Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Paavannan’ Category

Paavannan’s Book Review of Haruki Murakami’s Translated works in Tamil by Vamsi Books

Posted by Snapjudge மேல் ஜூலை 6, 2007

சுதந்திரமும் சுதந்திரம் துரத்தலும் – பாவண்ணன் :: புத்தக விமர்சனம் – கவிதை அனுபவம்
01.07.07
குமுதம் தீராநதி

கடந்த சில ஆண்டுகளாக மொழிபெயர்ப்புத்துறையில் ஆர்வமுடன் இயங்கிவரும் இளைஞர்கள் ஜி. குப்புசாமி, ராஜகோபால், செழியன் ஆகியோர். இம்மூவருடைய மொழிபெயர்ப்பில் ஆறு சிறுகதைகள் இத்தொகுப்பில் உள்ளன. இவை அனைத்தும் ஹாருகி முரகாமி என்னும் ஜப்பானிய எழுத்தாளர் எழுதியவை. ஆங்கிலத்தில் வெளிவந்திருக்கும் முரகாமியின் மூன்று வெவ்வேறு தொகுப்புகளிலிருந்து இக்கதைகளைத் தேர்தெடுத்திருக்கிறார்கள் இவர்கள். ஒவ்வொரு சிறுகதையும் ஒவ்வொரு எடுத்துரைப்பு முறையைக் கொண்டதாக விளங்குகிறது. முற்றிலும் யதார்த்த முறையில் தொடங்கி முற்றிலும் புனைவுகளும் கற்பனைகளும் மிகுந்த உலகுக்குத் தளமாற்றம் கொள்ளும் கதைகளும் இருக்கின்றன. யதார்த்தத் தளத்துக்கும் கற்பனைத் தளத்துக்கும் மாறிமாறி பயணிக்கிற கதைகளும் உண்டு. எந்தவிதமான விசேஷ முயற்சிகளும் இல்லாமல் இரண்டுவகையான உலகங்களும் ஒன்றோடொன்று பொருத்தமாக இணைந்து கச்சிதமாகப் பிரிகின்றன. இதுவே இக்கதைகளின் முக்கியச் சிறப்பு. சிறுகதைகளின் பல்வேறு சாத்தியப் பாடுகளை எழுதிப் பார்த்துக்கொண்டிருக்கும் படைப்பாளிகள் நிறைந்த தமிழ்ச்சூழலில் இக்கதைகளுக்கு உற்சாகமான வரவேற்பு கிடைக்கக்கூடும்.

முரகாமியை ஒரு பின் நவீனத்துவ எழுத்தாளராக அறிமுகப்படுத்துகிறார் தொகுப்புக்கு முன்னுரை வழங்கியிருக்கும் சுகுமாரன். கலாச்சாரத்துக் குறைவுக்கு இலக்கான ஜப்பானிய உலகமும் வாழ்வும் இவருடைய கதைகளில் சித்திரிக்கப்படுவதாகவும் மரபுசார்ந்த ஒழுக்கங்களிலிருந்தும் கட்டுப்பாடுகளிலிருந்தும் விடுபடும் முயற்சிகளில் இறங்குபவர்களாகவும் அதனால் எழக்கூடிய புதிய சங்கடங்களால் திணறுகிறவர்களாகவும் முரகாமியின் கதைமாந்தர்கள் இருப்பதாகவும் கூடுதலான தகவலைப் பகிர்ந்துகொள்கிறார் சுகுமாரன். தொகுதியைப் படித்துமுடித்து கதைகளை மனத்துக்குள் அசைபோட்டுப் பார்க்கும்போது, முரகாமியின் கதைகளை உரசிப் பார்க்கும் உரைகல்லாக இந்த வாசகம் எவ்வளவு துல்லியமாக எழுதப்பட்டிருக்கிறது என்று சுகுமாரன்மீது ஒருவித பாராட்டுணர்வு எழுகிறது.

ஆறு கதைகளில் முக்கியமான சிறுகதைகளாக, ‘குடும்ப விவகாரம்’ கதையைச் சொல்லவேண்டும். இக்கதையில் இடம் பெறும் அண்ணன், தங்கை இருவரும் முக்கியமான கதைப்பாத்திரங்கள். பிறந்த ஊரிலிருந்து தொலைவான நகரத்தில் வாடகைக்கு ஒரு வீட்டை எடுத்து ஆளுக்கொரு அறையில் தங்கியிருக்கிறார்கள் அவர்கள். ஆளுக்கொரு சமயத்தில் வெளியே வேலைக்குச் சென்று திரும்பி, வார இறுதியில் மட்டும் பார்த்துப் பேசிக் கொள்கிறார்கள். இருவருக்குமிடையே உள்ள நெருக்கத்தையும், விலகலையும், ஆதங்கத்தையும், அன்பையும், நுட்பமாக விவரித்த படிச் செல்கிறது கதை

கல்விச் சுதந்திரம், வேலைச் சுதந்திரம், பாலியல் சுதந்திரம் என எல்லா வகையான சுதந்திரங்களிலும் திளைக்கிறவர்கள் முழுச் சுதந்திரமடைந்தவர்களாகவும் ஆனந்தமானவர்களாகவும்தானே இருக்கவேண்டும் என்பது நம் எண்ணம். கட்டற்ற விடுதலை என்பது இந்தப் புள்ளியை நோக்கி மானுட குலத்தை அழைத்துச் செல்லும் ஒன்றாகவே இருக்கும் என்பது நம் நம்பிக்கை. நம் எண்ணத்துக்கும், நம்பிக்கைக்கும் மாறாக, இந்தச் சுதந்திரங்கள் எதுவுமே மனித மனத்தின் ஆழத்தில் உறங்கும் இச்சையுணர்வையோ அல்லது வெறுப்புணர்ச்சியையோ துளியும் மாற்றவில்லை என்பதை நாம உணரும் வகையில் கதையைக் கட்டியமைக்கிறார் முரகாமி.

இயந்திரங்கள் தயாரிக்கும் நிறுவனத்தில் மக்கள் தொடர்புப் பிரிவில் பணியாற்றுகிறான் அண்ணன். இதுவரை உத்தேசமாக இருபத்தியாறு பெண்களோடு தான் உறங்கியிருப்பதாகக் கணக்குச் சொல்கிறவன். தாயாக இருந்தாலும் சரி, தந்தையாக இருந்தாலும் சரி, மணந்துகொள்ள தங்கையால் தேர்ந்தெடுக்கப்பட்டவனாக இருந்தாலும் சரி, மனதில் பட்டதை சுதந்திரமாக முன் வைக்கத் தயங்காதவன். அவன் தங்கையும் பாலியல் சுதந்திரம் உள்ளவள். இதுவரை இரண்டு பேருடன் உறங்கியிருப்பதாகச் சொல்பவள். தனக்காக சில வேலைகளைத் தன் அண்ணன் செய்ய வேண்டும் என்று கோருபவள். அவளுக்குப் பதினெட்டு வயதாகிறது. அவள் யாரோடு உறங்கினால் என்ன என்ற எண்ணம் கொண்டவனாக இருந்தாலும் தங்கை தன் மனதுக்குப் பிடித்த இளைஞனொருவனைத் திருமணம் செய்து கொள்ளவிருக்கும் விருப்பத்தை முன் மொழிந்ததும் அக்கணத்திலிருந்து அந்த அண்ணனால் அதைத் தாங்கிக் கொள்ள இயலாமல் போய்விடுகிறது. ஏதோ ஒரு பிடிப்பின்மையும் வெறுப்புணர்வும் அவனை வாட்டுகின்றன. புதிய இளைஞனைப் பற்றி ஏதேதோ மாற்று அபிப்பிராயங்கள் சொல்லத் தொடங்குகிறான். அவனது பேச்சுமுறை, பழகும் விதம் என ஏதோ ஒரு குறையைக் கண்டு அறிவிப்பவனாக இருக்கிறான். அவன் வசிக்கும் வீடு சொந்த வீடா, வாடகைவீடா என்று கேட்டறிந்து தாய்க்குத் தகவல் அளிப்பதுகூட அவனுக்குச் சலிப்பான செயலாகத் தோன்றுகிறது.

திடீரென இச்சலிப்பும் வெறுப்பும் ஏன் அவன் மனதில் எழ வேண்டும்? ‘‘அவள் யாரோடு வேண்டுமானாலும் உறங்கிவிட்டு வரட்டுமே, அதைப்பற்றிக் கவலையில்லை’’ என்ற எண்ணம் கொண்டவன் அவன். கைப்பைக்குள் ஆணுறையை வைத்துக் கொண்டு வெளியே செல்ல வேண்டாம் என கிண்டல் செய்யும் அளவுக்கு அவளுடைய சுதந்திரத்தை மதிப்பவன். அப்படிப்பட்டவனை தங்கையின் திருமணத் தேர்வு ஏன் மனக் குலைவை நிகழ்த்த வேண்டும்? தங்கையென்னும் உடைமையுணர்வை உதற இயலாத தவிப்புதான் காரணம். விருந்துக்கு அழைக்கப்பட்ட எதிர்காலக் கணவனுடன் அந்த வீட்டில் தான் எவ்விதமான உறவிலும் ஈடுபடவில்லை என்றும் அந்த அறையில் அந்த இடத்தில் அதைத் தன்னால் செய்யமுடியாது என்றும் சொல்கிறாள் தங்கை. அவளுக்கு ஏன் அப்படிப்பட்ட உணர்வு எழுகிறது? உடலளவில் அங்கே இல்லாத சகோதரனை உணர்வுரீதியாகவும், எண்ணரீதியாகவும் அங்கே இருப்பதாகவோ, கண்காணிப்பதாகவோ அவளை உணரவைப்பது எது? அண்ணனென்னும் உடைமையுணர்வை முற்றிலும் உதற முடியாத சங்கடம்தான் காரணம். குடும்ப அமைப்பின் வழியாக அந்த உடைமையுணர்வு காலம்காலமாக கட்டிக்காக்கப்பட்டு வந்திருக்கிறது. ஒரு கணத்தில் சட்டென அதைத் துறக்க முடிவதில்லை. துறக்க முடியாத அந்தச் சங்கடத்தை முன்வைப்பதாலேயே அது குடும்ப விவகாரமாக மாறுகிறது. இளைஞர்களுக்கு நவீன ஜப்பான் வழங்கியிருக்கிற சுதந்திரங்களுக்கும் அவர்களுடைய மன ஆழத்தில் இன்னும் உறுத்திக் கொண்டிருக்கும் புள்ளிக்கும் உள்ள முரணை அல்லது உறவைத் தொட்டுக் காட்டிவிட்டு மீள்கிறது கதை. ஒன்றாக பீர் அருந்தி தத்தம் மனபாரங்களைப் பேசி இறக்கி வைத்து எடையற்றவர்களாக மாறிய பிறகு அண்ணனும், தங்கையும் தத்தம் அறையை நோக்கித் திரும்பிவிடுவதைப் போல உலகமும் பழைய படி சுதந்திரத்தின் விளிம்புக்கு வந்துவிடுகிறது.

‘ஷினாகவா குரங்கு’ என்னும் இன்னொரு சிறுகதையும் தொகுப்பின் முக்கியக் கதை. நடப்பியல் சொல் முறையிலும் புனைவாக்கச் சொல்முறையிலும் மாறி மாறி முன்வைக்கப்படுகிறது கதை. எல்லாவற்றையும் பசுமையாக நினைவில் வைத்திருக்கும் ஒருத்தியால் தனது சொந்தப் பெயரை நினைவில் வைத்திருக்க முடியாமல் அடிக்கடி மறந்து போகிறது. எவ்வளவு பெரிய துரதிருஷ்டம். அது மிகப் பெரிய பிரச்னையாக வாழ்வில் உருவெடுத்துவிடக் கூடாது என்பதற்காக ஆலோசனை மையத்தை நாடிச் செல்கிறாள் அவள். இப்படி ஒரு பக்கம். ‘‘ஒரு பெயர் என்னைக் கவர்ந்துவிட்டால் அது எனக்குக் கிடைக்க வேண்டும்’’ என்னும் எண்ணத்துடன் நடமாடும் குரங்கு இன்னொரு பக்கம். ஒரு பக்கம் யதார்த்தம். இன்னொரு பக்கம் புனைவு. இரண்டு இழைகளும் குறுக்கும் நெடுக்குமாக ஓட மிக அழகாகவும் நேர்த்தியாகவும் கதையை நெய்து கோண்டு போகிறார் முரகாமி. சுதந்திரத்தின் படிமமாக குரங்கு சித்திரிக்கப்பட்டிருப்பது யோசிக்கத்தக்கது. பல தளங்களைத் தாண்டி வாசகர்கள் தம் எண்ணங்களை விரிவாக்கிக் கொள்ள வழிவகுக்கும் புள்ளி இது. ஒரு பெயருக்காக தேடி அலையும் முயற்சிகளில் அந்தக் குரங்கின் சுதந்திரம் நேசமாக உருமாறுகிறது. நேசத்தின் வலிமையை தன் அனுபவத்தை முன் வைத்தே அது புரிந்து கொள்கிறது.

சுதந்திரத்தைப் பற்றியும் சுதந்திரம் துறத்தலைப் பற்றியும் பல்வேறு கோணங்களின் கதைச் சூழல்களையும் மாந்தர்களையும் உருவாக்கிச் செல்லும் முரகாமி ‘‘நூறு சதவீத பொருத்தமான யுவதியை ஓர் அழகிய ஏப்ரல் காலையில் பார்த்தபோது’’ என்னும் சிறுகதையில் எண்ணங்களைச் சுதந்திரமாக முன் வைக்க இயலாத ஆணைப் பற்றியும் பெண்ணைப் பற்றியும் பகிர்ந்து கொள்கிறார்.

கட்டற்ற சுதந்திரங்களை ஆண்களும், பெண்களும் துய்க்கிற நவநாகரிகமான டோக்கியோவில் நாகரிகமான ஒரு தெருவில் ஓர் இளம் பெண்ணும் ஓர் இளைஞனும் ஒருவரையருவர் பார்த்துக் கொள்கிறார்கள். ஒருவர் இன்னொருவரைப் பார்த்ததுமே தனக்கு நூற்றுக்கு நூறு சதவிகிதம் பொருத்தமானவராக இருவருமே உணர்கிறார்கள். பொருத்தத்தைச் சுட்டிக் காட்டுகிற இரசாயன மாற்றம் இருவருடைய உடல்களிலும் நிகழ்கிறது. ஆனாலும், இருவரும் ஒரு வார்த்தை கூட பேசிக் கொள்ளாமலும், ஒரே ஒரு பார்வையைக் கூட பகிர்ந்து கொள்ளாமலும் கடந்து சென்று விடுகிறார்கள். பதினான்கு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இப்படி ஒரு வாய்ப்பு அவர்களுக்கு அதேபோல நிகழ்கிறது. அப்போது அதே தீவிரப் பொருத்த உணர்வு. அதே அளவு இரசாயன மாற்றம். என்ன காரணத்தால் பகிர்ந்து கொள்ளாமலும் விலகிச் சென்றுவிடுகிறார்கள். ஒரே ஒரு சதவிகிதம் மட்டுமே பொருத்தமானவர்களுடன் கூட சேர்ந்து செல்லக் கூடிய சூழல் நிறைந்த ஊரில் நூற்றுக்கு நூறு சதவிகிதம் பொருத்தம் என்று உணர்ந்தும் இந்தப் பாராமை வாழ்வில் ஏன் நிகழ்கிறது? விடுவிக்கப்பட முடியாத இப்புதிருக்கு என்ன காரணம்? எல்லையற்ற சுதந்திரங்களாலும் கூட அப்புதிரின் விளிம்பைத் தொட முடியாமல் போவது விசித்திரமாகத் தோன்றலாம். ஆனால் மானுட குலம் இது போன்ற எண்ணற்ற புதிர்களால் நிறைந்த ஒன்றாகவே இருக்கிறது. ஒருவேளை, நாம் துய்க்கிற எல்லாச் சுதந்திரங்களும் நம்முடைய நினைவாற்றலும், திறமைகளும் மானுட குலம் புதிர்களால் நிறைந்தது என்னும் எளிய உண்மையை உணர்வதற்காகத்தான் போலும்.

(நூறு சதவிகித பொருத்தமான யுவதியை ஓர் அழகிய ஏப்ரல் காலையில் பார்த்தபோது. ஜப்பானியச் சிறுகதைகள்,

மூலம்_ஹாருகி முரகாமி.

மொழி பெயர்ப்பு: ஜி. குப்புசாமி, ராஜகோபால், செழியன்,

வம்சி வெளியீடு, 19, டி.எம். சாரேன், திருவண்ணாமலை. விலை ரூ.80)

Posted in Books, Chezhian, Chezhiyan, Kuppusami, Literature, Muragami, Murakamy, Murkami, Paavanan, Paavannan, Pavannan, Rajagopal, Reviews, Sezhian, Sezhiyan, Story, Translation, Works, Writer | Leave a Comment »

Kumudam’s Ilakkiya Cholai – Paavannan

Posted by Snapjudge மேல் ஜூன் 15, 2007

திப்புவின் கண்கள் – பாவண்ணன்
இலக்கியச்சோலை

ஸ்ரீரங்கப்பட்டணத்துக்குப் போயிருந்தேன். சிதைந்து குட்டிச்சுவர்களாகக் காணப்படும் அதன் பழங்காலக் கோட்டை மதில்களைப் பார்த்தபோது ஒருகணம் மனம் அமைதியிழந்தது இருநூறு ஆண்டுகளுக்கு முன்பாக இருபத்தைந்தாயிரத்துக்கும் மேற்பட்ட படைவீரர்களோடு அந்த ஊரை முற்றுகையிட்ட ஆங்கிலப்படை அந்தக் கோட்டையைத் தகர்க்கும் காட்சி கற்பனையில் விரிந்தது. உண்மையில் அந்த முற்றுகைக்கான காரணம் அந்தக் கோட்டையைச் சிதைப்பதோ அல்லது அந்த ஊரைக் கைப்பற்றுவதோ அல்ல எதிர்ப்பின் அடையாளமாக உருவாகி மெல்லமெல்ல வலிமைபெற்று வந்த திப்புசுல்தானைக் கொல்வதுதான் உண்மையான காரணம்.

வீரத்துக்கும் துணிச்சலுக்கும் ஓர் அடையாளமாக நின்றவன் திப்பு. அவன் வீரத்தைப் பறைசாற்றும் கதைகள் ஏராளம் வேட்டையாடச் சென்ற காட்டில் எதிர்பாராத கணத்தில் தன் முன்னால் பாய்ந்துவந்த புலியை நேருக்குநேர் பார்த்துப் போராடி சுட்டு வீழ்த்திய சம்பவம்தான் அவனுக்கு மைசூர்ப்புலி என்ற பெயர் உருவாகக் காரணம்.

ஒரு புலியை, அது வாழக்கூடிய காட்டிலேயே தன்னந்தனியாக ஓர் இளைஞன் எதிர்கொண்டு நிற்கும் காட்சியைக் கொண்ட சித்திரத்தைப் பார்க்காதவர்களே இருக்கமுடியாது. இளம்வயதில் புலியை எதிர்கொண்டவன் நடுவயதில் ஆங்கிலேயர்கள் என்னும் புலியை எதிர்கொண்டான். திப்புவைப் பொறுத்தவரை எதிர்த்து நிற்றல் என்பது உரிமைக்கும் உயிர்வாழ்தலுக்குமான ஒரு போர்.

கோட்டை வாசலைத் தாண்டி வந்து சிறிது தொலைவு நடந்தபிறகு போரில் கொல்லப்பட்ட திப்புவின் உடல் கிடந்த இடம் என்ற அடையாளக்குறிப்புடன் ஒரு சதுக்கம் காணப்பட்டது. ஒரு சின்ன நடுகல் அங்கிருந்தது ஒருகணம் தரையில் அவன் உடலைக் கண்டது என் மனம்.

காலத்தாலும் மண்ணாலும் அழிக்கமுடியாத அந்த மாபெரும் உடல் ஏராளமான வெட்டுக் காயங்களுடன் வெட்டி வீழ்த்தப்பட்ட ஒரு பச்சைமரத்தைப்போல மல்லாந்து கிடந்தது. காயங்களிலிருந்து சொட்டுச்சொட்டாக உதிர்ந்துகொண்டிருந்தன. ரத்தத்துளிகள். மூச்சின் இறுதிக் கணங்களில் அந்தத் தோள்கள் அசைந்தன. கன்னம் அசைந்தது விரிந்த மார்பு ஏறித் தாழ்ந்தது. கூர்மை குன்றாத கண்கள் உற்றுப் பார்த்தன. எண்ணங்கள் முற்றாகக் கலைந்து விலகியதும் உடல் உதற தன்னுணர்வு திரும்பியது. அந்தக் கண்கள் அப்போது ஒரு செடியின் இலைகளாக மாறிவிட்டிருந்தன. எழுச்சிமிகுந்த உணர்வு நிலையில் என்னால் திப்புவின் உடலை ஓர் ஓவியமாகத் தீட்டிவிடமுடியும் என்று தோன்றியது.

ஆதிக்க வேர்கள் பரவி விரிவு-பெறும் முன்னரே வெட்டி-யெறிய வேண்டும் என எழுச்சியுள்ள திப்புவின் வேகம்தான் ஆங்கிலேயர்-களை அச்சுறுத்தியிருக்கவேண்டும். கொள்ளிடத்துப் படுகையில் நடந்த போரிலும் காஞ்சியில் நடந்த போரிலும் திப்புவிடன் அடைந்த தோல்வி அவர்களுடைய பீதியை இன்னும் கொஞ்சம் அதிகப்படுத்தி-யிருக்கவேண்டும். அதுவே வெறுப்-பாகவும் வெறியாகவும் மாறி ஏராளமான சேனைகளுடன் முற்றுகையிடத் தூண்டி திப்புவைப் பலிவாங்கியது.

மாளிகைக்குள் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்த ஓவியங்களைப் பார்த்தேன். எல்லாமே போர் ஓவியங்கள் முதல் மைசூர்ப்போரிலும் இரண்டாம் மைசூர்ப்போரிலும் திப்பு அடைந்த வெற்றியின் அடையாளங்கள் ஓவியங்களாகத் தீட்டப்பட்டிருந்தன. பார்த்த இடங்களிலெல்லாம் வரிசைவரிசையாக செல்லும் காலாட்படைகள். குதிரைப்படைகள் யானைப்படைகள் பீரங்கி வண்டிகள், வெற்றியின் ஆக்கிரமிப்பு மரணத்தின் ஓலம் வெற்றிக்கொண்டாட்டக் காட்சிகளும் தோல்வியுற்றவர்களைக் கைது செய்து அழைத்து வரும் காட்சிகளும் மாறிமாறித் தென்பட்டனய. துப்பாக்கிகளும் பீரங்கிகளும் இடம்பெறாத ஓவியமே இல்லை.

இந்தக் கொந்தளிப்புகிகு நேர்மாறாக அமைதி ததும்பிய ஓர் ஓவியம் அக்கால ஸ்ரீரங்கப்பட்டண வீதிகளையும் கோட்டையையும் காட்சிப்படுத்தும் இன்னொரு கூடத்தில் இருந்த ஓவியங்கள் வேறுவகையானவை.

எல்லாமே திப்புவின் குடும்பப்படங்கள். ஒரே வரிசையில் திப்புவின் ஆறு பிள்ளைகளுடைய படங்கள் கோட்டோவியங்களாகத் தீட்டப்பட்டு வைக்கப்பட்டிருந்தன. மூத்தவனுக்கு நல்ல வாலிபத் தோற்றம். முறுக்கேறிய உடல் உறுதியான தோள்கள். அவனைவிட சற்றே வயது குறைந்த தோற்றம் இரண்டாம் மகனுடையது. கன்னத்தின் மினுமினுப்பு இளமையின் அடையாளமாகக் குடிகொண்டிருந்தது. அடுத்த மகனுக்கு இன்னும் இளையவயதுத் தோற்றம் அதன் அடையாளமாக சின்ன அரும்புமீசை அதற்கடுத்தவனுடைய தோற்றம் சிறுவனுடையதுமாகவுமில்லாமல் இளைஞனுக்குரியதமாகவும் இல்லாமல் இடைப்பட்ட நிலையில் இருந்தது. உதடுகள் சற்றே தடித்து முகத்தில் களைபடிந்த தோற்றம். அதற்கடுத்த பிள்ளைக்கு வளர்ந்த சிறுவனின் தோற்றம். பெண்மைபடர்ந்த முகவெட்டு சற்றே உப்பிய கன்னங்கள் அதற்கடுத்த சிறுவனுக்கு முழுக்கமுழுக்கக் குழந்தைத்தோற்றம். ஓவியனின் திறமையைக் கண்டிப்பாகப் பாராட்டவேண்டும் என்று எண்ணிக்கொண்டிருந்தபோதே படிப்பதற்காக கீழே எழுதிவைக்கப்பட்டிருந்த குறிப்பு ஒருகணம் துணுக்குறவைத்தது. கைதிகளாகப் பிடிக்கப்பட்டு வேலூ

ர்க் கோட்டையில் சிறைவைக்கப்பட்ட பிள்ளைகளின் படங்கள் அவை சிறை ஆவணங்களாக இந்தப் படங்கள் தீட்டப்பட்டிருக்குமோ என்று தோன்றியது. சின்னஞ்சிறு பாலகனைக்கூட பகையாக நினைத்து நடுங்கிய ஆங்கிலேயரின் மனநிலை விசித்திரமாக இருந்தது.

அடுத்தபடி அகலமாக இருந்த அறையில் ஏராளமான பொருட்கள் அடுக்கப்பட்டிருந்தன. விதம்விதமான திப்புவின் உடைவாள்கள், கத்திகள், துப்பாக்கிகள் ஆயுதங்கள் போர் அங்கி மார்புக்கவசம் உணவுமேசை. ஒவ்வொன்றாகப் பார்த்தபடியே நகர்ந்தபோது இன்னொரு கூடத்தில் ஆளுயரத்துக்கு வைக்கப்பட்டிருந்த திப்புவின் ஓவியத்தையும் பார்த்தேன். கிட்டத்தட்ட திப்புவே எதிரில் வந்து நிற்பதைப்போன்ற தோற்றம். மிடுக்கான தோற்றம் எடுப்பான தோள்கள். உறுதிமிகுந்த கைகள் கலங்காத முகம் கூர்மையான கண்கள் ஒருகணம் அக்கண்கள் என்னையே உற்றுக் கவனிப்பதைப்போலத் தோன்றியது.

காலையில் என் கற்பனையில் கண்ட அதே கண்கள் அதே வெளிச்சம் அதே கூர்மை நுன்றுநுன்று கேள்விகள் படித்த அதே பார்வை என் உடலில் லேசான பதற்றமும் நடுக்கமும் படர்வதை உணர்ந்தேன்.

மெல்ல நகர்ந்து ஓவியத்தை நெருங்கி நின்றேன். திப்புவின் பார்வை என்மீதே படிந்து என்னையே தொடர்ந்தது. ஆச்சரியத்தோடு இடதுபுறம் இரண்டடி நகர்ந்தேன். அந்தப் பார்வை அங்கும் என்னைத் தொடர்ந்து வந்தது. இன்னும் நான்கடி பின்னால் வேறு கோணத்தில் நகர்ந்து ஏறிட்டபோது அப்பார்வை என்மீது நிலைகுத்திச் சிரித்தது முற்றிலும் நேர்எதிராக இடது புறமாக நடந்து நின்றேன். அப்போதும் தொடர்ந்து அப்பார்வை எல்லாமே பிரமைபோலத் தோன்றியது. எந்தக் கோணத்தில் நின்றாலும் அந்தக் கண்கள் விடாமல் என்னைத் தொடர்வதை உணர்ந்தேன். ஆச்சரியம் என்று வாய்விட்டுச் சொன்ன கணத்தில் அருகிலிருந்த காவலர் அது முப்பரிமாணத் தன்மையுடன் தீட்டப்பட்ட ஓவியம் என்றும் இருநூறு ஆண்டுகளுக்கும் முன்பே நிகழ்த்தப்பட்ட இச்சாதனை மிகப்பெரிய அதிசயம் என்றும் சொன்னார்.

ஏராளமானவர்களுடைய கண்கள் மனத்தில் புள்ளிகளாக மாறிமாறி அசைந்தன. காலம்காலமாக அவை பகிர்ந்துகொண்ட சிரிப்புகள், கோபங்கள் கருணை காதல் மயக்கம் சீற்றம் வெறி ஆத்திரம் எல்லாம் படம்படமாக நகர்ந்தன. அவை எதனுடன் இணைத்துச் சொல்லமுடியாத ஓர் உணர்வு ஈரம் மிகுந்த திப்புவின் கண்களில் உறைந்திருந்தது. இந்த மண்ணையும் காற்றையும் செடி கொடிகளையும் கோட்டை கொத்தளங்களையும் குழந்தைகளையும் மக்களையும் பார்த்துக்கொண்டே இருக்கும். பேராவலே அந்த உணர்வு திப்புவின் மன ஆழத்தில் உறைந்திருந்த அந்த வேட்கையை அந்த ஓவியனும் உணர்ந்திருந்ததை நான் உணர்ந்த அக்கணம் அற்புதமான ஒரு பேரனுபவம். மனத்தை அறியும் விடாமுயற்சிகளில் இடையறாது ஈடுபடுவது கலை என்பதை எனக்கு உணர்த்தியது அக்கணம்.

Posted in Kumudam, Literature, Paavannan, Pavannan | Leave a Comment »

Hatred wildfires

Posted by Snapjudge மேல் ஓகஸ்ட் 2, 2006

வன்மம் என்னும் அணையா நெருப்பு

பாவண்ணன்

பீறிட்டுப் பாயும் மனித ரத்தத்தை அல்லது சொட்டுச்சொட்டாக ஒழுகுகிற ரத்தத்தைப் பார்க்கும் முதல் கணத்தில் பொதுவாக நம் மனம் எப்படி உணர்கிறது? உடனடியாக ஒருவித அதிர்ச்சி நம்மைத் தாக்கித் துணுக்குறச் செய்கிறது. மறுகணம் என்ன செய்வது என்று புரியாமல் உறைந்து விடுகிறோம். அச்சத்திலும் குழப்பத்திலும் நம் உடல் நடுங்கத் தொடங்குகிறது. நம் எண்ணங்கள் தடுமாறுகின்றன. ரத்த அழுத்தம் அதிகமாகி மயக்கமடைந்து விடுகிறவர்களும் உண்டு. நாம் காணும் ரத்தம் நம் உடலிலிருந்தே பீறிடுவதைப்போல பீதியும் தளர்வும் எழுவதைத் தவிர்க்க முடிவதில்லை. வெட்டுப்பட்டவனின் நிலையில் நம்மைப் பொருத்தி, அக் கொடுமை நமக்கு நேரவில்லை என்று சிறிது நேரம் அமைதியடையவும் செய்கிறது நம் மனம். இவற்றுக்கெல்லாம் நேர்மாறாக, இத்தகு காட்சிகளில் ஒரு சிலர் மனம் திருப்தியிலும் நிம்மதியிலும் திளைக்கலாம். நெடுங்காலமாகத் தமக்குள் பற்றியெரிந்தபடியிருந்த வன்மம் தணிந்ததில் அமைதியுறலாம். அதுவரையில் அழுத்திக் கொண்டிருந்த பாரம் விலகிச் சரிந்த விடுதலையுணர்விலும் மிதக்கலாம்.

அன்பும் கருணையும் சமநோக்குப் பார்வையும் நிறைந்திருக்க வேண்டிய மனத்தில் வன்மம் எப்படி வந்து சேர்கிறது என்பது யோசிக்க வேண்டிய விஷயம். தனக்கு முன்னால் ஏராளமான பாதைகள் தென்பட்டாலும் வன்மத்தின் பாதையை ஒரு மனிதன் ஏன் தேர்ந்தெடுக்கிறான்? இரக்க உணர்வுகளே அற்ற இரும்பு நெஞ்சத்தோடு வாழ்வது எப்படிப் பழகி விடுகிறது? வன்மத்தின் பாதையில் நிம்மதியையும் நிறைவையும் ஒருவனால் எப்படி உணர முடிகிறது?

நட்பாலும் நல்லுறவாலும் நிம்மதி நிறைந்த ஒன்றாக வாழ்க்கையை மாற்றிக்கொண்டு வாழும் சக்தி நமக்கு இருக்குமேயானால், வன்மம் நிறைந்த பாதையில் அடியெடுத்து வைக்க வேண்டிய அவசியமே தோன்றியிருக்காது. நட்பு, நல்லுறவு, அன்பு, நெருக்கம் எதன் மீதும் நம்பிக்கை வைக்க முடியாத அளவுக்கு வெளியுலக நடவடிக்கைகளைப் பிழையான கோணங்களில் பார்த்துப் பார்த்துப் பழகிவிட்ட காரணத்தால்தான் நிம்மதியையும் வன்மத்தையும் ஏதோ ஒரு கணத்தில் இணைத்துப் பார்க்க நாம் முயற்சி செய்கிறோம். நம் வாழ்வில் அன்பில்லாமல் இருப்பதாலும் நம் நடவடிக்கைகளில் சிறிதுகூட கனிவில்லாமல் இருப்பதாலும் அன்புக்கும் கனிவுக்கும் இனி இந்த உலகில் இடமே இருக்க முடியாது என்ற பிழையான எண்ணத்துக்குக் கட்டுப்பட்டு விடுகிறோம். வேறு வழியில்லாத நிலையில்தான் வன்மத்தின் பாதையில் அடியெடுத்து வைப்பதாக ஒரு நொண்டிச் சமாதானத்தை நமக்கு நாமே கற்பித்துக் கொள்கிறோம்.

தான் நேசித்த காதலனின் கழுத்தை அறுத்துத் தட்டில் வைத்து தனக்குப் பிறந்தநாள் பரிசாகத் தர வேண்டுமென தன்னை நேசித்த ஆடவனிடம் கேட்ட இளம்பெண்ணொருத்தியின் வன்மக்கதையைப் புராணத்தில் படித்திருக்கிறோம். தன்னை நேசிக்க மறுத்து விட்டாள் அல்லது புறக்கணித்து விட்டாள் என்பதற்காக அமிலம் ஊற்றி அலங்கோலப்படுத்துகிற இளைஞர்கள் பற்றியும் கழுத்தை நெரித்துக் கொன்று வீசி விட்டுப் போகிற இளைஞர்கள் பற்றியும் ஏராளமான செய்திகள் இன்று வரையிலும் அவ்வப்போது வந்தபடியே உள்ளன. கொல்வது என்பதை ஒரு தீர்வாகக் கண்டுணர்ந்ததும் கொல்லப்பட்ட உடலிலிருந்து சொட்டும் ரத்தமும் சதைத் துண்டுகளும் களிப்போடு பார்க்கத்தக்க காட்சிகளாக அவர்களுக்குத் தோற்றமளிக்கத் தொடங்குகின்றன.

காதலுக்காகக் கொலை. குற்றத்திலிருந்து தப்பிப்பதற்காகக் கொலை. நேர்மையாளர்களாகக் காட்டிக் கொள்வதற்காகக் கொலை. அந்தஸ்தையும் கௌரவத்தையும் அடைவதற்காகக் கொலை. சாதிக்காகக் கொலை. மதத்துக்காகக் கொலை. இனத்துக்காகக் கொலை! கொலையுணர்வு மெல்ல மெல்லத் திட்டமிட்டு செழுமைப்படுத்திக் கொள்ளப்படும் ஒரு கலையாக சமூகத்தில் உருமாறி விடுகிறது. ஒரு பெருங்கூட்டத்தைத் திட்டமிட்டுக் கொல்வதை ஒரு கலைநிகழ்ச்சியைப்போல நடத்தி முடிக்கிறார்கள் கொலையாளிகள். உடல்கள் சிதறுண்டு போய் விழுவதும் ரத்தம் பீறிட்டுப் பாய்ந்து குட்டையாகத் தேங்குவதும் உறுப்புகள் சிதைவுறுவதும் நிகழ்ச்சியின் இறுதிக் காட்சிகளாகி விடுகின்றன. தம் அடையாளத்தை மறைத்துக் கொண்டு அவற்றையெல்லாம் காணும் கொலையாளிகளின் கண்கள் ஏதோ சாகசத்தை நிகழ்த்திவிட்ட மிதப்பில் பூரிக்கக்கூடும். அவர்கள் நெஞ்சில் எரியும் வன்மம் அந்த ரகசியக் கொண்டாட்டத்தில் பல மடங்காகிப் பெருகக் கூடும்.

வரலாற்றில் வன்மத்தின் இருப்புக்கு மிக நீண்ட தொடர்ச்சி இருக்கிறது. அரக்கு மாளிகையில் பாண்டவர்களைத் தந்திரமாகத் தங்க வைத்து உருக்குலைந்து போகுமாறு எரிக்க நினைத்த துரியோதனன் மனத்தில் நிறைந்த வன்மம் வழிவழியாக அதிகாரத்தைக் கைப்பற்ற விழையும் ஒவ்வொருவர் மனத்திலும் ஊறிக் கொண்டே வந்திருக்கிறது. பூட்டப்பட்ட குடிசைகளில் ஆண்கள், பெண்கள் பேதமின்றி உழைப்பாளர்களை அடைத்து நெருப்பு வைத்து எரித்த கீழ்வெண்மணிச் சம்பவத்திலிருந்து தில்லிக் கடைத்தெருக்களிலும் மும்பை ரயில் நிலையங்களிலும் மறைத்து வைத்த வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்து நூற்றுக்கணக்கானவர்களைக் கொன்று குவித்த சம்பவங்கள் வரை ஏராளமாக அடுக்கிக்கொண்டே போகலாம். அதிகாரமும் வன்மமும் ஒரே வாளின் அடுத்தடுத்த பக்கங்கள்.

வன்மத்தில் குறைந்த அளவுள்ள வன்மம், அதிக அளவிலான வன்மம் என எந்த வேறுபாடுமில்லை. எரியும் கொள்ளிகள் எல்லாத் தருணங்களிலும் மோசமான விளைவுகளையே உருவாக்கும். கதறக்கதற மனைவியின் தலையை அடித்து உடைத்து ரத்தம் சிந்த வைக்கிற கணவனின் வன்மத்துக்குப் பின்னால் இயங்கும் உணர்வும் ஒரு குண்டுவெடிப்பில் நூற்றுக்கணக்கான மக்களை ஒரே கணத்தில் தேங்காய்ச்சில்லுகளைப்போல சிதற அடிக்கிற கூட்டத்தினரின் வன்மத்துக்குப் பின்னால் இயங்கும் உணர்வும் ஏறத்தாழ ஒரே தன்மையுடையதுதான்.

தன் தரப்பை நிறுவிக்காட்டும் அகங்காரம். தன் நிலைப்பாடுகளை ஏற்றுக்கொள்ள நிர்பந்திக்கிற வெறி. தன் அதிகாரத்துக்கு எதிரான சவால்களை அடக்கவும் அவற்றை வேரோடும் வேரடி மண்ணோடும் கிள்ளியெறிந்து தன் அதிகார வலிமையைப் புலப்படுத்தவும் மேற்கொள்ளும் யுத்தம்! யுத்தமும் ரத்தமும் பழகப்பழக வன்மம் மேன்மேலும் பலிகளைக் கேட்டுக்கொண்டே இருக்கிறது. அதன் அடங்காப்பசியினால் மானுடமே சிதைந்து கிடக்கிறது.

இதுபோன்ற நாசகாரச் சக்தியான வன்மத்தை முற்றிலுமாக அகற்றுவது முக்கியமான ஒரு விஷயமல்லவா? இதன் விளைவுகளை கண்ணால் பார்த்தும்கூட அழிப்பதற்கு மாறாக வன்மத்தை எதற்கு வளர்த்துக் கொண்டே போகிறோம்? உண்மையில் பிரச்சினை என்னவென்றால் எல்லாருமே வன்மத்தை உள்ளூர விரும்புவதுதான். பாதுகாக்கப்பட்ட ஆயுதம்போல மனத்தின் அடியில் அதைப் புதைத்து வைப்பது மிகவும் அவசியம் என்கிற எண்ணம் நம் அனைவரிடமும் இருக்கிறது. தேவைப்பட்டபோது வெளிப்படுத்தத் தயங்காதவன் என்கிற அச்ச உணர்வு தன்னைப்பற்றிய ஒரு படிமமாக அடுத்தவர்களிடையே உருவாவது நல்லது என்னும் எண்ணமும் இருக்கிறது. ஆனால் முடிவாக எல்லாரும் சொல்லும் வார்த்தைகள் என்ன தெரியுமா? “”மற்றவர்கள் நிறுத்தட்டும், நானும் நிறுத்திவிடுவேன்” என்பதுதான். யார் இந்த மர்றவர்கள்? யார் இந்த நான்? எல்லாம் நாமே அல்லவா?

நம்மையறியாமல் நமக்குள் வெறுப்பின் விதை விழுந்து வளர்ந்து காடாக மண்டிக் கிடக்கிறது. அந்தக் காடு பற்றியெரியும்போதெல்லாம் வெப்பம் உச்சத்தை அடைகிறது. வன்மம் அணையாத நெருப்பாக கொழுந்துவிட்டு தகதகவென எரிந்து நாசம் விளைவிக்கிறது.

வன்மத்துக்கு எதிர்ச்சொல் நேசம் என்று பள்ளித் தேர்வில் மட்டுமே எழுதத் தெரிந்த நமக்கு யாரையும் நேசிப்பதில் துளியும் விருப்பமில்லை என்பது மிகப்பெரிய சோகம். நேசிக்கத் தெரிந்தவனுக்கு மட்டுமே வாட்டமும் வலியும் புரியும். நேசமறியா நெஞ்சங்களுக்கு எல்லாமே கண்டு களிக்கத்தக்க படத் தொகுப்புகளாகிவிடும்.

Posted in Dinamani, Hate Speech, Paavannan, Tamil | 1 Comment »