கூடங்குளம் விரிவாக்கம்
தமிழகத்தில் மின் பற்றாக்குறை அதிகரித்து வரும் நிலையில் கூடங்குளம் அணுமின் நிலையத் திட்டம் விரிவாக்கப்படலாம் என்ற தகவல் மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது. ரஷிய அதிபர் புதின் அடுத்த வாரம் இந்தியாவுக்கு வரும்போது இதற்கான ஒப்பந்தம் கையெழுத்திடப்படலாம்.
கூடங்குளத்தில் இப்போது தலா ஆயிரம் மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் திறன் கொண்ட இரு அணுமின் நிலையங்கள் நிறுவப்பட்டு வருகின்றன. இவற்றுக்கான பணிகள் முடிவடையும் கட்டத்தில் உள்ளன. முதல் யூனிட்டின் அணு உலைப் பணிகள் இந்த ஆண்டு கடைசியில் நிறைவடைந்து, அடுத்த ஆண்டு மார்ச் வாக்கில் மின் உற்பத்தியைத் தொடங்கும். இரண்டாவது யூனிட்டும் அடுத்த ஆண்டில் மின் உற்பத்தியில் ஈடுபடலாம்.
கூடங்குளம் திட்டம் 2002-ம் ஆண்டில் தொடங்கப்பட்டபோதே அங்கு மொத்தம் எட்டு யூனிட்டுகளை நிறுவுவதற்கான வகையில் வசதிகள் அமைக்கப்படலாயின. நாட்டில் அணுசக்தி மூலம் மின் உற்பத்தியைப் பெருக்குவதில் முனைப்புக் காட்டி வரும் மத்திய அரசு, கூடங்குளத்தில் மேலும் நான்கு மின் உற்பத்தி நிலையங்களை நிறுவ விரும்பியது. அந்த வகையில்தான் இப்போது உடன்பாடு கையெழுத்தாக இருக்கிறது. புதிதாக நான்கு யூனிட்டுகள் நிறுவப்படும்போது தமிழகம் நல்ல பலன் பெறும். முதல் இரு யூனிட்டுகளும் உற்பத்தி செய்ய இருக்கும் 2,000 மெகாவாட் மின்சாரத்தில் தமிழகத்தின் பங்காக 1,200 மெகாவாட் மின்சாரம் கிடைக்கும். மேலும் நான்கு யூனிட்டுகள் நிறுவப்படும்போது தமிழகத்துக்கு கூடுதலாக மின்சாரம் கிடைக்கும்.
கூடங்குளம் அணுமின் நிலையம் இந்தியாவின் அணு மின்துறையில் புதிய சகாப்தத்தைத் தொடங்கி வைப்பதாகக் கூறலாம். இந்தியாவில் ஏற்கெனவே 16 அணுமின் நிலையங்கள் உள்ளன. இவற்றில் நான்கு நீங்கலாக மீதி அனைத்தும் இந்தியா சொந்தமாக உருவாக்கி, அமைத்துக் கொண்டவை. ஆனாலும், இவற்றில் பெரும்பாலானவை தலா 220 மெகாவாட் அளவுக்குத்தான் மின்சாரத்தை உற்பத்தி செய்பவை. கூடங்குளம் அணுமின் நிலையம் ஏற்கெனவே கூறியதுபோல, தலா 1000 மெகாவாட் திறன் கொண்டது. தவிர, இவை செறிவூட்டப்பட்ட யுரேனியத்தைப் பயன்படுத்தும்.
கூடங்குளத்தில் சோவியத் யூனியனின் உதவியுடன் அணுமின் நிலையங்களை நிறுவ, 1988-ம் ஆண்டிலேயே உடன்பாடு ஏற்பட்டது. இதற்கான ஒப்பந்தத்தில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியும் முன்னாள் ரஷிய அதிபர் கொர்பச்சேவும் கையெழுத்திட்டனர். ஆனால் சோவியத் யூனியன் பல நாடுகளாக உடைந்ததால் இத் திட்டம் மேற்கொள்ளப்படவில்லை. 1999-ல் இத் திட்டம் புத்துயிர் பெற்று 2002-ல் பணிகள் தொடங்கின.
நாட்டின் மொத்த மின்சார உற்பத்தியில் அணுமின் நிலையங்களின் பங்கு இப்போது மூன்று சதவீதமாக, அதாவது சுமார் 4 ஆயிரம் மெகாவாட் அளவில் உள்ளது. இதை 2030-ம் ஆண்டுவாக்கில் 40 ஆயிரம் மெகாவாட்டாக உயர்த்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவுடன் அணுசக்தி தொடர்பாகச் செய்து கொள்ளப்பட்டுள்ள ஒப்பந்தம் இதற்கு வழிவகுக்கலாம். இந்த ஒப்பந்தத்தைத் தொடர்ந்து இந்தியாவுக்கு அணுஉலைகளையும் அணுசக்தி எரிபொருள்களையும் அளிப்பது தொடர்பான பல கட்டுப்பாடுகள் அகற்றப்படலாம். அக் கட்டத்தில், பல வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் அணுமின் நிலையங்களை அமைக்க முன்வரும். ஏற்கெனவே பல வெளிநாட்டு நிறுவனங்கள் இவ் விஷயத்தில் அக்கறை காட்டி வருகின்றன. இது ஒருபுறமிருக்க, அணுமின் நிலையங்களை அமைக்க இந்தியாவின் தனியார் நிறுவனங்களும் அனுமதிக்கப்படலாம் என்பதற்கான குறிப்புகள் உள்ளன. இந்தியாவும் ரஷியாவும் கூட்டாகப் புதிய வகை அணு உலைகளை வடிவமைத்துத் தயாரிப்பதற்கான வாய்ப்புகளும் உள்ளன.
—————————————————————————————-
ரூ. 2,176 கோடியில் புதிய அனல் மின் நிலையம்
சென்னை, ஜூலை 27: சென்னை அருகே ரூ. 2,176 கோடியில் 500 மெகாவாட் திறனுள்ள புதிய அனல் மின் நிலையம் அமைக்கும் பணி விரைவில் தொடங்க உள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தாலுகா எண்ணூர் கிராமத்தில் உள்ள வடசென்னை அனல்மின் நிலைய வளாகத்தில் இந்த புதிய அனல் மின் நிலையம் அமைக்கப்பட உள்ளது.
இதுகுறித்து வடசென்னை அனல்மின் நிலையத்தின் தலைமைப் பொறியாளர் (பொறுப்பு) என். சங்கமேஸ்வரன் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது:
வடசென்னை அனல்மின் நிலையம் (நிலை-1) தற்போது தலா 210 மெகாவாட் திறனுள்ள 3 பிரிவுகள் மூலம் ஆண்டுக்கு 1.5 கோடி யூனிட் மின் உற்பத்தி செய்து வருகிறது. இதன்மூலம் சென்னையின் 60 சதவீத மின் தேவை நிறைவேற்றப்படுகிறது.
தற்போது இதே வளாகத்தில் 500 மெகாவாட் திறனுள்ள புதிய அனல்மின் நிலையம் (நிலை-2) ரூ. 2,716 கோடியில் 180 ஏக்கரில் அமைக்கப்பட உள்ளது.
தமிழக மின் வாரியத்தின் சார்பில் இத் திட்டத்துக்கான உலகளாவிய ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டுள்ளன. வரும் ஆகஸ்ட் 30-ம் தேதிக்குள் இந்த ஒப்பந்தப்புள்ளிகள் முடிவு செய்யப்படும்.
இதைத் தொடர்ந்து நவம்பர் மாதத்தில் கட்டுமானப் பணிகள் தொடங்கும். நவீனத் தொழில்நுட்ப அடிப்படையில் சுற்றுச் சூழல் பாதிக்காத வகையில் இந்த அனல் மின்நிலையம் அடுத்த 3 ஆண்டுகளுக்குள் அமைக்கப்படும்.
தேசிய மின் கழகம் இதற்கான இடத்தை ஆய்வு செய்து ஒப்புதல் வழங்கியுள்ளது.
புதிய அனல்மின் நிலைய வளாகத்தில் நிலக்கரி தூசுக்களை சுற்றுச் சூழல் மாசுபடாத வகையில் நீரில் படியும் முறையில் அகற்ற தனிப் பிரிவு அமைக்கப்படும்.
வரும் 2011-ல் மின் உற்பத்தி தொடக்கம்: இப் பணிகள் நிறைவடைந்த பின் வரும் 2011-ம் ஆண்டில் இருந்து புதிய அனல் மின் நிலையம் தனது மின் உற்பத்தியைத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் ஆண்டுக்கு 1.2 கோடி யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும்.
இந்த அனல்மின் நிலையம் மூலம் சுமார் 1,500 பேர் வேலைவாய்ப்பு பெறுவர்.
தற்போது அனல் மின் நிலையங்களில் ஒரு யூனிட் மின் உற்பத்திக்கு தலா ரூ. 2.30 செலவிடப்படுகிறது. இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரி மூலம் சூழல் பாதிப்பு மிகக் குறைவாக உள்ளது என்றார் சங்கமேஸ்வரன்.
—————————————————————————————
5 புதிய மின் உற்பத்தி நிலையங்கள் அமைக்க திட்டம்
சென்னை, ஜூலை 27: தமிழகத்தில் மேலும் 5 புதிய மின் உற்பத்தி நிலையங்களை அமைக்க அரசு திட்டமிட்டுள்ளது.
தமிழகம் தற்போது 10,000 மெகாவாட் மின் உற்பத்தி திறன் பெற்றுள்ளது. இதில் வடசென்னை, எண்ணூர், மேட்டூர், தூத்துக்குடி ஆகிய அனல்மின் நிலையங்கள் மூலம் 2,970 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.
சென்னை பேசின்பிரிட்ஜ், ராமநாதபுரம் அருகே வழுத்தூர், மன்னார்குடி அருகே கோயில்களப்பால், குத்தாலம் ஆகிய இடங்களில் எரிவாயு மின் நிலையங்கள் மற்றும் நீர் மின் நிலையங்கள், கல்பாக்கம் அணுமின் நிலையம் ஆகியவற்றின் மூலம் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.
இந் நிலையில் மேட்டூரில் கூடுதலாக 500 மெகாவாட் மின் நிலையமும், தூத்துக்குடியில் 1,000 மெகாவாட் மின் நிலையம் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
எண்ணூர் மின் நிலையத்தின் மின் உற்பத்தித் திறன் 300 மெகாவாட் அளவாகக் குறைந்துள்ளது. இதையடுத்து எண்ணூரில் கூடுதலாக 500 மெகாவாட் மின் நிலையம் கட்டப்பட உள்ளது.
இதே போல நெல்லை அருகே உடன்குடியில் 800 மெகாவாட் திறனுள்ள 2 அனல்மின் நிலையங்கள் அமைக்க மத்திய அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட உள்ளன.
இதுதவிர குந்தாவில் 500 மெகாவாட் திறனுள்ள நீர் மின் நிலையம் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது என்று மின் வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன.