சந்திப்பு: “”முன்னோர்களை அடையாளம் காட்டுவதே முக்கியப்பணி!”
கே இளந்தீபன்
பாரதி பிறந்த எட்டயபுர மண்ணுக்கு பக்கத்துக் கிராமமான பூதலபுரத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர். ஜீவபாரதி. வேலுச்சாமி, கந்தசாமி என்ற இருபெரும் சுதந்திரப் போராட்ட வீரர்களில் கந்தசாமியின் வாரிசாகப் பிறந்து- எழுத்து வயலில் பட்டுக்கோட்டைக் கவிஞனை முன் ஏர் உழவனாகக் கொண்டு- கவிதை, கட்டுரை, கள ஆய்வு, வரலாறு, புதினம், சிறுவர் இலக்கியம், தொகுப்பு நூல்கள் என்று பல்வேறு தளங்களில் 1970 முதல் எழுதிவருபவர்.
தற்போது தமிழ் எழுத்தாளர் சங்கப் பரிசை “லெனின்’ என்ற நூலுக்குப் பெற்று மகிழ்ச்சியும் களைப்புமாகத் திரும்பியிருந்தவரைச் சந்தித்தோம்.
எழுத்துத் துறைக்கு எப்போது வந்தீர்கள்?
ஒன்பதாம் வகுப்பு படிக்கின்ற போது இட்டுக் கட்டிப் பாடத் தொடங்கினேன். எங்கள் ஊருக்கு அருகே மரியக்கண்ணு என்ற தாழ்த்தப்பட்ட சகோதரரை உயர் சாதியினர் கொன்றது என் பாடு பொருளானது. இந்தப் பாடல்தான் எனது ஊர்ப் பகுதியில் என்னைக் கவிஞனாக, பாடகனாக அறிமுகப்படுத்தியது.
முதல் படைப்பு பற்றி?
1969-ல் நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்தில் தோழர் பால தண்டாயுதத்தால் வேலைக்குச் சேர்க்கப்பட்டேன். அங்கு வேலை பார்த்த பழனி சுந்தரேசனிடம் “முல்லைச்சரம்’ இதழ் ஆசிரியர் பொன்னடியான் கவிதை கேட்டிருந்தார். அவருடைய கவிதையுடன் என்னுடைய கவிதையையும் கொடுத்தனுப்பினார். பூதலபுரம் ராமமூர்த்தி என்ற என் சொந்தப் பெயரில் கவிதை பிரசுரமானது. பொன்னடியான் என்னைப் புனைப் பெயர் வைத்துக் கொள்ளுமாறு ஆலோசனை சொன்னதால் நான் நேசிக்கும் ஜீவாவையும் பாரதியையும் இணைத்து ஜீவபாரதி ஆனேன்.
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பக்கம் உங்கள் கவனம் திரும்பியதற்கு என்ன காரணம்?
சின்னவயசில் பட்டுக்கோட்டையாருடைய “தூங்காதே தம்பி தூங்காதே’ பாடலைத்தான் எப்போதும் பாடிக்கொண்டு இருப்பேன். இதன்பிறகு என்.சி.பி.எச்.-ல் பணியாற்றியபோது பட்டுக்கோட்டையார் பாடல்களைத் தொகுத்து வெளியிட்ட பி.இ.பாலகிருஷ்ணன் தொடர்பால் பட்டுக்கோட்டையார் மீது தனிக்கவனம் செலுத்த ஆரம்பித்தேன்.
பட்டுக்கோட்டையார் பாடல்களை காலவாரியாகத் தொகுத்து வெளியிட்டது, பட்டுக்கோட்டை நகரத்தில் அவருக்கு சிலை வைத்தது, அவருக்கு நினைவாலயம் அமைக்கவும் அவரது பாடல்களை நாட்டுடமை ஆக்கவேண்டும் என்றெல்லாம் குரல் எழுப்பி இரண்டும் நடந்துள்ளது. இந்த முயற்சிகளுக்கு எனக்குப் பக்கபலமாய் இருந்தவர் முன்னாள் அமைச்சர் அமரர் எஸ்.டி.சோமசுந்தரம் என்பதை பெருமையோடு சொல்வேன்.
திரைப்பட இயக்குநர் மணிவண்ணன் சாரிடம் சத்யராஜ் நடித்த “24 மணி நேரம்’ படம் துவங்கி, “பாலைவன ரோஜாக்கள்’, “சந்தனக்காற்று’, “தீர்த்தக்கரையினிலே’ என்று 11 படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றியுள்ளேன். “இனி ஒரு சுதந்திரம்’ படத்தில் கங்கை அமரன் இசையில் எழுதிய “கைகளிலே வலுவிருக்கு’ என்ற பாடலும் -சந்தனக்காற்று திரைப்படத்தில் சங்கர் கணேஷ் இசையில் விஜயகாந்துக்காக ஓபனிங் சாங் “சந்தனக்காற்றில் சுந்தரப் பூக்கள் ஆடுது நாட்டியமே’ என்ற பாடலும் அடிக்கடி ரீங்காரமிடுவதை நேயர்கள் பலரும் அறிவர். இப்போதும் எழுதத் தயாராய் இருக்கிறேன் தரமான பாடல்களுக்கு…
பாரதிதாசன் பற்றிய ஆய்வு பட்டுக்கோட்டை, ஜீவா, பசும்பொன்தேவர், போன்றவர்களின் படைப்புகளைத் தொகுப்பது என்று நீங்கள் பாதை வகுத்துக் கொண்டது ஏன்?
பாரதிதாசனைப் பற்றி விருப்பு வெறுப்புடன் ஆய்வுகள் நடந்து வந்ததால் முழுமையான புதுமையான ஆய்வுக்காக பாவேந்தரிடம் கூடுதல் கவனம் செலுத்தினேன். பட்டுக்கோட்டையாரை விஞ்சிவிட்டதாக சில அறிவுஜிவிகள் தங்களுக்கு வேண்டியவர்களைக் கொண்டு எழுதியபோது பட்டுக்கோட்டையின் கம்பீரத்தை நெஞ்சு நிமிர்த்திச் சொன்னேன். தமிழக அரசியல் உலகில் தியாகத்தால் உயர்ந்தவரும் மகாத்மா காந்தியால் “தேசத்தின் சொத்து ஜீவா’ என்று பாராட்டப்பட்ட அமரர் ஜீவாவை தமிழர்கள் கண்டு கொள்ளாததால் அவரை அவரது படைப்புகள் மூலம் முன்னிறுத்தியுள்ளேன். என்னுடைய முன்னோர்களைச் சரியாக அடையாளம் காட்டுவதன் மூலம் என் எழுத்துப் பணியைத் தனித்துவமாக்கியுள்ளேன் என்பதை ஆன்றோர்கள் பலர் அறிவர்.
பாரதி காலமும்-கவிதையும் என்று மிகப்பெரிய ஆய்வு நூல் பணியில் ஈடுப்பட்டிருக்கிறீர்களாமே?
அது மிகப்பெரிய ஆய்வு பணி. என்னுடைய நூல்களில் இது தனித்து இருக்கும். பாரதியைப் பற்றி சிலம்பொலி செல்லப்பனார், பேராசிரியர் சாலமன் பாப்பையா போன்றவர்களிடம் விவாதித்து வருகின்றேன். பாரதி என் பார்வையில் நிச்சயம் புதுமைக்கவிஞனாய் மிளிர்வான் என்பதை நூல் பணி நிச்சயம் நிரூபிக்கும்.
தமிழ் இலக்கிய உலகம் எப்படி இருக்கிறது?
வேண்டியவர் வேண்டாதவர் என்ற பாகுபாடுகளே இங்கு நடைமுறையில் இருக்கிறது. படைப்புகளைப் பார்க்காமல் படைப்பாளியைப் பற்றிய செய்திகளே முன்னிறுத்தப்படுகின்றன. எவன் சமூகத்திற்கு தேவையானவன் என்பதைவிட எவன் நமக்குச் சாதகமானவன் என்ற கருத்தோட்டமே இங்கு கால் பரப்பி சிரிக்கின்றது. அத்தனையும் தாண்டி நல்ல படைப்பாளிகளும் படைப்புகளும் நேசிக்கப்படுவதும் வாசிக்கப்படுவதும் ஆரோக்கியமான அம்சம்தானே!
சாகித்ய அகாடமி, ஞானபீடம் என்று ஏதேனும் லட்சியம் உண்டா?
இதெல்லாம் எனக்கு லட்சியமாகப்படவில்லை. இதுபோன்ற பரிசுகளும் விருதுகளும் படைப்பாளியின் தகுதிக்குத் தரப்படுகிறதா? அல்லது படைப்பாளிகளால் தட்டப்பட்டு தரப்படுகிறதா? என்பது ஆய்வுக்குரியது. இந்த நிறுவனங்களின் மேல் எனக்கு உடன்பாடில்லை. ஆனால் விமர்சனங்கள் வைக்கிறேன். பட்டுக்கோட்டையாரைப் பற்றியும் ஜீவாவைப் பற்றியும் அதிக நூல்கள் எழுதியது நான்தான். இவர்களைப்பற்றி நூல் எழுத வேறு ஒருவரைத் தெரிவு செய்கிறார்கள். அவர்கள் எனது நூல்களைப் பார்த்து எழுதி பயனடைகின்றனர். இப்படிப்பட்ட நிறுவனர்கள் கொடுக்கும் விருதுகள் எப்படி இருக்கும்? என்பதை உங்கள் யூகத்திற்கே விட்டுவிடுகிறேன்.
சரி. வேறு ஏதேனும் பரிசுகள், விருதுகள்?
“உலகப்பன் காலமும் கவிதையும்’ என்ற பாரதிதாசனைப் பற்றி முழுமையான ஆய்வு நூலும், “பொன்விழா சுற்றுலா’ என்று சிறுவர் இலக்கிய நூலும் தமிழ் வளர்ச்சித்துறையின் முதல் பரிசினைப் பெற்றுள்ளது. “அறிவை வளர்க்கும் சிறுவர் பாடல்கள்’ என்ற நூலுக்கு திருப்பூர் தமிழ்ச் சங்கத்தின் விருதும் -தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் விருதும் “வேலுநாச்சியார்’ என்ற வரலாற்று புதினத்திற்கு பாரத வங்கியின் விருதும் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் பரிசும் பெற்றுள்ளதுடன், மூன்று மாணவிகள் என் நூல்களை ஆய்வு செய்து எம்.பிஃல் பட்டமும் பெற்றுள்ளனர். என்னுடைய கவிதை நூல்கள் அனைத்தையும் கும்பகோணம் கல்லூரி மாணவர் ஒருவர் ஆய்வு செய்து எம்.பிஃல் பட்டமும் பெற்றுள்ளார்.
வீரபாண்டிய கட்டபொம்மனைப்பற்றி நான் எழுதிய நூல் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் துணைப்பாட நூலாக வைக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் தமிழ் எழுத்தாளர் சங்கம் என்னுடைய “லெலின்’ என்ற வாழ்க்கை வரலாற்று நூலுக்குப் பரிசு வழங்கி கெüரவித்துள்ளது. அதுமட்டுமின்றி மன்னார்குடியில் உள்ள “செங்கமலத்தாயார் கல்வி அறக்கட்டளை’ எனது எழுத்துப் பணிகளைப் பாராட்டி “இலக்கியச் செம்மல்’ என்ற பட்டத்தையும் ஐம்பதினாயிரம் ரொக்கப்பரிசையும் தந்தது.
என்னுடைய வாசகர் ஒருவர் தனது குழந்தைக்கு எனது பெயரைச் சூட்டி மகிழ்கிறார். இன்னொரு வாசகர் தான் புதிதாக கட்டியுள்ள வீட்டிற்கு “ஜீவபாரதி இல்லம்’ என்று பெயர் வைத்திருக்கிறார். எல்லா விருதுகளையும் விட இவைகள் எல்லாம் என்னைப் பொறுத்தவரை மிகமிக உயர்ந்தது.