80 ஆண்டு பழமையான பாலம் ஆற்றுக்குள் இடிந்து விழுந்தது
பட்டுக்கோட்டை, ஜன. 25: பட்டுக்கோட்டை அருகே பழஞ்சூர் நசுவினியாற்றில் பல ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட மேல்நிலைப் பாலம் செவ்வாய்க்கிழமை மாலை இடிந்து ஆற்றுக்குள் விழுந்தது.
அப்போது எந்த வாகனமும் பாலத்தில் செல்லவில்லை. இதனால் அதிர்ஷ்டவசமாக விபத்து தவிர்க்கப்பட்டது.
சுமார் 80 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட இந்த பாலத்தின் நீளம் 40 மீட்டர், உயரம் சுமார் 4 மீட்டர். இதில் சுமார் 25 மீட்டர் நீளத்துக்கு பாலம் இடிந்து ஆற்றுக்குள் விழுந்து விட்டது.
இதனால் அதிராம்பட்டினம் -மன்னார்குடி (துவரங்குறிச்சி வழி) மார்க்கத்தில் போக்குவரத்து தடைபட்டுள்ளது.
புதிய பாலம் கட்டப்படும் வரை இவ்வழித்தடத்தில் வாகனப் போக்குவரத்துக்காக இடிந்த பாலம் அருகில் இன்னும் 1 மாதத்தில் மாற்றுப் பாதை அமைக்க நெடுஞ்சாலைத்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.