மூலிகை மூலை: நச்சுக் காய்ச்சல் குணமாக…
எஸ். விஜயராஜன்
கரும்புத் தோகையைப் போன்று இலைகளையும், கணுக்களாக மிக மென்மையான பல கிளைகளையும் கொண்ட சிறு செடி இனமாகும் பற்பாடகம். இதன் கிளைகளைச் சேர்த்துக் கசக்கினால் வழுவழுப்பான சாறு வரும். செடி முழுவதும் மருத்துவப் பயன் உடையது. வியர்வை பெருக்குதல், நோயை நீக்கி உடலைத் தேற்றுதல், காய்ச்சலைப் போக்குதல், முறை நோயை அகற்றுதல் போன்ற குணம் கொண்டது. தமிழகம் எங்கும் தானாகவே வளர்கின்றது.
வேறு பெயர்கள் : பற்படி கொத்தம், சுகண்டகம், கவந்தித்தோ, நரைதிரை மாற்றி, சீதப் பிரிய சூட்சுபத்திரி, திரிசணக்கி, நாபாஞ்சம், திரிதோசமகராசவேணு, சீதளசக்தி, சீதம், பற்படாம்.
ஆங்கிலத்தில்: Mollugo cerviana; Ser; Aizoqceae
இதன் மருத்துவக் குணங்களைப் பார்ப்போம். பற்பாடகத்தை பாலில் அரைத்துத் தடவிக் குளித்து வரக் கண் பிரகாசிக்கும். உடலிலுள்ள துர்நாற்றம் நீங்கி, உடல் சூடு தணியும்.
பற்பாடகம், கண்டங் கத்திரி, ஆடாதொடை, சுக்கு, விஷ்ணு காந்தி வகைக்கு 40 கிராம் எடுத்து ஒன்றிரண்டாக இடித்து ஒரு லிட்டர் நீரில் போட்டு கால் லிட்டராகச் சுண்டக் காய்ச்சி வடிகட்டி தினமும் 4 வேளை 50 மில்லியளவாக 3 நாள் குடிக்க காய்ச்சல் குணமாகும்.
பற்பாடகம், நிலவேம்பு, சுக்கு, சீரகம், அதிமதுரம் வகைக்கு 10 கிராம் எடுத்து 2 லிட்டர் நீரில் போட்டு அரை லிட்டராக சுண்டக் காய்ச்சி வடிகட்டி தினமும் 6 வேளை 50 மில்லியளவு குடித்து வர நச்சுக் காய்ச்சல் குணமாகும்.
பற்பாடகம், மரம்பட்டை, கோரைக்கிழங்கு, இலவம்பிசின், கஞ்சாங்கோரை, வெட்டி வேர், சுக்கு, கொத்தமல்லி வகைக்கு 5 கிராம் இடித்துப் பொடியாக்கி கலந்து 1 லிட்டர் நீரில் போட்டு கால் லிட்டராக வற்றக் காய்ச்சி வடிகட்டி 4 வேளையாக 50 மில்லியளவு குடித்துவர பேதியுடன் கூடிய நச்சுக் காய்ச்சல் குணமாகும்.
பற்பாடகம், அதி மதுரம், பேய்ப்புடல், சீந்தில் கொடி, சீந்தில் வேர், கொடுப்பை வேர், கோரைக் கிழங்கு, சுக்கு, கொத்தமல்லி வகைக்கு 10 கிராம் எடுத்து இடித்து 2 லிட்டர் நீரில் போட்டு அரை அல்லது கால் லிட்டராக சுண்டக் காய்ச்சி வடிகட்டி சிறிது தேன் கலந்து 30 மில்லியளவாக 3 வேளைக்கு 3 நாள்களுக்கு குடித்து வர எந்தவிதமான காய்ச்சலும் குணமாகும். இது ஒரு நாள் விட்டு ஒரு நாள் வருகின்ற காய்ச்சலுக்கு மிகச் சிறந்த மருந்தாகும்.
பற்பாடகத்தை அரைத்து நெல்லிக்காயளவு எடுத்து 1 டம்ளர் பாலுடன் கலந்து 2 வேளை சாப்பிட்டு வர வெட்டை, மேகம், எரிச்சல் உபாதைகள் குணமாகும்.
பற்பாடகத்தை கைப்பிடியளவு எடுத்து அரை லிட்டர் நீரில் போட்டு 200 மில்லியாக வற்றக் காய்ச்சி வடிகட்டி குடிக்க காய்ச்சல் தணியும். மேலும் இது சூதக அழுக்கை வெளிப்படுத்தும்.
பற்பாடகத்தின் வேரை 200 கிராம் எடுத்து இடித்து 500 மில்லி ஆமணக்கு எண்ணெயில் போட்டு பதமாகக் காய்ச்சி வடிகட்டி, கீல் வாயு வீக்கங்களுக்கு தடவி வர வீக்கம் தணியும்.
பற்பாடகத்தின் வேரை நீரில் ஊறவைத்து 1 டம்ளர் அளவு குடிக்க நீர் எரிச்சல், கண் எரிச்சல் நீங்கும். பற்பாடகத்தின் வேரை பால் விட்டு அரைத்து தலைக்குத் தடவி சிறிது நேரம் கழித்து குளித்து வர கண் எரிச்சல் நீங்கிக் கண்கள் குளிர்ச்சி அடையும்.