நூல்: காயாத கானகத்தே
ஆசிரியர்: கி.பார்த்திபராஜா
வெளியீடு:ராகாஸ் அகமது வணிக வளாகம்,
12/293, இராயப்பேட்டை, நெடுஞ்சாலை,
சென்னை-14.விலை:ரூ.100/-
தமிழ் நாடகத்தின் ஒரு கூறான இசை நாடகம் பற்றி பெரிய அளவில் ஆய்வுகளோ, பகுதிகளோ இல்லாத நிலையில் பார்த்திப ராஜாவின் காயாத கானகத்தே நூல் இசை நாடகம் பற்றிய ஒரு சிறந்த பதிவாகும்.
தென்மாவட்டங்களில் 20 பகுதி மக்களின் சமூக வாழ்க்கையில் ஓர் அங்கமாக இருந்த இசை நாடகங்கள், காட்சி ஊடகங்களின் ஆக்கிரமிப்பால் அந்த நாடகங்கள் பற்றி நூல்கள் மூலமே. இளைய தலைமுறையினர் அறியக்கூடிய நிலையில், இந்நூல் மிகவும் பயனுள்ள வரவாகும்.
மற்ற நாடகங்கள் போலன்றி இசை நாடக கலைஞர்களுக்கு கற்பனைத் திறனும், நாட்டு நடப்பில் தெளிந்த கண்ணோட்டமும், சமயோசித திறனும் இருந்தால் தான் காட்சிகளில் பரிணமிக்க முடியும்.
நாடக கலைஞர்களின் பங்களிப்பு, அவர்களின் திறன் அவர்களின் வாழ்வியல் நிலைகள் ஆகியவற்றை நடிகர் சங்க அமைப்பாளர்களுடன் இணைந்து தொடர்ந்து நாடகத்தை பார்த்தும், அவர்களுடன் பழகியும் பல சுவையான தகவல்களை தொகுத்தளித்துள்ளார்.
கலைஞர்களின் திறனை வெளிப்படுத்த அவர் மேற்கொண்ட நடை சிறப்புடையது. அவற்றில் ஒரு சில துளிகள். வள்ளி நாடகத்தில் திண்டுக்கல் பகுதியைச் சேர்ந்த ஒரு புகழ்பெற்ற நடிகை தன்னை தர்க்கத்தில் வென்றால் நடிப்புத் தொழிலையே விட்டுவிடுவேன் என்று சவால் விடுவார். அவருடன் நடிப்பதற்கு ராஜபார்ட்டுகளே அஞ்சுவார்கள்.
அவரை வேறு பகுதியைச் சேர்ந்த ஒரு நடிகர் சூழ்ச்சியால் தர்க்கத்தில் வென்றுவிட அதன் பின்னர் அந்த நடிகை அரிதாரம் பூசுவதைவிட்டு நடிப்புத் தொழிலையே விட்டுவிட்டார்.
அதேபோல் சத்தியவான் சாவித்திரி நாடகத்தில் எமன் வேடத்தில் சங்கரதாஸ் சுவாமிகளின் குரலையும், ஆட்டத்தையும் பார்த்த அதிர்ச்சியில் கர்ப்பிணி பெண் ஒருவரின் கரு கலைந்து போனது. அதன்பிறகு அடுத்தடுத்த நாடகங்களில் அவர் எமன் வேடத்தில் வரும்போது கர்ப்பிணிகள் இருந்தால் சபையைவிட்டு வெளியே போய்விட்டு காட்சி முடிந்த பிறகு திரும்பிவரவும் என்ற அறிவிப்பு செய்துள்ளனர்.
அவர் நடித்த பிரகலாதன் நாடகத்தில், இரணியன் வேடம் கட்டி பிரகலாதனாக நடித்த சிறுவனை தூக்கி கீழே வீசியபடி கர்ஜனை செய்த காட்சியை பார்த்த பெண் மூர்ச்சையடைந்தார். அதிலிருந்து அவர் தொடர்ந்து நடிப்பை மேற்கொள்ள மறுத்துவிட்டார்.
அதன் பிறகு அவர் நடிக்கவேயில்லை.
இசை நாடக வரலாற்றில் பெண்களை புறந்தள்ளிவிட்டே தொடங்கியிருந்தது. அதனால் தான் மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனி, பாவலர் பாய்ஸ் கம்பெனி, தேசிகானந்தா பாய்ஸ் கம்பெனி என்ற பெயரிலேயே நாடக கம்பெனிகள் இருந்துள்ளன. பிறகு இசை நாடகங்களில் பெண்கள் பங்கேற்க ஆரம்பித்த பின், ஆண்கள் பெண் வேடமிடும் பழக்கம் குறைந்தது.
அப்படியும் நாடக நடிகைகளுக்கு சமூக அங்கீகாரம் பெரிய அளவில் கிடைத்துவிடவில்லை. சமூகம் தங்களை இழிவாக பார்க்கவில்லை என்றும் கூறும் நடிகைக்கள் கூட அதற்கு காரணம் பொருள் வசதியோடு இருப்பது தான் என்கின்றனர். இக்காலக் கட்டத்தில் தான் பழம்பெரும் நடிகை பாலாமணி அம்மாள் பெண்களைக்-கொண்டே நாடகக் குழுவை நடத்தி வந்துள்ளார்.
அவரது குழுவில் 50-க்கும் மேற்பபட்ட பெண்கள் இருந்துள்ளனர்.
கும்பகோணத்தில் அவர் நடத்திய தாரா சசாங்கம் என்ற நாடகத்தைப் பார்க்க, மாயவரத்திலிருந்து எட்டு மணிக்கு ஒரு ரயிலும், திருச்சியிலிருந்து எட்டரை மணிக்கு ஒரு ரயிலும் புறப்பட்டு கும்பகோணம் சென்று, நாடகம் முடிந்து நள்ளிரவு மூன்று மணிக்கு இருரயில்களும் திரும்பிச் செல்லும். நாடகம் பார்க்கும் ரசிகர்-களுக்காக விடப்பட்ட இந்த ரயிலுக்கு பாலாமணி ஸ்பெஷல் என்றே பெயரிட்டுள்ளனர்.
இன்றைய தமிழ் சினிமா ரசிகத் தன்மை, நடிகர், நடிகைகள் வழிபாடு, ரசிக வெறித்தனம் போன்றவை ஒன்றும் புதியதல்ல. அது ஏற்கனவே நாடக வரலாற்றில் காண முடிகிறது. முழுஇரவு நாடகங்கள் முற்றாக மறைந்துவிட்ட நிலையில், அவற்றை பற்றிய ஒரு தொகுப்பு நூல் இன்றைய தலைமுறையினருக்கு ஒரு வரலாற்றுப் பெட்டகமாகும். இந்த அளவுக்கு களப்பணி செய்து, ஆராய்ச்சி கண்ணோட்டத்தோடு; சுவைபட எழுதப்பட்ட நூல் இது.
நூலாசிரியரின் முயற்சிக்கு பாராட்டுக்கள்.