பது என்ற பிரச்சினை வழக்கம்போல இந்த ஆண்டும் இழுபறியாக உள்ளது.
இந்த வட்டிவிகிதத்தை 8 சதவீதமாகக் குறைக்க அரசு விரும்புகிறது. இவ்விதம் குறைக்கக் கூடாது என்று தொழிற்சங்கங்கள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன.
வருங்கால வைப்புநிதித் திட்டம் 1952-ல் தொடங்கப்பட்டதாகும். தொழிலாளர்களும், ஊழியர்களும் தாங்களாக முன்வந்து எதிர்கால நலன் கருதி, சேமிப்பில் பணம் போட இயலாதவர்கள்.
ஆகவே அவர்கள் ஓய்வு பெறும்போது கணிசமான பணம் கிடைக்கச் செய்ய இத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. வைப்புநிதி வகையில் பிடிக்கப்படும் தொகை ஒவ்வொருவர் கணக்கிலும் சேர்ந்துகொண்டே போகிறது. இதற்காகக் கணக்கிடப்படும் வட்டித்தொகை ஏற்கெனவே உள்ள தொகையுடன் ஆண்டுதோறும் சேர்க்கப்படுகிறது.
ஒருகாலகட்டத்தில் இதற்கான வட்டித்தொகை 12 சதவீதமாக இருந்தது. ஆனால் 2000-ம் ஆண்டில் தொடங்கி இது படிப்படியாகக் குறைக்கப்பட்டு இப்போது 8.5 சதவீதமாக உள்ளது. ஆனால் இதைக் கொடுப்பதே பெரும்பாடு என்பதுபோல அரசு சித்திரிக்க முற்பட்டுள்ளது. வைப்புநிதிக்காகப் பிடித்தம் செய்யப்படுகிற தொகையுடன் நிர்வாகம் சம அளவில் அளிக்கின்ற தொகையும் சேர்ந்து மொத்தப் பணம் பெருகிக் கொண்டே போகிறது. 2004 மார்ச் 31-ம் தேதி நிலவரப்படி மொத்த வைப்புநிதித் தொகையில் உள்ள பணம் ரூ. 1 லட்சத்து 28 ஆயிரம் கோடியாகும். இது தொழிலாளர்களுக்கும், ஊழியர்களுக்கும் உரியது. ஆகவே இது அரசுக்கு அவர்கள் அளித்துள்ள கடன் போன்றதே.
கடந்த சில ஆண்டுகளாக வங்கிகளில் செய்யப்படும் டெபாசிட்டுகளுக்கு கூடுதல் வட்டி வழங்கப்படுகிற அதேநேரத்தில், வைப்புநிதிக்கு அரசு அளிக்கும் வட்டித்தொகை குறைந்து கொண்டே வருகிறது. நாட்டில் பணவீக்க விகிதம் 5 சதவீத அளவை எட்டியுள்ள நிலையில் வைப்புநிதிக்கு அளிக்கப்படுகிற வட்டி மிகக் குறைவே. இதை மேலும் குறைப்பது என்பது எந்தவகையிலும் நியாயமற்றது. இந்தியாவில் யாராவது பல ஆயிரம் கோடி ரூபாயை 8.5 சதவீத வட்டியில் நீண்டகாலக் கடனாக அளிப்பார்களா என்பது சிந்தித்துப் பார்க்க வேண்டிய விஷயம். ஆனால் வைப்புநிதித் திட்டத்தின் கீழ் வருகிற தொழிலாளர்களும், ஊழியர்களும் மட்டும் அப்படி குறைந்த வட்டியில் கடன் தர வேண்டுமென அரசு எதிர்பார்ப்பது எப்படி என்பது புரியவில்லை.
வருங்கால வைப்புநிதிக்கான வட்டிவீதத்தை இப்போதுள்ள அளவில் நீடித்தால் அல்லது உயர்த்தினால் அரசுக்கு நஷ்டம் ஏற்படும் என்று வாதிக்கப்படுகிறது. இது பொருளற்ற வாதமாகும். வருங்கால வைப்புநிதி வகையில் பெறப்படும் தொகையில் 79 சதவீதம் சிறப்பு டெபாசிட் திட்டத்தில் போடப்படுகிறது. இத் திட்டத்துக்கு உண்டான வட்டி 8 சதவீதமே என்றும் ஆகவே அதற்கு மேல் கொடுத்தால் நஷ்டம் என்றும் வாதிக்கப்படுகிறது. சிறப்பு டெபாசிட் திட்டத்துக்கான வட்டி 8 சதவீதம் என்பதை நிர்ணயித்தது யார்? அதாவது அரசு தானாக ஒரு வட்டி வீதத்தை நிர்ணயித்துவிட்டு அதற்கு மேல் கொடுத்தால் நஷ்டம் என்று கூறுவது விசித்திரக் கணக்கு ஆகும்.
வருங்கால வைப்புநிதிக்கான வட்டிவீதம், முன்பு இருந்த அளவுக்காவது உயர்த்தப்பட வேண்டும். அதற்கு தொழிற்சங்கங்கள் போராட வேண்டும். 8 சதவீதமாகக் குறைக்கும் திட்டத்தை முறியடித்துவிட்டோம் என்று பெருமைப்படுவதோடு நின்று விடலாகாது.