புகை நடுவிலே…
புகைபிடிக்கும் பழக்கம் உடல்நலத்துக்குக் கேடு விளைவிப்பது என்பதில் மாறுபட்ட கருத்தே இல்லை.
புகைபிடிக்கும் பழக்கத்தால் இந்தியாவில் ஆண்டுக்கு 8 லட்சம் பேர் இறக்கின்றனர். மேலும், புகைபிடிப்பதால் ஏற்படும் நோய்க்குச் சிகிச்சை மற்றும் நோயுற்ற காலத்தில் உற்பத்தி இழப்பு என மொத்தப் பொருள் இழப்பு ஆண்டுக்கு ரூ.13 ஆயிரம் கோடி என மதிப்பிடப்படுகிறது.
புகைத்தல் தீங்கானது என்றாலும், பீடி, சிகரெட் தயாரிப்பது அரசால் அனுமதிக்கப்பட்டுள்ள ஒரு தொழிலாக இருக்கிறது. இந்தத் தொழிலில் இந்தியாவில் 1 கோடி பேர் ஈடுபட்டுள்ளனர். 60 லட்சம் பேர் நேரடியாக இத்தொழிலில் பீடி சுற்றுபவர்களாக உள்ளனர். இவர்களில் பெரும்பாலோர் பெண்கள். மீதமுள்ளவர்கள் இதற்கான இலை மற்றும் புகையிலை உற்பத்தியாளர்களாக இருக்கிறார்கள்.
பீடியை சிகரெட் தொழிலோடு சேர்க்கக்கூடாது என்பதும் “சிகரெட்டைவிட பீடி நல்லது. நிகோடின் குறைவு’ என்ற வாதங்களும் ஏற்கக்கூடியவை அல்ல. புகைபிடித்தல் புற்றுநோய்க்கு ஒரு காரணமாக இருக்கிறது என்பதுதான் உண்மை. புகைபிடிக்கும் பழக்கத்துக்கு எதிரான பிரசாரமும் அவசியம்தான்.
ஆனால் அந்தப் பிரசாரத்தை மண்டையோடு எச்சரிக்கை மூலம் நடத்த அரசு விரும்புவதும், மண்டையோடு படத்தைப் போட்டால் பீடி விற்பனை சரிந்துவிடும் என்று பீடித் தொழிலாளர்கள் நம்புவதும் – இரு தரப்பினருமே நடைமுறையைப் புரிந்துகொள்ளவில்லை என்பதைக் காட்டுகின்றன.
சிகரெட் பாக்கெட்டுகளில் புகை பழக்கம் உடல்நலத்துக்குக் கேடானது என்று அச்சிட்டுத்தான் விற்கிறார்கள். விற்பனை குறைந்துவிடவில்லை. பீடி பிடிப்போர் அனைவரும் எழுத்தறிவில்லாத சாதாரண ஏழைகள், கூலித் தொழிலாளர்கள் என்ற எண்ணம் பரவலாக இருக்கிறது. அதனால் பீடி பாக்கெட்டுகளின் மீது எழுத்தால் எழுதுவதைக் காட்டிலும் குறியீடுகளால் மிரட்ட நினைக்கிறது அரசு.
அச்சுறுத்தும் வாசகங்கள், பயங்கர அடையாளங்களால் இத்தகைய பழக்கங்களைத் தடுத்துவிட முடியும் என்பது சரியல்ல. ஏனென்றால் இந்தத் “தப்பு என்பது தெரிந்து செய்வது’.
தகாத உறவினால் எய்ட்ஸ் வரும் என்றால், அரசு பாதுகாப்பான உறவை மட்டுமே பரிந்துரைக்க முடிகிறது. மதுவினால் உடல்நலம் கெடும் என்பது அனைவருக்கும் தெரியும். “மதுப்பழக்கம் நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு’ என்று எழுதப்பட்டுள்ளதால் விற்பனை சரிந்துவிடவில்லை. மண்டையோடு போட்டால் மட்டும் பீடி விற்பனை சரிந்துவிடும் என்பது சரியான வாதமாக இல்லை.
பீடித் தொழிலாளர்களின் மிகப்பெரும் பிரச்சினை பன்னாட்டு சிகரெட் நிறுவனங்கள்தான். பீடியின் விலைக்கும் சாதாரண சிகரெட்டின் விலைக்கும் உள்ள இடைவெளியைக் குறைத்து பீடித் தொழிலை அடியோடு ஒழிப்பதுதான் பன்னாட்டு நிறுவனங்களின் நோக்கம்.
நூறு சதவீத அன்னிய நேரடி முதலீட்டை மத்திய அரசு சிகரெட் தொழிலில் அனுமதித்துள்ளது. குறிப்பாக அசாம், திரிபுரா மாநிலங்களில் பன்னாட்டு நிறுவனங்கள் மலிவான, நீளம் குறைவான சிகரெட்டுகளை உற்பத்தி செய்து பீடிச் சந்தையை சிதைக்கப் போகின்றன.
இன்றைய முக்கியமான பீடித் தொழிற்சங்கங்கள் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்ந்தவை. மத்திய அரசு இக் கட்சிகளின் ஆதரவில் செயல்பட்டு வருகிறது. இச்சூழலில் சிகரெட் தொழிலில் அந்நிய நேரடி முதலீட்டை தடுத்து நிறுத்துதல், பீடி சுற்றுவதற்கான கூலியை நாடு முழுவதும் ஒரே மாதிரியாக நிர்ணயித்தல் என சாதித்துக் கொள்ள வேண்டுமே தவிர, மண்டையோட்டுப் பிரச்சினையில் முக்கியமானவற்றை மறந்துவிடக்கூடாது.
பீடிக் கட்டில் மண்டையோட்டை எவ்வளவு பெரியதாக அச்சிட்டாலும், சிகரெட் விலையைவிட பீடி மலிவாக இருக்கும்வரை பீடி விற்பனை குறையாது.
According to the medical journal Lancet, 13 per cent of all deaths in India by 2020 will be because of tobacco.