ஜப்பான் நாட்டு உதவியுடன் ஒகேனக்கல் குடிநீர்த் திட்டம் விரைவில் நிறைவேற்றப்படும்: தமிழக முதல்வர்
பரமக்குடியில் செவ்வாய்க்கிழமை ராமநாதபுரம் கூட்டுக் குடிநீர்த் திட்ட அடிக்கல் நாட்டு விழாவில் நலத் திட்ட உதவியை ஊனமுற்ற மாணவருக்கு வழங்கி பரிவுடன் பேசுகிறார் முதல்வர் கருணாநிதி. உடன் (இடமிருந்து) மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.முத்துஸ்வாமி, அமைச்சர்கள் ஆற்காடு வீராசாமி, சுப. தங்கவேலன், துரைமுருகன். (வலது) விழாவில் கலந்து கொண்ட பெண்களில் ஒரு பகுதியினர்.
பரமக்குடி, ஜன. 31: ராமநாதபுரம் மாவட்டத்தில் கூட்டுக் குடிநீர்த் திட்டம் செயல்படுத்தப்பட்டதுபோல் சேலம், தருமபுரி மாவட்டங்களில் நிலவும் குடிநீர்ப் பிரச்சினையை நிரந்தரமாக தீர்க்க ஜப்பான் நாட்டு உதவியுடன் ஒகேனக்கல் குடிநீர்த் திட்டம் விரைவில் நிறைவேற்றப்படும் என்று தமிழக முதல்வர் மு. கருணாநிதி கூறினார்.
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் ரூ. 616 கோடி மதிப்பிலான ராமநாதபுரம் கூட்டுக் குடிநீர்த் திட்டத்துக்கு செவ்வாய்க்கிழமை அடிக்கல் நாட்டி, அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி அவர் இவ்வாறு பேசினார்.
இதற்கான விழா பரமக்குடியில் ராஜா சேதுபதி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. விழாவுக்கு தமிழக வீட்டு வசதித்துறை அமைச்சர் சுப. தங்கவேலன் தலைமை வகித்தார்.
ராமநாதபுரம், சிவகங்கை மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் உள்ள 5 நகராட்சிகள், 11 பேரூராட்சிகள் மற்றும் 18 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 3,163 குடியிருப்புகளுக்கு பயனளிக்கும் இத் திட்டத்திற்கான அடிக்கல்லை தமிழக முதல்வர் மு. கருணாநிதி நாட்டினார். அதைத்தொடர்ந்து அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி அவர் மேலும் பேசியது:
கடந்த ஒருவார காலமாக பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து வருகிறேன். ஆனால் இந்த நிகழ்ச்சிகளுக்கு எல்லாம் சிகரம் வைத்தாற்போல் அமைந்துள்ளது பரமக்குடியில் இன்று நடைபெறும் ராமநாதபுரம் கூட்டுக் குடிநீர்த் திட்ட அடிக்கல் நாட்டு விழா.
ஒவ்வொரு மாவட்டத்திலும் அதிகாரிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளின் கருத்துப்படி தண்ணீர் தேவையைப் பூர்த்திசெய்ய வேண்டிய முயற்சிகள் செய்யப்பட்டுள்ளன. அதைத்தொடர்ந்து ஏரிகள், கண்மாய்கள், குளங்கள் தூர்வரப்பட்டுள்ளன.
ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்னும் குடிநீர் பற்றாக்குறை உள்ளதை உணர்கிறேன். சேலம் மற்றும் தருமபுரி மாவட்டங்களில் நிலவும் குடிநீர்ப் பிரச்சினையை நிரந்தரமாக தீர்க்க ஜப்பான் நாட்டு உதவியுடன் ஒகேனக்கல் குடிநீர்த் திட்டம் நிறைவேற்றப்படும்.
இதில் தாமதம் ஏற்பட்டால் எனது சொந்த நிதியை கொண்டு இத்திட்டத்தை நிறைவேற்றுவேன்.
ராமநாதபுரம் கூட்டுக் குடிநீர்த் திட்டத்திற்கு ரூ. 616 கோடி பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. திருச்சியில் இருந்து குழாய் மூலமாக 831 கி.மீ. நீளத்திற்கு குழாய்கள் அமைத்து, புதுக்கோட்டை மாவட்டம் ஆலவயல், பொன்னமராவதி, சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில், இளையாங்குடி வழியாக ராமநாதபுரம், ராமேசுவரம், முதுகுளத்தூர், சாயல்குடிக்கு காவிரியில் இருந்து குடிநீர் கொண்டு செல்லப்படும்.
இத்திட்டத்தின் மூலம் நாளொன்றுக்கு ஊரகப் பகுதியில் நபர் ஒருவருக்கு 40 லிட்டரும், பேரூராட்சிப் பகுதியில் 70 லிட்டரும், நகராட்சிப் பகுதியில் 90 லிட்டர் குடிநீரும் வழங்கப்படும்.
இத்திட்டத்தின் மூலம் ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்களைச் சேர்ந்த 20 லட்சம் பேர் பயன்பெறுவர். இத்திட்டத்தை 3 ஆண்டுகளில் நிறைவேற்றுவோம் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.
ஆனால் இத்திட்டத்தை 2 ஆண்டுகளில் அதிகாரிகள் நிறைவேற்றினால் விருது வழங்கப்படும் என்றார் முதல்வர்.
விழாவில், தமிழக அரசின் தலைமைச் செயலாளர் எல்.கே. திரிபாதி, தமிழக அமைச்சர்கள், மத்திய இணை அமைச்சர் ரகுபதி ஆகியோர் பேசினர்.