உலகை மிரட்டும் வாயு!
என்.ராமதுரை
அண்மையில் அறிவியல் பற்றிய ஒரு நிகழ்ச்சியில் (வானொலியிலோ அல்லது தொலைக்காட்சியிலோ என்பது நினைவில்லை) கரியமிலவாயு ஒரு “”நச்சுப்புகை” என்று வருணிக்கப்பட்டது. இது ஒரு நச்சு வாயுவே அல்ல. அது நம்மைச் சுற்றிலும் இருப்பது. நமது மூச்சுக் காற்றுடன் வெளியே வருவது. நாம் சாதாரணமாக அருந்தும் சோடா போன்ற பானங்களில் அடங்கியுள்ளது. (பீர் பானத்திலும் உள்ளது) செடி கொடிகள் மரங்கள் கரியமில வாயுவை பகல் நேரங்களில் கிரகித்து தமது உணவைத் தயாரித்துக்கொள்கின்றன.
கரியமிலவாயுவுக்கு ஒரு “தம்பி’ உண்டு. அதுதான் மோசமான வில்லன். அதன் பெயர் கார்பன் மோனாக்சைட். அண்மையில் சென்னையில் காரை நிறுத்திவிட்டு கண்ணாடி ஜன்னல்களை மூடிவிட்டு உள்ளே ஏ.சி. போட்டுக்கொண்டதன் விளைவாக காருக்குள் இருந்தவர்கள் உயிரிழந்த இரு சம்பவங்கள் நடந்தன. இந்த இரண்டிலும் உயிரைப் பறித்தது கார்பன் மோனாக்சைட் ஆகும்.
ஆனால் கரியமிலவாயு அப்படி உயிரைப் பறிக்கின்ற வாயுவே அல்ல. அதற்கு நிறம் கிடையாது. வாசனை கிடையாது. அது கண்ணுக்கே தெரியாதது. பலரும் கரியமிலவாயுவையும் புகையையும் சேர்த்துக் குழப்பிக் கொள்வார்கள். ஆனால் இவை இரண்டும் வெவ்வேறானவை.
கரியமிலவாயு, மீத்தேன் வாயு, ஆவி வடிவிலான நீர் ஆகியவை காற்றுமண்டலத்தில் எப்போதும் வெவ்வேறு விகிதாசாரத்தில் இருக்கின்றன. இவைதான் பூமியில் உயிரினத்தைக் காத்து வருவதாகவும் கூறலாம். பூமியில் அனைத்தும் கடும் குளிரால் உறைந்து விடாமல் இவைதான் தடுக்கின்றன. அதாவது பகல்நேரத்தில் சூரியனிலிருந்து பெறுகின்ற வெப்பத்தை, பூமி பின்னர் முற்றிலுமாக இழந்துவிடாதபடி காப்பது இந்த வாயுக்களே.
ஊட்டி, கொடைக்கானல் போன்று குளிர் நிலவுகின்ற இடங்களில் வீடுகளில் கண்ணாடி ஜன்னல்களே இருக்கும். அதுமட்டுமன்றி பக்கவாட்டுச் சுவர்கள், கூரை ஆகிய அனைத்தும் கண்ணாடியால் ஆன கட்டுமானங்களும் காணப்படும். இவற்றுக்குள் செடிகொடிகளை வளர்ப்பர். பகல் நேரங்களில், செடிகளுக்கு கண்ணாடிகள் வழியே சூரிய ஒளிக்கதிர் கிடைக்கும். ஆனால் இரவு நேரங்களில் வெளியே உள்ள குளிர், செடிகளைப் பாதிக்காதபடி கண்ணாடிப் பலகைகள் தடுத்துவிடும். இதன் மூலம் கண்ணாடி கூடாரத்துக்குள் செடிகளுக்கு இதமான வெப்பம் தொடர்ந்து இருக்கும். அதாவது பகலில் சூரிய ஒளிக்கதிர் மூலம் கிடைத்த வெப்பம், வெளியே போய்விடாதபடி கண்ணாடி தடுக்கிறது. இவ்வித கண்ணாடிக் கட்டடத்துக்கு பசுமைக்குடில் என்று பெயர். இக் கட்டடத்தில் ஏற்படுகின்ற விளைவுக்கு பசுமைக் குடில் விளைவு என்று பெயர்.
பூமியைப் போர்த்தியுள்ள காற்று மண்டலத்தில் அடங்கிய கரியமிலவாயு, மீத்தேன், ஆவி வடிவிலான நீர் போன்றவை கிட்டத்தட்ட கண்ணாடி போல செயல்பட்டு பூமி, தான் பெறுகின்ற வெப்பத்தை இழந்துவிடாதபடி தடுக்கின்றன. ஆகவே இந்த வாயுக்களுக்குப் பசுமைக் குடில் வாயுக்கள் என்று பொதுவான பெயர் உண்டு.
காற்றுமண்டலத்தில் சேரும் கரியமிலவாயு அளவு அதிகரித்துக்கொண்டே போனால் பூமியில் வெப்பம் அதிகரித்துக்கொண்டே போகுமே என்று கேட்கலாம். ஆனால் காற்றுமண்டலத்தில் கரியமிலவாயு சேருகின்ற அதே நேரத்தில் அந்த வாயு காற்றுமண்டலத்திலிருந்து தொடர்ந்து அகற்றப்பட்டு வந்துள்ளது. உலகம் முழுவதிலும் உள்ள செடி, கொடி, மரம் அனைத்தும் பகல் நேரத்தில் இந்த வேலையைச் செய்கின்றன. கடலில் மிதந்தபடி வாழும் பிளாங்கட்டான் என்ற நுண்ணுயிரிகளும் இதைச் செய்கின்றன. காற்று இயக்கம் காரணமாகவும் கடலில் கரியமிலவாயு கரைகிறது. இதை கார்பன் சுழற்சி என்று சொல்வர். கடந்த பல கோடிக்கணக்கான ஆண்டுகளாக காற்றுமண்டலத்தில் கரியமிலவாயு சேருவதிலும் அகற்றப்படுவதிலும் ஒருவித சமநிலை காணப்பட்டு வந்துள்ளது.
ஆனால் சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் ஐரோப்பாவில் தோன்றிய தொழிற்புரட்சியைத் தொடர்ந்து -மனிதனின் செயல்களால் காற்றுமண்டலத்தில் கார்பன் சேர்மானம் அதிகரித்துக்கொண்டே போகிறது. குறிப்பாக, நிலக்கரியைப் பயன்படுத்துகிற அனல் மின்நிலையங்கள், எரிவாயுவைப் பயன்படுத்தும் ஆலைகள், பெட்ரோல், டீசல் போன்றவற்றைப் பயன்படுத்தும் எண்ணற்ற வாகனங்கள் போன்றவற்றின் மூலம் கரியமிலவாயு பேரளவில் காற்று மண்டலத்தில் சேர்ந்து வருகிறது. இதனால் பூமியின் சராசரி வெப்பநிலை உயரலாயிற்று. இப்படி சராசரி வெப்பநிலை உயர்ந்து கொண்டே போனால் உலகில் விபரீதங்கள் ஏற்படும். தென், வட துருவங்களில் உள்ள நிரந்தரப் பனிப் பாளங்களும் இமயமலை போன்ற உயர்ந்த மலைகள் மீதுள்ள உறைந்த பனிக்கட்டிகளும் உருக ஆரம்பிக்கும். கடலில் நீர் மட்டம் உயரும். உலகில் பல இடங்களில் கடல் ஓரமாக அமைந்த நகரங்கள் கடலில் மூழ்க ஆரம்பிக்கும். பருவநிலை மாறும். புயல்கள் அதிகரிக்கும். கோதுமை விளைந்த இடங்களில் நெல் சாகுபடி செய்கிற நிலைமை ஏற்படும். சில பகுதிகள் பாலைவனமாகிவிடும். இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்.
இயற்கையால் இயல்பாக ஜீரணிக்க முடியாத அளவில் கரியமிலவாயு சேர்மானம் அதிகரித்துக்கொண்டே போகிறது. கரியமிலவாயு சேர்மான அதிகரிப்பு குறிப்பாக 1950-களிலிருந்து நன்கு காணப்படுகிறது. இப் பிரச்னை குறித்து உலக நாடுகள் கவலை அடைந்து அவ்வப்போது உலக அளவிலான மாநாடுகளை நடத்தி விவாதித்தன. கடைசியாக ஜப்பானில் கியோட்டோ என்னுமிடத்தில் 1997-ல் ஐ.நா. சார்பில் நடந்த மாநாட்டில் உடன்பாடு ஏற்பட்டது.
கரியமிலவாயு உள்பட பசுமைக் குடில் வாயுக்கள் காற்றுமண்டலத்தில் மேலும் மேலும் சேருவதைக் கட்டுப்படுத்தி 1990 வாக்கில் இருந்த நிலையை எட்ட வேண்டும் என்பது மாநாட்டின் முக்கிய முடிவாகும். இதுவரை 160க்கும் மேற்பட்ட நாடுகள் இந்த மாநாட்டின் முடிவுகளை ஏற்றுக்கொண்டுள்ளன. முதலில் இதை ஏற்பதாகக் கூறிய அமெரிக்கா, பின்னர் 2001-ல் பல்டி அடித்தது. இந்த உடன்பாட்டை ஏற்பதனால் அமெரிக்காவின் வாழ்க்கைத் தரம் பாதிக்கப்படும் என்பதால் இதனை ஏற்க முடியாது என்று அறிவித்தது. அத்துடன் நில்லாமல் இந்தியா, சீனா ஆகிய நாடுகளின் வயல்களிலிருந்தும் அத்துடன் கால்நடைகளின் வயிற்றிலிருந்தும் நிறைய மீத்தேன் வாயு காற்றில் கலப்பதாக குதர்க்கம் பேச முற்பட்டது. இதில் வேடிக்கை என்னவென்றால் ஆண்டுதோறும் காற்றுமண்டலத்தில் கூடுதலாகச் சேரும் கரியமிலவாயுவில் 21 சதவிகிதம் அமெரிக்காவினால் தோற்றுவிக்கப்படுவதாகும்.
எனினும் அண்மைக் காலமாக அமெரிக்காவின் போக்கில் மாறுதல் ஏற்பட்டுள்ளது. இதன் விளைவாக உலகம் தழுவிய அளவில் தக்க நடவடிக்கைகள் எடுக்கப்படலாம் என்ற நம்பிக்கை தோன்றியுள்ளது.
(கட்டுரையாளர், மூத்த பத்திரிகையாளர்).