நடப்பு ஆண்டில் இந்திய பொருளாதார வளர்ச்சி 8 சதவீதமாக குறையும்: ஆசிய வளர்ச்சி வங்கி தகவல்
டோக்கியோ, மார்ச் 28: பணவீக்கம் அதிகரிப்பு மற்றும் வேளாண்துறை வளர்ச்சியில் தேக்கம் காரணமாக, நடப்பு ஆண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 8 சதவீதமாகக் குறையும் என ஆசிய வளர்ச்சி வங்கி கூறியுள்ளது.
2008-ல் அது 8.3 சதவீதமாக இருக்கும் எனவும் ஆண்டறிக்கையில் அவ் வங்கி கூறியுள்ளது. இது தொடர்பாக அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:
2006-ல் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி வலுவாக இருந்தது. அதிக அளவு மூலதன வரத்துக்கும், பணவீக்கத்துக்கும் இட்டுச் சென்றது. உற்பத்தி மற்றும் கட்டுமானத்துறை வளர்ச்சி, (வங்கிகள், நிதி நிறுவனங்கள் வழங்கும்) கடனுக்கான தேவையையும் அதிகரித்தது. இது பணப்புழக்கத்தை கட்டுப்படுத்தும் முயற்சிகளைச் சிக்கலாக்கியது. அதிகரித்து வரும் பணவீக்கத்துக்கு உணவுப் பொருள்களின் விலை உயர்வு முக்கிய காரணமாகும். இந்நிலையில் வேளாண்துறை வளர்ச்சியில் தேக்கம் அமைப்பு ரீதியான சவாலாக உருவெடுத்துள்ளது. வேளாண்துறையில் ஏற்பட்டுள்ள தேக்கம் காரணமாக நிலங்களை தொழில்துறைக்கு விற்கும் போக்கு அதிகரிக்கிறது. இது தொழிலாளர்களின் இடப்பெயர்ச்சி மற்றும் சமூகக் கொந்தளிப்புகளுக்கு இட்டுச் செல்கிறது.
இந்தியப் பொருளாதாரத்தில் கட்டுமானத்துறை முக்கிய பங்கு வகிக்கிறது. இத்துறையில் ஏற்பட்டுள்ள கொழிப்பு, 2005-ல் மொத்த உள்நாட்டு உற்பத்தியில், மொத்த உள்நாட்டு முதலீட்டை 33.8 சதவீதமாக உயர்த்தியது. இத்துறை தொடர்ந்து வளர்ச்சியடைந்து வருகிறது. இதற்கு ஈடாக வங்கிக் கடன் வழங்கும் வீதமும் வளர்ச்சியடைந்தது. இதனால் அதிகரித்த பணப்புழக்கம்தான் தற்போது சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. இறக்குமதிப் பொருள்களுக்கு சுங்கத் தீர்வைகளைக் குறைப்பது உள்ளிட்ட நடவடிக்கைகள் பெரும் பலனைத் தரவில்லை. எனவே செலாவணியைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை ரிசர்வ் வங்கி மேற்கொள்ள வேண்டும்.
இப்படிச் செய்யும்போது, உற்பத்தித் திறன்களை அதிகரிக்கத் தேவையான கடன் வசதி குறைந்துவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கு இது மிகவும் அவசியம். உற்பத்தித் திறனை விரிவுபடுத்துவது நீண்டகால அடிப்படையில் வளர்ச்சியை அதிகப்படுத்துவதற்கு இன்றியமையாதது என ஆசிய வளர்ச்சி வங்கி கூறியுள்ளது.
=================================================
ரஷியாவுக்கு 2010-ல் ரூ.46,000 கோடி ஜவுளி ஏற்றுமதி செய்ய இலக்கு
மாஸ்கோ, ஏப். 2: ரஷிய நாட்டுக்கு ரூ.46,000 கோடி ஜவுளி ஏற்றுமதி செய்ய இந்திய அரசு இலக்கு நிர்ணயித்திருக்கிறது.
இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகத்தை அதிகப்படுத்தும் முயற்சியின் ஓர் அங்கமே 2010-ம் ஆண்டில் ஜவுளி ஏற்றுமதியில் ரூ.46,000 கோடி இலக்கை எட்டுவது.
ரஷிய ஜவுளித்துறை அதிகாரிகளுடன் பேச இந்திய ஜவுளித்துறை அமைச்சர் சங்கர் சிங் வகேலா இதற்காக மாஸ்கோ வந்திருக்கிறார்.
ரஷிய ஜவுளித்துறை நிபுணர்கள், இறக்குமதியாளர்கள், ஆடைத் தொழில் முன்னோடிகள், இந்திய வர்த்தக சமூகத்தவர் ஆகிய அனைத்து தரப்பு பிரதிநிதிகளையும் அவர் சந்தித்து இது தொடர்பாக விரிவான விவாதங்களை நடத்துவார்.
சோவியத் யூனியன் என்ற நாடு இருந்தபோது இந்தியாவிலிருந்துதான் அதிக ஜவுளி கொள்முதல் நடந்தது. அந்நாடு சிதறுண்டதாலும், உலகமயம் காரணமாகவும் இந்தியாவிலிருந்து ஜவுளி கொள்முதல் செய்வது குறைந்தது. இந்தியாவின் இடத்தை இப்போது சீனா பிடித்துக் கொண்டிருக்கிறது.
இந்திய அரசின் அரவணைப்பு இல்லாவிட்டாலும் இந்திய ஜவுளி ஏற்றுமதியாளர்கள் தங்களுடைய சுய முயற்சியில் ரஷியாவுக்கு கணிசமான அளவுக்கு இப்போதும் ஏற்றுமதி செய்கின்றனர். இந்திய அரசின் கட்டுப்பாடுகளைத் தளர்த்தி, சலுகைகளை வழங்கினால் ரஷிய மக்களின் விருப்பத்துக்கேற்ற ஜவுளி வகைகளைத் தயாரித்துத் தருவது பெரிய காரியம் அல்ல என்று இந்திய வர்த்தக சமூகத்தவர் தெரிவிக்கின்றனர்.
அவர்களுடைய யோசனைகள் ஏற்கப்படுமா, இந்திய ஜவுளித்துறைக்குத் தேவைப்படும் மீட்சி, ரஷியா மூலம் கிடைக்குமா என்று பார்க்க வேண்டும்.