மத்திய தொகுதியில் வன்முறை நடந்தபோது தேக்கடிக்கு சுற்றுலா சென்ற தேர்தல் பார்வையாளர்கள்: பரபரப்பு தகவல்
மதுரை, அக். 12-
மதுரை மத்திய தொகுதி ஓட்டுப்பதிவு நேற்று பெரிய அசம்பாவிதங்கள் ஏதுமின்றி நடந்து முடிந்தது. தேர்தலை கண்காணிக்கவும், செலவு விபரங்களை கணக்கிடவும் சஞ்சீவ்குமார், மீனா ஆகிய இரண்டு பார்வையாளர்களை மத்திய தேர்தல் ஆணையம் மதுரைக்கு அனுப்பி வைத்தது.
கடந்த செப்டம்பர் மாதம் இறுதியிலேயே மதுரைக்கு வந்துவிட்ட அவர்கள் தேர்தல் நடவடிக்கைகளை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் கடந்த 5-ந்தேதி மதுரை மத்திய தொகுதிக்குட்பட்ட சின்னக் கடை வீதியில் தி.மு.க-அ.தி. மு.க.வினர் இடையே திடீர் மோதல் ஏற்பட்டது. வாக்கா ளர்களுக்கு தி.மு.க.வினர் பணம் கொடுக்க முயன்றதாக வும் அதை அ.தி.மு.க.வினர் தடுக்க முயன்றபோது தகராறு மூண்டதாகவும் கூறப்பட்டது. இதில் அ.தி.மு.க. வேட்பாளர் ராஜன் செல்லப்பாவின் கார் உடைக்கப்பட்டது. அவர் ஆதர வாளர்களும் தாக்கப்பட்டனர்.
இது பற்றி ராஜன் செல்லப்பா தேர்தல் பார்வையாளர்களுக்கு தகவல் கொடுத்தார். மேலும் பெரியார் பஸ் நிலையம் எதிரே மறியல் செய்து விட்டு போலீஸ் கமிஷனரிடமும் புகார் கூறினார்.ஆனால் போலீசார் இதில் உரிய நடவடிக்கை எடுக்க வில்லை என அ.தி.மு.க.வினர் மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இதன் காரணமாக மதுரை போலீஸ் கமிஷனர் சிதம்பரசாமி நீக்கப்பட்டு புதிய கமிஷனர் நியமிக்கப்பட்டார். மேலும் இரண்டு போலீஸ் துணை கமிஷனர்களுக்கும் தேர்தல் பணி வழங்கக்கூடாது என்று உத்தரவிடப்பட்டது.
ஆனால் இந்த கலவரங்களின்போது மத்திய தேர்தல் பார்வையாளர்கள் என்ன செய்தார்கள். சம்பவ இடத்திற்கு அவர்கள் நேரில் சென்று விசாரணை நடத்தினார்களா என்ற கேள்வி எழுந்தது.
இதில் சம்பவம் நடந்த 5-ந்தேதி தேர்தல் பார்வையாளர் சஞ்சீவ்குமார் கேரளாவில் உள்ள தேக்கடிக்கு சுற்றுலா சென்றதாக தெரிய வந்துள்ளது. அவர் தன் உதவியாளருடன் விடுமுறை எடுக்காமல் அலுவலக காரிலேயே அங்கு சென்றிருப்பது தெரியவந்துள்ளது.
தேக்கடியில் பார்வையாளர் சஞ்சீவ்குமார் எடுத்துக் கொண்ட புகைப்படங்களும், அவரது உதவியாளர் கொடுத்த தகவல்களும் சஞ்சீவ்குமார் அங்கு சென்றார் என்பதை உறுதிப்படுத்துவதாக உள்ளது என்று வருவாய்த்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதற்கிடையே தேர்தல் செலவு கணக்கை பார்வையிட வந்த மீனாவும் அதே நாளில் ராமேசுவரம் சென்றதும் தெரிய வந்துள்ளது. இவர் செப்டம்பர் மாத இறுதியிலும் இதுபோல ராமேசுவரத்துக்கு சென்று வந்தார்.
இதனால் தேர்தல் நேரத்தில் திடீரென நடக்கும் சம்பவங்களை இவர்களால் கண்காணிக்கவும் நடவடிக்கை எடுக்க முடியாமலும் போய் விட்டது.
கடந்த மே மாதம் சட்டசபை தேர்தல் நடந்தபோது இது போல மதுரைக்கு தேர்தல் பார்வையாளராக வந்தவர்கள் கொடைக்கானலுக்கும் கேரளாவுக்கும் இன்பச் சுற்றுலா சென்றது பத்திரிகை களில் வெளியானது. இதை யடுத்து அவர்களை தேர்தல் ஆணையம் உடனே திரும்ப அழைத்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.