Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Parking’ Category

Chennai Ranganathan Street – Infrastructure, Safety & Traffic issues due to Illegal Construction

Posted by Snapjudge மேல் நவம்பர் 10, 2007

விதிமுறை மீறல்கள்!

ஒரு திரையரங்கம் கட்டுவதாக இருந்தால் கூட, அதில் இத்தனை நபர்கள் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் அந்தக் கட்டடத்துக்குள் கூடுவார்கள் என்பதற்கான அதிகபட்ச நிர்ணயம் உண்டு. ஆனால், வணிக வளாகங்களுக்கு எந்தவிதக் கட்டுப்பாடும் இல்லாத அளவுக்கு நெரிசலை சந்திக்க வேண்டிய கட்டாயம். அதுவும், தொலைக்காட்சி வந்த பிறகு, பண்டிகைக் காலங்களில் இத்தனை சிறிய தெருவில் இத்தனை மக்களா என்று திகைப்பும், பயமும் ஏற்படுகிறது.

இந்த வர்த்தக நிறுவனங்கள் அள்ளி வீசும் இலவசங்களும், சலுகைகளும் பண்டிகைக் காலங்களில் புற்றீசல்போல வாடிக்கையாளர்களை மொய்க்க வைத்துவிடுகின்றன. அந்த அளவுக்குக் கூட்டத்தை சமாளிக்கும் அளவுக்கு அந்தக் கட்டடங்களில் இடமில்லை என்பது மட்டுமல்ல, தெருக்கள் அகலமும் இல்லை. உதாரணம், சென்னை ரங்கநாதன் தெருவும் அதிலுள்ள வணிக வளாகங்களும்.

சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் ஒரு கணக்கெடுப்பு நடத்தி வெளியிட்டிருக்கும் அறிக்கை, சென்னை தி.நகர் ரங்கநாதன் தெரு மற்றும் உஸ்மான் சாலையில் மட்டும் சுமார் 35 கட்டடங்கள் எப்.எஸ்.ஐ. (ஊ.ந.ஐ.) என்று அழைக்கப்படும் அதிகபட்சக் கட்டுமானப் பரப்பு விகிதத்தை மீறி எழுப்பப்பட்டவை என்று வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

இது ஏதோ அரசுக்கும் அரசு அதிகாரிகளுக்கும் தெரியாமல் நடக்கும் விஷயமல்ல. 10 மீட்டர் அகலமுள்ள சென்னை ரங்கநாதன் தெருவில் பல அடுக்குக் கட்டடங்கள் எதுவும் அனுமதிக்கப்படவே கூடாது. ஆனால், விதிமுறைகளை மீறி சுமார் 14 கட்டடங்கள் எப்படி கட்டப்பட்டன? எந்தவொரு மாநகராட்சி மற்றும் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும அதிகாரிகளுக்கும் தெரியாமலா இந்தக் கட்டடங்கள் கட்டப்பட்டன?

உஸ்மான் சாலையில் இலக்கம் 128 மற்றும் 129 எண்களிலுள்ள சரவணா ஸ்டோர்ஸ் கட்டடம் கட்டுவதற்கு அனுமதிக்கப்பட்ட எப்.எஸ்.ஐ. 1.5 தான். ஆனால், கட்டப்பட்டிருப்பதோ 8.99. சட்டப்படி இந்தக் கட்டடத்துக்கு 266 கார்களை நிறுத்துவதற்கான இடம் இருக்க வேண்டும். ஆனால் ஒரு சைக்கிள் நிறுத்தக் கூட இடமில்லை. இது எப்படி நிகழ்ந்தது?

உஸ்மான் சாலையிலுள்ள ஸ்ரீ சங்கரபாண்டியன் ஸ்டோர்ஸ் வரம்பை மீறி ஐந்து மாடிகள் கட்டியது கண்ணில் படவில்லையா?

இல்லை, புதிய சரவணா ஸ்டோர்ஸ் நான்கு மாடிகள் கட்டியது யாருக்கும் தெரியாமல் கட்டப்பட்டதா?

  • கோடம்பாக்கம் சேகர் எம்போரியமும்,
  • உஸ்மான் ரோடு சரவணா கோல்டு ஹவுசும்,
  • ரங்கநாதன் தெருவுக்கு நேர் எதிரில் எழுந்து நிற்கும் சரவணா செல்வரத்தினத்தின் கட்டடமும்,
  • ரங்கநாதன் தெருவிலுள்ள வணிக வளாகங்களும்

ஊரறிய உலகறிய கட்டப்பட்டபோது, அதிகாரிகள் தூங்கிக் கொண்டா இருந்தார்கள்? சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு செயல்படும் நல்லி நிறுவனத்தின் கட்டடத்திலேயே விதிமுறை மீறல் இருப்பதாகச் சொல்கிறார்களே, அது எதனால்?
முறையான அனுமதி பெற்று கட்டடம் கட்டத் தொடங்குவார்கள் – இரண்டு அடுக்கு முடிந்ததும், மூன்றாவது அடுக்கு கட்டத் தொடங்கும்போது, சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பும். மாநகராட்சியைக் கேட்டால், எங்களிடம் அனுமதி வாங்கியது இரண்டு அடுக்குக்குத்தான். அதற்குமேல் கட்டப்படும் கட்டடங்களுக்கு பெருநகர் வளர்ச்சிக் குழுமம்தான் பொறுப்பு என்று தட்டிக் கழித்து விடுவார்கள். சம்பந்தப்பட்டவர் நீதிமன்றத்தை அணுகித் தடை பெற்று விடுவார். அதைக் காரணம் காட்டி பெருநகர் வளர்ச்சிக் குழுமம் கண்களை மூடிக் கொள்ளும்.

இதையெல்லாம் மீறி, பொது நல வழக்குத் தொடர்ந்து விடாப்பிடியாக உச்ச நீதிமன்றம் வரை போய் இந்தக் கட்டடங்களில் காணப்படும் விதிமுறை மீறல்களை இடித்துத் தள்ள உத்தரவு வாங்கி வந்தால், சட்டம் இயற்றி இவர்களைக் காப்பாற்ற அரசு முன்வருகிறது. அதாவது, இந்த விதிமுறை மீறல்களுக்கு உடந்தையாக சென்னை மாநகராட்சியும், சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமமும், அரசும் செயல்படுகின்றன என்றால், ஆட்சியும் அதிகாரமும் யாருக்காகப் பயன்படுத்தப்படுகிறது என்பது தெளிவாகிறது.

முதலில் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் இந்தக் கட்டடங்களைக் கட்ட உதவும் என்ஜினீயர்களும், காண்ட்ராக்டர்களும். விதிமுறை மீறல்களுக்குத் துணைபோகும் இவர்களது பட்டம் பறிக்கப்படும், உரிமம் ரத்து செய்யப்படும் என்று அறிவித்தால், இந்த விதிமுறை மீறல்கள் பெரிய அளவில் தடுக்கப்படும். படித்த பொறியியல் பட்டதாரிகள் இந்த விதிமுறை மீறல்களுக்குத் துணைபோகத் தயாராவதுதான் அடிப்படைக் குற்றம். அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்!

தவறான சிகிச்சைக்கு மருத்துவர்கள் தண்டிக்கப்பட்டு அவர்களது உரிமம் பறிக்கப்படுவதுபோல, விதிமுறை மீறல்களுக்குத் துணை போகும் என்ஜினீயர்களின் உரிமம் ரத்து செய்யப்படுமானால், இதுபோன்ற விதிமுறை மீறல்கள் நிச்சயம் குறையும்.

Posted in authority, Biz, Bribery, Bribes, Buildings, Business, Cars, Chennai, Citizen, City, Commerce, Congestion, Construction, Consumer, Corruption, Crackers, Customer, Deepavali, Deepavalli, Departments, Dept, Discount, Diwali, DMK, Dress, Economy, Finance, Fire, Fireworks, Floors, Gold, Hassle, Hazards, Illegal, Incentives, Industry, infrastructure, Jewelery, Jewels, Jewlery, kickbacks, Lanes, Law, License, Madras, Malls, Metro, MMDA, multi storey, Multi story, officers, Order, Parking, Permits, Ranganathan st, Ranganathan street, Rebates, Renganathan st, Renganathan street, retail, Safety, Saravana, Saravana Gold House, Saravana GoldHouse, Saravana Selvarathanam, Saravana Selvarathanam Stores, Saravana Stores, Sarees, Saris, Season, Sector, Sekar Emporium, Shopping, Shops, Sri sankarapandian, Sri sankarapandian Stores, Srisankarapandian, Srisankarapandian Stores, Suspend, Trade, Traffic, Usman Road | Leave a Comment »

Raman Raja – Caught in the Traffic (Dinamani Kathir)

Posted by Snapjudge மேல் ஜூலை 9, 2007

நெட்டில் சுட்டதடா…: மைல் கணக்கில் நின்ற மலைப் பாம்பு வரிசை!

ராமன் ராஜா


முன்பு ஒருமுறை போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் கொண்டு மும்பை செல்ல வேண்டிய விமானத்தைக் கோட்டை விட இருந்தேன். ரிஷப ராசிக்கு “விரயம்’ என்று ஒற்றை வார்த்தையில் ரத்தினச் சுருக்கமாக தினப்பலன் போட்டிருந்ததை மதிக்காமல் டாக்ஸியில் புறப்பட்டு, அண்ணா சாலையில் திரும்ப வேண்டிய நேரத்தில் போக்குவரத்து போலீசால் தடுத்து நிறுத்தப்பட்டேன். ஒரு முக்கிய பிரமுகர் அந்த வழியாக வருகிறாராம்; அவருக்கு ஓட்டுப் போட்டு முக்கிய பிரமுகராக்கியவர்கள் அனைவரும் காத்திருக்க வேண்டுமாம். அடுத்த நாற்பது நிமிடம், பல்லைக் கடித்துக் கொண்டு எஃப் எம் ரேடியோவில் “தமில்ப்’ பாட்டு கேட்டுக் கொண்டு கழித்தேன். நல்லவேளை, நான் பிரசவத்துக்குப் போய்க் கொண்டிருக்கும் பெண்மணியாக இல்லையே என்று நிம்மதியுடன் அடி வயிற்றைத் தடவிவிட்டுக் கொண்டேன். கடைசியில் விமான நிலையம் போய்ச் சேர்ந்தபோது, ப்ளேனும் ஒரு மணி நேரம் தாமதம் என்று தெரிய வந்தது. (பைலட்டும் பக்கத்துக் காரில்தான் வந்தாரோ?)

போக்குவரத்து நெரிசல் என்பது முன்னேறிய நாடுகள் எல்லாமே முன்னேற்றத்துக்குத் தப்பாமல் கொடுக்கும் விலை. இந்தியாவிலும் வங்கிகள் வண்டிக் கடன்களை “ஊரான் வீட்டு நெய்யே’ என்று வாரி வழங்குவதால், இப்போது ஏழை எளியவர்கள் அனைவரும் வாகனம் வாங்குவது சாத்தியமாகியிருக்கிறது. ஆனால் ஒரு பிரச்னை: தமிழ் நாட்டில் ஓடும் சற்றேறக்குறையத் தொண்ணூறு லட்சம் வாகனங்களில் கால் பாகத்தை, பிடிவாதமாக அவர்கள் சென்னை நகரத்தில்தான் கொண்டு வந்து ஓட்டுகிறார்கள். இதைக் கண்ட பன்னாட்டுக் கம்பெனிகள், “சிக்கியதடா ஒரு மார்க்கெட்’ என்று இங்கே வந்து கடை பரத்தி, நம் ஜனத் தொகையை விட வேகமாகக் கார், டூ வீலர் முதலியவற்றை உற்பத்தி செய்து தள்ளிக் கொண்டிருக்கிறார்கள். விளைவு, எனக்கு இருபது நிமிட தூரத்தில் இருந்த அதே அலுவலகம் இப்போது அறுபது நிமிடமாகிவிட்டது. டெல்லி, கல்கத்தா எங்கும் இதே கதைதான். பெங்களூரோ, ஏற்கனவே “பூட்ட கேஸ்’ என்று முடிவு கட்டப்பட்டு விட்ட நகரம். சென்னையில் நகைச்சுவை உணர்வு மிக்க உணவு விடுதிக்காரர் ஒருவர், தன் கடைக்கு ஹோட்டல் டிராபிக் ஜாம் என்று பெயர் வைத்திருக்கிறார்.

இங்கிலாந்தில் உள்ள எம்6 என்ற நெடுஞ்சாலையில் 87-ம் வருடம் ஒரு நெரிசல் ஏற்பட்டது. ஐம்பதாயிரம் வாகனங்களில் இரண்டு லட்சம் பேர் மாட்டிக் கொண்டார்கள். இருபது லட்சம் கெட்ட வார்த்தைகளில் அரசாங்கத்தைத் திட்டித் தீர்த்தார்கள். உலகத்திலேயே மிக நீளமாக நின்ற டிராபிக் ஜாம் எது என்று கின்னஸ் புத்தகத்தைப் புரட்டினால், மிரட்டுகிறது: 1980-ம் வருடம், காதலர் தினத்துக்கு இரண்டு நாள் கழித்து ஃப்ரான்ஸில் நடந்தது அது. விடுமுறைக்கு ஜாலியாக எல்லாரும் பனிச் சறுக்கு விளையாடிவிட்டு பாரீஸ் திரும்பிக் கொண்டிருந்தார்கள். இடையில் எங்கோ ஒரு லாரி மக்கர் செய்ய, மழை வேறு சேர்ந்துகொள்ள, திடீரென்று ட்ராபிக் ஜாம். லியான் நகரில் ஆரம்பித்து பாரீஸ் வரை, சுமார் 176 கிலோ மீட்டருக்கு அடைத்துக் கொண்டு நின்று விட்டது. ஒரு வழியாக விடுபட்டு வீடு போய்ச் சேர்ந்ததும், பல பேர் கடுப்பில் தத்தம் கார்களைக் கொளுத்தியிருப்பார்கள்!

டிராபிக் ஜாம் என்பது ரோட்டில்தான் ஏற்பட வேண்டும் என்பதில்லை; எங்கெல்லாம் அவசரக்காரர்கள் இருக்கிறார்களோ, அங்கெல்லாம் தவறாமல் இது நடக்கும். வெனிஸ் நகரின் கால்வாய்ப் போக்குவரத்தில் அவ்வப்போது படகுகள் ஜாம் ஆகி நிற்பது உண்டு. பாங்காக் நகரின் மிதக்கும் மார்க்கெட்களில், படகுகள் சிக்கித் திணறுகின்றன என்று கால்வாய்களையெல்லாம் தூர்த்து சாலைகளாக்கினார்கள். இப்போது அவற்றில் கார்கள் நெரிசலாடுகின்றன!

போக்குவரத்து நெரிசல்கள் ஏன், எப்படி ஏற்படுகின்றன என்பதை கம்ப்யூட்டர் உதவியுடன் விஞ்ஞானிகள் அலசிக் கொண்டிருக்கிறார்கள். ஃப்ளூயிட் டைனமிக்ஸ் என்று குழாயின் வழியே தண்ணீர் ஓடுவதுடன் ஒப்பிட்டு, போக்குவரத்தைக் கணித சூத்திரங்களில் அடக்கமுடியும். இப்போது டிராஃபிக் எஞ்சினியரிங் என்பதை பட்டப் படிப்பாகவே எடுத்துப் படிக்கலாம். ஆனால் இந்தியாவுக்கே உரிய சாலைத் தொல்லைகளான சாக்கடைப் பள்ளங்கள், எருமை மாடுகள், வி.வி.ஐ.பிகள் போன்றவற்றை எந்த கம்ப்யூட்டராலும் மாடலிங் செய்ய முடியாது. எனவே என்னதான் புள்ளியியல் புரபசராக இருந்தாலும், தெருவில் இறக்கிவிட்டால் அவருக்கும் இதே கதிதான் ஏற்படுகிறது. ஒரு முறை இந்தியப் பிரதமரின் காரைத் தப்பான சாலையில் திருப்பி விட்டு, அவரும் நம்முடைய அவஸ்தைகளைச் சில மணித் துளிகள் அனுபவித்தார். (அங்கே டூட்டியில் இருந்த போலீஸ்காரர்களைப் பாராட்டுவதற்குப் பதிலாகச் சஸ்பென்ட் செய்தார்கள், பாவம்).

போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்குப் பல வழிகளை ஆலோசித்திருக்கிறார்கள். அதில் முக்கியமானது, ரோட்டில் வண்டி ஓட்டுவதற்குக் காசு வசூலிப்பதுதான். டோல் ரோடுகள், டோல் பாலங்கள் என்று முக்கியமான பிரதேசங்களையெல்லாம் கட்டணப் பகுதிகளாக அறிவிக்க ஆரம்பித்தார்கள். லண்டன் நகரின் பயணம் செய்ய “நெரிசல் கட்டணம்’ ஐந்து பவுண்டு என்று தொடங்கி, வருடா வருடம் விலை ஏற்றிக் கொண்டிருக்கிறார்கள். அமெரிக்காவில் பல ரோடுகளில் அலுவலகம் போகும் பீக் அவர் நேரங்களில், தெருவில் வீல் வைத்தால் டிக்கெட் வாங்க வேண்டும். சனி, ஞாயிறு இலவசம். அதிலேயே சிக்கனமான சிறிய கார்களுக்கு சற்றுக் குறைந்த கட்டணம், மண்ணெண்ணை கலந்து கரும் புகை கக்கினால் அதிக சார்ஜ் என்று பல பாலிசிகளை ஒன்றாகக் கலந்து குழப்படி பண்ணிக் கொண்டிருக்கிறார்கள்.

சாலைக் கட்டணங்களை மறுக்கவும் எதிர்க்கவும் பலர் கோஷ்டிகள் அமைத்து கோஷம் போடுகிறார்கள். “”சாலைகள் போடுவது, அசோகர் காலத்திலிருந்தே அரசாங்கம் செய்ய வேண்டிய கடமையாகத்தான் இருந்து வந்திருக்கிறது. ஏற்கனவே பெட்ரோல் மீது பயங்கரக் கந்து வட்டி வரி என்று உறிஞ்சிக் கொழுத்தது போதாமல், இப்போது தெருவில் போவதற்கும் காசு கேட்கிறீர்களா? இது மனிதனின் அடிப்படையான நடமாடும் உரிமையையே கட்டுப்படுத்துகிறதே” என்பது அவர்களுடைய அனல் மூச்சு. “” வழியில் இருக்கிற ஒவ்வொரு தெருவுக்கும் பாலத்துக்கும் தண்டல் கட்டிவிட்டுத்தான் போக வேண்டும் என்றால், பணக்காரர்கள் எப்படியும் பயணம் செய்துவிடுவார்கள். அடித்தட்டு மக்கள்தான் நாலு இடத்துக்குப் போய் வேலை செய்து பிழைக்க முடியாமல் தன்னுடைய பேட்டைக்குள் சிறைப்பட்டு விடுவார்கள்” என்பதும் நியாயமாகவே படுகிறது.

கட்டணம் வசூலிக்கக் கூடாது என்றால் அடுத்த ஆயுதம், வாகனம் ஓட்டுவதில் முடிந்த அளவு தடைகள் ஏற்படுத்துவது. கூட்டம் கூடும் பகுதிகளில் வேண்டுமென்றே பார்க்கிங் வசதிகளைக் குறைத்து விடுவது. தியேட்டர் அருகே காரை நிறுத்த இடமில்லாமல் லொட்டு லொட்டென்று ஒரு கிலோமீட்டர் நடந்து போய் சினிமா பார்க்க வேண்டுமென்றால், பலர் விடுமுறை நாள்களில் அங்கே போய் அம்முவதைத் தவிர்ப்பார்கள். அமெரிக்காவில் ஒற்றை ஆள் ஒருவர் தன்னந்தனியாகக் காரில் சென்றால் பொதுப் பாதையில் நீண்ட வாகன வரிசையில்தான் போக வேண்டும்; ஒரே காரில் இரண்டு மூன்று பேர் சேர்ந்து போனால், ரோடு ஓரத்தில் தனியாக ராஜ பாட்டையில் சல்லென்று சீக்கிரமாகப் போகலாம். கார்பூல் பாதை என்ற இந்த வசதிக்காகவே, ஒரே அலுவலகத்தில் வேலை செய்பவர்கள் முறை போட்டுக் கொண்டு தினம் ஒருவருடைய காரில் சேர்ந்து பயணம் செய்வார்கள். நெரிசலைக் குறைப்பதற்கு எல்லாவற்றையும் விடச் சிறந்த ஆயுதம், பஸ், ரயில்தான்!

சாலைச் சுங்கம் வசூலிக்கும் சாவடிகளில் தினமும் லட்சக் கணக்கான வண்டிகளுக்கு எச்சில் தொட்டு டிக்கெட் கிழித்துக் கொடுத்து நாக்கு உலர்ந்து போய்விட்டதால், ஆட்டோ பாஸ், டெலி பாஸ் போன்ற தானியங்கி டிக்கெட் இயந்திரங்கள் வந்துவிட்டன. இதனால் சுங்கச் சாவடியில் நிறுத்தவோ, வேகத்தைக் குறைக்கவோ கூடத் தேவையில்லை; ரேடியோ அலைகள் வழியே தொடர்பு கொண்டு காரே போகிற போக்கில் தன் கட்டணத்தைக் கட்டி விடும். சிங்கப்பூரில் நகர மையத்துக்குப் போகிற எல்லா ரோடுகளிலும் வருக வணக்கம் என்று தோரண வாயில்கள், வளைவுகள் உண்டு. எல்லாம் தானியங்கிப் பணம் பிடுங்கி வளைவுகள்! கலீலியோ என்று செயற்கைக் கோள் அமைப்பின் வழியாக ரோட்டில் போகும் அத்தனை வண்டிகளையும் கடவுள் போல் கண்காணித்து நீங்கள் எப்போது, எந்தத் தெருவில் எத்தனை நேரம் பயணம் செய்தீர்கள் என்று கூட துல்லியமாக பில் போட்டு வசூலித்து விடமுடியும். அரசியல், பிசினஸ் நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்வதற்கு இந்தத் தொழில் நுட்பத்தில் இருக்கும் துஷ்பிரயோக வசதியைக் கருதி, இதைப் பல நாடுகளில் பரவலாகக் கொண்டு வருவதற்கு முயற்சிக்கிறார்கள். இடது சாரிகள் “உயிரே போனாலும் ஒப்புக் கொள்ள மாட்டேன்’ என்று எதிர்க்கிறார்கள்.

பப்லுவுக்குப் பிடித்த புராதனமான கடி ஜோக் ஒன்று: பசியுடன் இருந்த ஒருவன், காலை உணவுக்கு ப்ரெட் வாங்கி வெண்ணை தடவிக் கொண்டு மவுண்ட் ரோடில் போய்க் காத்திருந்தானாம். ஏன்? அங்கே ட்ராபிக் ஜாம் கிடைக்கும், தொட்டுத் தின்னலாம் என்று!

Posted in Accidents, Auto, Carpool, Cars, Chennai, City, Comfort, Commute, Congestion, Diesel, Dinamani, Driver, Environment, Freeway, Gas, Highway, infrastructure, Insurance, Kathir, LA, Lights, Limo, Limousine, London, Luxury, Manufacturing, Metro, NYC, Paris, Parking, Parkway, Patterns, Petrol, Pollution, Pooling, Raman Raja, Roads, Rotary, Rural, Signals, Singapore, Sprawl, Street, Suburban, Tax, Toll, Traffic, Transport, Travel, UK, Urban, Warming | Leave a Comment »