1-ம் வகுப்பில் இருந்து ஆங்கிலம் கற்றுக்கொடுக்க வேண்டும்’ பிரதமருக்கு தேசிய கமிஷன் சிபாரிசு
புதுடெல்லி, ஜன.15-
தேசிய அறிவு கமிஷன் தனது அறிக்கையை பிரதமர் மன்மோகன்சிங்கிடம் நேற்று தாக்கல் செய்தது. அந்த அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
இந்தியாவில் மாணவர்கள் மேற்படிப்பு படிக்க ஆங்கில மொழி அவசியமானதாக இருக்கிறது. எனவே, இந்தியா முழுவதும் 1-ம் வகுப்பில் இருந்து, மாணவர்களுக்கு ஆங்கிலமும், தாய் மொழியும் கற்றுக்கொடுக்க வேண்டும்.
இவ்வாறு கல்வி கற்கும் மாணவர்கள் 12-ம் வகுப்பு படித்து முடித்து வெளியே வரும் போது, 2 மொழிகளை சரளமாக பேசும் தகுதியை பெற்று விடுகிறார்கள்.
தற்போது 12-ம் வகுப்பு படித்து வெளியேறும் மாணவர்களால் சரளமாக ஆங்கிலம் பேச முடிவது இல்லை. ஒரு சதவீத மாணவர்களே சரளமாக பேசுகிறார்கள். 1-ம் வகுப்பில் இருந்தே ஆங்கிலம் கற்றுக்கொடுத்தால், இது போன்ற நிலையை மாற்றி விடலாம்.
இது பற்றி, பிரதமர் மன்மோகன்சிங், மாநில முதல்-மந்திரிகள் கூட்டத்தில் விவாதிக்க வேண்டும். சாதாரண மாணவர்களும் ஆங்கிலம் பேசும் தகுதியை பெற வேண்டும். இதற்காக தரமான ஆங்கில ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். தற்போது உள்ள 40 லட்சம் ஆரம்ப பள்ளி ஆசிரியர்களின் தரத்தையும் உயர்த்த வேண்டும்.
1-ம் வகுப்பில் இருந்தே ஆங்கிலம் கற்றுக்கொடுக்கும் திட்டத்தை இப்போதே தொடங்கினால், இன்னும் 12 ஆண்டுகளில், அனைத்து மாணவர்களும் சரளமாக ஆங்கிலம் பேசும் தகுதியை பெற்று விடுவார்கள்.
தற்போது 9 மாநிலங்களிலும், 3 ïனியன் பிரதேசங்களிலும், 1-ம் வகுப்பு முதல், மாநில மொழியுடன் ஆங்கிலம் கற்றுக்கொடுக்கப்படுகிறது. எனவே மற்ற மாநிலங்களில்தான் இந்த திட்டத்தை அமல் படுத்த வேண்டும்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டு இருக்கிறது.
=================================================================
சமச்சீர் கற்பித்தலும் அவசியம்
சமச்சீர் கல்வி முறையைத் தமிழகத்தில் அறிமுகம் செய்வதற்காக அமைக்கப்பட்ட குழு இம்மாத இறுதிக்குள் தனது அறிக்கையை அளிக்கவுள்ளது.
அறிக்கை கிடைத்தவுடன் அதன் பரிந்துரைகளின் அடிப்படையில் சமச்சீர் கல்விமுறையை நடைமுறைப்படுத்த தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு உறுதி கூறியிருப்பது நடுத்தர வருவாய் பிரிவினருக்கு மகிழ்ச்சி அளிப்பதாக இருக்கும்.
பாடத்திட்டத்தில் மட்டும் சமச்சீர் கல்விமுறை என்று நின்றுவிடாமல், சமச்சீர் கற்பித்தல் முறை, சமச்சீர் கட்டணமுறை ஆகியவற்றிலும் தமிழக அரசு கவனம் செலுத்த வேண்டும்.
ஏனெனில், தனியார் பள்ளிகள் தங்களை முன்னிலைப்படுத்திக் கொள்ளவும் பெயரும் புகழும் சம்பாதித்து பெற்றோர் தங்கள் பள்ளியில் இடம் கேட்டு அலைமோதும்படி செய்யவும், அதன்மூலம் அதிக கல்விக் கட்டணத்தை வசூலிக்கவும் எல்லா வகையிலும் முயல்கின்றன; ஆர்வம் காட்டுகின்றன. தங்கள் நிறுவன மாணவர்களில் சிலரேனும் மாவட்ட அளவில், மாநில அளவில் முதன்மை பெறவேண்டும் என்று ஆர்வம் காட்டுகின்றன. அத்தகைய திறமைமிக்க மாணவர்களைத் தக்கவைத்துக் கொள்ள கட்டணங்களை ரத்து செய்து, சலுகைகள் தந்து, கூடுதல் பயிற்சிகளையும் தருகின்றன. இந்த கூடுதல் கவனமும் அக்கறையும்தான் தனியார் பள்ளிகளையும் அரசுப் பள்ளிகளையும் வேறுபடுத்தி, மிகப்பெரிய பிளவை ஏற்படுத்திவிட்டன.
எட்டாம் வகுப்பு வரையிலும் அனைத்து மாணவர்களுக்கும் தேர்ச்சி அளிக்கப்பட வேண்டும் என்பது நியாயமானதுதான். ஆனால், கிராமப்புறப் பள்ளியில் எட்டாம் வகுப்பு முடித்த மாணவரிடம், தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பு முடித்த மாணவரின் திறனில் 50 சதவீதமாகிலும் உள்ளதா என்பதை சோதிப்பதும், திறன் குறைந்திருப்பின் தொடர்புடைய பள்ளி ஆசிரியர்களையும் பொறுப்பேற்கச் செய்வதும் அவசியம். இல்லையெனில், சமச்சீர் கல்விமுறையால் அரசு எதிர்பார்க்கும் பலன் ஏற்படாது.
தமிழ் வழிக் கல்வி அல்லது ஆங்கில வழிக் கல்வி எதுவென்றாலும் ஒரே விதமான பாடத்திட்டம் என்ற நிலையில், கட்டணங்களும் சமச்சீராக இருப்பதுதான் பயனுள்ளதாக இருக்கும்.
தற்போது தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளிகள் பத்தாம் வகுப்புக்கே ரூ.15 ஆயிரம் வரை கல்விக் கட்டணம் வசூலிக்கின்றன. இந்தப் பள்ளிகள் உயர் வருவாய்ப் பிரிவினர், பணம்படைத்தோர் மட்டுமே அணுகக்கூடியவையாக உள்ளன. வசதிகள் அடிப்படையில் ஓட்டல்களுக்கு “ஸ்டார்’ அந்தஸ்து தருவதைப்போல, (கல்வியும் வியாபாரம் ஆகிவிட்டதால்) கல்வி நிறுவனங்களுக்கும் அவை பெற்றுள்ள வசதிகளுக்கேற்ப “ஸ்டார்’ அந்தஸ்து தந்து, அவர்கள் வசூலிக்க வேண்டிய கல்விக் கட்டணங்களையும் அரசே நிர்ணயிக்கலாம்.
சமச்சீர் கல்வி முறையால் பத்தாம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களுக்கும் ஒரேவிதமான பாடத்திட்டம் வகுக்கப்படும்போது, இவர்களுக்கான புத்தகங்களை வாங்குவதில் பெற்றோருக்கு அதிக சிரமம் இருக்காது. தற்போது மெட்ரிகுலேஷன் பள்ளிகள், நிறைய புத்தகங்களை-அவர்கள் குறிப்பிடும் நிறுவன வெளியீடுகளை-வாங்கும்படி கட்டாயப்படுத்துகின்றன. புத்தகத்தின் விலையும் அதிகம். ஆனால் அவற்றில் பெரும்பகுதி பாடங்கள் தேவையில்லை என்று விலக்கப்படுகின்றன. இதனால் பெற்றோருக்குத்தான் தேவையற்ற கூடுதல் செலவு.
சமச்சீர் கல்விமுறை வரும்போது, வியாபார நோக்கமுள்ள கல்வி நிறுவனங்கள், சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தை புகழ்ந்து, அதற்கு மாறி, பெற்றோரை தங்கள்பக்கம் இழுக்கும் அபாயமும் இல்லாமல் இல்லை. ஆகவே, பாடத்திட்டத்தை வகுப்பதில் மிகுந்த கவனம் செலுத்துவதன் மூலம் இதைத் தவிர்க்கலாம்.
=================================================================