Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Outbreak’ Category

Chikun Kunya – Dinamani Editorial

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 5, 2006

ஆளைக் கடிச்சு, அரசையும் கடிக்குது

டிசம்பர் 2005-ல் மகாராஷ்டிர மாநிலத்தில் பெயர் தெரியாத காய்ச்சல் குறித்து ஆய்வு செய்ததில் அது சிக்குன் குனியா எனத் தெரிய வந்தது. அது பரவும் வேகமும் அதன் தன்மையும் சுகாதாரத் துறை அலுவலர்களுக்குத் தெரிந்ததுதான். ஆனால் அப்போதே எச்சரிக்கை மணி ஒலிக்கவில்லை. விளைவு? மகாராஷ்டிரம், குஜராத், மத்திய பிரதேசம், கர்நாடகம், ஆந்திரம், தமிழ்நாடு, கேரளம் என 6 மாநிலங்களுக்குப் பரவிய சிக்குன் குனியா இப்போது அரசையும் கடிக்கிறது.

இது ஆட்கொல்லி நோய் அல்ல. ஆள்முடக்கி நோய். இதற்கான மருந்து (காய்ச்சலுக்கான பாரசிடமால் போன்ற) குறைந்த செலவு மாத்திரைகளும் முழு ஓய்வும்தான். இந்த எளிய தகவல் அடித்தட்டு மக்களிடம் கொண்டு செல்லப்படவில்லை. ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு மிகப் பெரிய பொறுப்பு இருந்தும்கூட, அவர்களது சேவைக்கரம் கிராமங்களுக்கு நீளவில்லை. இதனால் மக்கள் அதிகம் செலவிட நேரிட்டது.

கர்நாடகத்தில் சில மாவட்டங்களில் காய்ச்சல் மருந்துடன், செலவுமிக்க வைட்டமின் மாத்திரைகள், வலிநிவாரணிகளை சில மருத்துவர்கள் எழுதிக் கொடுத்துள்ளனர். இதில் சில வலிநிவாரணிகள் இரைப்பையைப் பொத்தலாக்கியிருப்பதை அங்கே தற்போதுதான் உணர்கிறார்கள். சிக்குன் குனியா நோயினால் பாதிக்கப்பட்ட சிலர் இறப்பதற்கு இதுபோன்ற பக்கவிளைவுகளும் முதுமையுமே முக்கிய காரணம். இந்த நோய் ஏழை-நடுத்தரக் குடும்பத்தினரைப் பொருளாதார ரீதியில் மிகவும் பாதிக்கச் செய்துள்ளது. குறைந்த சம்பளத்துக்கு வேலை செய்வோரும், அன்றாட உடல்உழைப்பில் வாழ்வோரும் பலநாள் ஊதியத்தை இழந்ததோடு, மருத்துவச் செலவையும் ஏற்க வேண்டியதாயிற்று. பல இடங்களில் குடும்ப அங்கத்தினர் அனைவருமே நோயால் பாதிக்கப்பட்டு யாருமே வேலைக்குச் செல்ல முடியாத சூழல்களும் பல குடும்பங்களில் ஏற்பட்டன.

காய்ச்சல் நின்றபின் மூட்டுகள் வலிக்கும். அதனால் எந்த வேலையும் செய்ய முடியாது. செய்தால் நோயின் மீள்தாக்குதலுக்கு ஆளாக நேரும். ஆனால் அன்றாடம் உழைத்துச் சாப்பிட வேண்டிய கட்டாயத்தில் இருப்போர், வலியைப் பொருட்படுத்தாமல் வேலைக்குப் போய் மீண்டும் அவதிப்பட்டுள்ளனர். இந்த ஏழைகளுக்கு அரசு மருத்துவமனையில் காய்ச்சல் நின்ற பிறகு 15 நாட்களுக்கு, மருந்துக்குப் பதில் ஒரு கிலோ ரேஷன் அரிசி (ரூ.2 தான்) கொடுத்திருந்தால்கூட இவர்கள் போதுமான ஓய்வு எடுத்து, நோயின் மீள்தாக்குதலைத் தவிர்த்திருப்பார்கள். சிக்குன் குனியா நோய் தொடர்பான விழிப்புணர்வுச் செய்திகளை, அனைத்து தனியார் தொலைக்காட்சி நிறுவனங்களையும் தினமும் “சீரியல்‘ நேரத்தில் இரண்டு முறை இலவசமாக ஒளிபரப்பச் செய்திருந்தால், ஆரம்ப சுகாதார நிலையம் செல்ல முடியாத பகுதியில் வசிக்கும் கிராம மக்களும்கூட விழிப்புணர்வு பெற்றிருப்பார்கள். காய்ச்சலுக்கு உண்டான மருந்தை- குறைந்த விலை என்பதால் வாங்கிச் சாப்பிடவும் செய்திருப்பார்கள். மருத்துவச் செலவும் குறைந்திருக்கும். அரசு இதை யோசிக்கத் தொடங்கியபோது சிக்குன் குனியாவுக்கு அரசியல் காய்ச்சல் வந்துவிட்டது.

தற்போது 6 மாநில சுகாதார அமைச்சர்களின் கூட்டத்தை மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் அன்புமணி கூட்டியுள்ளது வரவேற்கத்தக்கது. இதற்கிடையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள தில்லி, ஹரியாணா, உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களின் சுகாதார அமைச்சர்களுடன் அவர் இன்று ஆலோசனை நடத்துகிறார். விழிப்புணர்வை ஏற்படுத்துதல், தாற்காலிகச் சுகாதார மையங்களை அமைத்தல், இலவசமாக அல்லது குறைந்த செலவில் மாத்திரைகள் கிடைக்கச் செய்தல், பாதிக்கப்படும் ஏழைகளின் ஊதிய இழப்புகளை உணவுப் பொருளால் ஈடுசெய்ய வழிகாணுதல் ஆகியவற்றை அமைச்சர்கள் கூட்டம் விவாதிக்கும் என நம்பலாம்.

Posted in Chicken Kunya, chickun gunya, Chikun Kunya, Dengue, Dinamani, Editorial, Healthcare, Outbreak, solutions, Tamil | Leave a Comment »

Chikun Kunya & Dengue – Homeopathy vs Western Medicine Treatment Options

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 3, 2006

சிக்குன் குனியாவிற்கு ஹோமியோபதி மருத்துவம் பலனளிக்குமா

தமிழக ஹோமியோபதி மருத்துவர்கள் சங்க தலைவர் வெங்கட்ராமன்
தமிழக ஹோமியோபதி மருத்துவர்கள் சங்க தலைவர் வெங்கட்ராமன்

தமிழ்நாட்டளவில் சிக்குன் குன்யா நோயின் தாக்குதல் தொடர்ந்து நீடித்து வருகிறது. சிக்குன் குன்யா நோயை பரப்பும் கொசுக்களே, டெங்கு காய்ச்சலை உண்டாக்கும் வைரசையும் பரப்பும் என்பது மருத்துவ துறையாளர்களின் கருத்து. தமிழ்நாட்டில் சிக்குன் குன்யா வைரசை பரப்பும் கொசுக்கள், ஒரே சமயத்தில் இரண்டாவது ரக வைரசான டெங்கு வைரசை பரப்புவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என்று சுகாதார வல்லுனர்கள் பரவலாக கருதுகிறார்கள்.

எனவே, தமிழ்நாட்டில் சிக்குன் குன்யா நோய் தடுப்பு என்பதே தற்போதைய முக்கிய பொது சுகாதார பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. அதிலும் குறிப்பாக, தற்போதைய தமிழக உள்ளாட்சித்தேர்தலின் முக்கிய பிரச்சார கருப்பொருளாக சிக்குன் குன்யா நோயின் பரந்துபட்ட பாதிப்புகள் உருவெடுத்திக்கிறது.

அதேவேளை, சிக்குன்குன்யா நோய்க்கான சிகிச்சை முறை பற்றி புதிய சர்ச்சை எழுந்திருக்கிறது. ஒருபக்கம் சிக்குன் குன்யாவுக்கு, அலோபதி சிகிச்சைமுறை போதுமான பலன் தரவில்லை என்று சுகாதார நிர்வாகிகளும், மருத்துவர்களும் கவலைப்பட்டுக்கொண்டிருக்க, மறுபக்கம் சிக்குன் குன்யாநோயை ஹோமியோபதி சிகிச்சைமுறை நல்லவிதமாக குணப்படுத்துவதாக ஹோமியோபதி மருத்துவர்கள் அறிவித்து வருகின்றனர். ஹோமியோபதி மருத்துவர்களின் இந்த அறிவிப்பை அரசு நிர்வாகமும் அலோபதி மருத்துவர்களும் ஏற்க மறுக்கின்றனர்.

ஹோமியோபதி மூலம் சிக்குன் குன்யா நோய் நல்ல முறையில் குணப்படுத்தப்படுவதாக கூறுவதற்கான ஆதாரம் என்ன என்பது பற்றி தமிழக ஹோமியோபதி மருத்துவர்கள் சங்கத்தலைவரும் பிரபல ஹோமியோபதி மருத்துவருமான பி.வி.வெங்கட்ராமனின் பேட்டியை நேயர்கள் இன்றைய அனைவருக்கும் அறிவியல் நிகழ்ச்சியில் கேட்கலாம்.

Posted in Allopathy, Chicken Kuniya, Chicken Kunya, Chikun Gunya, Chikun Kunya, Dengue, Healthcare, Homeopathy, Outbreak, Tamil, Treatment | 5 Comments »

Chikunkunya Toll in Kerala increases to 59

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 2, 2006

கேரளாவில் சிக்குன் குனியாவுக்கு 59 பேர் சாவு 

திருவனந்தபுரம், அக். 2-

கேரள மாநிலத்தில் சிக்குன் குனியா நோயால் பல மாவட்டங்கள் பாதிக்கப்பட்டு உள்ளன. முக்கியமாக சேர்த்தலை, அம்பலபுழை ஆகிய தாலுகா பகுதிகள் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் வரை சிக்குன் குனியாவுக்கு மாநிலம் முழுவதும் 56 பேர் பலியானார்கள்.

நேற்று மேலும் 3 பேர் இறந்துள்ளனர். இதையும் சேர்ந்து இதுவரை 59 பேர் சிக்குன் குனியாவால் இறந்து விட்டதாக கேரள சுகாதாரத்துறை மந்திரி ஸ்ரீமதி கூறியுள்ளார்.

சிக்குன் குனியா நோயை தடுக்க கேரளாவில் தடுப்பு நடவடிக்கை தீவிரமாக எடுக்கப்பட்டு வருகிறது. தினமும் ஏராளமானோர் சிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு வந்து குவிந்த வண்ணம் உள்ளனர்.

எனவே அவர்களுக்கு துரிதமாக சிகிச்சை அளிக்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இதற்காக விடுமுறையில் சென்ற டாக்டர்கள், ஆஸ்பத் திரி ஊழியர்களை உடனடியாக வேலைக்கு திரும்புமாறு அரசு உத்தரவிட்டு உள்ளது.

Posted in Affected, Chicken Kunya, Chikun Gunya, Chikunkunya, dead, Healthcare, Kerala, Outbreak, Tamil, Toll | Leave a Comment »