புதிய வாசகர்களை உருவாக்கும் “ஒலிப் புத்தகம்’: படிக்க வேண்டியதில்லை; கேட்டாலே போதும்
கே. வாசுதேவன்
திருநெல்வேலி, மே 30: தமிழகத்தில் தற்போது புதிதாக விற்றுவரும் ஒலிப் புத்தகம் (ஆடியோ புக்) புதிய புத்தக வாசகர்களை உருவாக்கி வருகிறது.
கேட்டாலே போதும், புத்தகத்தை வாசித்த திருப்தி கிடைப்பதாக அதன் வாசகர்கள் தெரிவிக்கின்றனர்.
இன்றைய அவசர உலகில் புத்தகம் வாசிக்கும் பழக்கம் நாளுக்கு நாள் குறைந்து கொண்டு வருகிறது. பள்ளி – கல்லூரிகளில் பயிலும்போது மட்டுமே இளைய சந்ததியினர் பாடம் சம்பந்தப்பட்ட புத்தகங்களை படிக்கின்றனர்.
இவற்றைத் தவிர்த்துப் பிற புத்தகங்களை அவர்கள் படிப்பது மிகவும் அரிதாகிவிட்டதால், வரலாறு, கலாசாரம், பாரம்பரியம், பண்பாடு, கலைகள் போன்றவை பற்றிய அறிவு இன்றைய இளைஞர்களிடம் எதிர்பார்க்க முடியாதாகிவிட்டது.
10 ஆண்களுக்கு முன்வரை புத்தக வாசிப்பு, விளையாட்டு ஆகியவை மட்டுமே பொழுதுபோக்கு. இன்று அப்படியில்லை டி.வி., இன்டர்நெட், இ மெயில், திரைப்படம் எனப் பல.
படிக்கும் ஆர்வம் குறைவு: அனைத்தும் வணிக நோக்கில் செயல்படும் சூழ்நிலையில், புத்தகம் படிக்கும் ஆவல் குறைகிறது.
மேலும், தேவையான தகவல்களை உடனுக்குடன் இன்டர்நெட், இ மெயில் போன்றவற்றின் மூலம் பெற்றுவிடுவதால் புத்தக வாசிப்பும் விற்பனையும் குறைந்து வருகிறது.
இந்தச் சூழ்நிலையில் வாசகர்களைக் கவர புதிய யுக்திகளைப் புத்தகப் பதிப்பாளர்கள் புகுத்தத் தொடங்கியுள்ளனர்.
இந்தப் புதிய யுக்தியில், ஒரு புத்தகத்தில் உள்ள அனைத்தையும் ஒலிப் புத்தகமாக -“எம்பி3′ குறுந்தகடுகளாக இந்தப் பதிப்பகங்கள் வெளியிடுகின்றன.
இந்த ஒலிப் புத்தகத்தில் மெல்லிய பின்னணி இசையுடன், வசீகரமான குரலுடனும் புத்தகம் சிறிது தணிக்கை செய்யப்பட்டு வாசிக்கப்படுகிறது.
அதாவது நாம் ஒரு புத்தகத்தை படிக்காமலேயே, அந்த புத்தகத்தில் உள்ளது பற்றி முழுமையாகக் கேட்க முடிகிறது.
மேலும், புத்தகத்தின் விலையை ஒப்பிடும்போது, இதன் விலை மிகவும் குறைவாகவே உள்ளது.
புத்தகத்தில் நாள்கணக்கில் வாசித்து தெரிந்துகொள்ளும் விஷயத்தை, சில மணி நேரங்களிலேயே ஒலிப் புத்தகங்கள் மூலம் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம்.
புத்தகத்தை வாசிப்பதற்கு என்று சில சூழ்நிலைகள் நமக்கு கிடைத்தால் மட்டுமே, அதை முழுமையாக வாசித்துப் புரிந்துகொள்ள முடியும். ஆனால், இந்த ஒலிப் புத்தகத்தை கேட்கும் வசதிகள் மட்டும் நம்மிடம் இருந்தால் போதும், எளிதாகத் தெரிந்து கொள்ளலாம்.
இதுவரை பட்டிமன்றங்கள், சொற்பொழிவுகள், ஆன்மிக உரைகள் ஆகியவற்றை மட்டுமே ஒலியின் வடிவில் கேட்டு வந்த மக்களுக்கு இது ஒரு புதிய அனுபவம்.