இது புதுசு: அமெரிக்காவிலிருந்து வந்த ஆர்ட் தெரபிஸ்ட்கள்!
ந.ஜீவா
சில குழந்தைகள் எப்போது பார்த்தாலும் துருதுருவென்று இருப்பார்கள். அவர்களை ஓர் இடத்தில் பிடித்து வைப்பது என்பது பெரும்பாடு. இங்கிருந்து அங்கே குதிப்பார்கள். அங்கிருந்து இங்கே குதிப்பார்கள். சில குழந்தைகளோ அதற்கு நேர்மாறாக எப்போதும் அமைதியாக இருப்பார்கள். “துருதுரு’ குழந்தையோ, அமைதிக் குழந்தையோ அவர்களின் மனதைப் படிப்பது எப்படி? அவர்களுடைய மனப்பிரச்சினைகளைத் தீர்ப்பது எப்படி? இதற்கு விடை சொல்லும் வகையில் அமெரிக்காவிலும் ஐரோப்பிய நாடுகளிலும் மிகவும் பிரபலமாக உள்ள ஆர்ட் தெரபியை இந்தியாவில் அறிமுகப்படுத்த வந்திருக்கிறார்கள் அமெரிக்காவைச் சேர்ந்த ஜூடித் ஆரோன் ரூபினும், போடா நாரோவும். இருவரையும் இங்கே அழைத்து வந்தவர் அமெரிக்காவில் வாழும் சங்கீதா பிரசாத். இவரும் கூட ஒரு ஆர்ட் தெரபிஸ்ட்தான். சென்னையிலும், பிற நகரங்களிலும் ஆர்ட் தெரபியைப் பற்றிய அறிமுக நிகழ்ச்சியையும் பள்ளி ஆசிரியர்களுக்கான ஆர்ட் தெரபி ட்ரெயினிங் புரோக்ராமையும் நடத்த வந்திருக்கும் அவர்களைச் சந்தித்துப் பேசினோம். அதிலிருந்து…
“”ஆர்ட் தெரபி 60 ஆண்டுகளுக்கு முன்பே ஐரோப்பிய நாடுகளிலும் அமெரிக்காவிலும் புழக்கத்தில் வந்துவிட்ட ஒன்று. குழந்தைகளுக்கு என்றில்லை, மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், எய்ட்ஸ் நோயாளிகள் அனைவருக்கும் இந்த ஆர்ட் தெரபி மூலம் மனதை அமைதிப்படுத்தலாம். ஆரோக்கியமாக்கலாம்.
இந்த ஆர்ட் தெரபி தொடர்பான ஐடியா முதன் முதலில் ஒரு மனநல மருத்துவருக்குத்தான் வந்தது. மனநல மருத்துவமனையில் இருந்த நோயாளிகள் சிலர் படம் வரைந்து கொண்டிருந்ததை அங்கிருந்த மருத்துவர் பார்த்தார். சாதாரணமாக ரொம்பவும் ஆர்ப்பாட்டம் செய்யும் அவர்கள் படம் வரையும் போது மிகவும் அமைதியாகக் காணப்பட்டனர். இது அவருக்கு வித்தியாசமாகப்பட்டது. தொடர்ந்து ஆராய்ச்சிகள் நடைபெற்றன. அதிலிருந்து பிறந்ததுதான் இந்த ஆர்ட் தெரபி.
அமெரிக்காவைச் சேர்ந்த மார்க்கெரெட் நாம்பர்க் 1947 இல் முதன் முதலாக ஆர்ட் தெரபியைப் பற்றி புத்தகம் எழுதினார்.
ஆர்ட் என்றவுடன் ஏதோ படம் வரைவது மட்டும் என்று நினைத்துவிடாதீர்கள். படம் வரைவது, களிமண் சிற்பங்கள் செய்தல், ஏன் நாடகம் போடுதல், நடனம் ஆடுதல் எல்லாம் ஆர்ட் என்பதில் அடங்கிவிடும். இந்தக் கலை முயற்சிகளில் ஈடுபடும் பெரியவரோ சிறியவரோ தங்களை மறந்து ஈடுபட்டிருப்பார்கள். அவர்கள் வரைந்த படங்களைப் பார்த்தோமானால் அது அவர்களின் மனநிலையைப் பிரதிபலிப்பதாக இருக்கும். இதிலிருந்து அவர்களுடைய மனதைப் படித்துவிடலாம். அவர்களுடைய மனநிலைக்கேற்ப ஆர்ட் தெரபி பயிற்சிகள் கொடுத்து அவர்களுடைய மனதை ஆரோக்கியமான நிலைக்குக் கொண்டு வந்துவிடலாம். இந்தப் பயிற்சி மூன்றுவிதங்களில் நடைபெறும். உளவியல் அடிப்படையிலான அணுகுமுறையுடன் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுடன் பேசுவது, ஆலோசனை கூறுவது, அப்புறம் அவர்களைப் படம் வரையச் சொல்வது. இதில் படம் வரைவதன் மூலம் நோயாளியின் மனநிலையை ஓர் ஆர்ட் தெரபிஸ்ட் படிக்க முடியும். அதே சமயம் படம் வரையும் அந்தச் செயலே மனநலக் குறைபாட்டிற்கான ஒரு மருந்து போலச் செயல்படும். சாதாரணமாக ஒருவர் படம் வரையும் போது அவர் மனம் ரொம்ப ரிலாக்ஸôக இருக்கும். உதாரணமாக எப்போதும் பதட்டமாக எதிலும் கவனம் செலுத்த முடியாமல் இருக்கும் ஒருவரை இந்த ஆர்ட் தெரபி மூலம் அமைதியாக்கிவிடலாம். அவருடைய கவனத்தை ஒருமுகப்படுத்தலாம்” என்கிறார் அமெரிக்காவில் தங்கியிருந்து ஆர்ட் தெரபிஸ்டாகப் பணிபுரியும் சங்கீதா பிரசாத்.
“”அமெரிக்காவில் முதலில் எல்லாம் மனநல மருத்துவர்கள்தாம் மனநலம் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு ஆர்ட் தெரபி பண்ணலாம் என்று எங்களுக்குப் பரிந்துரை செய்வார்கள். இப்போதெல்லாம் நோயாளிகளே நேரடியாக எங்களை அணுகுகிறார்கள். குறிப்பாக பள்ளிக் குழந்தைகளுக்கு இந்த ஆர்ட் தெரபி அங்கு நல்ல பலனளிக்கிறது. ஸ்கூல் டீச்சரே ஒரு பையன் வித்தியாசமாக இருந்தால் எங்களிடம் சொல்லி விடுகிறார்கள். நாங்கள் அந்தப் பையனுக்கு ஆர்ட் தெரபி மூலம் ட்ரீட்மென்ட் கொடுப்போம். ஸ்கூல் டீச்சர்களுக்கு ஆர்ட் தெரபி பயிற்சியும் கொடுக்கிறோம்” என்று சொல்லும் ஜூடித் ஆரோன் ரூபின் ஆர்ட் தெரபித் துறையில் நீண்ட கால அனுபவம் உள்ளவர். ஆர்ட் தெரபி தொடர்பான திரைப்படங்களும் எடுத்துள்ளவர்.
“”ஆர்ட் தெரபியைக் குழந்தைகளுக்கு மட்டுமில்லை, எய்ட்ஸ் நோயாளிகளுக்கும் பயன்படுத்தலாம். எய்ட்ஸ் நோயாளிகள் வாழ்வின் விளிம்பில் நின்று கொண்டிருப்பவர்கள். விரக்தியின் உச்சியில் வாழ்பவர்கள். அவர்களுக்கு மனநலப் பிரச்சினை ஏற்படுவது இயல்பானதே.
சர்க்கரை நோயாளிகளுக்கு ஆர்ட் தெரபி செய்ய முடியும். முதலில் அவர்களுடைய வியாதியைப் பற்றி அவர்களுக்குப் புரிதல் ஏற்பட உதவுவோம். சிலர் மருந்து சாப்பிடக் கூட மாட்டார்கள். சாப்பிட்டு என்ன ஆகப் போகிறது? எதற்கு வாழ வேண்டும்? என்றெல்லாம் யோசிப்பார்கள். வாழ்க்கையின் மீது அவர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த இந்த ஆர்ட் தெரபி பயன்படுகிறது. நோயாளிகளுக்கு மனநிலை சரியாக இருந்தால்தான் அவர்கள் உட்கொள்ளும் மருந்து நன்றாக வேலை செய்யும். மனநிலையைச் சரிசெய்ய ஆர்ட் தெரபி உதவுகிறது.” என்கிறார் போடா நாரோ. இவர் இந்தியாவுக்கு வந்திருப்பது இப்போது இரண்டாவது முறை.
சுனாமியால் பாதிக்கப்பட்ட அந்தமானுக்குச் சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு போடா நாரோ ஆர்ட் தெரபி முறையில் சேவை செய்திருக்கிறார். தீவிர சைவரான இவருக்கு இந்தியா பிடித்திருப்பதற்கு ஒரே காரணம், அங்கே கிடைக்காத விதவிதமான சைவ உணவுகள் இங்கே கிடைப்பதுதானாம்.
“”புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கும் ஆர்ட் தெரபி மூலம் மனதை அமைதிப்படுத்தலாம். உடலில் எந்த அளவுக்கு அவர்களுக்கு வலி உள்ளதை என்பதை அவர்கள் சொன்னாலும் யாரும் அதை உணரப் போவதில்லை; தெரிந்து கொள்ளப் போவதில்லை. அவர்களைப் பார்த்துக் கொள்ளும் நர்சுகளுக்கே கூட தெரியாது. அவர்களைப் படம் வரையச் செய்து அதைப் பார்த்தால் அவர்களின் உடல் வேதனையும் அதனால் நேர்ந்த மனவேதனையும் தெரிய வரும். “நாளைக்குச் செத்துப் போவேன்’ என்று அவர்கள் நினைப்பது அவர்கள் வரைந்த படத்தின் மூலமாகத் தெரிய வந்தது.
குழந்தைகள் உடல் தொடர்பாக ஏதாவது சொன்னால் சாதாரணமாக, “சும்மா இருடா’ என்று ஒரு வார்த்தையில் அடக்கி விடுவோம். அவர்களுடைய மனதைப் புறக்கணித்துவிடுவோம். ஆனால் அவர்களைப் படம் வரையச் சொன்னால் அவர்களுடைய மனதையே வரைந்து கொடுத்துவிடுவார்கள்.” என்கிறார் சங்கீதா பிரசாத். அவர் மற்ற இருவரையும் சந்தித்தது சமீபத்தில்தானாம். அவர்கள் மூவரும் இத்தனைக்கும் அமெரிக்காவில் வெவ்வேறு மாகாணங்களில் வசிப்பவர்கள். ஒருவர் கேன்ஸ். இன்னொருவர் பென்சில்வேனியா. மற்றவர் வெர்ஜினியா.
அமெரிக்காவில் நியூ ஆர்லியன்ஸில் நடந்த ஆர்ட் தெரபி தொடர்பாக நடந்த ஒரு கான்ஃபரன்ஸின் போது, “இந்தியாவிற்கு என்னோடு வந்து ஆர்ட் தெரபியைப் பற்றி அறிமுகம் செய்ய யார் வரப் போகிறீர்கள்?’ சங்கீதா பிரசாத் அறைகூவல் விட்டிருக்கிறார். அந்த அறைகூவலின் விளைவுதான் அமெரிக்கப் பெண்களின் இந்த வருகை.
“இந்த ஆர்ட் தெரபி அமெரிக்காவில் உள்ள ஏழைக் குழந்தைகளுக்கு எட்டுமா? இல்லை பணக்காரக் குழந்தைகளுக்கு மட்டும்தானா?’ என்று ஒரு கேள்வியைக் கேட்டு வைத்தோம்.
“”எங்களுடைய முன்னாள் பிரசிடென்ட் ஜான் எஃப் கென்னடி காலத்திலேயே “வறுமைக்கு எதிரான போரை’ அமெரிக்காவில் தொடங்கிவிட்டோம். எனவே அமெரிக்காவில் உள்ள சேரிக் குழந்தைகளுக்கு எங்களுடைய சேவை தொடர்கிறது” என்றார் சற்றுச் சூடாக ஜூடித் ஆரோன் ரூபின்.
———————————————————————————————-
நனவாகுமா இவர்கள் கனவு?
வி. கிருஷ்ணமூர்த்தி
ஓரளவு மனவளர்ச்சிக் குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு கல்வி கற்பதற்கான வாய்ப்பு வசதிகள், இன்னமும் எட்டாக்கனியாகவே உள்ளன.
குழந்தை கருவாக இருக்கும்போது, குழந்தை பிறக்கும்போது, குழந்தை பிறந்தவுடன் ஆகிய மூன்று நிலைகளில் பல்வேறு காரணங்களால் குழந்தைகளின் மூளை நரம்புகளில் வளர்ச்சிக் குறைபாடு ஏற்படுகிறது. இதனால், பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளை மனவளர்ச்சி குன்றியவர்கள் என டாக்டர்கள் கூறுகின்றனர்.
இந்த பாதிப்பை மூன்று நிலைகளாக டாக்டர்கள் வகைப்படுத்துகின்றனர். இதில் மூன்றாவது பிரிவில் உள்ள குழந்தைகளுக்கு இத்தகைய பாதிப்பு இருப்பதை அவர்களுடன் பேசிப் பழகினாலொழிய, அவர்களைக் கூர்ந்து பார்த்தாலொழிய கண்டுபிடிக்க முடியாது.
உடலளவில் பெரிய பாதிப்பு இல்லாத இவர்களுக்கு, பேசுவதில், சிந்திப்பதில் சிரமம் இருக்கும். ஒரு விஷயத்தைப் புரிந்து கொள்ள மற்ற குழந்தைகளைக் காட்டிலும் இவர்களுக்கு அதிக நேரம் பிடிக்கும். மேலும் ஏற்கனவே புரிந்த விஷயத்தை நினைவுபடுத்தி எழுதுவதற்கும் காலதாமதம் ஏற்படும். மனவளர்ச்சி குன்றியவர்களில் சுமார் 20 சதவீதம் பேர் – சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் – இத்தகைய நிலையில் உள்ளனர்.
முறையான பயற்சி மற்றும் செயல்வழி கல்வி போன்ற முறைகளில் சில ஆண்டுகளில் இவர்களைப் பூரணமாகக் குணமாக்க முடியும். பிற குழந்தைகளுடன் போட்டி போடும் அளவுக்குத் தயார்படுத்த முடியும். ஆனால், இதற்கான சூழல் தமிழகத்தில் நிலவுகிறதா என்பது கேள்விக்குறியே.
மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள தமிழகத்தின் பின்தங்கிய மலைக்கிராமங்களில் ஒன்றான கீழானவயல் என்ற ஊரில் மிகச் சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த ராஜா என்பவர் இத்தகைய பாதிப்பு காரணமாக தனது மகன் பிரேம்குமாரை பள்ளிக்கு அனுப்புவதை நிறுத்திவிட்டார். சிறுவன் பிரேம்குமாரால் படிக்க முடியாது என முடிவு செய்த பெற்றோர், அவனை மாடு மேய்ப்பது, வீடுவீடாகச் சென்று பால் விற்பனை செய்வது போன்ற வீட்டு வேலைகளுக்காகப் பயன்படுத்தி வருகின்றார். இந்தப் பணிகளை எவ்விதக் குறையும் இல்லாமல் பிற குழந்தைகளைப் போலச் சரியாக செய்வதில் பிரேம்குமாரின் சாமர்த்தியம் தெளிவாகத் தெரிகிறது. “நாமும் மற்ற குழந்தைகளை போல பள்ளிக்குச் சென்று படிக்க மாட்டோமா?’ என்ற ஏக்கம் அவனுக்கு இல்லாமல் இல்லை.
இவனைப் போல பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான குழந்தைகள் சூழல் காரணமாக வீட்டு வேலைக்கும், தோட்ட வேலைக்கும் பெற்றோர்களால் பயன்படுத்தப்படுகின்றனர். தமிழகத்தைப் பொருத்தவரை மாநிலப் பாடத்திட்டம் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் இத்தகைய குழந்தைகளை வயது வரம்பு பார்க்காமல் சேர்த்துக் கொள்ள வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது.
மேலும், இத்தகைய குழந்தைகள் தேர்வு எழுதுவதற்கு, பார்வையற்றவர்களுக்கு அனுமதிக்கப்பட்டிருப்பது போல, ஓர் உதவியாளரை வைத்துக் கொள்வது, டேப்ரெக்கார்டர் வைத்துக்கொள்வது போன்ற பல்வேறு சலுகைகளை அரசு அறிவித்துள்ளது. தேசிய திறந்த நிலை கல்வித் திட்டத்திலும் இத்தகைய குழந்தைகள் கல்வி பெற மத்திய அரசு பல்வேறு வாய்ப்பு வசதிகளை ஏற்படுத்தியுள்ளது.
“ஸ்பாஸ்டிக்ஸ் சொசைட்டி ஆஃப் தமிழ்நாடு’ என்ற அமைப்பு மூலம் இவர்களுக்கான சிறப்புப் பள்ளிகளை அரசு நடத்தி வருகிறது.
அரசின் இந்தத் திட்டங்கள் எல்லாம் அணையில் தேங்கியுள்ள நீராகவே உள்ளன. அது பிரேம்குமார் போன்ற கடைமடைப் பகுதிகளில் உள்ள குழந்தைகளுக்குச் சென்று சேரவில்லை. இந்தத் திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்ல அரசு சமுதாய அடிப்படையிலான செயல் திட்டங்களை வகுத்து அனைத்து மாவட்டங்களிலும் குழுக்களை அமைத்துள்ளது.
அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் செயல்படும் இந்தக் குழுக்களின் செயல்பாடு பல மாவட்டங்களில் இன்னமும் பெயரளவிற்குத்தான் உள்ளது. களப்பணிக்கு இந்தக் குழுக்கள் நம்பியுள்ள தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் தொலைதூர கிராமங்களுக்குத் தேடிச்சென்று இத்தகைய குழந்தைகளைத் தேடிப்பிடித்து பள்ளிகளில் சேர்ப்பதற்கு அவ்வளவாக ஆர்வம் காட்டுவதில்லை.
நகர்ப்புறங்களில் செயல்படும் தொண்டு நிறுவனங்களில் பணம் படைத்தவர்களின் குழந்தைகளே அதிக அளவில் சேர்க்கப்படுகின்றனர். குறைந்த வருவாய்ப் பிரிவினரில் பல குழந்தைகள் உள்ள குடும்பங்களில், மனவளர்ச்சி குன்றிய ஒரு குழந்தைக்கு மட்டும் சிறப்புக் கவனம் செலுத்துவதற்கு அவர்களுடைய பெற்றோர்களால் முடிவதில்லை. இதுவே பல குழந்தைகள் கல்வி பெற முடியாததற்கு முக்கிய காரணமாக அமைந்து விடுகிறது.
புரிந்து கொள்ளும் திறன் உள்ள அனைத்துக் குழந்தைகளுக்கும் கல்வி அளிக்க வேண்டியது தங்களின் கடமை என்பதைப் பெற்றோர்களும், அரசு நிர்வாகமும் புரிந்து கொண்டால் மட்டுமே பிரேம்குமார் போன்ற குழந்தைகளின் கல்விக் கனவு நனவாகும்.
இத்தகைய குறைபாடு இனி பிறக்கும் எந்தக் குழந்தைக்கும் இருக்கக் கூடாது என்பதற்கு போலியோ ஒழிப்புப் பிரசாரம் அளவுக்கு விழிப்புணர்வுப் பிரசாரப் பணிகள் தேவை. அதேசமயம் இவ்வாறு பிறந்த குழந்தைகளைப் பராமரிப்பதைப் பற்றி பெற்றோர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
திட்டங்களை அறிவித்து விட்டோம் என்பதுடன் நின்றுவிடாமல், அந்தத் திட்டம் சமூகத்தின் கடைக்கோடி மக்களுக்கும் சென்று சேர்கிறதா? அவ்வாறு சென்று சேரவில்லை என்றால் அதற்கு என்ன காரணம்? என்பன போன்றவற்றை ஆய்வு செய்து அதற்கேற்ப செயல்பட வேண்டியது அரசின் கடமை.