மூலிகை மூலை: வாதக் காய்ச்சலைப் போக்கும் மாவிலிங்கம்!
விஜயராஜன்
மூன்று கூட்டு இலைகளையும் விரல்களைப் போன்ற வடிவம் உள்ளதும், மலர்ந்ததும் மஞ்சள் நிறமாக மாறும் வெள்ளைப் பூக்களையும், சிவப்பு நிற உருண்டையான சதைக் கனிகளையும் உடைய வெண்மை நிற மர இனமாகும் மாவிலிங்கம். இலை, வேர், பட்டை ஆகியவை மருத்துவக் குணம் உடையவை. இலை பசியைத் தூண்டும். உடலுக்கு நல்ல பலத்தைத் தரும். பட்டை மலச்சிக்கலைப் போக்கும். வேர் நோயை நீக்கி உடலுக்கு வலுவைக் கொடுக்கும். தமிழகம் எங்கும் தானாகவே வளர்கின்றது.
வேறு பெயர்கள்: குமார கன சுவேத புசுப்பி, சாருகாவிகம், எழும்பலதிச்சுடரும், வன்னி, தீபனி, மாவிலங்கு.
ஆங்கிலத்தில் : Crataeva religiosa; Forst; Eapparida
இனி மருத்துவ குணங்களைப் பார்ப்போம்:
மாவிலிங்க இலையை ஒரு கைப்பிடியளவு எடுத்து ஒன்றிரண்டாக இடித்து 1 லிட்டர் நீரில் போட்டு, அத்துடன் சுக்கு 1 துண்டு, சீரகம் ஒரு சிட்டிகையளவு பொடியாக்கிச் சேர்த்துப் போட்டு அரை லிட்டராகச் சுண்டக் காய்ச்சி வடிகட்டி 150 மில்லியளவு வீதம் 3 வேளை குடித்து வர மந்தம், செரியாமை, வாதக் காய்ச்சல் குணமாகும்.
மாவிலிங்க இலையை அரைத்துப் பற்றுப் போட அனைத்து வீக்கங்களும் கரையும்.
மாவிலிங்க இலையை 2 கைப்பிடியளவு எடுத்து அரை லிட்டர் நீரில் போட்டு 100 மில்லியாக சுண்டக் காய்ச்சி வடிகட்டி 150 மில்லியளவு வீதம் 3 வேளை குடித்து வர மந்தம், செரியாமை, வாதக் காய்ச்சல் குணமாகும்.
மாவிலிங்க இலையை 2 கைப்பிடியளவு எடுத்து அரை லிட்டர் நீரில் போட்டு 100 மில்லியாகக் சுண்டக் காய்ச்சி வடிகட்டி அத்துடன் 100 மில்லியளவு தேங்காய்ப் பால் கலந்து 4 வேளை குடித்துவர முடக்கு வாதம் குணமாகும்.
மாவிலிங்கப்பட்டை ஒரு பங்கும் அதில் பாதியளவிற்குப் பூண்டும், மிளகு கால் பங்கும் சேர்த்து அரைத்து கொட்டைப் பாக்களவு காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர முடக்கு வாதம் குணமாகும்.
மாவிலிங்கப் பட்டை 40 கிராம், சுக்கு, திப்பிலி, சதகுப்பை வகைக்கு 20 கிராம், சித்திர மூலவேர், மூங்கிலிலை வகைக்கு 10 கிராம் எடுத்து ஒன்றிரண்டாக இடித்து 2 லிட்டர் நீரில் போட்டு அரை லிட்டராகக் காய்ச்சி வடிகட்டி 3 வேளை 150 மில்லியளவு குடித்து அத்துடன் கால் பாகம் அன்னாசிப் பழத்தை தோல் சீவி சர்க்கரை கலந்து சாப்பிட்டு சூடான அரிசிக் கஞ்சியும் இஞ்சித் துவையலும் சேர்த்துச் சாப்பிட இளம் சூடு கரையும்.
மாவிலிங்கப் பட்டையை 40 கிராம் எடுத்து ஒன்றிரண்டாக இடித்து ஒரு லிட்டர் நீரில் போட்டு கால் லிட்டராகக் காய்ச்சி வடிகட்டி 50 மில்லியாக 2 வேளை குடித்து வரக் கால் வீக்கம், நீர்க்கட்டு, கல்லடைப்பு, வெட்டை, சூலை, மாதவிலக்குப் பிரச்சினைகள், வயிற்றுப் புண், கண்டமாலை, புண்கள், விஷக்கடி குணமாகும்.
மாவிலிங்கப்பட்டை, உள்ளி, மிளகு சம அளவாக எடுத்து அரைத்து கொட்டைப் பாக்களவு 3 நாள் காலையில் கொடுக்க மாதவிலக்கு உண்டாகும்.
மாவிலிங்கம் சமூலத்தை அரைத்து நெல்லிக்காயளவு எடுத்து 1 டம்ளர் பாலுடன் கலந்து 2 வேளை குடித்து வர காய்ச்சல், வெட்டை, சூலை, கல்லடைப்பு, நீரடைப்பு நீங்கும்.
மாவிலிங்க இலையைக் கைப்பிடியளவு எடுத்து அரை லிட்டர் நீரில் போட்டு 200 மில்லியாகச் சுண்டக் காய்ச்சி வடிகட்டிக் குடிக்க காய்ச்சல், செரியாமை குணமாகும்.
மாவிலிங்க இலையை அரைத்து உள்ளங்காலில் பற்றிட வலி, வீக்கம், எரிச்சல் நீங்கும்.
மாவிலிங்கப் பட்டையைக் கைப்பிடியளவு எடுத்து அரை லிட்டர் நீரில் போட்டு 200 மில்லியாகச் சுண்டக் காய்ச்சி வடிகட்டி 2 வேளை தொடர்ந்து குடித்துவர கல்லடைப்பு குணமாகும்.
மாவிலிங்கப் பட்டையை வெட்டி உட்புறமாக வைத்துக் கட்ட கட்டிகள் கரையும்.
மாவிலிங்கப் பட்டையை வட்டமாக வெட்டி அரையாப்புக் கட்டி மீது வைத்து அதன் மீது ஓர் ஈயத் தகட்டை வைத்துக் கட்ட கட்டி அமுங்கிவிடும்.
மாவிலிங்கப் பட்டையை நன்றாக நசுக்கி, எருக்கம் இலையை தொன்னை தைத்து அதில் முப்பிணி கண்டவர்களுக்குத் தலையில் வைத்துக் கட்ட குணமாகும்.