சில்லறை வணிகத்தை காப்பாற்ற தமிழக அளவில் போராட்டம்: வணிகர் பேரவை மாநாட்டில் தீர்மானம்
கன்னியாகுமரி, பிப். 15: சில்லறை வணிகத்தைக் காப்பாற்ற அனைத்துத் தரப்பு மக்களையும் இணைத்து, தமிழக அளவில் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்போவதாக கன்னியாகுமரியில் புதன்கிழமை நடைபெற்ற வணிகர்கள் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில் கன்னியாகுமரியில் இந்த மாநாடு நடைபெற்றது.
மாவட்ட வணிகர்கள் பேரவைத் தலைவர் கே.ஏ. குமாரவேல் தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் சி. சுகந்தராஜன், மாநிலத் துணைத் தலைவர் எம்.ஆர். சுப்பிரமணியம் இதில் பங்கேற்றனர்.
பின்னர் நடைபெற்ற நெல்லை மண்டல சிறப்பு மாநாட்டுக்கு மாநில வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் த. வெள்ளையன் தலைமை வகித்தார்.
மாநிலப் பொதுச் செயலர் க. மோகன், மாநிலப் பொருளாளர் த. அரிகிருஷ்ணன், கன்னியாகுமரி மாவட்ட வணிகர்கள் சங்கத்தின் துணைத் தலைவர் பா. தம்பித்தங்கம் உள்ளிட்டோர் பேசினர்.
வெள்ளையன் பேசுகையில், வணிகர்கள் அரசியல் வேறுபாடுகளைக் கைவிட்டு ஒற்றுமையுடன் போராட வேண்டும். தமிழகத்தில் யார் ஆட்சிக்கு வந்தாலும் வணிகர்களுக்கு நியாயம் கிடைப்பதில்லை. நமது தொழிலைக் காப்பாற்ற நாம் எந்தத் தியாகமும் செய்யத் தயாராக இருக்க வேண்டும் என்றார்.
மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம்:
- சில்லறை வணிகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிப்பதைக் கைவிட வேண்டும்.
- வெளிநாட்டு நிறுவனங்கள், உள்நாட்டு ஏகபோக சக்திகள் சில்லறை வணிகத்தில் நுழைவதைத் தடை செய்ய வேண்டும்.
- தமிழகத்தில் மதிப்புக் கூட்டு வரியை அரசு அமல்படுத்திய பிறகு விலைவாசி உயர்ந்துள்ளது. எனவே, இதன்மூலம் ஏற்பட்டுள்ள தேவையற்ற விளைவுகளைப் புரிந்துகொண்டு மதிப்பு கூட்டு வரியைத் திரும்பப் பெற வேண்டும்.
- கோடிக்கணக்கில் முதலீடு செய்யும் உள்நாட்டு, வெளிநாட்டு நிறுவனங்களுக்காக வரிகள் இல்லாத சிறப்புப் பொருளாதார மண்டலங்களை அரசு அமைக்கிறது.
இதனால், விளை நிலங்கள் விற்பனை நிலங்களாக மாறி வருகின்றன. எனவே, இதை அரசு உடனடியாகக் கைவிட வேண்டும்.
- ஆன்லைன் வர்த்தக சூதாட்டம் இயல்பான வணிகத்தை சீர்குலைத்து வருகிறது. இதனால், பல்வேறு பொருள்கள் நிமிஷத்திற்கு நிமிஷம் விலை மாறுதல் அடைகிறது.
இதைப் பயன்படுத்தி சில நிறுவனங்கள் கொள்ளை லாபம் ஈட்டி வருகின்றன. இதுகுறித்து சி.பி.ஐ விசாரணை நடத்த அரசு முன்வர வேண்டும்.
- தற்போது சேவை வரி மூலமாக மத்திய அரசு பல்லாயிரம் கோடி ரூபாய் வருமானமாக வசூலித்து வருகிறது. இதனால், வணிகர்கள், சுய தொழில் புரிவோர், பொது மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த வரியையும் அரசு கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.