Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘parkinson’ Category

Stem Cells Research – Current Developments in Medicine, Science

Posted by Snapjudge மேல் மே 4, 2007

ஸ்டெம் செல் புரட்சி!

கு. கணேசன்

நாளுக்கு நாள் வளர்ந்து வரும் அறிவியல் தொழில்நுட்பத்தின் பயனாக அலோபதி மருத்துவம் அவ்வப்போது புதிய சிகிச்சை முறைகளை அறிமுகப்படுத்தி வருகிறது. உறுப்புமாற்று அறுவைச் சிகிச்சை, மூட்டுமாற்று அறுவைச் சிகிச்சை, லேசர் சிகிச்சை என்று தொடரும் இவ்வரிசையில் இப்போது “ஸ்டெம் செல் சிகிச்சை’ புதிதாகச் சேர்ந்துள்ளது.

“ஸ்டெம் செல்கள்’ பற்றித் தெரிந்து கொள்வதற்கு முன்னால் “செல்கள்’ பற்றிய முன்னுரை தேவைப்படுகிறது. செங்கல் செங்கல்லாக அடுக்கிக் கட்டப்பட்ட கட்டடம்போல் கோடிக்கணக்கான செல்களால் அடுக்கப்பட்டது, நம் உடல்.

ஆனால் ஒவ்வொரு செல்லும் ஒவ்வொரு விதம். உதாரணமாக, மூளையின் செல்லுக்கும் முடியின் செல்லுக்கும் நிறைய வேறுபாடு உண்டு. அவற்றின் அமைப்பு வேறு, அளவு வேறு, நிறம் வேறு, குணம் வேறு, செயல் வேறு. தாயின் கருவில் ஒற்றை செல்லில் உருவாகத் தொடங்கும் நம் உடலுக்கு எப்படி இது சாத்தியம்? காரணம், “ஸ்டெம் செல்’கள்.

“ஸ்டெம் செல்’கள் என்பவை நம் உடலின் ஆரம்ப செல்கள். ஆதார செல்கள். விதை செல்கள். தாயின் கருப்பையில் கரு உருவாகும் போது உண்டாகும் முதல் செல்கள். இந்தச் செல்களுக்குக் குறிப்பிட்ட “முகம்’ கிடையாது. உடலின் தேவைக்கேற்ப இவை தங்களுடைய அமைப்பை மாற்றிக் கொள்ளும்.

இவ்விதம் மாற்றமடைந்து முகம், முடி, மூளை, கை, கால், கண், காது, இதயம், நுரையீரல், கல்லீரல் என்று தனித்தனி உறுப்பாக மாறி நம் உடலுக்கு முழு உருவத்தைத் தருகின்றன.

இந்த ஸ்டெம் செல்கள் இரு வகைப்படும். குழந்தை கருவாக இருக்கும்போது அக்கருவில் காணப்படும் ஸ்டெம் செல்கள், முதல் வகையைச் சேர்ந்தவை. இரண்டாம் வகை ஸ்டெம் செல்கள் ரத்தம், எலும்பு மஜ்ஜை, இதயம், மூளை, நுரையீரல், கல்லீரல் போன்ற பல உறுப்புகளில் உள்ளன. இவற்றில் எலும்பு மஜ்ஜை ஸ்டெம் செல்கள்தான் நம் கவனத்திற்கு உரியவை. காரணம், இப்போது ஸ்டெம் செல் சிகிச்சைக்கு இவையே நன்கு பயன்படுகின்றன.

பொதுவாக, தொற்றுக்கிருமிகள் மூலமோ, விபத்தின் மூலமோ, ரத்தம் இழப்பதாலோ அல்லது பரம்பரையாகவோ நம் உடலில் எங்காவது பாதிப்பு ஏற்படுமானால் அந்த இடத்தில் உள்ள செல்கள் இறந்துவிடும். அப்போது அந்த உறுப்பின் திசுக்கள் செயலிழந்துவிடும். இறந்த செல்களை ஈடுகட்ட உடலின் பிற பகுதிகளிலிருந்து புதிய செல்கள் இடம் பெயர்ந்து, பாதிப்படைந்த இடத்துக்குச் சென்று, சமன் செய்யும்.

செல்களின் பாதிப்பு சிறிய அளவில் இருந்தால் இவ்வாறு உடல் தானே சரிசெய்து கொள்ளும். வெளிச்சிகிச்சை எதுவுமின்றி அந்த உறுப்பு மீண்டும் செயல்படத் தொடங்கும். மாறாக, செல்களின் பாதிப்பு அதிக அளவில் இருக்குமானால் அந்த உறுப்பின் செயல்பாடு நின்றுவிடும். இம்மாதிரி நேரங்களில் மருந்து, மாத்திரை, ஊசி, அறுவைச் சிகிச்சை போன்றவற்றால் சரி செய்வது மருத்துவர்களின் வழக்கம்.

ஆனால் இப்போது நிலைமை மாறியுள்ளது. நோயாளியின் உடலில் பாதிப்படைந்த உறுப்புக்கு “ஸ்டெம் செல்’களைச் செலுத்துவதன் மூலம் அவ்வுறுப்பு செயலிழப்பதைத் தவிர்க்கலாம் என்பதும் அந்த நோயாளிக்கு வந்திருந்த நோயைக் குணமாக்கலாம் என்பதும் உறுதியாகியுள்ளது. நம் உடலில் பழுதான பாகத்தில் ஸ்டெம் செல்களை விட்டால் அப்பாகம் தன்னைத்தானே சரிசெய்து கொண்டு செயல்படத் தொடங்குகிறது. இதுதான் “ஸ்டெம் செல் சிகிச்சை’யின் அடிப்படை சூத்திரம்.

“ஸ்டெம் செல் சிகிச்சை’ சர்க்கரை நோயாளிகளுக்கு ஒரு வரப்பிரசாதம் என்றே கூறலாம். வைரஸ் தொற்றுகளால் கணையம் பாதிக்கப்படும்போது, இன்சுலின் சுரக்கின்ற பீட்டா செல்களும் பாதிக்கப்படுகின்றன. இதனால் இவர்களுக்கு இன்சுலின் சுரப்பது குறைந்து சர்க்கரை நோய் வருகிறது. இந்த மாதிரி நேரங்களில் சர்க்கரை நோயாளியின் உடலிலிருந்து ஸ்டெம் செல்களை எடுத்து அல்லது நோயாளிக்குப் பொருந்தக்கூடிய மற்றொருவரின் உடலிலிருந்து ஸ்டெம் செல்களைப் பெற்று நோயாளியின் கணையத்தில் செலுத்தினோமானால் பாதிக்கப்பட்ட பீட்டா செல்கள் மீண்டும் செயல்பட்டு இன்சுலினைச் சுரக்கத் தொடங்கும். இதனால் சர்க்கரைநோய் குணமாகும்.

சர்க்கரை நோயாளிகளுக்குக் காலுக்குச் செல்லும் ரத்தநாளத்தில் பாதிப்பு ஏற்படும்போது காலில் புண் வந்து நீண்ட நாள்களுக்கு ஆறாமல் தொல்லை கொடுக்கும். அப்போது அறுவைச் சிகிச்சை செய்து காலையே எடுத்துவிடுவது இதுவரை இருந்த வழக்கம். இதற்குப் பதிலாக இப்போது நோயாளியின் இடுப்பு எலும்பிலிருந்து ரத்தத்தை எடுத்து, அதிலிருந்து ஸ்டெம் செல்களை மட்டும் பிரித்தெடுத்து, சர்க்கரை நோயாளியின் காலுக்குச் செல்லும் ரத்தநாளத்தில் ஊசி மூலம் செலுத்த, இரண்டு மாதங்களில் கால் புண் நன்றாக ஆறிவிடுகிறது.

அடுத்து, மாரடைப்பால் பாதிக்கப்பட்ட இதயநோயாளிகளுக்கு ஸ்டெம் செல் சிகிச்சை ஓர் உயிர்காக்கும் சிகிச்சையாக விளங்குகிறது. பைபாஸ் அறுவைச்சிகிச்சை செய்யாமல், நோயாளியின் ரத்தத்திலிருந்து ஸ்டெம் செல்களைப் பிரித்தெடுத்து, ஊசி மூலம் இதயத்தமனி நாளங்களுக்குச் செலுத்தினால் சில வாரங்களில் அங்கு புதிய ரத்தநாளங்கள் உருவாகி இதயத்திற்குத் தேவையான ரத்தத்தை விநியோகித்து விடுகின்றன. இதனால் அந்த நோயாளிக்கு மாரடைப்பு மீண்டும் வருவது தடுக்கப்படுகிறது.

மலேரியா, சிக்குன்குனியா, மஞ்சள்காமாலை போன்ற தொற்றுநோய்களால் சிறுநீரகம் பாதிக்கப்படும்போது நோயாளியின் பெற்றோரின் உடலிலிருந்து ஸ்டெம் செல்களை எடுத்து, நோயாளிக்குச் செலுத்தி, சிறுநீரகப் பாதிப்பைச் சரி செய்யும் சிகிச்சை முறை அண்மைக்காலமாக சென்னையிலேயே மேற்கொள்ளப்படுகிறது.

கண்ணில் “பூ’ விழுதல் கோளாறினால் “கார்னியா’ பாதிக்கப்படும்போது பார்வை இழப்பு ஏற்படுவது உண்டு. இதற்கு “கார்னியா மாற்று அறுவைச் சிகிச்சை’ செய்யப்படுகிறது. இதற்குப் பதிலாக, கண்ணின் ஓரத்தில் “லிம்பஸ்’ என்னுமிடத்தில் உள்ள ஸ்டெம் செல்களை எடுத்து பாதிக்கப்பட்ட கார்னியாவில் பொருத்தினால், அந்த நோயாளிக்குக் கார்னியா செல்கள் வளர்ச்சி பெற்று பார்வை கிடைத்து விடுகிறது. இதனால் அறுவைச் சிகிச்சை தவிர்க்கப்படுகிறது.

பக்கவாதம், பார்க்கின்சன் நோய் மற்றும் அல்சிமர் எனும் மறதிநோய் போன்றவற்றுக்கு “நியூரல் ஸ்டெம் செல்களை’ச் செலுத்திக் குணமாக்கலாம். ரத்தப்புற்றுநோய், தலசீமியா, ரத்தம் உறைதல் கோளாறு போன்றவற்றுக்கும் ஸ்டெம் செல் சிகிச்சை நல்ல பலனைத் தருகிறது.

மேலும், விபத்தின் மூலம் முதுகுத்தண்டுவடப் பாதிப்பு, நரம்பு பாதிப்பு போன்றவை ஏற்படும்போது அந்த இடங்களில் ஸ்டெம் செல்களைச் செலுத்தினால், நாளடைவில் புதிய செல்கள் தோன்றி, அந்த உறுப்பு வளர்ச்சியடைந்து, செயலூட்டம் பெற்றுவிடுவதால் படுத்த படுக்கையாக இருப்பவர்கள்கூட இச்சிகிச்சைக்குப் பிறகு எழுந்து நடமாட முடிகிறது என்றால் இதன் மகிமையைப் புரிந்து கொள்ளுங்கள்.

பிறக்கும் குழந்தையின் தொப்புள்கொடியில் உள்ள ரத்தத்தைச் சேமித்து வைத்தால், அதில் உள்ள “ஸ்டெம் செல்கள்’ பிற்காலத்தில் அக்குழந்தைக்கு ஏற்படும் ரத்தசோகை, ரத்தப்புற்றுநோய், சர்க்கரைநோய் மற்றும் பரம்பரை நோய்களுக்குச் சிகிச்சை செய்யப் பயன்படும் என்று அண்மையில் பல ஆராய்ச்சிகள் நிரூபித்துள்ளன. ஆகவே இதுவரை பிரசவத்தின்போது “தேவையில்லை’ என்று கழித்துப் போடப்படும் தொப்புள்கொடி ரத்தத்தைச் சேமித்துப் பாதுகாக்க இப்போது இந்தியாவில் பல நகரங்களில் “தொப்புள்கொடி ரத்த வங்கிகள்’ உதயமாகியுள்ளன.

மேல்நாடுகளில் ஆண், பெண் இணையாமல், “குளோனிங்’ முறையில், பெண்ணின் கருப்பையிலிருந்து ஸ்டெம் செல்லை எடுத்து, அதை அந்தப் பெண்ணின் கருப்பையிலேயே பதியம் செய்து, கருவை வளர்த்து ஒரு முழுமனிதனையே உருவாக்கியுள்ளனர்.

ஐரோப்பிய நாடுகளில் ஸ்டெம் செல்களைப் பயன்படுத்தி பலர் தங்கள் முக அமைப்பையே மாற்றிக் கொண்டுள்ளனர். வரும் காலங்களில் மருத்துவத் துறையில் ஸ்டெம் செல்களைப் பயன்படுத்தி என்னவெல்லாம் புரட்சிகள் நடக்க இருக்கிறதோ, அவை அந்த ஆராய்ச்சியாளர்களுக்கே வெளிச்சம்!

(கட்டுரையாளர்: ராஜபாளையம் கணேஷ் மருத்துவமனையின் பொது மருத்துவர்.)

Posted in alzheimer, alzheimer's, Analysis, Backgrounder, Biotech, Blood, Cells, Clone, Cloning, cure, Developments, Disease, Doctor, Medicine, Neural, parkinson, parkinson's, Prescription, Procedure, Research, Science, Stem, Stem Cell, Stem Cells, surgery | 1 Comment »