கடிதங்கள் | காலச்சுவடு
கே. கணேசன்
கோயம்புத்தூர் – 27
சக்கரியாவின் ‘மாயாவித் திருடர்கள்’ என்னும் கட்டுரை குறித்து:
கேரளாவில் மார்க்சிஸ்டுகள் அம்மாநில மக்களை மூளைச்சலவை செய்துவைத்திருக்கிறார்கள். பிளாச்சி மடையிலுள்ள கொக்கோகோலோ மட்டுமல்ல, இன்னும் எத்தனையோ தொழில் நிறுவனங்கள் மார்க்சிஸ்டுகளால் கேரளத்தை விட்டு ஓடிவிட்டன.
- கெல்ட்ரான்,
- ரேயன்ஸ் மில்,
- புனலூர் காகித ஆலை,
- அலகப்பபுரம் டெக்ஸ்டைல்ஸ்,
- அப்போலோ டயர் தொழிற்சாலை
ஆகிய அனைத்தும் மூடப்படுவதற்குக் காரணமாயிருந்தவர்கள், தம்மை முற்போக்காளர்கள் என்று கூறிக்கொள்ளும் மார்க்சிஸ்டுகளே. கேரளாவைச் சேர்ந்தவர்கள் மூளை உழைப்பாளிகளாகவும் உடல் உழைப்பாளிகளாகவும் மற்ற மாநிலங்களுக்கும் அரபு நாடுகள் போன்ற வெளிநாடுகளுக்கும் செல்லக் காரணகர்த்தாக்கள் மார்க்சிஸ்டுகளே.கேரளாவில் மலப்புரம் மாவட்டம் பொன்னானி என்னும் ஊரின் அருகேயுள்ள சம்றவட்டம் என்ற இடத்தில் பாரத புழா அரபிக்கடலில் கலக்கும் இடத்தில் தண்ணீரைத் தேக்கிவைக்கத் தடுப்பணையும் அதன்மேல் வாகனங்கள் செல்ல ஒரு பாலமும் கட்டத் திட்டமிட்டுக் கேரளாவில் மூன்று முதல்வர்கள் கடந்த 18 ஆண்டுகளில் மூன்று முறை கால்கோள் விழா நடத்தினார்கள். அத்திட்டத்தை என்ன காரணத்தினாலோ கைவிட்டார்கள்.
அந்தப் பாலம் அங்குக் கட்டப்பட்டால் மலப்புரம், பாலக்காடு, கோழிக்கோடு ஆகிய மூன்று மாவட்டங்களில் குடிநீர் தேவையும் நிறைவேறும் விவசாயம் செழிக்கும் வெயில் காலங்களில் நிலத்தடி நீரும் குறையாது. இது அப்பகுதி மக்களின் நீண்டகாலக் கோரிக்கை. இந்தத் திட்டத்தை நிறைவேற்றாமல் மார்க்சிஸ்டுகள் ஏமாற்றுகிறார்கள்.
முல்லைப் பெரியாறு அணையின் நீர்தேக்கும் அளவை உயர்த்தினால் அணை உடைந்து ஐந்து மாவட்டங்கள் நீரில் மூழ்கிவிடும் என்று வெற்றுக் கூச்சல் போடுகிறார்கள். 4 டி.எம்.சி. தண்ணீரால் 5 மாவட்டங்கள் எப்படித் தண்ணீரில் மூழ்கும்?
ஒரு வேளை மார்க்சிஸ்டுகள் கூறியபடியே நடந்தாலும், அந்த நீர் 70 டி.எம்.சி. கொள்ளளவு கொண்ட இடுக்கி அணைக்கு அல்லவா சென்றுவிடும்? கேரள மாவட்டங்கள் என்ன பூந்தொட்டிகளா, நீரில் மூழ்க? அப்படியிருக்கக் காவிரி நதிநீர்த் தீர்ப்பாயம் கேரளாவிற்கு 30 டி.எம்.சி. வழங்கத் தீர்ப்பு கூறியுள்ளது.
எந்த ஆயக்கட்டு வசதியும் இல்லாமல் 30 டி.எம்.சி.யை எங்குத் தேக்குவார்கள்? அதுவுமில்லாமல் 30 டி.எம்.சி. நீர் தங்களது மாநிலத்திற்குப் போதாது என்றும் மேலும் தண்ணீர் விட வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தை அணுகியிருக்கிறார்கள். இந்த 30 டி.எம்.சி. நீரால் கேரளா மூழ்காதா? மார்க்சிஸ்டுகள் முன்னுக்குப் பின் முரணான அணுகுமுறையைப் பின்பற்றுகிறார்கள்.
மதுரை ரயில்வே கோட்டத்தில் இருந்த திருவனந்தபுரத்தைத் தனிக் கோட்டமாக்கியபோது தமிழ்நாட்டில் எந்தப் போராட்டமும் நடைபெறவில்லை. ஆனால், சேலம் கோட்டம் உருவாக்கப்பட்டபோது மார்க்சிஸ்டு தொழிற்சங்கத்தினர் அம்மாநில மக்களைத் தேவையில்லாமல் தூண்டிவிட்டார்கள்.
கேரளாவில் உள்ள குருவாயூரிலிருந்து தானூர் என்னும் இடத்திற்குப் புதிய ரயில் பாதை அமைக்கக் கடந்த ரயில்வே பட்ஜெட்டில் 2 கோடி நிதி ஒதுக்கீடு செய்து நிலத்தைக் கையகப்படுத்தாமல், அத்திட்டத்திற்கு முட்டுக்கட்டை போட்டுவருகிறார்கள் மார்க்சிஸ்டுகள்.
திருவனந்தபுரம் அருகே விழிஞம் என்னும் இடத்தில் அதிநவீனத் துறை முகம் அமைக்கப் பல வெளிநாட்டுக் கம்பெனிகள் முயன்றன. ஆனால், மார்க்சிஸ்டு அரசு அதற்கு ஒத்துழைக்கவில்லை. எர்ணாகுளத்தை ஸ்மார்ட் சிட்டி ஆக்க மத்திய அரசு திட்டமிட்டது. அதற்கும் மார்க்சிஸ்டுகள் எதிர்ப்பு தெரிவித்துத் திட்டத்தைக் கிடப்பில் போட்டிருக்கிறார்கள்.
கேரளா பொருளாதார வளர்ச்சி பெற்றுச் சிறந்த மாநிலமாக உருவெடுத்தால், மார்க்சிஸ்டுகள் அம்மாநில மக்களை ஏமாற்ற முடியாது என்ற ஒரு காரணம்தான். இந்த ஆண்டு மார்ச் 14 அன்று மேற்கு வங்கம் நந்தி கிராமத்தில் துப்பாக்கிச் சூடு நடந்து 14 பேர் சுட்டுத் தள்ளப்பட்டார்கள். மார்ச் 14 நினைவுகூரத்தக்க தினம்தான்.
பொதுவுடமைச் சிந்தனையாளர் கார்ல் மார்க்ஸ் நினைவு தினம் மார்ச் 14. மார்க்சிஸ்டுகளின் அந்நிய நாட்டு அடி வருடித்தனத்தையும் சந்தர்ப்பவாதத்தையும் வரலாறும் மன்னிக்காது என்பது திண்ணம்.
கே. கணேசன்
கோயம்புத்தூர் – 27
—————————————————————————
தமிழகத்தின் உரிமைப் பிரச்னைகள்
பா. ஜெகதீசன்
தமிழகமும், கேரளமும் கடந்த பல தலைமுறைகளாகவே அண்ணன் – தம்பியைப் போன்ற உறவுடன் பாசத்துடன் பழகி வந்தன. ஆனால், முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்துவது தொடர்பாக இரு மாநிலங்களுக்கு இடையே சமீபகாலத்தில் எழுந்த பிரச்னை விசுவரூபம் எடுத்து, இரு தரப்பினரையும் பகையாளிகளைப் போல பேச வைத்து விட்டது.
முல்லைப் பெரியாறு அணைப் பிரச்னையைப் போல, மேலும் பல பிரச்னைகளில் இரு மாநிலங்களுக்கு இடையே “இழுபறி’யான ரீதியில் தொடர்ந்து பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வருகின்றன.
உதாரணமாக, பரம்பிக்குளம் -ஆழியாறு ஒப்பந்தம் தொடர்பான பிரச்னை 1988-லிருந்து நீடித்து வருகிறது. 6.11.2004-ல் சென்னை தலைமைச் செயலகத்தில் அப்போதைய தமிழக முதல்வர் ஜெயலலிதாவும், கேரள முதல்வர் உம்மன் சாண்டியும் ஆலோசனை நடத்தினர். அதன் பின்னர் இரு மாநிலங்களும் பேச்சு வார்த்தையை தொடருகின்றன.
கஜினி முகமது தொடர்ந்து படை எடுத்து வந்த வரலாற்றை முறியடிக்கும் வகையில், இப்பிரச்னைக்குத் தீர்வு காண இதுவரை சுமார் 20 முறைக்கும் மேல் தொடர்ந்து பேச்சுவார்த்தைகள் நடந்துள்ளன.
ஆனைமலையாறு, நீராறு, சோலையாறு, பரம்பிக்குளம், பாலாறு, ஆழியாறு ஆகியவற்றிலும், இவற்றில் இணையும் ஆறுகளிலும் உள்ள நீரை மின்சாரம் தயாரிக்கவும், பாசனம் மற்றும் குடிநீருக்குப் பயன்படுத்தவும் 9.11.1958 முதல் செயல்படக் கூடிய ஒப்பந்தம் இரு மாநிலங்களுக்கும் இடையே கையெழுத்தானது.
9.11.1988-ல் இந்த ஒப்பந்தம் மறு ஆய்வு செய்யப்பட்டு, புதுப்பிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அப்படிச் செய்யப்படவில்லை.
அதேபோல, பாண்டியாறு -புன்னம்புழா நதிகள் தமிழகத்தில் நீலகிரி மலையின் உயர்ந்த சிகரங்களில் தோன்றி, கூடலூருக்கு 5 கி.மீ. மேற்கே இணைகின்றன. இந்த இணைப்புக்குக் கீழே இந்த நதி புன்னம்புழா என்றே அழைக்கப்படுகிறது. கேரளத்தில் நீலாம்பூர் அருகே சாளியாற்றில் கலந்து, பேபூர் என்கிற இடத்தில் அரபுக் கடலில் இந்த நதி சங்கமம் ஆகிறது.
இந்தக் குறிப்பிட்ட திட்டத்தின் கீழ் கிடைக்கும் 14டி.எம்.சி. நீரில் குறைந்தபட்சம் 7 டி.எம்.சி.யையாவது தன் பக்கம் திருப்பி விட வேண்டும் என்று தமிழகம் விரும்புகிறது. மேற்கு நோக்கிப் பாயும் இந்த ஆற்றிலிருந்து கிழக்கு நோக்கி தண்ணீரைத் திருப்ப கேரளத்தின் ஒப்புதலைப் பெறும் முயற்சியைத் தமிழகம் மேற்கொண்டுள்ளது.
புன்னம்புழா திட்டத்தில் கிடைக்கும் தண்ணீரை பவானி ஆற்றின் கிளை ஆறான மோயாற்றில் இணைத்து, கோவை மாவட்ட விவசாயிகளுக்கு உதவ தமிழக அரசு திட்டமிட்டு உள்ளது. ஆனால், இந்தக் கனவு எப்போது நனவாகும் என்று தெரியவில்லை.
தீபகற்ப நதிகள் இணைப்புத் திட்டத்தின் கீழ் மகாநதி – கோதாவரி – கிருஷ்ணா – பெண்ணாறு – காவிரி – வைப்பாறு நதிகளை இணைப்பதற்கான திட்டத்தை மத்திய அரசு தயாரித்து, அதுதொடர்பான ஆய்வுகளை நடத்தி வருகிறது. கேரளத்தில் மேற்கு நோக்கிப் பாயும் நதிகளின் நீரைத் தமிழகத்துக்குத் திருப்புவது என்பது அந்தத் திட்டத்தின் ஒரு பகுதி.
பம்பா -அச்சன்கோயில் -வைப்பாறு இணைப்புத் திட்டம் என்பது கேரளத்தில் உள்ள பம்பா -அச்சன்கோயில் ஆறுகளின் உபரி நீரைத் தமிழகத்துக்குத் திருப்புவது ஆகும். இந்தத் திட்டத்தினால் சங்கரன்கோவில், கோவில்பட்டி, சிவகிரி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், சாத்தூர், தென்காசி வட்டங்களில் உள்ள 91,400 ஹெக்டேர் (ஒரு ஹெக்டேர் என்பது சுமார் 2.5 ஏக்கர்) நிலங்கள் பாசன வசதி பெறும்.
இந்தத் திட்டத்தின் மூலம் தமிழகத்துக்கு 22 டி.எம்.சி. நீர் கிடைக்கும். பம்பா – அச்சன்கோயில் ஆறுகளில் கிடைக்கும் உபரி நீரில் இது 20 சதவீதம் மட்டுமே.
மேலும் இந்தக் குறிப்பிட்ட திட்டத்தின் மூலம் 500 மெகாவாட் மின்சாரத்தையும் எளிதாக உற்பத்தி செய்ய இயலும்.
ஆனால், இதர திட்டங்களைப் போலவே, இந்தத் திட்டத்தையும் கேரள அரசு ஏற்கவில்லை. தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
எல்லாவற்றுக்கும் முத்தாய்ப்பு வைக்கும் வகையில், கண்ணகி கோயில் பிரச்னை அமைந்துள்ளது.
உத்தமபாளையம் வட்டத்தில் உள்ள வண்ணாத்திப்பாறைக் காடு தமிழகத்தைச் சேர்ந்தது. அந்தப் பகுதியில்தான் கண்ணகி கோயில் உள்ளது.
ஆனால், கண்ணகி கோயில் தனது எல்லைக்குள் உள்ளதாக கேரள அரசு கூறி வருகிறது. அத்துடன், அங்கு வழிபாடு நடத்தச் செல்லும் தமிழக மக்களை கேரள அரசு தடுத்து, பிரச்னைகளை ஏற்படுத்தி வருகிறது.
தமிழகத்துக்கும், கேரளத்துக்கும் இடையே உள்ள எல்லையின் நீளம் சுமார் 830 கி.மீ. இதில் சுமார் 250 கி.மீ. தூரத்துக்குத்தான் இரு மாநிலங்களின் அதிகாரிகளும் ஆய்வு செய்து, எல்லைகளை நிர்ணயித்துள்ளனர்.
கேரள அதிகாரிகள் சரியாக ஒத்துழைக்காததால், எஞ்சிய தூரத்துக்கு எல்லையை வரையறுக்க முடியாத நிலை உள்ளது. அதைப் பயன்படுத்தி ஆங்காங்கே தமிழகத்தின் பகுதிகளைத் தனது பகுதிகள் என்று கேரளம் கூறி போலியாக உரிமை கொண்டாடி வருகிறது.
கேரளத்துடன் நல்லுறவை வளர்க்கவே எப்போதும் தமிழகம் விரும்புகிறது. ஆனால், அந்த விருப்பம் ஈடேறத் தடைகற்களாக இத்தனை பிரச்னைகள் அமைந்துள்ளன. இந்தத் தடைகள் தகர்க்கப்பட்டு, நல்லுறவு மேம்பட கேரளத்தின் பெருந்தன்மையான ஒத்துழைப்பு அவசியம்.
———————————————————————————————————————————
முல்லைப் பெரியாறும்-கேரளமும்!
என். சுரேஷ்குமார்
திருநெல்வேலி மாவட்டம், சுந்தரமலையில் உள்ள சிவகிரி சிகரத்தில் தோன்றும் பெரியாறு, பெருந்துறையாறு, சின்ன ஆறு, சிறு ஆறு, சிறுதோனி ஆறு, இடமலையாறு, முல்லையாறு ஆகியவற்றை சேர்த்துக் கொண்டு சுமார் 300 கி.மீ. தூரம் வடமேற்குத் திசையில் பாய்ந்து இறுதியில் கேரள மாநிலம், எர்ணாகுளம் அருகே கடலில் கலக்கிறது.
பெரியாறு தமிழக எல்லைக்குள் 56 கி.மீ. தூரமும் கேரள எல்லைக்குள் 244 கி.மீ. தூரமும் பாய்கிறது.
மக்களின் குடிநீர் தேவைக்கும் பாசனத்திற்காகவும் பெரியாறு திட்டத்திற்கு முதன்முதலில் செயல்வடிவம் கொடுத்தது ஆங்கிலேயர்கள்.
அதன்படி, 1808-ம் ஆண்டு ஜேம்ஸ் கால்டுவெல் என்பவர் அணைகட்டும் திட்டத்தை ஆய்வு செய்து 1862-ல் 162 அடி உயர அணை கட்டும் திட்டம் மேஜர் ரைவீஸ் மற்றும் மேஜர் பேயின் ஆகியோரால் உருவாக்கப்பட்டது.
பின்னர் 1882-ம் ஆண்டு 175 அடி உயரத்தில் அணை கட்ட பென்னி குயிக் நியமிக்கப்பட்டார். அதற்கு திட்ட மதிப்பீடு ரூ.65 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டு நிதி ஒதுக்கப்பட்டது.
அதன்படி முல்லை ஆறும், பெரியாறும் இணையும் இடத்திற்கு அருகே அணை கட்ட முடிவெடுக்கப்பட்டது. அணை கட்டப்படவிருந்த பகுதியான தேவிகுளம், பீர்மேடு போன்ற பகுதிகள் தமிழர் வாழும் பகுதிகளாகும். தற்போதும் அப்பகுதியில் வசிப்போர் பெரும்பாலும் தமிழர்களே.
இருப்பினும் அணை கட்டப்படவுள்ள பகுதி தமிழ்நாட்டு பகுதியா, திருவிதாங்கூர் சமஸ்தான பகுதியா என்பதில் தெளிவில்லாத ஆங்கிலேய அரசு, அணை கட்டப்பட உள்ள பகுதி திருவிதாங்கூர் சமஸ்தானப் பகுதி எனக் கொண்டு, 1886-ம் ஆண்டு திருவிதாங்கூர் சமஸ்தானத்துடன் 999 ஆண்டுக்கான ஒப்பந்தத்தை செய்தது.
மேலும், இந்த அணை நீரானது தமிழகத்திற்கு காலகாலத்திற்கும் கிடைக்க வேண்டும் என்பதற்காக ஆங்கிலேய அரசு 999 ஆண்டு ஒப்பந்தத்தை திருவிதாங்கூர் சமஸ்தானத்துடன் செய்து கொண்டது.
அதன்படி 1241 அடி நீளத்தில் மிகப்பெரிய அளவில் கட்டப்பட்ட முல்லைப் பெரியாறு அணையின் மொத்த உயரம் அடித்தளத்திலிருந்து 172 அடி.
இதில் நீரைத் தேக்கும் உயரம் 155 அடி. ஆனால், திடீரென வரும் வெள்ளத்தை சமாளிக்கும் வகையில் 152 அடி வரை மட்டுமே நீர் தேக்கப்பட்டது.
இந்த அணையில் தேங்கும் நீரை, கிழக்குத் திசையில் 5765 அடி நீளமும், 60 அடி ஆழமும், 80 அடி அகலமும் கொண்ட பெரிய கால்வாய் மூலம் கொண்டுவந்து பின்பு அந்த நீரை மலையைக் குடைந்து உருவாக்கப்பட்ட 5345 அடி நீளமும் 15 அடி அகலமும் கொண்ட சுரங்கத்தின் மூலம் தமிழகத்திற்கு கொண்டு வரப்படுகிறது.
அதற்குப் பிறகு 78 கி.மீ. நீளமுள்ள பெரியாறு கால்வாய் மூலம் வைகை ஆற்றுடன் இணைக்கப்படுகிறது. அணையிலிருந்து மேற்குறிப்பிட்ட சுரங்கத்தின் வழியாக வினாடிக்கு 2000 கன அடி அளவு தண்ணீரை மட்டுமே வெளியே எடுக்க முடியும்.
மேலும், 152 அடி உயரமுள்ள அணையில் 104 அடிவரை தேங்கும் நீரைத்தான் எடுக்க முடியும்.
பின்னர் முல்லைப் பெரியாறு அணை கட்டப்பட்டு அந்த அணையின் நீர் தமிழகத்திற்கு கொண்டு வரப்பட்டது.
இதன்பின்னர்தான் கேரள அரசு முல்லைப்பெரியாறு அணையை முழுவதும் கேரள அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முயற்சி மேற்கொண்டது.
அதன்படி, 1956-ம் ஆண்டு மொழிவழி மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது தமிழர்கள் வாழ்ந்து வந்த தேவிகுளம், பீர்மேடு போன்ற பகுதிகள் அப்பகுதி மக்களின் விருப்பத்திற்கு மாறாக கேரளத்தோடு இணைக்கப்பட்டன.
1978-ம் ஆண்டு அணை பலவீனமாகிவிட்டது என்று கேரள அரசு பொய் செய்தியைப் பரப்ப ஆரம்பித்தது. அதன்மூலம் அணையின் நீர்மட்டம் 145 அடியாக குறைக்கப்பட்டது.
பின்னர் அணை பலப்படுத்துவது தொடர்பாக கேரள- தமிழக அரசுகளுக்கிடையே ஒப்பந்தம் செய்யப்பட்டது. அதன்படி, அணை பலப்படுத்தப்படும்வரை அணையின் நீர்மட்டம் 136 அடியாக குறைக்கப்பட்டது.
இதற்கிடையே பெரியாறு நீர்பிடிப்புப் பகுதிகளில் கெவி அணை, ஆணைத்தோடு அணை, கட்கி அணை, பம்பா அணை போன்ற அணைகளை கட்டியெழுப்பி முல்லைப் பெரியாறு அணைக்கு வரும் நீர்வரத்தை கேரளம் குறைத்தது.
இதனால் ஒரு போகம் சாகுபடி செய்த சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டப் பகுதிகளில் சுமார் 40,000 ஏக்கர் நிலங்கள் தரிசாக மாறின.
1979 ஆம் ஆண்டு மத்திய நீர்வள ஆணையத்தின் முன்னிலையில் இரு மாநில அரசுகளும் செய்துகொண்ட ஒப்பந்தப்படி, முல்லைப் பெரியாறு அணையை பலப்படுத்தும் பணிகளை 1985-ம் ஆண்டே முடித்த பின்பும் அணையின் நீர்மட்டத்தை உயர்த்த கேரள அரசு மறுத்தது.
இதனால் இப்பிரச்னையை தமிழக விவசாயிகள் உச்ச நீதிமன்றத்திற்கு எடுத்துச் சென்றனர்.
மத்திய நீர்வள ஆணையம், மத்திய மண் விசையியல் ஆராய்ச்சி நிலையம் ஆகியவற்றை சார்ந்த நிபுணர்கள் அணையைப் பார்வையிட்ட பிறகு, அணையை பலப்படுத்தும் பணிகள் முடிந்துள்ளன என்று சான்று வழங்கியது. மேலும், அணையின் நீர்மட்டத்தை உயர்த்தக் கூடாது என கேரள அரசு சொன்ன காரணங்கள் பொய்யானவை என்று ஆணையம் தெளிவாகக் கூறியது.
அதன் அடிப்படையில் 2006-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முல்லைப் பெரியாறு அணையில் 142 அடிவரை நீரை தேக்கலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. ஆனாலும், கேரள அரசு 1979-ம் ஆண்டு தமிழகத்தோடு செய்த ஒப்பந்தத்தை மீறியதோடு, நிபுணர் குழு அறிக்கையையும், உச்சநீதிமன்ற தீர்ப்பையும் உதாசீனப்படுத்தியது.
தீர்ப்புக்கு கட்டுப்பட மறுத்து அதே ஆண்டு மார்ச் மாதத்தில் கேரள அரசு நீர்ப்பாசனம், நீர்வளம் பாதுகாப்பு சட்டத்தை திருத்தி பெரியாறு அணையையும் அதன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தது.
இதன்மூலம் கேரள அரசு மேற்கொள்ளும் ஒரு தலைப்பட்சமான முடிவு நாட்டின் ஒற்றுமைக்கும் ஒருமைப்பாட்டிற்கும் எதிராக விடப்பட்டிருக்கும் அறைகூவல்.
மேலும், தற்போது பழைய அணைக்கு மாற்றாக புதிய அணையை கட்டப்போவதாக கேரள அரசு அறிவித்துள்ளது. அவ்வாறு கேரள அரசு கட்டினால் தமிழகத்தின் உரிமை முழுமையாகப் பறிபோகும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.