பழம்பெரும் தயாரிப்பாளர் கே.பி.கொட்டாரக்கரா மரணம்
சென்னை, நவ.21 பழம்பெரும் சினிமா தயாரிப்பாளர் கே.பி.கொட்டாரக்கரா (85) ஞாயிற்றுக்கிழமை மாரடைப்பால் காலமானார். அவருடைய இறுதிச் சடங்கு திங்கள்கிழமை நடைபெற்றது.
கே.பி.கொட்டாரக்கரா சிவாஜிகணேசன் நடித்த “பாசமலர்’, “ஆண்டவன் கட்டளை‘ படங்களுக்கு கதை எழுதியவர்.
எம்.ஜி.ஆர். நடித்த “பரிசு’, கமல்ஹாசன் மலையாளத்தில் நடித்த “மதுர சொப்னம்’, விஜயகாந்த் நடித்த “நீதி பிழைத்தது’ உள்பட தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி மொழிகளில் சுமார் 47 படங்களைத் தயாரித்தவர்.
மலையாளத்தில் மட்டும் மறைந்த பிரபல நடிகர் பிரேம் நசீரை வைத்து 17 படங்கள் தயாரித்தவர். கே.பி.கொட்டாரக்கராவுக்கு சாரதா என்ற மனைவியும், கணேஷ், ரவி என்ற இரண்டு மகன்களும் உள்ளனர்.
கொட்டாரக்கரா உடலுக்கு முதல்வர் கருணாநிதி, தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை தலைவர் கேஆர்.ஜி., தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் ராம.நாராயணன் உள்ளிட்ட பலர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
சென்னை அண்ணாநகரில் உள்ள மின்சார மயானத்தில் கே.பி.கொட்டாரக்கராவின் உடல் திங்கள்கிழமை தகனம் செய்யப்பட்டது.