Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Notable’ Category

Aadhimoolam – Anjali by Ku Pugazhendhi

Posted by Snapjudge மேல் மார்ச் 25, 2008

ஆதிமூலம் – ஓவியர் கு. புகழேந்தி

ஓவியர் ஆதிமூலம் ஒரு சிறந்த மனிதர், சிறந்த கலைஞர். நவீன ஓவியம் தமிழ்ச் சூழலில் பரவலாக, அதாவது இதழ்களில் வெளிவருவதற்கு அவருக்கு மிக முக்கியப் பங்கு உண்டு. “எழுத்து’ போன்ற சிற்றிதழ்களில் அவருடைய ஓவியங்கள் வெளிவந்தது, தமிழ் இலக்கியச் சூழலில் ஒரு மாற்றத்தையும் தாக்கத்தையும் ஏற்படுத்தியது.

அதேபோல் வணிக இதழ்களில், கதை, கவிதை, கட்டுைர போன்றவற்றிற்கான ஓவியங்கள், விளக்க ஓவியங்களாக மட்டும் வந்து கொண்டிருந்த நிலையில், அதை மட்டுமே வெளியிட்டு வந்த இதழ்களும், அதுபோன்ற ஓவியங்களை மட்டுமே பார்த்துப் பழகிப்போன வாசகர்களும் நவீன ஓவியத்தைப் பார்க்க, பயன் படுத்தத் தொடங்கி னார்கள் என்றால் அதைத் தொடங்கி வைத்தவர் ஆதிமூலம் அவர்கள்தான்.

ஒரு ஓவியம் கதை, கவிதைக்கான விளக்கப்படம் என்ற நிலையிலிருந்து, அந்தக் கவிதை, கதையின் ஒட்டுமொத்த சாரத்தை, ஓவியத்தில் வெளிப்படுத்தி, ஓவியத்தை தனித்துவமான படைப்பாக நிலைநிறுத்தியவரும் ஆதிமூலம் அவர்கள்தான். அவர் ஓவியங்கள் வாசகர்களிடமும் நல்ல வரவேற்பைப் பெற்றது மட்டுமல்லாமல் அதன் மூலம் நல்ல அடித்தளமும் போடப்பட்டது.

அந்த அடித்தளம் தான் என்னைப் போன்றவர்களை வணிக இதழ்கள் துணிந்து பயன்படுத்தியதற்கு துணை புரிந்தது.

அவருடைய கோடுகளுக்குத் தனி அடையாளம் இருக்கிறது. அவருடைய கோடுகள் வலிமையானவை, வீரியமானவை, அழுத்தமானவை. அவற்றை அவருடைய கருப்பு வெள்ளை ஓவியங்களில் நாம் பார்க்கலாம். தமிழ்த் தொன்மங்கள் என்று சொல்லக் கூடிய அய்யனார் போன்ற நாட்டுப்புற வடிவங்களை கோட்டோவியங்களில் வெளிப் படுத்தியவர். அவருடையக் கோட்டோ வியங்கள் தனித்துவமானது. பார்ப்பவர் களை எளிதில் ஈர்க்கக் கூடியது.

நடிகர்களுடைய நடிப்பைப் பார்க்கும் போது “சிவாஜியைப் போன்று’ நடிப்பு இருக்கிறது என்று சொல்வது போல, சில ஓவியர்கள் எப்படி வரைந்தாலும் அதில் “ஆதிமூலம் போன்று’ இருப்பதை தவிர்க்க முடியாத அளவிற்கு அவருடைய ஓவியங்கள் தனி அடையாளத்தோடு விளங்குகின்றன.

அதேபோல் அவருடைய அரூப வெளிப்பாடான வண்ண ஓவியங்களும், தனித்துவமான அடையாளத்தோடு விளங்குகிறது. சர்வதேச அங்கீகாரத்தைப் பெற்ற ஓவியரான அவர், புதிய தலைமுறைக் கலைஞர் களிடமும் தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பவர். நெருக்கத்தையும் ஏற்படுத்தியிருப்பவர்.

என்னுடைய “உறங்காநிறங்கள்’ ஓவியக்காட்சி நடைபெற்ற பொழுது அழைப்பு அனுப்பியிருந்தேன். அவர் ஊரில் இல்லை. வந்ததும் என்னிடம் தொலைபேசியில் பேசினார். அப்போது நான் அவரிடம் “ஓவியங்களின் ஒளிப் படங்களை ஒரு நாள் உங்களிடம் எடுத்து வருகிறேன்’ என்றேன்.

“”இல்லை, வேண்டாம் அந்த நிலையை நீங்கள் கடந்து விட்டீர்கள். வாய்ப்புக் கிடைக்கும் போது நானே வீட்டிற்கு வந்து பார்க்கிறேன்” என்றார்.

பணிச்சுமை, காலமாற்றம் இவை களால் இல்லத்திற்குச் சென்று சந்திப்பது குறைந்துவிட்டது. இலக்கிய அரங்குகள், சில கண்காட்சிகள், பொது நிகழ்ச்சிகள் என்று ஒரு சிலவற்றில் சந்திப்பதும் குறைந்துவிட்டது.

அவ்வப்போது தொலைபேசி உரையாடல்கள். அப்படி ஒருநாள் அவைரத் தொலைபேசியில் அழைத்து மக்கள் சிவில் உரிமைக் கழகம் (பியூசிஎல்) நடத்தும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள வேண்டும் என்று தெரிவித்தேன். “இல்லை புகழேந்தி, நான் வெளியில் எங்கும் வருவதில்லை, இனிமேல் நீங்கள் எல்லாம் தான் அவைகளை முன்னெடுத்துச் செல்ல வேண்டும்’ என்றார்.

அவர் வெளியில் வராமல் இருந்தாலும், நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் இருந்தாலும், அவர் ஓவியங்கள் செய்வதில் இயங்கிக் கொண்டே இருந்தார். 2008 சனவரி 27 ஞாயிறு அதிகாலை அவருடைய இயக்கம் நின்று விட்டது. ஆனால் அவர் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

அவரது படைப்புகளாலும் பலரது நினைவுகளிலும் தமிழ்க்கலை இலக்கிய வரலாற்றில் ஆதிமூலம் அசைக்க முடியாத ஒரு பெயர்.

Posted in Aadhimoolam, Aadhymoolam, Aathimoolam, Adhimoolam, Anjali, artists, Arts, Athimoolam, Faces, Icons, Lit, Literature, Memoirs, Notable, Painters, Paintings, Pugalendhi, Pugazendhi, Pugazhendhi, Pugazhenthi, Sculpture, Works | Leave a Comment »

Sports in 2007 – Recap, Timeline, Incidents, News, Flashback: Cricket, India, Hockey

Posted by Snapjudge மேல் ஜனவரி 2, 2008

விளையாட்டு

ஜனவரி

ஜன.1: டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஆஸ்திரேலியாவின் லாங்கர் ஓய்வு.

* 2700 ஈலோ புள்ளிகளை கடக்கும் இந்தியாவின் 2 வது செஸ் வீரர் என்ற சாதனையை சசிகிரண் படைத்தார்.

ஜன.3: சர்வதேச கிரிக்கெட்டில் ஷேன் வார்ன் 1000 விக்கெட்டுகளை எட்டினார்.

ஜன.5: ஆஷஸ் டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலிய அணி 50 என கைப்பற்றியது.

ஜன.6: இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை தென் ஆப்ரிக்க அணி 21 என வென்றது.

ஜன.7: சென்னை ஓபன் டென்னிஸ் தொடரின் ஒற்றையர் பட்டத்தை பெல்ஜியத்தின் சேவியர் மலிஸ் கைப்பற்றினார்.

* பிரிமியர் ஹாக்கி லீக் பட்டத்தை பெங்களூரு லயன்ஸ் அணி தக்கவைத்துக்கொண்டது. பைனலில் 30 என ஐதராபாத் சுல்தான்சை வென்றது.

ஜன.18: ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் இந்தியாவின் சானியா மிர்சா 36, 26 என்ற செட்களில் ஜப்பானின் அய்கோவிடம் வீழ்ந்தார்.

ஜன.20: தேசிய பெண்கள் ஜுனியர் கால்பந்து கோப்பை இறுதி போட்டியில் மணிப்பூர் 50 என தமிழகத்தை வீழ்த்தி பட்டம் வென்றது.

ஜன.21: 19 வயதுக்குட்பட்டோருக்கான வினு மன்கட் கிரிக்கெட் கோப்பையை 96 ரன் வித்தியாசத்தில் மும்பையை தோற்கடித்து மகாராஷ்டிரா கைப்பற்றியது.

ஜன.26: ஈரானை 1929 என வீழ்த்தி இரண்டாவது கபடி உலக கோப்பையை இந்திய அணி வசப்படுத்தியது.

* மூனிச்சில் நடந்த ஆண்கள் ஜூனியர் துப்பாக்கி சுடுதல் போட்டிகளின் 10 மீ.,ஏர் பிஸ்டல் பிரிவில் இந்தியாவின் ஜாகிர்கான் தங்கம் வென்றார்.

* யு.ஈ.எப்.ஏ.,தலைவர் தேர்தலில் பிரான்ஸ் கால்பந்து ஜாம்பவான் மைக்கேல் பிளாட்டினி வெற்றி பெற்றார்.

ஜன.27:ஆஸ்திரேலிய ஓபன் பெண்கள் ஒற்றையர் பட்டத்தை அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் வென்றார்.

பிப்ரவரி

பிப்.3: ஜோகன்னஸ்பர்க்கில் நடந்த”டுவென்டி20′ போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்ரிக்கா, வெஸ்ட் இண்டீசை வீழ்த்தியது.

பிப்.8: பாரிஸ் ஓபன் டென்னிஸ் சாம்பியன் பட்டத்தை பெல்ஜியத்தின் ஜஸ்டின் ஹெனின் வென்றார்.

பிப்.9: 33 வது தேசிய விளையாட்டு போட்டிகள் கவுகாத்தியில் துவங்கியது.

பிப்.17: இலங்கை அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரை இந்திய அணி 21 என வென்றது.

பிப்.18: தேசிய விளையாட்டு போட்டிகள் நிறைவடைந்தன.

* பெங்களூரு ஓபன் டென்னிஸ் தொடரில் யரோஸ்லோவா சாம்பியன் பட்டம் கைப்பற்றினார்.

பிப்.21: ஐ.சி.சி.,ஒரு நாள் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் தோனி 2 ம் இடத்துக்கு முன்னேறினார்.

மார்ச்

மார்ச் 1: வெஸ்ட் இண்டீசில் நடந்த உலக கோப்பை தொடரில் பங்கேற்பதற்காக இந்திய வீரர்கள் புறப்பட்டு சென்றனர். பயங்கரவாதிகளின் மிரட்டலையடுத்து முதன் முறையாக வீரர்கள் தேசிய பாதுகாப்பு படையுடன் சென்றனர்.

மார்ச் 4: ஸ்குவாஷ் தர வரிசையில் இந்தியாவின் சவுரவ் கோஷல் 45 வது இடத்துக்கு முன்னேறினார்.

மார்ச் 6: நெதர்லாந்துக்கு எதிரான உலக கோப்பை பயிற்சி போட்டியில் இந்திய அணி 182 ரன் வித்தியாசத்தில் வென்றது.

மார்ச் 8: தேசிய முக்கியத்துவம் வாய்ந்த விளையாட்டு போட்டிகளை “டிடி’யில் கட்டாயம் ஒளிபரப்ப வேண்டும் என்ற மசோதா லோக்சபாவில் நிறைவேற்றப் பட்டது.

மார்ச் 9: வெஸ்ட் இண்டீசுக்குஎதிரான உலக கோப்பை பயிற்சி போட்டியில் இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

மார்ச் 12: உலக கோப்பை போட்டிகள் வெஸ்ட் இண்டீசில் துவங்கின.

* செஸ் தரவரிசையில் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த் முதலிடத்தை கைப்பற்றினார்.

மார்ச் 13: உலக கோப்பை தொடரின் முதல் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ், பாகிஸ்தான் அணிகள் மோதின. இதில் வெஸ்ட் இண்டீஸ் 54 ரன் வித்தியாசத்தில் வென்றது.

மார்ச் 16: வங்கதேச கிரிக்கெட் வீரர் மஞ்சுரல் இஸ்லாம், பைக் விபத்தில் பலியானார். மிகக் குறைந்த வயதில் (22) பலியான டெஸ்ட் வீரர் இவர்தான்.

* நெதர் லாந்துக்கு எதிரான போட்டியில் தென் ஆப்ரிக்க வீரர் கிப்ஸ் ஒரே ஓவரில் தொடர்ச்சியாக 6 சிக்சர்கள் அடித்து சாதனை.

மார்ச்17: வங்கதேசத்துக்கு எதிரான உலக கோப்பை தொடரின் லீக் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்ந்தது.

* உலக கோப்பை தொடரின் லீக் போட்டியில் கத்துக்குட்டி அயர்லாந்து, 3 விக்கெட் வித்தியாசத்தில் முன்னாள் சாம்பியன் பாகிஸ்தானை வென்றது.

மார்ச் 19: சர்வதேச ஒரு நாள் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக இன்சமாம் அறிவித்தார்.

*பெர்முடாவுக்கு எதிரான போட்டியில் 413 ரன்கள் எடுத்த இந்திய அணி உலக கோப்பையில் அதிக பட்ச ஸ்கோர் எடுத்த அணி என்ற சாதனை நிகழ்த்தியது.

மார்ச் 23: இலங்கைக்கு எதிரான முக்கிய லீக் போட்டியில் தோல்வியடைந்த இந்திய அணி உலக கோப்பை தொடரிலிருந்து வெளியேறியது.

மார்ச் 24: தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான போட்டியில் 66 பந்தில் சதம் அடித்த ஆஸ்திரேலியாவின் ஹைடன், உலக கோப்பையில் அதி வேக சதம் அடித்த வீரர் என்ற சாதனை.

மார்ச் 29: உலக கோப்பையில் படுதோல்வியடைந்த இந்திய வீரர்கள் நாடு திரும்பினர்.

* அர்ஜென்டினா கால்பந்து ஜாம்பவான் மாரடோனா ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

மார்ச் 30: ஒரு நாள் போட்டிகளிலிருந்து இந்திய சுழற்பந்து வீச்சாளர் கும்ளே ஓய்வு.

ஏப்ரல்

ஏப்.4: இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பதவியை சாப்பல் ராஜினாமா.

ஏப்.14: ஏ1 கிராண்ட் பிரிக்ஸ் மோட்டார் பந்தயத்தில் இந்திய வீரர் நரேன் கார்த்திகேயன் ஐந்தாம் இடம் பிடித்தார்.

ஏப்.21: தேசிய அளவில் நடத்தப்பட்ட அறிமுக “டுவென்டி20′ தொடரில் தமிழக அணி சாம்பியன் பட்டம் வென்றது.

ஏப்.27: நியூசிலாந்து அணியின் கேப்டன் பொறுப்பை பிளமிங் ராஜினாமா செய்தார்.

ஏப்.28: உலக கோப்பை சாம்பியன் பட்டத்தை தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆஸ்திரேலிய அணி கைப்பற்றியது. பைனலில் இலங்கை அணியை வென்றது.

* பீஜிங் ஒலிம்பிக் தொடருக்கான ஜோதி மும்பை வந்தடைந்தது.

மே

மே 2: உலக கோப்பை வென்ற ஆஸ்திரேலிய வீரர்களுக்கு தபால் தலை வெளியிடப்போவதாக அந்நாட்டு அரசு அறிவிப்பு.

மே 5 : முதல் தரப் போட்டிகளிலிருந்து தமிழக வீரர் சரத் ஓய்வு.

மே 6 : சர்வதேச டென்னிஸ் போட்டிகளிலிருந்து பெல்ஜியம் வீராங்கனை கிம் கிளைஸ்டர்ஸ் ஓய்வு.

* இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கான சம்பள ஒப்பந்த முறையை ரத்து செய்த பி.சி.சி.ஐ., செயல்பாடுகளுக்கு ஏற்ப சம்பளம் வழங்கப்போவதாக அறிவிப்பு.

மே 13: ஜிம்பாப்வே சுற்றுப்பயணம் மேற்கொள்ள ஆஸ்திரேலிய அணிக்கு அந்நாட்டு பிரதமர் ஜான் ஹோவர்ட் தடை விதித்தார்.

மே 14: இலங்கை அணியின் பயிற்சியாளர் பதவியிலிருந்து டாம்மூடி விலகல்.

மே 15: வங்கதேசத்துக்கு எதிரான ஒரு நாள் தொடரை இந்தியா 20 என கைப்பற்றியது.

* ஜிம்பாப்வேக்கு எதிரான ஒரு நாள் தொடரை ஆஸ்திரேலியா ரத்து செய்தது.

மே 21: பிரேசில் கால்பந்து வீரர் ரொமாரியோ டி சவுசா ஆயிரம் கோல் அடித்த இரண்டாவது கால்பந்து வீரர் என்ற புதிய சாதனை படைத்தார்.

மே 23: இலங்கைக்கு எதிரான ஒரு நாள் தொடரை பாகிஸ்தான் 21 என வென்றது.

* போதை மருந்து பயன்படுத்தியதாக முன்னாள் கிரிக்கெட் வீரர் மணிந்தர் சிங் கைது.

மே 26: வங்கதேசத்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் தினேஷ் கார்த்திக், ஜாபர், டிராவிட், சச்சின் என நான்கு இந்திய பேட்ஸ்மேன்கள் ஒரே இன்னிங்சில் சதம் கடந்து புதிய சாதனை படைத்தனர்.

மே 27: வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்தியா 10 என கைப்பற்றியது.

மே 29: ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் கிரேக் புளுவட் சர்வதேச போட்டிகளியிலிருந்து ஓய்வு.

ஜூன்

ஜூன் 8: ஐ.சி.சி., தற்காலிக தலைவராக தென் ஆப்ரிக்காவின் ரே மாலி தேர்வு.

ஜூன் 9: பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் பெல்ஜியத்தின் ஜஸ்டின் ஹெனின் சாம்பியன் பட்டம் வென்றார்.

ஜூன் 10: தொடர்ந்து மூன்றாவது முறையாக பிரெஞ்சு ஓபன் தொடரை வென்று, ஸ்பெயினின் ரபேல் நடால் சாதனை.

ஜூன் 11: இந்திய அணியின் பயிற்சியாளர் பதவியை ஏற்க கிரஹாம் போர்டு மறுப்பு.

ஜூன் 12: சேவக், ஹர்பஜன் மற்றும் முனாப், ஒரு நாள் மற்றும் டெஸ்ட் தொடருக்கான அணியிலிருந்து நீக்கம். தோனி துணைக் கேப்டனாக நியமனம்.

ஜூன் 16: இந்திய அணியின் சம்பள ஒப்பந்தத்தில் தோனி மற்றும் யுவராஜ் “ஏ’ பிரிவுக்கு முன்னேற்றம். சேவக், ஹர்பஜன், லட்சுமண் மற்றும் பதான் “பி’ பிரிவுக்கு தள்ளப்பட்டனர்.

ஜூன் 18: ஆசிய தடகள கிராண்ட்பிரிக்சில் இந்தியா 3 தங்கம் உட்பட 12 பதக்கம் வென்றது.

ஜூன் 19: இங்கிலாந்து தொடரில் பேட்டியளிக்க இந்திய வீரர் களுக்கு தடை.

* 30 ஆண்டுகளுக்கு பின் ஐ.சி.சி., டெஸ்ட் பந்துவீச்சாளர்களுக்கான “டாப்10′ பட்டியலுக்குள் நுழைந்த முதல் இங்கிலாந்து சுழற்பந்து வீச்சாளர் என்ற பெருமையை மான்டி பனேசர் பெற்றார்.

ஜூன் 21: இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சந்தீப் பாட்டீல், இந்தியன் கிரிக்கெட் லீக் அமைப்பில் இணைந்தார்.

ஜூன்28: விம்பிள்டன் டென்னிஸ் ஒற்றையர் இரண்டாவது சுற்றில் இந்தியாவின் சானியா மிர்சா அதிர்ச்சி தோல்வி.

ஜூலை

ஜூலை1: அயர்லாந்தில் நடந்த தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான ஒரு நாள் தொடரை இந்தியா 21 என வென்றது.

* பெல்ஜியத்தில் நடந்த சாம்பியன்ஸ் சாலஞ்ச் ஹாக்கி தொடரில் இந்தியாவுக்கு வெண்கலம்.

ஜூலை 2: “டுவென்டி20′ உலக கோப்பை தொடருக் கான பாகிஸ்தான் அணியி லிருந்து முன்னணி வீரர்கள் முகமது யூசுப், அப்துல் ரசாக் நீக்கம்.

ஜூலை 3: ஸ்காட்லாந்தில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதவிருந்த ஒரு நாள் போட்டி மழை காரணமாக ரத்து.

ஜூலை7: “டுவென்டி20′ உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியில் பங்கேற்க போவதில்லை என சச்சின், கங்குலி, டிராவிட் அறிவிப்பு.

* விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் பெண்கள் ஒற்றையரில் அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸ் சாம்பியன்.

ஜூலை8: விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் தொடர்ந்து ஐந்தாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்று, சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் சாதனை.

ஜூலை 9: ஸ்பெயினில் நடந்த லியோன்ஸ் செஸ் தொடரில் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த் “ஹாட்ரிக்’ சாம்பியன் பட்டம் வென்றார்.

ஜூலை 13: தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக இந்திய அணி வென்ற ஒரு நாள் தொடர் கோப்பை காணாமல் போனது.

ஜூலை 16: பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளராக ஆஸ்திரேலியாவின் ஜெப் லாசன் நியமனம்.

ஜூலை 17: டெஸ்ட் போட்டிக்கான ஐ.சி.சி., தரவரிசை பட்டியலிலிருந்து ஜிம்பாப்வே நீக்கப்பட்டது.

ஜூலை 20: இத்தாலி கால்பந்து வீரர் பிரான்சிஸ்கோ டோட்டி சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு.

ஜூலை 28: இங்கிலாந்துக்கு எதிரான டிரன்ட்பிரிட்ஜ் டெஸ்டில் சச்சின் 11,000 ரன்கள் கடந்தார். இச்சாதனை செய்யும் மூன்றாவது வீரராவார்.

ஜூலை 29: இங்கிலாந்தின் சிறந்த விளையாட்டு வீரராக இந்திய வம்சவாளி வீரர் மான்டி பனேசர் தேர்வு.

ஆகஸ்ட்

ஆக.5: <உலக கோப்பை வில்வித்தை தொடரில் இந்தியாவின் டோலா பானர்ஜி “ரிகர்வ்’ பிரிவில் தங்கம் வென்றார்.

ஆக. 7: “டுவென்டி20′ உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக தோனி நியமிக்கப்பட்டார்.

ஆக.11: இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்டில் கேப்டன் மைக்கேல் வானை வீழ்த்தி சர்வதேச அரங்கில் 900 விக்கெட் வீழ்த்திய மூன்றாவது வீரர் என்ற பெருமையை கும்ளே பெற்றார்.

ஆக.13: இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்தியா 10 என கைப்பற்றியது.

ஆக.16: உலக பாட்மின்டன் சாம்பியன்ஷிப் தொடரின் காலிறுதிக்கு இந்தியாவின் அனுப் ஸ்ரீதர் முன்னேற்றம்.

ஆக.20: ஐம்பதாவது ஏ.டி.பி., பட்டம் வென்று பெடரர் அசத்தல்.

ஆக.23: ரயில்வே மைதானங்களை ஐ.சி.எல்., அமைப்பு பயன்படுத்தி கொள்ள மத்திய அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் ஒப்புதல்.

ஆக.24: ஐ.சி.எல்., அமைப்புக்குசவாலாக இந்தியன் பிரிமியர் லீக் (ஐ.பி.எல்.,), இந்திய கிரிக்கெட் போர்டு அறிமுகப்படுத்தியது.

ஆக. 26: ஐ.பி.எல்., அமைப்பில் தமிழக வீரர் பதானி இணைந் தார்.

ஆக. 29: அஞ்சும் சோப்ரா(கிரிக்கெட்), சுனிதா குல்லு (ஹாக்கி), கே.எம்.பீனு (தடகளம்), விஜய குமார்(துப்பாக்கி சுடுதல்), சேட்டன் ஆனந்த (பாட்மின்டன்) உள்ளிட்ட 14 பேருக்கு ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் அர்ஜுனா விருது வழங்கினார்.

செப்டம்பர்

செப். 2: இலங்கைக்கு எதிரான ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியில் இந்தியா 20 கோல் அடித்து இத்தொடரில் புதிய சாதனை படைத்தது.

* தென் ஆப்ரிக்க ஆல்ரவுண்டர் ஆன்ட்ரூ ஹால் சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு.

செப். 4: சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து இலங்கை வீரர் உபுல் சந்தனா ஓய்வு.

செப். 7: சகவீரர் ஆசிப் தொடையில் தாக்கிய அக்தர் “டுவென்டி20′ உலக கோப்பைக்கான அணியிலிருந்து நீக்கம்.

செப். 8: இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் தொடரை இந்தியா 34 என பறி கொடுத்தது.

செப். 9: யு.எஸ்., ஓபன் கிராண்ட்ஸ்லாம் தொடரின் பெண்கள் ஒற்றையரில் பெல்ஜியத்தின் ஜஸ்டின் ஹெனின் சாம்பியன் பட்டம் வென்றார்.

செப். 10: யு.எஸ்., ஒபனில் கோப்பை வென்ற சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் 12வது கிராண்ட்ஸ்லாம் வென்றார்.

செப். 11: முதல் “டுவென்டி20′ உலக கோப்பை தொடர் தென் ஆப்ரிக்காவில் துவங்கியது. துவக்க ஆட்டத்தில் அதிரடியாக விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் கெய்ல், “டுவென்டி20’ல் சதம் கடந்த முதல் வீரர் என்ற சாதனை படைத்தார்.

* ஐ.சி.சி.,யின் சிறந்த கிரிக்கெட் வீராங்கனைக்கான விருதை இந்தியாவின் ஜூலன் கோஸ்வாமி தட்டிச் சென்றார்.

செப். 12: நியூசிலாந்து கேப்டன் ஸ்டீபன் பிளமிங் ஒரு நாள் போட்டிகளிலிருந்து ஓய்வு.

செப். 13: “டுவென்டி20′ உலக கோப்பையில் வங்கதேசத்திடம் தோல்விய டைந்த வெஸ்ட் இண்டீஸ் முதல் சுற்றிலே வெளியேறியது.

செப். 14: கேப்டன் பதவியில் இருந்து ராகுல் டிராவிட் திடீர் ராஜினாமா.

செப். 18: ஆஸ்திரேலியாவுடனான ஒரு நாள் தொடருக்கு இந்திய அணியின் கேப்டனாக தோனி தேர்வு.

செப். 26: உலக கோப்பை வென்ற இந்திய வீரர்களுக்கு மும்பையில் உற்சாக வரவேற்பு.

* கிரிக்கெட் வீரர்களுக்கு பாராட்டு குவிய, ஆசிய கோப்பை ஹாக்கி வென்ற இந்திய வீரர்கள் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அறிவிப்பு.

செப். 27: பி.சி.சி.ஐ.,யின் புதிய சம்பள ஒப்பந்த அறிவிப்பில் ஜாகிர் கான் “ஏ’ பிரிவுக்கு முன்னேற்றம்.

செப். 28 : ஆசிய கோப்பை வென்ற ஹாக்கி வீரர்களுக்கு ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா தலா ரூ. 5 லட்சம் வழங்குவதாக அறிவிப்பு.

* தேசிய கிரிக்கெட் அகாடமியின் புதிய தலைவராக ரவி சாஸ்திரி நியமனம்.

அக்டோபர்

அக். 1: இந்தியன் கிரிக்கெட் போர்டு நடத்தும் ஐ.பி.எல்., அமைப்பில் இலங்கை வீரர் சனத் ஜெயசூர்யா இணைந்தார்.

அக். 3: பாகிஸ்தானுக்கு எதிரான கராச்சி டெஸ்டில் தென் ஆப்ரிக்காவின் பவுச்சர் (396)அதிக விக்கெட் வீழ்ச்சிக்கு காரணமான விக்கெட் கீப்பர் என்ற சாதனை படைத்தார்.

அக். 4: இலங்கை அதிரடி மன்னன் ஜெயசூர்யா 400வது ஒரு நாள் போட்டியில் பங்கேற்ற முதல் வீரர் என்ற பெருமை பெற்றார்.

அக். 5: உலக சாம்பியன் பட்டம் வென்ற செஸ் வீரர் விஸ்வநாதன் ஆனந்துக்கு தமிழக அரசு ரூ. 25 லட்சம் பரிசு .

அக். 6: ஊக்கமருந்து பயன்படுத்தியதாக ஒப்புக்கொண்ட அமெரிக்க தடகள வீராங்கனை மரியன் ஜோன்ஸ் சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு.

அக். 8: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்காவது ஒரு நாள் போட்டியில் அபாரமாக விளையாடிய சச்சின் ஒரு நாள் போட்டிகளில் அதிக அரைசதம் கடந்தவர் என்ற சாதனை படைத்தார்.

அக். 11: சகவீரர் ஆசிப்பை தொடையில் தாக்கிய விவகாரத்தில் பாகிஸ்தானின் அக்தருக்கு 13 போட்டிகளில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டது.

அக். 12: சர்வதேச போட்டிகளிலிருந்து பாகிஸ்தான் வீரர் இன்சமாம் ஓய்வு.

அக். 17: இந்தியாவுடனான ஒரு நாள் தொடரை ஆஸ்திரேலியா 42 என வென்றது.

அக். 21: உலக ராணுவ விளையாட்டு போட்டியில் இந்தியா 19வது இடம்பிடித்தது.

அக். 27: பாகிஸ்தானுக்கு எதிரான ஒரு நாள் தொடரிலிருந்து டிராவிட் நீக்கம்.

நவம்பர்

நவ.1: இந்தியாவுக்கு எதிரான தொடரிலிருந்து பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஆசிப் விலகினார்.

* ஊக்கமருந்து எடுத்துக் கொண்டது தொடர்பாக சர்ச்சை வெடிக் கவே, சர்வதேச டென்னிஸ் போட்டிகளிலிருந்து சுவிட் சர்லாந்தின் ஹிங்கிஸ் ஓய்வு.

நவ.2: மக்காவ் நகரில் நடந்த ஆசிய உள்ளரங்கு போட்டிகளின் செஸ் பிரிவில் இந்தியாவின் சசிகிரண் தங்கம் வென்றார்.

நவ.3: ஆஸ்திரேலிய, இலங்கை அணிகள் மோதும் டெஸ்ட் தொடருக்கு வார்ன் முரளிதரன் கோப்பை என பெயரிடப் பட்டது.

நவ.5: இந்தியபாகிஸ்தான் அணிகள் மோதும் ஒரு நாள் தொடர் கவுகாத்தியில் துவங்கியது.

* பாரிஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரை அர்ஜென்டினாவின் நள்பாந்தியன் கைப்பற்றினார். பைனலில் ஸ்பெயினின் நாடலை வீழ்த்தினார்.

நவ.6: இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் பொறுப்பை ஏற்க சச்சின் மறுப்பு.

* இந்தியன் கிரிக்கெட் லீக் தொடரில் பங்கேற்கும் அணிகள் அறிவிக்கப் பட்டன.

நவ.8: டெஸ்ட் அணிக்கான இந்திய கேப்டனாக கும்ளே நியமிக்கப்பட்டார்.

நவ.12: மாட்ரிட் ஓபன் தொடரில் பெல்ஜியத்தின் ஹெனின் பட்டம் வென்றார்.

* முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் கே.சி.இப்ராகிம் மரணமடைந்தார்.

நவ.13: தொடர்ச்சியாக நான்காவது ஆண்டாக உலகின் “நம்பர்1′ டென்னிஸ் வீரராக சுவிட்சர்லாந்தின் பெடரர் தேர்வு செய்யப்பட்டார்.

நவ.17: டெஸ்ட் அரங்கில் 100 சிக்சர்கள் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை கில்கிறிஸ்ட் படைத்தார்.

நவ.20: இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலிய அணி 20 என கைப்பற்றியது.

நவ.24: பாகிஸ்தான் வீரர்களுக்கு பயங்கரவாதிகள் இமெயில் மூலம் மிரட்டல் விடுத்ததையடுத்து பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது.

நவ.30: இந்தியன் கிரிக்கெட் லீக் போட்டிகள் பஞ்சகுலாவில் துவங்கின.

டிசம்பர்

டிச. 5: லால் பகதுõர் பெண்கள் ஹாக்கி தொடரில் இந்திய அணி சாம்பியன் பட்டம் கைப்பற்றியது.

டிச. 6: உலக ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டிகள் சென்னையில் துவங்கின.

* ஐ.சி.சி.,டெஸ்ட் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் சங்ககரா முதலிடம் பிடித்தார்.

டிச. 7: ஜிம்பாப்வேக்கு எதிரான ஒரு நாள் தொடரை வெஸ்ட் இண்டீஸ் கைப்பற்றியது.

டிச. 10: காமன்வெல்த் வலுதுõக்குதல் போட்டியில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது.

டிச. 12: 27 ஆண்டுகளுக்கு பின்னர் பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரை சொந்த மண்ணில் இந்திய அணி கைப்பற்றியது.

அ. சிறப்பு தகவல்கள்

1. உல்மர் மரணம்

முன்னாள் இங்கிலாந்து வீரரும், பாகிஸ் தான் பயிற்சியாளருமான பாப் உல்மர், மார்ச் 18 ம் தேதி கிங்ஸ்டனில் உள்ள ஓட்டலில் மர்மமான முறையில் மரணமடைந்தார். இவரது மரணம் கிரிக்கெட் உலகில் பரபரப்பை ஏற்படுத்தியது.

2. முடி சூடா மன்னன்

ஆஸ்திரேலிய ஓபன் தொடரை தொடர்ந்து மூன்றாம் முறையாக “நம்பர்1′ வீரரான சுவிட்சர்லாந்தின் பெடரர் கைப்பற்றினார். இறுதி போட்டியில் சிலியின் பெர்னாண்டோ கோன்சாலசை வீழ்த்தினார். டென்னிஸ் உலகின் முடி சூடா மன்னனாக வலம் வருகிறார்.

3. கபில் தலைமையில் ஐ.சி.எல்.,

வெஸ்ட் இண்டீசில் நடந்த உலக கோப்பை தொடரில் இந்திய அணி படுதோல்வி அடைந்ததையடுத்து, பி.சி.சி.ஐ.,அமைப்புக்கு சவாலாக இந்தியன் கிரிக்கெட் லீக் (ஐ.சி.எல்.,)என்ற அமைப்பை “ஜீ’ டிவி உருவாக்கியது. இதன் செயற்குழு தலைவராக முன்னாள் கேப்டன் கபில் தேவ் நியமிக்கப்பட்டார்.

4. கோப்பை உற்சாகம்

உள்ளூரில் சூரப்புலிகள் என்பதை இந்திய அணி மீண்டும் ஒரு முறை நிரூபித்தது. வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக நடந்த ஒரு நாள் தொடரை 31 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. வதோதராவில் நடந்த நான்காவது போட்டியில் 160 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. கோப்பையுடன் டிராவிட்.

5. சைமண்ட்ஸ் சர்ச்சை

இந்தியாவுக்கு எதிரான வதோதரா போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் கறுப்பு இன வீரரான சைமண்ட்சை “குரங்கு’ என ரசிகர்கள் கேலி செய்ததாக புகார் தெரிவிக்கப்பட்டது. அடுத்து நடந்த நாக்பூர் போட்டியிலும் ரசிகர்களின் கேலி தொடர, கிரிக்கெட்டில் மீண்டும் இனவெறி சர்ச்சை வெடித்தது.

6. முதன் முறையாக…

அயர்லாந்தில் நடந்த தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான ஒரு நாள் தொடரை இந்தியா 21 என வென்று, கோப்பை கைப்பற்றியது. இதன்மூலம் அன்னிய மண்ணில் தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான தொடரை முதன் முறையாக வென்று சாதித்தது. கோப்பையுடன் உற்சாக “போஸ்’ கொடுக்கும் இந்திய வீரர்கள்.

7. உயரிய விருது

இந்திய துப்பாக்கி சுடுதல் வீரர் மானவ்ஜித் சிங் சாந்து 2006ம் ஆண்டு நடந்த உலக துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்று அசத்தினார். இவரை கவுரவிக்கும் வகையில் 200607ம் ஆண்டுக்கான கேல் ரத்னா விருது வழங்கப்பட்டது. ஜனாதிபதி பிரதிபா பாட்டீலிடம் பதக்கத்தை பெற்றுக் கொள்ளும் மானவ்ஜித்.

8. கும்ளே சதம்

ஓவல் டெஸ்டில் பிரமாதமாக பேட் செய்த கும்ளே முதல் சதம் கடந்து அசத்தினார். தலைசிறந்த பேட்ஸ்மேனை போல் விளையாடிய இவர் 110 ரன்கள் எடுத்து டெஸ்ட் அரங்கில் 500 விக்கெட்டுக்கு மேல் வீழ்த்தியவர்கள் வரிசையில் சதம் கடந்த முதல் வீரர் என்ற சாதனை படைத்தார்.

9. விடைபெற்றார் ஜோன்ஸ்

ஊக்கமருந்து பயன்படுத்தியதை ஒப்புக்கொண்ட அமெரிக்க தடகள வீராங்கனை மரியன் ஜோன்ஸ் அதற்காக அமெரிக்க மக்களிடமும் தனது ரசிகர்களிடமும் மன்னிப்பு கேட்டார். சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

10. தங்க மங்கை

பெண்கள் செஸ் அரங்கில் இந்திய வீராங்கனை கோனெரு ஹம்பியின் ஆதிக்கம் தொடர்ந்தது. மக்காவ் நகரில் 22 நாடுகள் பங்கேற்ற இரண்டாவது ஆசிய உள்ளரங்கு செஸ் போட்டிகள் நடந்தன. இதில் உலகின் “நம்பர்2′ வீராங்கனையான ஹம்பி தங்கம் வென்று நாட்டுக்கு பெருமை தேடி தந்தார்.

11. ஹாக்கியில் கலக்கல்

சென்னையில் நடந்த ஆசிய கோப்பை ஹாக்கி தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய அணி, கொரியாவை 72 என்ற கோல் கணக்கில் எளிதாக வென்று, கோப்பை கைப்பற்றியது. தேசிய விளையாட்டான ஹாக்கியில் கோப்பை வென்ற உற்சாகத்தில் “போஸ்’ கொடுக்கும் இந்திய வீரர்கள்.

12. சென்னை சூப்பர்ஸ்டார்ஸ்

அரியானா மாநிலம் பஞ்சகுலாவில் ஐ.சி.எல்., அமைப்பு நடத்திய “டுவென்டி20′ தொடர் வெற்றிகரமாக முடிந்தது. இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர்ஸ்டார்ஸ் அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் சண்டிகர் லயன்சை வீழ்த்தி கோப்பை வென்றது. மகிழ்ச்சியில் சென்னை சூப்பர்ஸ்டார்ஸ் அணியினர்.

Posted in 20, 20-20, 2007, 2020, America, athletics, Aus, Australia, baseball, Century, championships, Chronology, Commonwealth, Cricket, Cup, Dhoni, Disqualify, Dope, Faces, Flashback, Football, Games, Ganguly, Hockey, ICC, ICL, Incidents, Jones, Kapil, Kumble, Lara, Losers, Matches, Mirza, Monkey, Murali, Muralidharan, Muthiah, News, Notable, ODI, people, Players, Race, racism, Racists, Recap, Records, Sachin, Sania, Soccer, Spectator, Sports, steroids, Symonds, T20, Tendulkar, Tennis, Tests, Timeline, TV, US, USA, Warne, Winners, Zee | Leave a Comment »

Sai Krishnan – 7th International Abilympics photography champ

Posted by Snapjudge மேல் ஜனவரி 1, 2008

நிழற் படங்களல்ல… நிஜப்படங்கள்!

யுகன்

ஒரு கேனன் 5ஈ கேமிரா, ஒரு ஆப்பிள் லேப்-டாப் கம்ப்யூட்டர், ஏராளமான தன்னம்பிக்கையுடன் விமானமேறிய சாய் கிருஷ்ணன் என்னும் இளைஞர் போலியோவால் பாதிக்கப்பட்டவர், சமீபத்தில் ஜப்பானின் ஷிஷோகா நகரத்தில் நடந்த ஏழாவது சர்வதேச அளவிளான எபிலிம்பிக்ஸ் போட்டியில், புகைப்படப் பிரிவில் வெள்ளிப் பதக்கத்தை அவர் வென்றிருக்கிறார். சர்வதேச அளவில் உடல் திறன் குறைந்தவர்களுக்காக நடத்தப்படுவது எபிலிம்பிக்ஸ். இதில் பங்கேற்று வெள்ளிப் பதக்கம் வென்றது வரையான சுவாரஸ்யமான விஷயங்களை நம்மிடம் சாய் கிருஷ்ணா பகிர்ந்து கொண்டதிலிருந்து…

“”எனக்குச் சின்ன வயதிலிருந்தே புகைப்படம் எடுப்பதில் ஆர்வத்தை வளர்த்தவர் என் தந்தை. அவர்தான் நான் ஏழாவது படிக்கும்போதே எனக்கு ஒரு ஹாட்-ஷாட் கேமிராவை வாங்கிக் கொடுத்து ஊக்கப்படுத்தினார். புகைப்படம் எடுப்பதில் ஆர்வம் இருந்தாலும் இது மிகவும் காஸ்ட்லியான ஹாபியாக இருப்பதால், என்னுடைய முயற்சிகளுக்குப் பொருளாதார ரீதியிலான வேகத்தடை நிச்சயம் இருந்தது. இதையும் தாண்டி நான் மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்பதற்கு எனக்கு உதவியாக இருந்தது வித்யாசாகர் என்னும் தன்னார்வத் தொண்டு நிறுவனம்.

தேசிய அளவில் நான் உடல் திறன் குறைந்தவர்களுக்கான போட்டியில் பங்கெடுப்பதற்கு, “ஆம்பிஷன் ஃபோட்டோகிராஃபி அகடமி’யின் நிறுவனரான ராஜா பொன்சிங் எனக்கு நிறைய நுட்பங்களைக் கற்றுத் தந்தார். இவரைத் தவிர, ஷரத் அக்ஷர், ராஜீவ் மேனனின் “மைன்ட்ஸ்க்ரீன் ஃபோட்டோகிராஃபி இன்ஸ்டிட்யூட்’டின் முதல்வரான ஞானசேகரன் மற்றும் சுரேஷ், குமாரசுவாமி போன்றவர்களின் வழிநடத்துதலுடன்தான் நான் தேசிய அளவிலான போட்டிகளில் ஜெயித்தேன்.

ஜப்பானில் நடந்த எபிலிம்பிக்கைப் பொறுத்தவரை இது சர்வதேச அளவில் நடக்கும் போட்டி என்பதால் அதற்குத் தகுந்த தொழில்நுட்பத்துடன் செல்ல வேண்டும் என்று முடிவு செய்தேன். இந்தப் போட்டிக்காக நான் பணிபுரியும் ஹெச்.சி.எல். நிறுவனமே கேனன்5டி கேமிராவையும், ஆப்பிள் லேப்-டாப்பையும் வழங்கியது. மத்திய அரசு மற்றும் தேசிய எபிலிம்பிக் அசோசியேஷன் ஆஃப் இந்தியாவின் உதவியுடன்தான் என்னால் ஜப்பானுக்குப் போய் இந்தப் போட்டியில் பங்கேற்க முடிந்தது.

உலகம் முழுவதுமிருந்தும் பேச்சுத் திறன், செவித் திறன், கை, கால் போன்ற உறுப்புகளின் செயல்பாடுகளில் குறையுள்ள 400க்கும் மேற்பட்டவர்கள் 120 நாடுகளிலிருந்து பங்கேற்றனர். புகைப்படப் போட்டியில் 25 நாடுகளிலிருந்து 26 பேர் பங்கேற்றனர். இந்தியாவிலிருந்து புகைப்படப் போட்டிக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் நானும்,

கோவையைச் சேர்ந்த ஹரி என்பவரும்தான்.

டெய்லரிங், மோட்டார் ஆக்டிவிடி, எலக்ட்ரானிக்ஸ் அசெம்பிளிங், ஸ்வெட்டர் பின்னுவது, கணிப்பொறியிலேயே வரைவது… என்று பல வகையான போட்டிகளும் நடந்தபடி இருக்கும். இந்தப் போட்டியில் பங்கெடுப்பவர்களையே, அந்தச் சூழ்நிலையின் பின்னணியோடு, பிரம்மாண்டத்தோடு எத்தனை படம் வேண்டுமானாலும் எடுக்கலாம்.

இறுதியாக நாம் எடுத்தவற்றிலிருந்து ஐந்து புகைப்படங்களை நாமே தேர்ந்தெடுத்து, அதற்குப் பொருத்தமான “கமெண்ட்’ டையும் எழுதிச் சமர்ப்பிக்க வேண்டும். சர்வதேச அளவில் புகைப்படம் எடுப்பதில் புகழ்பெற்ற நடுவர்களைக் கொண்ட குழு இறுதி முடிவை எடுக்கும். என்னைப் பொறுத்தவரை நான் எப்போதுமே சப்ஜெக்ட்டிற்குத்தான் படமெடுக்கும்போது முன்னுரிமை கொடுப்பேன். பின்னணிக்கு அல்ல. இந்த அடிப்படையில் “வெளிச்ச துவாரம்’ என்னும் தலைப்பில் நான் எடுத்த உடல் திறன் குன்றியவரின் திறனும், ஸ்வெட்டர் பின்னும் கைகளின் திறனை வெளிப்படுத்தும் புகைப்படமும், “அசெம்பிளிங்’ செய்யும் பெண்ணின் பார்வைக் கூர்மையை விளக்கும் புகைப்படமும் எனக்கு இந்தப் பரிசை வாங்கித் தந்ததாக நம்புகிறேன்.

புகைப்படம் எடுப்பதற்கு நாம் தேர்ந்தெடுத்த கோணம், நாம் முன்னிலைப்படுத்தியிருக்கும் சப்ஜெக்ட், குறிப்பிட்ட புகைப்படம் ஒட்டுமொத்தமாகத் தெரிவிக்கும் செய்தி… போன்ற விஷயங்களின் அடிப்படையில் 26 போட்டியாளர்களிலிருந்து மூன்று பேரைத் தேர்ந்தெடுத்தனர். நான் வெள்ளிப் பதக்கம் பெற்றேன். கோவையிலிருந்து வந்திருந்த ஹரி வெண்கலப் பதக்கம் பெற்றார். பங்கேற்ற 26 பேரில் 21 பேர் தொழில்முறைப் புகைப்படக்காரர்கள் என்பது முக்கியமான விஷயம். கடந்த இரண்டு முறையாக இந்தச் சர்வதேசப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற ஆஸ்திரிய நாட்டின் போஸ்க்தான் இந்தமுறையும் தங்கம் வெல்வார் என்று எதிர்பார்த்தேன். ஆனால் அவர் இந்தமுறை ஆறாவது இடத்திற்குப் போய்விட்டார். தற்போது ஹாங்காங்கைச் சேர்ந்த ஒருவர்தான் தங்கம் வென்றார்.

உலக அளவிளான எபிலிம்பிக்ஸ் போட்டியில் இந்தியாவின் சார்பாகப் பங்கேற்றுத் திரும்பியிருக்கிறோம். அரசு சார்பாகவும் சரி, தனியார் சார்பாகவும் சரி எந்த பாராட்டும்,அங்கீகாரமும் இதுவரை கிடைக்கவில்லை. எவ்வளவோ விஷயங்களுக்கு முக்கியத்துவம் தரும் பத்திரிகைகளும் ஊடகங்களும் கூட எங்களைத் திரும்பிப் பார்க்காமல் இருப்பதுதான் மனசுக்குக் கஷ்டமாக இருக்கிறது. மற்றபடி, சாமான்ய மக்களின் வாழ்க்கை அனுபவங்களை நிழற் படங்களாக அல்ல… நிஜப்படங்களாகப் பதிவு செய்யவேண்டுமென்று பெரிய திட்டமே இருக்கிறது. பார்க்கலாம்…” என்றார் நெகிழ்ச்சியுடன் சாய் கிருஷ்ணன்.

Posted in 5MP, Abilympics, Achievements, Achievers, Camera, Cannon, Canon, Challenged, Coimbatore, disabilities, disability, Disabled, Faces, Films, handicap, Handicapped, Hari, HCL, Human Resources, IAF, India, International, Kovai, NAAI, Notable, people, Photographer, Photographs, Photos, Pictures, Polio, Saikrishnan, Shizuoka, Skills, Sponsors, Sponsorships, Sponz, Vidyasagar, vocational, World | 1 Comment »

Ilaiyaraja’s son & Music Director Yuvan Shankar Raja files for Divorce

Posted by Snapjudge மேல் ஓகஸ்ட் 7, 2007

Yuvan shankar raja marriage Wedding snapஇளையராஜா மகன் யுவன்சங்கர் ராஜா விவாகரத்து வழக்கு : விருப்பத்துடன் பிரிகிறார்கள்

சென்னை, ஆக. 7-

இசைஞானி இளையராஜா வின் இளைய மகன் யுவன்சங்கர் ராஜா. இவரும் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக திகழ்கிறார்.

யுவன்சங்கர் ராஜா 2002-ம் ஆண்டு லண்டனில் `பிரண்ட்’ என்ற இடத்தில் இசை நிகழ்ச்சி நடத்தினார். இந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்த லண்டனை சேர்ந்த சந்திரன் சுஜாயா என்ற பெண்ணுடன் யுவன்சங்கர் ராஜாவுக்கு நட்பு ஏற்பட்டது. நாளடைவில் இருவரும் காதலிக்க

தொடங்கினார்கள்.வீட்டிற்கு தெரியாமலே இருவரும் 3.9.03-ம் ஆண்டு லண்டனில் பதிவுத்திருமணம் செய்து கொண்டார்கள். இந்த விஷயம் இருவரது வீட்டுக்கும் தெரிய வந்ததும் அதிர்ச்சி அடைந்தனர்.

பின்னர் இரு வீட்டாரும் பேசி முறைப்படி திருமணம் நடத்த முடிவு செய்தனர். அதன்படி 21.3.05-ம் ஆண்டு இந்து வைதீக முறைப்படி சென்னையில் திருமணம் நடந்தது.

யுவன்சங்கர் ராஜா-சந்திரன் சுஜாயா தம்பதிகளுக்கு இது வரை குழந்தை இல்லை.

கடல் கடந்து தொடங்கிய இவர்கள் காதல் இரண்டு ஆண்டுகளிலேயே கசந்தது. கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ முடிவு செய்தனர்.

பிரபல இசை அமைப்பாள ராகதிகழும் யுவன்சங்கர் ராஜா வாழ்க்கையில் ஏற்பட்ட விரிசலை சரி செய்ய சினிமா பிரமுகர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் முயற்சிகள் மேற்கொண்டனர். ஆனால் அவர்களின் சமரச முயற்சி வெற்றி பெறவில்லை. இருவரும் பிரிந்து வாழ்வதில் உறுதியாக இருந்தனர்.

இருவரும் பிரிய விரும்புவ தாக பரஸ்பர புரிந்துணர்வுபடி விவாகரத்து பெற முடிவு செய்து இன்று ஐகோர்ட்டில் உள்ள குடும்ப நல கோர்ட்டுக்கு வந்தார்கள். விவாகரத்து கோரி இருவரும் ஒன்றாக சேர்ந்து மனு தாக்கல் செய்தனர்.

கோர்ட்டுக்கு வந்த யுவன் சங்கர் ராஜாவும் அவரது மனைவி சந்திரன் சுஜாயாவும் கோர்ட்டுக்குள் ஒன்றாகவே அமர்ந்து இருந்தனர். அப்போது எந்தவிதமான பதட்டமும் இல்லாமல் சிரித்து பேசியபடி இருந்தார்கள்.

Posted in Affair, Alimony, Arranged, Audio, Celebrity, Cinema, Divorce, Faces, Famous, Films, Ilaiaraja, Ilaiyaraaja, Ilaiyaraja, IR, Isai, Legends, London, Love, Marriage, MD, Movies, music, Music Director, Notable, people, Raja, Reception, ShankarRaja, UK, Wedding, YSR, Yuvan, Yuvan Shankar Raja | Leave a Comment »

Notable Women series in Kumudham: Thiruvengimalai Sarvanan – Rukmani Arundale

Posted by Snapjudge மேல் ஜூலை 28, 2007

குமுதம்
மறக்க முடியாத மங்கைகள்
ருக்மணி அருண்டேல்
திருவேங்கிமலை சரவணன்

25.07.07  தொடர்கள்


‘‘எங்க வீட்டுப் பெண் பரதநாட்டியம் கத்துக்கிறா’’ _ பொது நிகழ்ச்சியில் பட்டுப்புடவை சரசரக்கும் பெண் தன் செல்ல மகளை இன்னொரு பெண்மணிக்கு பெருமையுடன் அறிமுகப்படுத்துவதைப் பார்க்கலாம். இன்று பரதநாட்டியம் கற்றுக்கொள்வது என்பது மிகப்பெரிய கௌரவமாகி விட்டது. குறிப்பாக நகரங்களில் மாலை வேலைகளில் பல வீடுகளில் ‘தக திமி’ ‘தகதிமி’ என்று ஜோராக சலங்கை ஒலி கேட்க முடிகிறது. அது ஒரு இதமான அனுபவம். சொல்லப்போனால் ‘என், பெண் பரதநாட்டியம் ஆடுவாள்’ என்பது பெண் பார்க்கும் படலத்தின் போது கூடுதல் தகுதியாகக் கருதப்படுகிறது. இன்று பரத நாட்டியம் ஒரு தெய்வீக கலையாக தமிழ்நாடு மட்டுமின்றி உலக நாடுகள் பலவற்றிலும் ஊடுறுவி விட்டது:

இந்தக் கலைக்கு மிகப்பெரிய அந்தஸ்தை தந்து தெய்வீக நிலைக்கு உயர்த்திய பெருமைக்குச் சொந்தக்காரர்களில் முக்கியமானவர் ருக்மணி அருண்டேல் என்கிற அற்புதப் பெண்மணி!

‘‘பரதநாட்டியம் என்பது இந்திய பாரம்பரியத்தின் முக்கியமான அடையாளம்!’’ உலகத்தில் இருக்கிற அத்தனை கலை ஆர்வலர்களும் இப்படித்தான் சொல்வார்கள். ஆனால், முன்னொரு காலத்தில் பரதநாட்டியம் என்பது மிகப்பெரிய சமூக இழுக்காக கருதப்பட்டது. அந்தச் சூழலைப் புரிந்து கொண்டால்தான் ருக்மணி என்கிற சாதனைப் பெண்ணின் எதிர்நீச்சல் உங்களுக்குப் புரியும்!

‘கலா«க்ஷத்ரா’ என்ற சாம்ராஜ்யத்தை நிறுவி பரதநாட்டியத்துக்கு மறுபிறவி கொடுத்து எல்லோரையும் திரும்பிப் பார்க்க வைத்தவர் ருக்மணி அருண்டேல்.

நீலகண்ட சாஸ்திரி_சேஷம்மாள் தம்பதியினருக்கு 1904_ம் ஆண்டு பிப்ரவரி 29_ம் நாள் மதுரையில் பிறந்தவர் ருக்மணி. நீலகண்ட சாஸ்திரிகள் வடமொழியில் ஞானம் நிரம்பப் பெற்றவர். நிறைய வேதாந்தப் புத்தகங்கள் எழுதியவர்.

அந்தக் காலகட்டத்தில் பால்ய விவாகம்தான் நடைமுறையில் இருந்தது. சிறுமி ருக்மணிக்கும் குழந்தைத் திருமணம் நடத்த பெரியவர்கள் முற்பட்டார்கள். ஆனால், ருக்மணி ஸ்திரமாய் மறுத்து விட்டார். சின்ன வயதிலேயே கர்நாடக சங்கீதம் பயின்றார். அப்போதே அவருக்கு கலைகளின் மீது நாட்டம் வந்துவிட்டது.

ருக்மணியின் தந்தைக்கு சென்னையிலுள்ள தியாஸாஃபிகல் சொஸைட்டியில் பணிபுரிய வாய்ப்புக் கிடைத்தது. அப்போது ருக்மணிக்கு வயது ஏழு. தந்தையுடன் சேர்ந்து தியாஸாஃபிகல் சொஸைட்டியில் தானும் சேர்ந்து கொண்டார் ருக்மணி.

அங்கு அவர் வாழ்க்கை கலைகளை நோக்கித் திரும்புகிறது. வாழ்க்கையில் காதலும் வருகிறது. தியாஸாஃபிகல் சொஸைட்டியில் அருண்டேல் என்ற வெளிநாட்டுக்காரரும் பணியாற்றி வந்தார். அருண்டேல் தலை சிறந்த கல்வியாளர். ருக்மணி, அருண்டேல் இருவரின் மன எண்ணங்கள் ஒரே மாதிரியாக இருந்ததால் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தனர். பலத்த எதிர்ப்புகளுக்கு இடையில் தனது பதினாறாவது வயதில் திருமணம் செய்து கொண்டார். அருண்டேலுக்கு அப்போது வயது நாற்பது. பிறகு மும்பையில் இருவரும் பதிவுத் திருமணம் செய்து கொண்டார்கள்.

திருமணத்திற்குப் பிறகு தன் கணவருடன் ருக்மணி நிறைய பயணங்களை மேற்கொண்டார். ஒவ்வொரு இடத்திலும் தென்படும் ரசனையான விஷயங்களை ஆர்வத்துடன் கற்றுக் கொள்வதில் ருக்மணி கெட்டிக்காரர். அப்படித்தான் ரஷ்ய ‘பாலே’ டான்ஸரான ‘அன்னாபாவ்லா’ வின் நடனம் ருக்மணியை ஈர்த்தது. 1928_ல் அன்னாபாவ்லாவின் நடனம் மும்பையில் நடந்தது. தன் கணவருடன் மும்பைக்குச் சென்று பார்த்தார். பிறகு ருக்மணியும், அருண்டேலும் மும்பையிலிருந்து கப்பல் மூலம் ஆஸ்திரேலியாவிற்குப் பயணமானார்கள்.

அதிர்ஷ்டவசமாய் அருண்டேல் தம்பதிகள் சென்ற அதே கப்பலில் ‘அன்னாபாவ்லா‘வும் பயணம் செய்து கொண்டிருந்தார். இதைத் தெரிந்து கொண்ட ருக்மணிக்குச் சந்தோஷம் பிடிபடவில்லை. ‘அன்னாபாவ்லா’ வைச் சந்தித்து நடன விஷயங்களைப் பற்றி நிறைய பேசித் தெரிந்து கொண்டார்.

அப்போதுதான் ‘அன்னாபாவ்லா’ திடீரென்று ருக்மணியைப் பார்த்து, ‘‘நீங்கள் கலாரசனை உடையவராக இருக்கிறீர்கள். நடனத்திற்கேற்ற உடற்கட்டும் இருக்கிறது. நீங்கள் ஏன் டான்ஸ் கற்றுக் கொள்ளக் கூடாது?’’ என்று கேட்டதோடு மட்டுமல்லாமல், தன்னுடைய நடன குருவான ‘கிளியோநோர்டி’யை ருக்மணிக்கு ரஷ்ய நடனம் கற்றுக் கொடுக்கவும் ஏற்பாடு செய்தார். ஆக, ருக்மணி முதன் முதலில் ரஷ்ய நடனத்தைத்தான் கற்றார். ‘‘ரஷ்ய பாலே நடனத்தைத் தொடர்ந்து நாட்டியமும் கற்றுக் கொள்ளுங்களேன்…’’ என்று அன்னா பாவ்லாவே ருக்மணிக்கு ஆலோசனை கொடுக்க, ருக்மணியின் ஆர்வம் பரதம் பக்கம் திரும்பியது. அந்தச் சமயத்தில் பரதநாட்டியம் இந்தியாவில் அவ்வளவு பிரபலம் கிடையாது. நாட்டியங்களை பெண்கள் ஆடுவது இழுக்கு என்கிற தவறான எண்ணம் அப்போது மக்களிடையே இருந்தது.

இந்தச் சூழ்நிலையில்தான் 1933 மியூசிக் அகாடமியில் ‘சதிர்’ எனும் நடனக் கச்சேரியை பந்தநல்லூர் ராஜேஸ்வரி, ஜீவரத்தினம் சகோதரிகள் நிகழ்த்தினார்கள் ‘சதிர்’ நடனத்தால் பெரிதும் ஈர்க்கப்பட்ட ருக்மணி அந்த நடனத்தைக் கற்றுக் கொள்ள ஆசைப்பட்டார்.

ஆனால், அவர் நினைத்த மாதிரி அவ்வளவு எளிதாக கற்றுக்கொள்ள முடியவில்லை. பல பரதநாட்டிய ஆசிரியர்கள், ருக்மணியைப் பார்த்து. ‘‘நீங்கள் எல்லாம் புதுமை, புரட்சி என்ற பேரில் வருவீர்கள். இதெல்லாம் கலைக்கு உதவாது’’ என்று அவரை ஏளனமாக விமர்சித்தார்கள். ஆனால், ருக்மணிக்கு இந்தக் கலையை எப்படியாவது கற்றுக் கொள்ள வேண்டும் என்ற வைராக்கியம். பந்தநல்லூர் மீனாட்சி சுந்தரம் பிள்ளையின் சிஷ்யை ஆனார். சிறப்பாகக் கற்றார்.

தியாஸாஃபிகல் சொஸைட்டியின் வைர விழா நிகழ்ச்சியில் சுமார் இருபதாயிரத்திற்கும் அதிகமான மக்களுக்கு முன்னிலையில் நடந்த பிரமாண்ட நடன நிகழ்ச்சியில் ருக்மணியின் பரதம் அரங்கேறியது. சீனிவாச சாஸ்திரி, ராமசாமி ஐயர், சிவஸாமி ஐயர் என்று ஏகப்பட்ட ஜாம்பவான்கள் முன்னிலையில் நடந்த இந்த விழாவில் ருக்மணியின் நடனத் திறமை பளீரென்று பளிச்சிட்டது.

ஜேம்ஸ் கஸின்ஸ் என்கிற பிரபலமான அயர்லாந்துக் கவிஞர் ருக்மணியின் அந்த நடனத்தை வெகுவாகப் பாராட்டினார். அது மட்டுமில்லாமல், ‘‘ருக்மணி தன்னுடைய இந்த அற்புதமான நடனத் திறமையை நாலு பேருக்குச் சொல்லிக் கொடுக்க வேண்டும். அதற்காக ஒரு நடன மையத்தை ருக்மணி ஏற்படுத்த வேண்டும்’’ என்று கேட்டுக் கொண்டார். இந்த வார்த்தைதான் ருக்மணிக்கு நடன மையத்தை உருவாக்க வேண்டும் என்ற உத்வேகத்தைத் தந்தது.

நினைத்ததோடு மட்டுமில்லாமல் செயலிலும் சுறுசுறுப்பாக இறங்கினார் ருக்மணி. ஆரம்பத்தில் தான் ஆரம்பித்த நடனப் பள்ளிக்கு ‘இன்டர்நேஷனல் அகாடமி ஆஃப் ஆர்ட்ஸ்’ என்று பெயர் வைத்தார். பல முக்கியப் பிரமுகர்கள் முன்னிலையில் நடனப் பள்ளி ஆரம்பிக்கப்பட்டது. இதுவே பின்னர் கலா«க்ஷத்ராவாக உருப்பெற்றது.

ருக்மணியின் நடன குருக்களான பந்தநல்லூர் மீனாட்சி சுந்தரம் பிள்ளையும், அவரது மருமகனான சொக்கலிங்கப் பிள்ளையும் தான் கலா«க்ஷத்ராவின் முதல் நடன ஆசிரியர்கள். ஆரம்பத்தில் கலா«க்ஷத்ராவில் நடனம் கற்றுக் கொள்ள வந்த மாணவர்களின் எண்ணிக்கை வெறும் நான்குதான்.

துவக்க காலத்தில் ருக்மணி தேவியின் நடனத்திற்கு டாக்டர் பத்மாஸினியும், கமலா ராணியும்தான் பாடுவார்களாம். அப்போது வீடு வீடாகச் சென்று டிக்கெட்டுகளை விற்று நடன நிகழ்ச்சியை நடத்தியிருக்கிறார்கள். ருக்மணி தேவியின் ஒரே குறிக்கோளே ‘நடனத்தில் இருக்கிற சர்ச்சைக்குரிய சில விஷயங்களை நீக்கினாலே மக்கள் எல்லோருமே நடனத்தை ஆர்வத்துடன் கற்றுக் கொள்ள ஆரம்பித்து விடுவார்கள். நடனத்துக்கென்று ஒரு புனிதத் தன்மை இருக்கிறது. அதை அனுபவித்துப் பார்த்தால்தான் தெரியும்’ என்பதுதான்.

கொஞ்சம், கொஞ்சமாக நடனமும் ஓர் அற்புதமான கலைதான் என்பதை ருக்மணி அருண்டேல் எல்லோருக்கும் புரிய வைத்தார். கலா«க்ஷத்ராவை ருக்மணி தேவி கலைகளின் பிறப்பிடமாகவே நினைத்தார். அதனால்தான் கலா«க்ஷத்ராவில் நடனத்திற்கு மட்டுமல்லாமல் பல்வேறு துறைகளுக்கும் முக்கியத்துவம் தந்தார். பல்வேறு சமூகப் பணிகளிலும் கலா«க்ஷத்ரா ஈடுபட்டது.

ருக்மணி அருண்டேல் தமிழ் மொழி மேல் அளவு கடந்த பற்று வைத்திருந்தார். உ.வே.சா. கண்டெடுத்த ஓலைச் சுவடிகளையெல்லாம் ஒன்று திரட்டி ‘டாக்டர் உ.வே. சாமிநாதய்யர் லைப்ரரி’ என்ற அமைப்பை ஏற்படுத்தினார். அதன் மூலம் பழந்தமிழ் இலக்கியங்கள் பலவும் தமிழ் மக்களுக்குக் கிடைத்திட வழி செய்தார்.

1939_ல் மரியா மாண்டிஸோரி வரவழைத்து குழந்தைகள் பள்ளிகளை இந்தியாவில் பல இடங்களிலும் துவக்கினார். 1945_ல் ருக்மணியின் கணவர் அருண்டேல் இறந்த பிறகும் கூட இவரது சமூகப் பணிகள் ஒளிவிட்டுப் பிரகாசித்தன. பரத நாட்டியக் கலைஞர்களுக்கான ஆடைகளைச் சீரமைத்த பெருமை ருக்மணி அருண்டேலுக்கு உண்டு. நடனத்துக்காகவே பாடுபட்ட ருக்மணி விலங்குகளின் நேசிப்பாளர். பெண் குலத்திற்கே ஒரு ரோல்மாடலாக விளங்கிய இவர். தனது 82வது வயதில் 1986_ல் மறைந்தார். பரதநாட்டியத்தின் ஒவ்வொரு அசைவும், அந்த மகா மேதையை உச்சரித்துக் கொண்டே இருக்கும்!.

Posted in Arundale, Biography, Biosketch, Faces, Females, Kumudam, Kumudham, Notable, Notes, people, Rukmani, Rukmani Arundale, Sarvanan, Series, She, Thiruvengimalai, Thiruvenkimalai, Women | 1 Comment »

Thi Vai Goplal Iyer passes away – Memoirs & Anjali

Posted by Snapjudge மேல் ஏப்ரல் 6, 2007

“ஓயாத தமிழ் அலை ஓய்ந்தது’

“தமிழ்க் கடல்’ என்றும், “நூற்கடல்’ என்றும் போற்றப்படும் பண்டித வித்வான் தி.வே. கோபாலையர் காலமான செய்தி தமிழன்பர்களுக்குத் தாங்க முடியாத அதிர்ச்சி.

ஒரு நடமாடிய தமிழாக வாழ்ந்தவர்; சங்க இலக்கிய இலக்கணங்கள் அனைத்தும் அவர் நினைவில்; மூலமும், உரையும் முழுமையாக மனத்தில் ஏந்திய மனிதக் கணினி; பணம், பதவிகளை விரும்பாத இல்லறத் துறவி.

1964ஆம் ஆண்டு. என்னைப் போன்ற ஆயிரமாயிரம் புலவர்களை உருவாக்கிய திருவையாறு அரசர் கல்லூரியின் முதல்வராக அவர் வந்தபோது தொடங்கிய அறிமுகம் இறுதிவரை தொடர்ந்தது.

நெற்றியில் திருநீறும், வாயில் வெற்றிலையுமாக தூய வெண்ணிறமான ஜிப்பா, வேட்டியுடன் அவர் நடந்து வரும் கம்பீரத்தை மாணவர்களாகிய நாங்கள் எதிர்நின்று பார்த்து ரசிப்போம். முதல்வர் என்ற செருக்கோ, பெரும்புலவர் என்ற ஆணவமோ அவரிடம் இருந்ததில்லை.

ஒருசமயம் அவரை எதிர்த்தே கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தினர். அதனையும் அவர் ஒரு புன்முறுவலோடு எதிர்கொண்டார். அவரைக் கண்டித்து எழுதப்பட்ட துண்டறிக்கையை ஒரு மாணவர் அவரிடம் நீட்டியபோது, அமைதியாக வாங்கிப் படித்து அதில் உள்ள பிழைகளைத் திருத்தித் திரும்பக் கொடுத்த பெருந்தன்மையை என்னென்பது! திருச்சிராப்பள்ளி தமிழ்ச் சங்கத்திலும், தஞ்சை தொல்காப்பியர் கழகத்திலும் அவர் தொல்காப்பியத்தைப் பற்றி ஆற்றிய உரைகள் தமிழறிஞர்களையே வியப்பில் ஆழ்த்தின. தொல்காப்பியத்தின் அனைத்து உரைகளையும் ஒப்பிட்டு ஒரு மணி நேரத்திற்கும் மேல் உரையாற்றினார். அவர் முடித்தபோது அரங்கமே அதிர்ந்தது. தொல்காப்பியம் பற்றி அறியாதவர்களும் கைதட்டி ஆரவாரம் செய்தனர். அப்போதுதான் பலருக்கு தொல்காப்பியமே அறிமுகம் ஆனது.

அவர் வகுப்பில் பாடம் நடத்துவதே ஓர் அறிவார்ந்த அழகு. வகுப்புக்கு வந்ததும் அன்றைக்கு என்ன பாடம் என்று கேட்டுவிட்டு, புத்தகத்தை மூடி வைத்து விடுவார். இலக்கணமாக இருந்தாலும் இலக்கியமாக இருந்தாலும் இனிய குரலில் வாய் விட்டுப் பாடுவார். நச்சினார்க்கினியரும், இளம்பூரணரும், அடியார்க்கு நல்லாரும், பரிமேலழகரும், சிவஞான முனிவரும் வகுப்பு முடியும்வரை வந்து வந்து போவார்கள். முந்தையோர் உரைகளை அவர் விளக்கும்போது ஒரு புதிய பரிமாணம் தோன்றும். அவரது உரைக்கு எதிராக வினாக்கள் தொடுத்தாலும் அந்தக் கடல் கலங்காது; கவலைப்படாது. உரையாசிரியர்களுள் நச்சினார்க்கினியர் அவருக்கு மிகவும் பிடிக்கும். அவரை எதிர்த்துக் கேட்டால் சிரித்துக் கொண்டே கூறுவார்: “”அவன் நச்சினார்க்கே இனியன்…”

அவர் ஏராளமான நூல்கள் எழுதியிருக்க முடியும்; என்றாலும் எழுதவில்லை. அதற்குக் காரணம் அவர் இந்த வெளியுலக விளம்பரத்துக்கு அப்பாற்பட்டவராகவே வாழ விரும்பினார். அவர் நினைத்திருந்தால் விருதுகளையும், பதவிகளையும் வென்றெடுக்க முடியும். ஆனால் அவர் எந்தவித புகழையும், பரிசுகளையும் மதித்ததில்லை. “பரிசும் பாராட்டும் தேடிவர வேண்டும். தேடி அலைவது தமிழுக்கு அவமானம்’ என்று கூறுவார். கல்லூரியிலிருந்து ஓய்வுபெற்றதும் புதுச்சேரி பிரெஞ்சு கலை ஆய்வு நிறுவனம் அவரை அழைத்துக் கொண்டது.

எண்ணிறந்த ஆய்வுக் கட்டுரைகளை இவர் எழுதியுள்ளார். அவை தனி நூல் வடிவம் பெறவில்லை. அண்மையில் தமிழ் மண் பதிப்பகம் வெளியிட்ட தொல்காப்பியம் – செம்பதிப்பு 14 தொகுதிகளுக்கும் இவர் பதிப்பாசிரியராகச் செயல்பட்டார். புதுச்சேரி இந்தியப் பள்ளியின் ஆய்வு மாணவர்களுக்காக இவரால் பிழைநீக்கிச் செப்பம் செய்யப்பட்ட தொல்காப்பிய நூல்களை அடிப்படையாகக் கொண்டு அவை பதிப்பிக்கப்பட்டன. இதுதவிர இவர் அரும்பாடுபட்டுத் தயாரித்த தமிழ் இலக்கணப் பேரகராதி பல தொகுதிகளாக வெளிவந்துள்ளன.

மரபுவழிவந்த தமிழ்ப் புலவர் வரிசையில் இவர் கடைசித் தலைமுறை என்று கூறலாம். எழுத்தாளரும், பத்திரிகையாளருமான திருலோக சீதாராமனும், தஞ்சை வழக்கறிஞர் டி .என். இராமச்சந்திரனும் இவரைப் பெரிதும் மதித்து வெளியுலகத்துக்கு அறிமுகப்படுத்த துணை நின்றனர். எனினும் இந்தக் கடல் எந்த எல்லைக்குள்ளும் அடங்கவில்லை.

இப்போது இந்த ஓயாத தமிழ் அலை ஓய்ந்துவிட்டது; சாயாத தமிழ் மலை சாய்ந்துவிட்டது. ஆயினும் தமிழ் இருக்கும்வரை அவர் பெயர் இருக்கும்; நெஞ்சம் இருக்கும்வரை நினைவிருக்கும்.

Posted in Anjali, Author, Biosketch, Books, History, Memoirs, Notable, people, Persons, Professor, Research, Scholar, Teacher, Writer | 1 Comment »