திருமண சட்டத்தை திருத்த நாடாளுமன்றக் குழு பரிந்துரை
புதுதில்லி, மார்ச் 20: வெளிநாடு வாழ் இந்தியர்கள் இந்தியப் பெண்களை திருமணம் செய்துகொள்வதில் முறைகேடுகள் அதிகரித்துள்ள நிலையில், திருமணச் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளவேண்டும் என நாடாளுமன்றக் குழு பரிந்துரைத்துள்ளது.
வெளியுறவு தொடர்பான நாடாளுமன்ற நிலைக்குழு தனது அறிக்கையை நாடாளுமன்றத்தில் திங்கள்கிழமை தாக்கல் செய்தது.
இதில் கூறியிருப்பதாவது:
வெளிநாடுகளில் பணியாற்றும் இந்தியத் தொழிலாளர்கள் பல்வேறு சுரண்டல்களுக்கு ஆளாகி வரும் நிலையில், அதை தடுத்து நிறுத்துவதற்கு குடியேற்ற சட்டத்தில் திருத்தங்கள் செய்வது உள்ளிட்ட தீவிர நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும்.
குவைத், ஓமன், கத்தார், மலேசியா ஆகிய நாடுகளில் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் சுரண்டல் மற்றும் துன்புறுத்தலுக்கு ஆளாகிவரும் நிலையில், இந்த நாடுகளுடன் இதுதொடர்பாக உடன்பாடு செய்துகொள்வதற்கான நடைமுறைகளை துரிதப்படுத்தவேண்டும்.
வெளிநாடு வாழ் இந்தியர்கள் இந்தியப் பெண்களை திருமணம் செய்துகொள்வதில் முறைகேடுகளும், பல திருமணங்கள் தோல்வியடைவதும் அதிகரித்துள்ளன. இதை தடுப்பதற்கு சக்திமிக்க நடவடிக்கைகள் தேவை.
இதற்கு, திருமணங்கள் பதிவுசெய்யப்படுவதை கட்டாயமாக்குவது, இந்திய திருமணச் சட்டத்தில் உரிய திருத்தங்கள் செய்வது போன்றவற்றை மேற்கொள்ள வேண்டும்.
மேலும் திருணம் பதிவு செய்யப்படும் நீதிமன்ற எல்லையிலேயே விவாகரத்து வழக்குகளும் விசாரிக்கப்படும் வகையில் திருமண சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளவேண்டும்.