நடிகர் சிரஞ்சீவியின் மகள் காதல் திருமணம்: குடும்பத்தினர் மிரட்டுவதாக புகார்
தெலுங்கு திரைப்பட உலகின் “சூப்பர் ஸ்டார்” சிரஞ்சீவியின் இளைய மகள் ஸ்ரீஜா (19), வீட்டாருக்குத் தெரியாமல் தனது காதலர் சிரிஷ் பரத்வாஜை (22) புதன்கிழமை திருமணம் செய்துகொண்டார்.
செகந்திராபாதில் போவென்பள்ளியில் உள்ள ஆர்ய சமாஜ் கோயிலில் நண்பர்கள் முன்னிலையில் ஸ்ரீஜாவின் திருமணம் நடைபெற்றது.
திருமணத்துக்குப் பிறகு நிருபர்களிடம் ஸ்ரீஜா கூறியதாவது:
சார்ட்டர்ட் அக்கவுண்டன்ட் பயின்றுவந்தபோது கடந்த நான்கு ஆண்டுகளாக பரத்வாஜுடன் எனக்கு காதல் ஏற்பட்டது. ஆனால் பெற்றோரும், குடும்ப உறுப்பினர்களும், உறவினர்களும் எங்கள் காதலுக்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். இதன் காரணமாக கடந்த ஓராண்டு காலமாக என்னை வீட்டில் அடைத்து வைத்தனர்.
எங்கள் காதல் சமாசாரம் குடும்பத்தினருக்கு தெரிந்தவுடன், வலுக்கட்டாயம் செய்து எனது படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டனர். என்னை வெளியில் அனுப்பாமல் வீட்டிலேயே அடைத்துவைத்தனர்.
இந்நிலையில் என் நண்பர்கள் உதவியுடன் புதன்கிழமை அதிகாலை வீட்டிலிருந்து தப்பிவந்து, பரத்வாஜை கோயிலில் ரகசிய திருமணம் செய்துகொண்டேன்.
தற்போது எனது தந்தை குடும்பத்தார் மூலம் எங்களது உயிருக்கு மிரட்டலும் ஆபத்தும் ஏற்பட்டுள்ளது. போலீஸôரும் பத்திரிகை நண்பர்களும் எங்களுக்கு பாதுகாப்பு அளிக்கவேண்டும்.
நாங்கள் இருவரும் சட்டப்படி திருமண வயதை எட்டியுள்ளோம். அதனால் நாங்கள் திருமணம் செய்துகொள்வதை அனுமதிக்க வேண்டும்.
என்னுடைய பெற்றோர் என் கணவரை என்னிடமிருந்து பிரிக்கக்கூடாது. அதற்கு பாதுகாப்பு அளிக்கவேண்டியது போலீஸின் கடமை என்றார்.