பழனியப்பா செட்டியார் நினைவு சிறுவர் இலக்கியச் சிறுகதைப் போட்டி
சென்னை, பிப்.23: புகழ்பெற்ற பதிப்பகமான பழனியப்பா பிரதர்ஸ், அதன் நிறுவனர் செ.மெ.பழனியப்ப செட்டியார் நினைவாக, மாணவப் படைப்பாளிகளை உருவாக்கும் நோக்கில், பள்ளி, கல்லூரி மாணவர்களுக்காக, செ.மெ.பழனியப்பா செட்டியார் நினைவுச் சிறுவர் இலக்கியச் சிறுகதைப் போட்டியை அறிவித்திருந்தது.
அதில், பரிசு பெற்ற பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பரிசு வழங்கும் விழாவும், அக்கதைகளைத் தொகுத்து கண்ணன் கண்ட சொர்க்கம் எனும் நூல் வெளியீட்டு விழாவும், சென்னை ஃபிலிம் சேம்பர் அரங்கில் அண்மையில் நடைபெற்றது.
நிறுவனர் நாளாக நடைபெற்ற இவ்விழாவில் பிரபல எழுத்தாளர்கள் கே.ஆர்.நரசய்யா எழுதிய மதராசப்பட்டினம், ப.முத்துக்குமாரசுவாமி எழுதிய அம்பிகை ஆகிய இரண்டு நூல்களும் வெளியிடப்பட்டன.
நல்லி குப்புசாமி செட்டியார் நூல்களை வெளியிட்டார். தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் ம.இராசேந்திரன் பெற்றுக் கொண்டார்.
சிறந்த கல்வியாளரும், முன்னாள் துணைவேந்தருமான பேராசிரியர் சை.வே.சிட்டிபாபு மாணவப் படைப்பாளிகளுக்குப் பரிசுகள் வழங்கினார்.
விழாவில் பேசிய தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் ம.இராசேந்திரன் “மதராசப்பட்டினம் என்ற நூல் பல அரிய செய்திகளை உள்ளடக்கிய ஒரு வரலாற்று ஆவணம். சென்னையைப் பற்றிய வரலாற்று ஆவணம், முன்னோர்கள் நினைவு கூறும் ஆன்மிகம், வருங்காலத் தலைமுறைக்கு வழிகாட்டும் மாணவர் இலக்கியம் என மூன்று வழிகளில் சிந்தித்து, மூன்று நூல்களை பழனியப்பா பிரதர்ஸ் தந்திருப்பது பாராட்டத்தக்கது’ என்றார்.
விழாவில் 2006-ம் ஆண்டு 10, 12-ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் தமிழில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற 6 மாணவ, மாணவியரை உருவாக்கிய தமிழாசிரியர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும் அம்மாணவர்களை உருவாக்கிய பள்ளிகளுக்கு நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன.
மாணவ எழுத்தாளர்களை உருவாக்கும் திட்டத்தின் அடுத்தபடியாக, மாணவ எழுத்தாளர் பயிற்சிப் பட்டறை ஒன்றைத் தொடங்க இருப்பதாக பழனியப்பா பிரதர்ஸ் நிறுவனத்தின் சார்பில் ப.செல்லப்பன் தெரிவித்தார்.