கேரள ஸ்டிரைக்: 3 நாளில் ரூ.90 கோடி வர்த்தகம் பாதிப்பு
நாமக்கல், ஏப்.4: கேரள மாநிலத்தில் கடந்த 3 நாள்களாக நடந்து வரும் கனரக வாகனங்களின் வேலைநிறுத்தத்தால் தமிழகத்துக்கான வர்த்தகம் ரூ. 90 கோடிக்கு மேல் பாதிக்கப்பட்டுள்ளது.
கனரக வாகனங்களில் வேகக் கட்டுப்பாட்டுக் கருவி பொருத்த வேண்டும் என்ற கேரள அரசின் உத்தரவை எதிர்த்து கேரள மாநில லாரி, டிரெய்லர், டேங்கர், தனியார் பஸ் மற்றும் கனரக வாகன உரிமையாளர்களின் கூட்டமைப்பு சார்பில் வேலைநிறுத்தம் அறிவிக்கப்பட்டது.
கடந்த 31-ம் தேதி நள்ளிரவு முதல் துவங்கிய இந்த வேலைநிறுத்தமானது செவ்வாய்க்கிழமை 3-வது நாளாக நடந்தது.
நாமக்கல் மண்டலத்தில் இருந்து தினமும் 70 லட்சம் முட்டைகள் கேரளத்துக்கு செல்வது வழக்கம். லாரிகள் வேலைநிறுத்தம் காரணமாக இவையனைத்தும் தேக்கமடைந்துள்ளன. இதேபோல், ஈரோடு பகுதியில் இருந்து எண்ணெய் மற்றும் மஞ்சள் உள்ளிட்டவையும் செல்லாமல் பெருமளவில் தேக்கமடைந்துள்ளன.
சிமெண்ட், இரும்புக் கம்பிகள், குழாய்கள், பிளாஸ்டிக் பைப் ஆகியவை தினமும் 100 லாரிகளுக்கு மேல் தமிழகத்திலிருந்து கேரளம் செல்லும். கடந்த 3 நாள்களாக இந்த வர்த்தகமும் நடைபெறவில்லை. உதகை, மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி பகுதிகளில் இருந்து காய்கறிகளும் பெருமளவில் செல்லவில்லை.
திண்டுக்கல், தேனி, மதுரை உள்ளிட்ட தென்மாவட்டங்களில் இருந்து செல்லும் காய்கறிகளும் செல்லவில்லை. கேரளத்திலிருந்து தமிழகத்தில் உள்ள தொழிற்சாலைகளுக்கு வரும் ரப்பர், தமிழகத் தேவைக்கான ஓடுகள், உரம் ஆகியவையும் கடந்த 3 நாள்களாக தமிழகத்துக்கு வரவில்லை.
இதன் காரணமாக தமிழகத்துக்கான வர்த்தகம் மட்டும் நாளொன்றுக்கு சராசரியாக ரூ. 30 கோடி வீதம் 90 கோடிக்கு மேல் பாதிக்கப்பட்டுள்ளது.