பாகிஸ்தான், ஈரான் பயணத்தில் பிரணப் சாதித்தது என்ன?
நீரஜா செüத்ரி
தமிழில்: சாரி.
வெளியுறவுக் கொள்கையில் மீண்டும் நடுநிலைப் பாதைக்குத் திரும்பியிருக்கிறார் பிரணப் முகர்ஜி.
சமீபத்தில் தெஹ்ரானுக்கும் இஸ்லாமாபாதுக்கும் சென்று திரும்பிய அவர், “”உள்நாட்டு அரசியல் தேவைகளுக்கு ஏற்ப” வெளிநாட்டுக் கொள்கையை வழிநடத்தும் பொறுப்பை மேற்கொண்டிருக்கிறார்.
இன்றைய உலகில் ஒரெயொரு வல்லரசுதான் (அமெரிக்கா) ஆதிக்கம் பெற்றுத் திகழ்கிறது. அத்தோடு ஒத்திசைவாகச் செல்வதால் எத்தனை ஆதாயங்கள் கிடைக்கும் என்ற உண்மை காங்கிரஸ் கட்சிக்குத் தெரியும்; எனினும் உள்நாட்டில் 15 கோடிக்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் காங்கிரûஸயே எப்போதும் ஆதரிக்கும் வாக்கு வங்கிகளாகத் திகழ்கிறார்கள் என்பதை அதனால் ஒதுக்கித்தள்ள முடியாது.
உள்நாட்டு முஸ்லிம்கள் காங்கிரஸ் கட்சியைவிட்டு விலக ஆரம்பித்துள்ளனர்; “”இந்தியா இப்போது அமெரிக்காவுக்குச் சாதகமாகச் செயல்பட ஆரம்பித்துவிட்டது” என்ற எண்ணம் முஸ்லிம் நாடுகளிடையே எழ ஆரம்பித்திருக்கிறது. இந்த இரண்டையும் சரி செய்யத்தான் அவருடைய இஸ்லாமாபாத், தெஹ்ரான் பயணம் மேற்கொள்ளப்பட்டது.
பிரணப் முகர்ஜியின் பாகிஸ்தான் பயணத்தால் அசாதாரணமான முன்னேற்றம் ஏதும் ஏற்பட்டுவிடாது என்று அனைவருக்குமே தெரியும் என்றாலும், அது ஏதோ அதிமுக்கியமான பயணம் என்ற பிரமை ஊட்டப்பட்டது. பிரதமருடன் செல்வதைப் போல தில்லியிலிருந்தே 30 சிறப்பு நிருபர்கள் இஸ்லாமாபாத் சென்றனர். ஒரே நாளில் போய்த் திரும்ப வேண்டிய பயணம் 2 நாள்களுக்கு நீட்டிக்கப்பட்டது.
பாகிஸ்தானுடனான பேச்சில் ஏதேனும் முக்கிய திருப்பம் நேரிட்டுவிட்டால் ஹிந்து-முஸ்லிம் சமூகங்களுக்கு இடையிலான பதற்றம் கணிசமாகக் குறைந்துவிடும்; மக்கள் மத அடிப்படையில் அணி திரள்வது தடுக்கப்பட்டுவிடும். ஆனால் சியாச்சின் உள்பட எந்த விஷயத்திலும் அப்படி அதிரடியாக சுமுகத் தீர்வு காண நிலைமை இடம் தரவில்லை. அப்படி ஏதும் முயற்சி செய்யக்கூடாது என்பதை நமது ராணுவ தலைமை தளபதி ஜே.ஜே. சிங் ஏற்கெனவே எச்சரித்திருக்கிறார். வெளியுறவு அமைச்சரான பிரணப் முகர்ஜியும் படிப்படியாகத் தீர்வு காண்பதையே விரும்புகிறார். எனவே இப்பயணம் முஸ்லிம்களைச் சமாதானப்படுத்தவே என்பது தெளிவு.
அடுத்தது, ஈரானுக்கு பிரணப் மேற்கொண்ட பயணம். இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் பாரம்பரிய உறவையும், பாகிஸ்தான் வழியாக பெட்ரோலிய எரிவாயுவை இந்தியா வாங்கும் சாத்தியத்தையும் பற்றி பிரணப், தெஹ்ரானில் சுட்டிக்காட்டினார். அணு சக்தியை ஆக்கபூர்வ பணிகளுக்குப் பயன்படுத்த ஈரானுக்கு எல்லா உரிமையும் உண்டு என்று கூட அடித்துப் பேசினார். அதே வேளையில், அணு ஆயுதப் பரவல் தொடர்பான சர்வதேச உடன்படிக்கையை ஈரானும் மதித்து நடக்க வேண்டும் என்று அடிக்குரலில் கூறி முடித்தார்.
இவை அத்தனையையும் அமெரிக்கா உற்று கவனித்துக் கொண்டிருந்தது. அதை இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதர் டேவிட் மல்போஃர்டு தில்லியில் ஒளிவுமறைவில்லாமல் தெரிவித்தார். “”பயங்கரவாதத்துக்கு துணை போவதாகக் கருதப்படும் ஈரானுடன் பெட்ரோலிய எரிவாயுவுக்கான உடன்பாட்டை இந்தியா செய்துகொள்வதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை” என்று மென்று விழுங்காமல் வெளிப்படையாகவே தெரிவித்தார்.
சரி அதனால் என்ன, அடுத்த மாதம் வாஷிங்டனுக்குச் சென்று அமெரிக்கத் தலைவர்களையும் வெளியுறவுத்துறை அமைச்சரையும் சந்தித்து, “”இரு பெரிய ஜனநாயக நாடுகளுக்கு இடையிலான உறவை வலுப்படுத்த” ஏதாவது பேசி சமாதானப்படுத்தினால் ஆயிற்று என்றுகூட பிரணப் நினைத்திருக்கலாம்.
வெளியுறவுக் கொள்கையில் இடைப்பாதையை பிரணப் எடுத்ததற்குக் காரணம் சோனியா காந்தியாகவும் இருக்கலாம். பிரணப் கூறி சோனியா கேட்கிறாரா, சோனியா சொல்வதை பிரணப் கேட்கிறாரா என்று தெரியவில்லை. ஆனால் தெஹ்ரானுக்கும் இஸ்லாமாபாதுக்கும் செல்வதற்கு முன், தனியாக சோனியாவுடன் அவர் நீண்ட நேரம் பேசிவிட்டுத்தான் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தானுடன் சுமுக உறவுக்காக, எதையாவது விட்டுக்கொடுத்து உடன்பாடு செய்து கொண்டால், அதையே ஒரு பெரிய பிரச்சினையாக்கி, அரசியல் ஆதாயம் அடைய பாரதீய ஜனதா தருணம் பார்த்துக் கொண்டிருக்கிறது. எனவே எச்சரிக்கையாகச் செயல்பட வேண்டிய கட்டாயம் காங்கிரஸýக்கு இருக்கிறது. அதேசமயம் உத்தராஞ்சல், உத்தரப்பிரதேசம், கோவா, குஜராத் போன்ற முக்கிய மாநிலங்களில் சட்டப்பேரவை பொதுத் தேர்தல் நடைபெற வேண்டியிருக்கிறது. அங்கு கணிசமான எண்ணிக்கையில் வாழும் முஸ்லிம்களைக் கவர வேண்டிய கட்டாயமும் காங்கிரஸýக்கு இருக்கிறது.
முக்கிய மாநிலங்களில் தேர்தல் நடைபெறவிருப்பதாலும், பிறகு நாடாளுமன்ற பொதுத் தேர்தல் நெருங்குவதாலும் ஏழைகளுக்கும் சிறுபான்மை மக்களுக்கும் நெருக்கமான கட்சியாக காங்கிரûஸ சித்திரிக்க வேண்டிய கடமை சோனியாவுக்கு இருக்கிறது.
அதனாலேயே, சிறப்புப் பொருளாதார மண்டலத்தை ஏற்படுத்துவதிலும், சில்லரை வர்த்தகத்தில் பெரிய நிறுவனங்களை அனுமதிப்பதிலும் எச்சரிக்கை தேவை என்று பிரதமருக்குக் கடிதம் எழுதியிருக்கிறார். பிரணப் முகர்ஜியின் இடைப்பாதை என்பதும் இதை அடியொற்றித்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழில்: சாரி.