வீணாகும் வரிப்பணம்
மக்களின் நல்வாழ்வை முன்னிலைப்படுத்தி நிறைவேற்றப்படும் நல்ல திட்டங்கள் பல, ஒரு சிலரின் சுயநலத்தைப் பூர்த்தி செய்வதற்கும், அரசுப் பணத்தை இந்தத் திட்டங்களின் பெயரால் கொள்ளையடிப்பதற்கும்தான் பயன்படுகின்றன என்பதை சுதந்திர இந்தியா பலமுறை பார்த்தாகிவிட்டது. அந்தப் பட்டியலில் சமீபத்தில் சேர்க்கப்பட்டிருக்கும் திட்டம்தான் தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதித் திட்டம்.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் மிகப்பெரிய சாதனை என்றும், ஏழை மக்களுக்கு உதவிக்கரம் நீட்டும் கை, காங்கிரஸ் கட்சியின் கைச்சின்னம் என்பதை உறுதிப்படுத்தும் திட்டம் என்றும் புகழப்பட்ட தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் மிகப்பெரிய ஊழல் மோசடிக்கு வழிவகுத்திருப்பதை வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறது மத்திய தணிக்கை அதிகாரியின் அறிக்கை. ஊழல் மற்றும் திறமையின்மை காரணமாக இந்தத் திட்டம் எதற்காக, யாருக்காக நடைமுறைப்படுத்தப்பட்டதோ அவர்களைப்போய் சேராமல், தேசிய அளவில் அதிகாரிகள் மற்றும் அந்தந்த மாநில அரசியல்வாதிகள் பயன்பட உதவி இருப்பதாக அந்த அறிக்கை தெளிவுபடுத்தி இருக்கிறது.
இந்தியாவின் 330 மாவட்டங்களில் செயல்படுத்தப்படும் இந்தத் திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு ஆண்டொன்றுக்கு ரூ. 1,200 கோடி. இந்தத் திட்டத்தின்படி, கிராமப்புறத்தில் வேலையில்லாத எந்தவொரு குடும்பமும் ஆண்டில் நூறு நாள்கள் குறைந்தபட்சம் வேலைவாய்ப்புப் பெறும் என்கிற உறுதி அளிக்கப்படுகிறது. அதன் மூலம் கிராமப்புறத்திலுள்ள அத்தனை வேலையில்லாத குடும்பங்களுக்கும் ஆண்டொன்றுக்கு குறைந்தது 8,000 ரூபாய் வருமானம் உறுதி செய்யப்பட வேண்டும் என்பதுதான் திட்டத்தின் லட்சியம்.
உன்னதமான லட்சியத்தாலும், கிராமப்புற மக்களுக்குக் “கை’ கொடுக்க வேண்டும் என்கிற நல்லெண்ணத்துடனும் செயல்படுத்தப்பட்ட இந்தத் திட்டத்தின் செயல்பாடு குறித்து வேதனை தெரிவித்திருக்கிறது தேசிய தணிக்கை அறிக்கை. குறிப்பாக, காங்கிரஸ் ஆட்சி செய்த, ஆட்சியில் இருக்கும் மாநிலங்களில்தான் மிக அதிகமான முறைகேடுகள் நடந்திருக்கின்றன என்பதுதான் வேடிக்கையிலும் வேடிக்கை. பிப்ரவரி 2006 முதல் மார்ச் 2007 வரையிலான 14 மாதங்களில், வெறும் 18 நாள்கள்தான் சராசரியாக வேலைவாய்ப்பு வழங்கப்பட்டிருப்பதாகவும், ஒரு குடும்பத்திற்குத் தரப்பட்ட சராசரி ஆண்டு வருமானம் வெறும் ரூ. 1,500 தான் என்றும் அந்த அறிக்கை தெளிவுபடுத்துகிறது.
முறையான ரசீது மற்றும் ஆவணங்கள் எதுவும் இல்லாமல் பல லட்சம் ரூபாய்கள் இந்தத் திட்டத்தின் பெயரால் செலவிடப்பட்டதாகக் கணக்குக் காட்டப்பட்டிருக்கிறது. ஹரியாணாவில் இத் திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட பணம் வேறு திட்டங்களுக்குச் செலவிடப்பட்டதாக ஆவணங்கள் தெரிவிக்கின்றன. வேலையே நடைபெறாமல் செலவுக் கணக்குகள் மட்டும் எழுதப்பட்ட இடங்கள் ஏராளம்.
மத்தியப் பிரதேசத்தில், பதிவேடுகள் எழுதப்படுவதற்கு முன்பே ஓரிடத்தில் ரூ. 10.68 லட்சம் செலவு செய்யப்பட்டிருக்கிறது. உத்தரப் பிரதேசத்தில், வேலை கோரிய 40,587 குடும்பங்களுக்கு வேலை தரப்படவோ, ஊதியம் தரப்படவோ இல்லை. ஆனால், கணக்கு மட்டும் காட்டப்பட்டிருக்கிறது. தமிழகத்தைப் பொருத்தவரை எந்தவிதச் சிக்கலுமே இல்லை. இங்கே வேலையில்லாதவர்களே கிராமப்புறங்களில் இல்லை என்று அரசு தெரிவித்து, யாருக்குமே ஊதியம் வழங்கவில்லை. ஒதுக்கப்பட்ட நிதி அப்படியே பயன்படுத்தப்படாமல் இருக்கிறதா அல்லது வேறு திட்டத்திற்குப் பயன்படுத்தப்பட்டதா என்பதைத் தணிக்கை அறிக்கை தெளிவுபடுத்தவில்லை.
இதுபோன்ற நல்ல திட்டங்கள் பல மத்திய அரசால் அறிவிக்கப்பட்டாலும், அவற்றை நடைமுறைப்படுத்தி அதன் பயனை மக்களுக்கு எடுத்துச் செல்லும் பொறுப்பு மாநில அரசுகளுக்குத்தான் உண்டு. மத்தியிலிருந்து கிடைக்கும் பணம் என்றாலே, கேள்வி கேட்க ஆளில்லாத அனாமத்து நிதியாதாரம் என்றுதான் மாநில ஆட்சியாளர்களும் அதிகாரிகளும் கருதுகிறார்கள். விளைவு? இந்தத் திட்டங்களின் பயன் பொதுமக்களைச் சென்று சேராமல், இடைத்தரகர்களின் கஜானாக்களை நிரப்புகிறது.
முறையாகச் செயல்படுத்தப்பட்டிருந்தால், அகில இந்திய ரீதியில் மத்திய அரசின் செல்வாக்கு அதிகரித்திருக்கும் என்பது ஒருபுறம் இருக்க, கிராமப்புற மக்களின் அவலமும் வறுமையும் சற்று குறைந்திருக்கும். சென்செக்ஸ் உயரவோ குறையவோ செய்யாது எனும்போது, அதைப்பற்றி யாருக்கு என்ன அக்கறை?