சேவை: வாழ நினைத்தால் வாழலாம்!
ரவிக்குமார்
‘அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது’ என்றார் ஒüவையார். இப்படி அரிதான பிறப்பான மனிதர்களாய்ப் பிறந்தவர்கள் ஒவ்வொருவரும் ஏதோ ஒரு குறையுடன்தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். சராசரியாக உடல் உறுப்பில் எந்தவிதமான ஊனமும் இல்லாமல் இருப்பவர்களே கல்வியைப் பெறுவதில், வேலை வாய்ப்பைப் பெறுவதில் பெரும் போராட்டத்தை எதிர்கொண்டிருக்கும் இன்றைய சூழ்நிலையில், உடல் ஊனமுற்றவர்கள், காது கேளாதோர், வாய் பேச முடியாதோர், பார்வைக் குறைபாடு உள்ளவர்களுக்கு எதிர்காலம் மிகப் பெரிய கேள்விக் குறியாகத்தானே இருக்கும்? ஆனால் இப்படி உடல் ரீதியாக பாதிக்கப்பட்டவர்களுக்கு புனர் வாழ்வு அளிக்கும் மையமாக சென்னை, அசோக்நகர், உதயம் திரையரங்கம் அருகே செயல்பட்டு வருகிறது, ஆர்.சி.எம்.சி.டி. -வொர்த் அறக்கட்டளை. சென்னை ரோட்டரி சங்கத்தோடு சென்னையில் இயங்கும் வொர்த் அறக்கட்டளையின் செயல்பாடுகள் குறித்து அதன் மேலாளர் என். வெங்கட்ராமன் நம்மிடம் பகிர்ந்து கொண்டதிலிருந்து…
”வாழ நினைத்தால் வாழலாம் என்பதுதான் எங்கள் அறக்கட்டளையின் தாரக மந்திரமே. 1963-ல் சுவீடன் நாட்டின் செஞ்சிலுவைச் சங்கத்தினர் தொழுநோயால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் புனர் வாழ்வுக்காக, காட்பாடியில் ‘சுவீடிஷ் ரெட் கிராஸ்’ என்னும் அமைப்பை ஏற்படுத்தினர். நாளடைவில் மருத்துவத் துறையின் வளர்ச்சியால், தொழுநோயின் தாக்கம் குறைந்த நிலையில், ‘வொர்த் அறக்கட்டளை’ என்னும் பெயரில் தமிழகத்தில் இருப்பவர்களைக் கொண்டே ஓர் அறக்கட்டளையை ஏற்படுத்தி அவர்களிடம் பொறுப்பை ஒப்படைத்து விட்டு சென்றுவிட்டனர். இதுதான் ‘வொர்த் அறக்கட்டளை’யின் ஆரம்பகால வரலாறு.
உடல் ஊனமுற்றவர்களுக்கான இலவச தொழிற்பயிற்சியை காட்பாடி, திருச்சி, பாண்டிச்சேரி ஆகிய மூன்று இடங்களில் வழங்குகிறது எங்களின் அறக்கட்டளை. உடல் ஊனமுற்றிருந்து பத்தாவது தேறியிருக்கும் எவரும் இந்தத் தொழிற்பயிற்சியைப் பெறலாம். ஒவ்வோராண்டும் ஜுன், ஜூலை மாதங்களில் இதற்கான விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. தங்கும் வசதியுடன் அளிக்கப்படும் இந்தப் பயிற்சிகளைத் தகுந்த முறையில் படித்து தேர்வாகும் மாணவர்களுக்கு தேசிய தொழிற் சான்றிதழ் அளிக்கப்படும்.
டர்னர் பயிற்சி மூன்று மையங்களிலும், மெஷினிஸ்ட், எலக்ட்ரானிக்ஸ் மெக்கானிக் பயிற்சிகள் காட்பாடியிலும், வெல்டர் பயிற்சி திருச்சியிலும், பிரத்யேகமாக எங்களால் வழங்கப்படும் கம்ப்யூட்டர் மற்றும் செக்ரட்டரி கோர்ஸ்கள் காட்பாடி, பாண்டிச்சேரி மையங்களிலும் பயிற்சியளிக்கப்படுகின்றன.
சென்னையில் செயல்படும் மையத்தில் பிளஸ் டூ வரை படித்த மாணவர்களுக்கு எம்.எஸ்-ஆபிஸ், டேலி போன்ற கணிப்பொறிப் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. டைப்ரைட்டிங், சுருக்கெழுத்து, கணிப்பொறி பயிற்சிகள் அடங்கிய செயலருக்கான பயிற்சிகள், தையல் பயிற்சிகள், பார்வையற்றவர்களுக்கான சிறப்பு கம்ப்யூட்டர் பயிற்சிகளும் வழங்கப்படுகின்றன. பயிற்சி காலத்தில் மாணவர்களுக்கு மாதம் 200 ரூபாய் ஊக்கத் தொகையும் அளிக்கிறோம்.
எங்கள் அறக்கட்டளையின் சார்பாக திருச்சியில் ஒன்று, பாண்டிச்சேரியில் ஒன்று, காட்பாடியில் மூன்று என ஐந்து புரொடக்ஷன் யூனிட்கள் இயங்குகின்றன. எங்களிடம் பயிற்சி பெற்ற பலரே இங்கு (ஏறக்குறைய 200 பேர்) பணியிலிருக்கின்றனர். டி.வி.எஸ்., ரானே மெட்ராஸ், ஈ.ஐ.டி.பாரி போன்ற தொழிற்சாலைகளிலிருந்து எங்களுக்கு அவர்களின் தயாரிப்புகளுக்குப் பயன்படும் சில உதிரிப் பாகங்களைத் தயாரிக்கும் ஆர்டர்கள் தொடர்ந்து கிடைக்கும். பிளாஸ்டிக் மோல்டிங்கைப் பயன்படுத்தி செய்யும் பல வேலைகளையும் பல தொழிற்சாலைகளுக்காகச் செய்து வருகிறோம்.
அமெரிக்காவின் புகழ்பெற்ற பெர்கின்ஸ் பிளைன்ட் ஸ்கூல் தயாரிக்கும் பார்வையற்றவர்களுக்கான பிரெய்லி டைப்ரைட்டர் உலகம் முழுவதும் பிரசித்தம். பெர்கின்ஸ் டைப்ரைட்டருக்கான உதிரி பாகங்களை எங்களுக்குக் கப்பலில் அனுப்பிவிடுவார்கள். அந்தப் பாகங்களை ஒன்றிணைத்து டைப்ரட்டராக நாங்கள் அவர்களுக்கு ரீ-எக்ஸ்போர்ட் செய்வோம். மாதத்திற்குச் சராசரியாக 2000 டைப்ரைட்டர்களை இப்படி உருவாக்குகிறோம். இங்கு உருவாகும் இத்தகைய பிரெய்லி டைப்ரைட்டர்களை இறுதிக்கட்ட பரிசோதனை செய்வது இங்கிருக்கும் பார்வையற்றவர்கள்தான். இங்கு உருவாகும் பிரெய்லி டைப்ரைட்டர்களை 9500 ரூபாய்க்குக் கொடுக்கிறோம்.
தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கு எலக்ட்ரிக் மீட்டர்களைத் தயாரித்துத் தருவது பெங்களூரிலிருக்கும் ‘பெல்’ நிறுவனம். இப்படி தயாரித்துத் தரும் மீட்டர்களில் ஏதேனும் பழுது ஏற்பட்டால் அதை பெல் நிறுவனத்துக்காக நாங்கள் சரிபார்த்துத் தரும் பொறுப்பை ஏற்றிருக்கிறோம். எங்களிடம் ஜெனரல் எலக்ட்ரானிக்ஸில் பயிற்சி பெற்றவர்களே இந்தப் பணியைச் செய்கின்றனர்.
இதைத் தவிர, உலக அளவில் பார்வையற்றவர்களுக்குப் பயன்படும் வகையில் பிரெய்லி ஸ்லேட், அபாகஸ், ஜியாமட்ரி பாக்ஸ்… உள்ளிட்ட 13 பொருட்களைக் கொண்ட ‘யூனிவர்ஸல் பிரெய்ல் கிட்’ ஒன்றையும் 350 ரூபாய் விலைக்குத் தருகிறோம்.
காது கேளாத, வாய் பேசமுடியாதவர்களுக்குப் பயன்படும் வகையில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரையுள்ள ‘டிரான்ஸிஷனல் ஸ்கூல்’ ஒன்றை இலவசமாகக் காட்பாடியில் இயக்குகிறோம்.
பாதிக்கப்பட்டவர்களுக்குக் கல்வி அறிவையும் தொழில்பயிற்சிகளையும் அளிப்பதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம். இன்னும் சொல்லப்போனால் பிரெய்லி முறையில் படிக்கும் மாணவர்கள் பெரும்பாலும் தமிழிலேயே படிப்பதால், வேலை வாய்ப்புகளில் ஆங்கிலம் தெரியாததால் பின்தங்கிவிடக் கூடாது என்பதற்காக, அவர்களுக்கு ஆங்கிலத்தில் பேசுவதற்கும் தகுந்த பயிற்சிகளை அளிக்கிறோம். உடல் ஊனத்தால் பாதிப்புக்கு உள்ளானவர்களை எங்களிடம் அழைத்து வாருங்கள். அவர்களை உங்களை விட மன ரீதியாக உறுதியானவர்களாக மாற்றிக் காட்டுகிறோம்!” என்றார் என். வெங்கட்ராமன்.
ஒவ்வொரு யூனிட்டாகச் சுற்றிப்பார்த்தோம். கம்ப்யூட்டர் யூனிட்டை கடக்க இருந்த நம்மை… மறுபடியும் யூனிட்டை உற்றுப்பார்க்க வைத்தார் ஓர் இளம்பெண். காரணம்… அவர் கம்ப்யூட்டரின் ‘மெüசை’க் ‘க்ளிக்’கிக் கொண்டிருந்தது கைகளால் அல்ல… கால்களால்!
”எகனாமிக்ஸில் எம்.ஃபில், வரை முடித்துவிட்டேன். கல்லூரியில் விரிவுரையாளராக வேண்டும் என்பதுதான் லட்சியம். லட்சியத்திற்காகப் போராடுவது ஒருபக்கம் இருந்தாலும், இங்கே வந்து கம்ப்யூட்டரும் தெரிஞ்சிக்கிட்டேன்… டெய்லரிங்கும் தெரிஞ்சிக்கிட்டேன். எது எப்ப கை.. ஸôரி, கால் கொடுக்கும்னு யாருக்குத் தெரியும்?” என்றார் பளிச்சென்று உமா மகேஸ்வரி.
– ‘வொர்த்’ அறக்கட்டளைக்கு இந்த ஓர் உதாரணம் போதுமே!