Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Pavannnan’ Category

Pavannnan – The divide between wealthy & needy

Posted by Snapjudge மேல் மே 23, 2007

இருவேறு உலகங்கள்

பாவண்ணன்

அதிகாலை நடை முடிந்து திரும்பும் தருணத்தில் வழக்கமாக என் கண்களில் படும் முதல் காட்சி கீரைக்கட்டுகளை விற்றுமுடித்த ஆண்களும் பெண்களும் ஊர்திரும்பும் உற்சாகத்தோடு கூடைகளுடன் நிற்கும் தோற்றமாகும்.

வாய்நிறைய வெற்றிலைச் சாறும் புகையிலையுமாக ஒரு மூதாட்டி எனக்காக எடுத்து வைத்திருந்த கீரைக்கட்டுகளைக் கொடுத்து வியாபாரத்தை முடித்துக்கொள்வது அதற்கடுத்த காட்சி.

ஆண்டுக்கணக்கில் தொடர்ந்து பார்வையில் தென்படும் இக்காட்சிகளில் இந்த ஒன்றிரண்டு மாதங்களாக ஏற்பட்ட மாற்றங்கள் அதிர்ச்சியளிப்பவையாக உள்ளன. பலருடைய கீரைக்கட்டுகள் எடுத்துப் பார்க்க ஆளின்றிக் கூடைகளில் முடங்கிக் கிடக்கின்றன.

பிரித்து வைத்த கூறுகள் இளஞ்சூரியனின் ஒளியை உள்வாங்கி வாடத் தொடங்குகின்றன. விற்றது பாதி, விற்காதது பாதி என்கிற நிலை சிலருக்கு. காலையிலேயே தெரு உலாவைத் தொடங்கிவிட்ட நகரத்து மாடுகளின் பக்கம் அரைமனத்தோடு கீரைக்கட்டுகளை வீசிவிட்டு அவசரமாக ஊர் திரும்புகிறார்கள் சிலர்.

இந்த எல்லா மாற்றங்களுக்கும் குழப்பங்களுக்கும் அதிர்ச்சிகளுக்கும் காரணம் பணக்கார நிறுவனங்களால் குளிரூட்டப்பட்ட மாபெரும் கட்டடங்களில் அக்கம்பக்கத்தில் தொடங்கப்பட்ட சில்லறை வணிக விற்பனை.

பணக்கார நிறுவனங்கள் நினைத்த நேரத்தில் நினைத்த தொழிலை மிக எளிதாக இந்த நாட்டில் தொடங்கிவிட முடிகிறது. பெட்ரோல் முதல் தேங்காய் எண்ணெய் பாக்கெட் வரை அனைத்தையுமே அவை விற்று வருகின்றன.

இன்சூரன்ஸ் துறை முதல் தொலைபேசித் துறை வரை எல்லாத் துறைகளிலும் கூடாரத்தில் ஒட்டகம் நுழைந்த கதையாக முன்னங்கால்களை ஊன்றிவைத்தாகிவிட்டது. உப்பையும் தண்ணீரையும்கூட விட்டுவைக்கவில்லை.

கோதுமை மாவு, கொழுப்பு அகற்றப்பட்ட எண்ணெய், விதவிதமான குழம்புகளுக்குத் தேவையான விதவிதமான மசாலாப் பொடிகள் எனப் பல சில்லறைப் பொருள்கள்கூட கடைகளில் கண்ணாடிப் பேழைகளிலும் தாங்கிகளிலும் விற்பனைக்காக அடுக்கப்பட்டுவிட்டன. இந்த வரிசையில் இப்போது கீரைக்கட்டுகளும் காய்கறிகளும் இடம்பெறத் தொடங்கிவிட்டன.

காலம் முன்னகரும் வேகத்தில் மாற்றங்கள் தவிர்க்க முடியாதவை என்பது உண்மை. மாற்றம் என்னும் காந்தம் குறிப்பிட்ட ஒருசில கூட்டத்தினரை மட்டுமே ஈர்த்துத் தன்னுடன் இணைத்துக் கொள்கிற சக்தியாக மட்டுமே இயங்குகிறது என்பதுவும் உண்மை.

ஈர்க்கப்பட்டவர், ஈர்க்கப்படாதவர் என இருபெரும் பிரிவுகளாக உலகம் பிளவுபட்டுத் துண்டுகளாக மாறத் தொடங்கிவிட்டது என்பது மிகவும் கசப்பான உண்மை.

செக்கடிக்குச் சென்று எண்ணெய் வாங்கியது ஒரு காலம். பலசரக்குக் கடைகளில் எண்ணெய்யும் ஒரு விற்பனைச் சரக்காக இடம்பெறத் தொடங்கியது இன்னொரு காலம். பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டு விற்பனைக்கு வைத்திருக்கிற காலம் இன்று.

உப்பு முதல் புளி வரையான பல பொருள்களின் விற்பனை முறைகள் உருமாறி உருமாறி இன்று வேறொரு விதமாக மாறிவிட்டன. காலந்தோறும் ஒவ்வொரு விற்பனை முறையும் மாற்றமடையும்போதெல்லாம் விற்பனைமுறைகளில் ஈடுபட்டிருந்தவர்களின் பிழைப்புக்கான வழியில்தான் முதல் அடி விழுகிறது. அந்த அடியின் வேகத்தில் பாதியளவினர் சிதறி வேறு வாழ்க்கை முறையைத் தேடிப் போகிறார்கள். மீதியுள்ளவர்கள் புதுமுறையின் நவீனப் பகுதிகளுக்குத் தகுந்தபடி தம்மைத் தகவமைத்துக் கொண்டு மீண்டுமொரு வாழ்க்கையை வாழத் தொடங்குகிறார்கள்.

இன்றுவரை உருவாகிவந்த மாற்றங்கள் ஏற்படுத்தித் தந்திருக்கும் சில வசதிகளைப்போலவே இன்று உருவாகும் மாற்றத்திலும் சில வசதிகள் உள்ளதை மறுப்பதற்கில்லை. வேலைநேரம் என்பதே அடியோடு மாறிவிட்ட சூழலில் இருபத்திநாலு மணி நேரமும் இயங்க வேண்டிய நெருக்கடிகளில் சிக்கி நகரங்கள் மூச்சுத் திணறிக் கொண்டிருக்கும் காலம் இப்போது.

அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற மேலை நாடுகளைச் சேர்ந்த அலுவலகங்களின் கிளை அலுவலகங்களால் நிரம்பத் தொடங்கிவிட்டன இந்திய நகரங்கள். ஒன்பது அல்லது பத்து மணிக்குத் தொடங்கி ஐந்து அல்லது ஆறு மணிக்கு வீடு திரும்பிய சூழல் இப்போது இல்லை.

“”சிக்காகோவின் தெருக்களிலே சிந்திய ரத்தம் போதாதா?” என்னும் தொழிற்சங்க முழக்கங்கள் நினைவூட்டும் எட்டு மணி நேர வேலைத் திட்டம் இன்று கண் முன்னிலையிலேயே குளிரூட்டப்பட்ட அலுவலகச் சுவர்களிடையே சிதைந்து கொண்டிருக்கிறது. கசக்கிப் பிழிய ஆளில்லாமலேயே கசங்கிப் போகவும் மணிக்கணக்கில் கண் விழிக்கவும் பழகிவிட்ட இளந்தலைமுறையினரை இந்த அலுவலகங்கள் உருவாக்கிவிட்டன.

இன்றைய தனியார் வணிகத்தின் மாபெரும் இலக்கு இந்த இளந்தலைமுறை. மூவாயிரம் ரூபாய் மதிப்புள்ள செருப்புமுதல் மூன்று ரூபாய் மதிப்புள்ள கீரைக்கட்டுவரை இனி எதை விற்றாலும் இவர்களை நோக்கிதான் விற்க வேண்டும்.

அகால நேரத்தில் வேலைக்குச் சென்று திரும்புகிற இந்தக் கூட்டத்தினருக்கு ஒவ்வொரு பொருளுக்கும் ஒவ்வொரு கடையாக ஏறி இறங்க நேரமில்லை.

எல்லாமே ஒரே கூரையின் கீழ் இருக்க வேண்டிய வசதியை எதிர்பார்க்கிறது அவர்கள் மனம். தேவையானவற்றையெல்லாம் அள்ளி ஒரு பெரும் உறையிலிட வேண்டும். எடுத்துச்செல்ல ஒரு வாகனமும் வேண்டும். அவ்வளவுதான். நாள்கணக்கில் பாதுகாக்க குளிர்அறைப்பெட்டி இருக்கும்வரை எக்கவலையும் இல்லை. பதப்படுத்தப்பட்ட கீரைக்கட்டுகள் குளிரூட்டப்பட்ட அடுக்குகளில் வைக்கப்பட்டு விற்கப்படுவது இவர்களுக்காகவே.

வரலாற்றில் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஏதோ சில மாற்றங்கள் இவ்விதத்தில் மௌனமாக நிகழ்ந்தபடியேதான் உள்ளன. இந்த மாற்றங்களை இன்று சப்தம் போட்டு விளம்பரப்படுத்தும் ஊடகங்களின் பெருக்கத்தாலும் நிறுவனங்களின் குறைந்தவிலைத் தந்திரங்களாலும் இது ஏதோ ஒரு மாபெரும் புரட்சியாக உருப்பெருக்கிக் காட்டப்படுகிறது.

இந்த வியாபார அமைப்பு புதிய இளந்தலைமுறையினரையே பிரதான இலக்காகக் கொண்டதாக இருப்பினும் அந்த இலக்கில் விழும் இரையோடு மட்டுமே நிறைவடைய வியாபார நிறுவனங்கள் தயாராக இல்லை. கோடிக்கணக்கில் முதலீடு செய்து ஒற்றை இலக்கை மட்டுமே அடைவதில் என்ன லாபம் என்னும் கணக்கால் உருவானதுதான் விலைக்குறைப்புத் தந்திரம்.

ஒரு பொருளுக்கு இரண்டு ரூபாய் என்பது அடக்கவிலையில் பாதிதான் என்பது வாங்குகிறவனுக்கே தெரிகிற நிலையில் விற்றுக்காட்டும் சாகசத்தில் நடுத்தட்டு மக்களையும் அடித்தட்டு மக்களையும் இரையாக்கி உண்ண விரும்பும் வேகமே வெளிப்படுகிறது. முந்தைய மாற்றங்களுக்கும் இன்றைய மாற்றத்துக்கும் உள்ள முக்கிய வேறுபாடு இது.

மலிவாகக் கிடைக்கிறவரை வாங்கி அனுபவித்துக் கொள்ள வேண்டியதுதான் என்னும் நடுத்தட்டின் மனக்கணக்கு நிறுவனங்களுக்குப் புரியாத புதிரல்ல. வாங்குதல் என்னும் தற்செயல் நிகழ்ச்சி கைப்பழக்கமாகவும் மனப்பழக்கமாகவும் மெல்லமெல்ல மாறும்வரை இந்த மலிவுவிலை நாடகம் தொடரும்.

நாடகம் முடிந்து என்றாவது ஒருநாள் ஒரு கீரைக்கட்டு பத்து ரூபாய் என்று விலைத்தாள் தொங்கவிடப்படும்போது பிரதான இலக்கான இளந்தலைமுறைக்கு அது எவ்விதமான ஆச்சரியத்தையும் தரப்போவதில்லை. கடன் அட்டையில் பதியப்படும் எண்களைக் கவனிக்கக்கூட அவர்களுக்கு நேரம் இருப்பதில்லை.

மூன்றுக்கும் பத்துக்குமான வேறுபாடு பொருள்படுத்தத் தேவையற்ற ஒன்றாக எடுத்துக்கொள்ளக்கூடிய மனநிலையைத் தொட்டுவிட்ட அவர்களுக்கு அந்த உயர்வு ஒரு விஷயமாகவே இருக்கப் போவதில்லை.

அதிர்ச்சியில் குலைந்து சொல்லிச்சொல்லி ஆதங்கப்படப்போவது நடுத்தட்டும் அடித்தட்டும் மட்டுமே. ரோஷத்தில் வெளியேறி மீண்டும் பழைய பழக்கத்தைத் தொடர ஒருபுறம் அவர்கள் மனம் இடம் தரலாம்.

ஆனால் இன்னொரு புறத்தில் பிழைப்பைத் தொடர முடியாத தள்ளுவண்டிக்காரர்களும் கூடைக்காரர்களும் பிழைப்புக்காக மாற்று வழியைக் கண்டறிந்தவர்களாக மாறிவிட்டிருப்பார்கள்.

விலை ஏறும்போது விலகிவிடலாம் என்று மாற்றுத் தந்திரத்தோடு இயங்கியவர்கள் இரண்டு பக்கங்களிலும் திகைப்பையே எதிர்கொள்ள நேரும்.

சூழல்களின் நெருக்கடிகளால் வணிகத்துறை நிர்ணயித்த இலக்குக்குக் கூடுதல் இரைகளாக இவர்களும் படிப்படியாக மாறக்கூடும்.

மாபெரும் சாகசமாக இந்த வணிகச் சாதனையைத் திரித்துக் காட்டும் ஊடகமே இன்னொரு திசையில் நிகழும் வேலை இழப்பை மாபெரும் வலியாக உருக்கமாகக் காட்டுகிறது.

சாகசம், உருக்கம் என்பன அனைத்தும் ஊடகங்கள் அவ்வப்போது அணியும் புனைவுகள். மண் மீது நிகழும் அனைத்தையும் தன் படக்காட்சிகளாக மாற்றிவிடத் துடிக்கிறது நவீன ஊடகம். உண்மையில் வணிகச்சாதனையால் உருவாகத் தொடங்கிவிட்ட சமூகவலி என்பது வேறு விதமானது.

தனியார் நிறுவனங்களின் கட்டற்ற பங்கேற்பு என்பது எவ்வித பேதங்களுமற்று எல்லாவிதத் துறைகளிலும் தன் அசுரக்கால்களை ஊன்றத் தொடங்கிவிட்ட நிலையில் இந்த உலகம் இரு பெரும் பிரிவுகளாகப் பிளவுபட்டு நிற்பது துல்லியமாகத் தெரியத் தொடங்கிவிட்டது.

இன்று பணமுள்ளவர்கள் உலகம் வேறு. பணமற்றவர்கள் உலகம் என்பது வேறு. கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், அலுவலகங்கள், களியாட்டக்கூடங்கள், உணவு விடுதிகள், விளையாட்டு மைதானங்கள், திரையரங்கங்கள் எனச் சமூகத்தின் எல்லாத் தளங்களிலும் பணமுள்ளவர்களுக்காக உருவாக்கப்பட்டுவிட்ட பெரும்பட்டியலில் இன்னோர் அம்சமாக இன்று விற்பனை நிலையங்களும் சேர்ந்துவிட்டன.

Posted in Analysis, Backgrounder, Bangalored, Call Center, City, Commodity, Communism, Compensation, Consumer, Customer, Deflation, Divide, Economy, Education, Finance, GDP, Globalization, Healthcare, Hospitals, Inflation, InfoTech, Insights, IT, Jobs, Labor, Labour, Marxism, Media, Metro, MNC, Needy, Offshoring, Op-Ed, Outsourcing, Pavannnan, Poor, Prices, Private, Recession, Reliance, Reliance Fresh, Rich, Rural, Salary, Socialism, Spinach, Stagflation, Suburban, Union, Urban, Village, Wal-Mart, Walmart, Wealth, Wealthy, Work, Young, Youth | Leave a Comment »