சர்வதேச மனித உரிமைகள் தினம்: இலங்கையில் நாடுதழுவிய நிகழ்ச்சிகள்
சர்வதேச மனித உரிமைகள் தினத்தினை முன்னிட்டு இன்று திங்கட்கிழமை இலங்கையில் நாடளாவிய ரீதியில் பல்வேறு கூட்டங்களும், கருத்தரங்குகளும், கண்டன-கவனயீர்ப்பு ஊர்வலங்களும் நடந்தன.
மேலக மக்கள் முண்ணணி தலைமையிலான மக்கள் கண்காணிப்புக் குழு ஒழுங்கு செய்திருந்த ஊர்வலம் ஒன்றும் இன்று கொழும்பில் இடம்பெற்றிருக்கிறது.
கடத்தப்பட்டு காணாமல்போனோரின் உறவினர்கள், தடுப்புச் சிறைகளிலும், பொலிஸ் நிலையங்களிலும் அண்மையில் கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டிருப்போரின் உறவினர்களும், மனித உரிமை ஆர்வலர்களும் இதில் கலந்துகொண்டனர்.
இலங்கை அரசாங்கத்தின் சார்பில் அனர்த்த முகாமைத்துவம் மற்றும் மனித உரிமைகள் அமைச்சு, அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் ஏற்பாட்டில், அமைச்சர் மஹிந்த சமரசிங்க தலைமையில் இன்று சிறிலங்கா பவுண்டேஷன் இன்ஸ்டிடியூட்டில் நடத்தப்பட்ட நிகழ்வில் ஐ.நா அமைப்பின் பிரதிநிதிகள், இராஜதந்திரிகள் மற்றும் விசேட அதிதிகள் கலந்துகொண்டனர்.
![]() |
![]() |
இதில் பிரதம நீதியரசர் சரத் என்.சில்வா பிரதம அதிதியாகக் கலந்துகொண்டிருக்கிறார்.
இங்கு உரையாற்றியுள்ள அனர்த்த முகாமைத்துவம் மற்றும் மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க இலங்கை அரசாங்கத்தின் அரசியலமைப்பில் மூன்றாம், நான்காம் சரத்துக்களில் மனித உரிமைகளின் சுதந்திரம் குறித்து குறிப்பாக தெரிவிக்கப்பட்டிருப்பது முக்கியத்துவம் வாய்ந்தது என்றும், சுதந்திரம், பக்கச்சார்பின்மை, நீதித்துறையின் ஆளுமை என்பன மனித உரிமைகள் பேணப்படுவதற்கு மிகவும் அவசியமான அம்சங்கள் என்று தெரிவித்தார்.
இங்கு உரையாற்றிய பிரதம நீதியரசர் சரத் என்.சில்வா, போரினால் சமாதானத்தை ஏற்படுத்த முடியும் என்று கூறப்படுவதையும், போரினால் மனித உரிமைகளை ஏற்படுத்த முடியும் என்று கூறப்படுவதையும் நிராகரித்துப் பேசினார்.
இதற்கிடையில் இங்கே லண்டனிலும் பிரித்தானிய நாடாளுமன்றத்துக்கு முன்பாக இலங்கைத் தமிழர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது. தமிழர் ஒருங்கிணைப்பு மையம் என்னும் அமைப்பு இதனை ஏற்பாடு செய்திருந்தது.
மட்டக்களப்பில் இடம்பெயர்ந்த மக்களின் பிரச்சினைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்ட ஊர்வலம்
![]() |
![]() |
இலங்கையின் கிழக்கே மட்டக்களப்பில், யுத்த சூழ்நிழல் காரணமாக இடம்பெயர்ந்தவர்கள் மற்றும் மீள்குடியமர்த்தப்பட்டவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை வெளியிடுத்தும் வகையில் திங்கட்கிழமை பேரணி ஒன்று நடந்துள்ளது.
இந்தப் பேரணிகளிலும், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொதுக் கூட்டத்திலும், பெரும் எண்ணிக்கையினர் கலந்து கொண்டதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இடம்பெயர்ந்திருந்த மற்றும் மீள்குடியமர்த்தப்பட்டவர்களின் அடிப்படை உரிமைகளை வலியுறுத்தும் வகையிலும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களை விமர்சிக்கும் வகையிலும் பேரணிகளில் கலந்து கொண்டவர்கள் வாசக அட்டைகளை ஏந்திச் சென்றதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
பேரணி சென்ற வீதிகளில், வழமைக்கு மாறாக சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தது எனவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பொதுக் கூட்டத்தில் ஈ.பி.டி.பி., பிளாட், ஈ.பி.ஆர்.எல்.எஃப்-பத்மநாபா அணி பிரதிநிதிகளும் பங்குபெற்றனர்.
அவர்கள் மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் செயல்பாட்டினையும் விமர்சித்து உரையாற்றினர்.
கூட்ட முடிவில், மக்களின் தேவைகளை வலியுறுத்தி ஜனாதிபதியிடம் கையளிக்கும் முகமாக ஒரு மனு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் மகேசன் அவர்களிம் கையளிக்கப்பட்டது.
வடக்கு இலங்கையில் வன்முறை வலுக்கிறது
இலங்கையின் வடக்கே ஞாயிறன்றும் திங்களன்றும் நடைபெற்ற மோதல்களில், 26 விடுதலைப் புலிகளும் ஒரு இராணுவச் சிப்பாயும் கொல்லப்பட்டுள்ளதாகவும், 10 இராணுவ வீரர்கள் காயமடைந்ததுள்ளதாகவும் இலங்கை அரசின் தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் தெரிவித்துள்ளது.
மணலாறு பகுதியில் தமது பிரதேசத்துக்குள் முன்னேற முயன்ற இராணுவத்தினரின் முயற்சிகள் முறியடிக்கப்பட்டுள்ளதாக விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்.
மன்னார் பெரியதம்பனனைப் பகுதியில், நேற்று முந்தினம் கொல்லப்பபட்ட விடுதலைப் புலிகளில், நல்ல நிலையில் உள்ள ஆறு சடலங்களை சர்வதேச செஞ்சிலுவை சங்கம் மூலமாக அவர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை கிழக்குப் பகுதியில் இடம்பெற்ற வன்செயல்களில், மட்டக்களப்பு மாவட்டம் பிள்ளையாரடியில், ஞாயிறு இரவு இரண்டு யுத்த அகதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுளனர் எனவும், துப்பாக்கிச் சூட்டுடன் ஒரு சடலம் கண்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.