ஒருங்கிணைந்த ஜவுளி பூங்காக்கள்
எஸ். கோபாலகிருஷ்ணன்
ஜவுளித்துறையில் “கோட்டா’ முறை முடிவுக்கு வந்து சுமார் 3 ஆண்டுகளாகப் போகிறது. ஜவுளித்துறையில் ஏற்பட்ட மிகப்பெரிய மாற்றம் இது. இந்த மாற்றம் ஏற்படுவதற்கு முன் என்ன நிலைமை இருந்தது?
அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய யூனியன் நாடுகள் தங்களுக்குத் தேவையான ஆயத்த ஆடைகளை ஒரே நாட்டிலிருந்து வாங்குவதில்லை. இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, சீனா, இந்தோனேசியா போன்ற பல நாடுகளிலிருந்து நிர்ணயிக்கப்பட்ட ஒரு விகித அடிப்படையில் இறக்குமதி செய்து வந்தன. இதனால், இந்தியா ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் ஏற்றுமதி செய்வதற்கான வாய்ப்பு இல்லாமல் இருந்தது. இந்த கோட்டா முறை 2005 ஜனவரி முதல் ரத்து செய்யப்பட்டது.
இதையடுத்து இந்திய ஜவுளித்துறைக்கு மிகப்பெரிய வாய்ப்பு காத்திருக்கிறது என்று பரவலாக எதிர்பார்க்கப்பட்டது. “”இனி தேவையெல்லாம், வணிகத்திறன் மட்டுமே. அதாவது, சர்வதேசச் சந்தையில் போட்டியிடுவதற்குத் தகுந்த சிறப்பான தரம், நியாயமான விலை, குறிப்பிட்ட தேதியில் ஏற்றுமதி செய்தல் ஆகியவையே. இனி எவ்வளவு வேண்டுமானாலும் ஏற்றுமதி செய்யலாம்” என்று ஜவுளித்துறையில் பேசப்பட்டது.
2005-ல் வெளியான முக்கிய ஆய்வறிக்கைகள், 2003 – 04-ல் 12 பில்லியன் டாலராக இருந்த ஜவுளி ஏற்றுமதி 2010-ல் 50 பில்லியன் டாலராக உயரும் என்று தெரிவித்தன. (ஒரு பில்லியன் என்பது நூறு கோடி). அதேபோல், 2012-ம் ஆண்டில் 55 பில்லியன் டாலராகவும் 2014-ம் ஆண்டில் 70 பில்லியன் டாலராகவும் ஜவுளி ஏற்றுமதி உயரும் என்றும் கணிக்கப்பட்டது. அதாவது, இந்தியாவில் தகவல் தொழில் நுட்பத்துறைக்கு இணையாக ஜவுளித்துறை உத்வேகம் அடையும் என்றும் பேசப்பட்டது.
ஆனால், நடப்பாண்டில் ஜவுளி ஏற்றுமதி மதிப்பு 23 பில்லியன் டாலராகவே இருக்கும் என்று தெரிகிறது. அதாவது நிர்ணயிக்கப்பட்டிருந்த 25 பில்லியன் டாலர் இலக்கைவிட குறைவாகவே இருக்கும். கடந்த ஆண்டும் இலக்கைவிட 2 பில்லியன் டாலர் குறைவாகவே ஏற்றுமதி இருந்தது.
எனினும், நான்கு ஆண்டுகளுக்கு முன் வெறும் 12 பில்லியன் டாலராக இருந்த ஜவுளி ஏற்றுமதி இந்த ஆண்டு இரண்டு மடங்காக அதிகரித்திருப்பது சற்று ஆறுதலான விஷயம்.
இந்தியாவின் ஒட்டுமொத்த ஏற்றுமதி அதிகரித்துள்ள அளவு, ஜவுளி ஏற்றுமதி அதிகரிக்கவில்லை என்பதே உண்மை.
சீனா, வங்கதேசம் போன்ற நாடுகள் இந்தியாவைவிட சிறப்பாகச் செயல்பட்டு கோட்டா முறை ரத்தான வாய்ப்பை நன்கு பயன்படுத்திக் கொண்டுள்ளன. சர்வதேச அளவில் இந்தியாவின் ஜவுளி ஏற்றுமதி 3 சதவிகிதம்தான்; ஆனால் சீனாவின் ஏற்றுமதி 20 சதவிகிதம்.
இந்தியாவைப் பொருத்தவரை, ஜவுளித்துறைக்கு ஒரு முக்கியத்துவம் உண்டு. மூன்றரை கோடி மக்களுக்கு நேர்முகமாகவும் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு வழங்கும் துறை இது. இந்தியாவின் மொத்த தொழிலாளர்களின் எண்ணிக்கையில் ஒன்பது சதவிகிதத்தினருக்கு ஏற்கெனவே வேலைவாய்ப்பு வழங்கிவரும் ஒரு துறை.
மத்திய அரசு அண்மைக்காலமாக சில புதிய திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. ஜவுளித்துறையில் புதிதாக முதலீடுகள் வரவேண்டும் என்ற நோக்கில், 1999-ம் ஆண்டு முதல் ஜவுளித்துறையில் தொழிலியல் மேம்பாடு நிதித் திட்டத்தை (பங்ஷ்ற்ண்ப்ங் மல்ஞ்ழ்ஹக்ஹற்ண்ர்ய் ஊன்ய்க் நஸ்ரீட்ங்ம்ங்) உருவாக்கி தொழிலியல் ரீதியான மேம்பாடு மற்றும் நவீனமயமாக்கலுக்காக நிதி உதவி செய்து வருகிறது. இத்திட்டம் நடப்பாண்டில் முடிவடையும் நிலையில் மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
வாட் (யஹப்ன்ங் அக்க்ங்க் பஹஷ்) உள்ளிட்ட வரிச்சலுகைகள், நவீன இயந்திரங்கள் இறக்குமதிக்கான நடைமுறைகளை எளிமைப்படுத்துதல், சிறுதொழில்துறையினருக்கு ஒதுக்கப்பட்டிருந்த பின்னலாடை போன்ற சில பிரிவுகளை பிற தொழிற்கூடங்களுக்கு அனுமதித்தல், வெளிநாட்டு முதலீட்டுக்கான உச்ச வரம்பை 100 சதவிகிதமாக உயர்த்துதல் போன்ற பல நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது.
எனினும் ஜவுளித்துறை குறிப்பிடத்தக்க அளவில் வெளிநாட்டு மூலதனத்தை ஈர்க்கவில்லை என்பதே உண்மை. தொழிலியல் மேம்பாட்டு நிதித் திட்டத்தின் பயனாக, உள்நாட்டு முதலீட்டாளர்கள் கணிசமான அளவில் புதிய முதலீடுகளை ஜவுளித் துறையில் செய்து வருகின்றனர்.
அதேநேரம், ஜவுளி ஏற்றுமதியில் அனுபவமும், ஆற்றலும் பெற்றுள்ள சில தொழில் முனைவோர் வங்கதேசம் சென்று, ஏற்றுமதி செய்ய முற்பட்டிருப்பது கவனிக்கத்தக்கது. அந்த நாட்டில் தொழிலாளர் ஊதியம் உள்ளிட்ட செலவினங்கள் குறைவு என்பதே இதற்கு காரணம்.
இது ஒருபுறமிருக்க, அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 9 சதவிகிதம் உயர்ந்துவிட்டது. மற்ற ஏற்றுமதியாளர்களைப்போலவே, ஜவுளி ஏற்றுமதியாளர்கள் இந்த டாலர் வீழ்ச்சியால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இப் பாதிப்பை ஈடுசெய்யும் வகையில் ரூ. 1,400 கோடியில் பல்வேறு சலுகைகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. எனினும், இது போதுமானது அல்ல என்பது ஏற்றுமதியாளர்களின் கருத்து.
இந்நிலையில், டாலர் மதிப்பு வீழ்ச்சியை எதிர்கொள்ளும் வகையில், ஜவுளி ஏற்றுமதியாளர்கள் சில முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள். உதாரணமாக, அமெரிக்கச் சந்தைக்கு ஏற்றுமதி செய்வதை மட்டும் நம்பியிராமல், ஐரோப்பிய நாடுகளுக்கும் ஜவுளி ஏற்றுமதியை அதிகரிப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இது வரவேற்கத்தக்கதுதான். எனினும், அமெரிக்கச் சந்தையின் தேவையைவிட ஐரோப்பிய நாடுகளின் தேவை மிகக் குறைவு என்பதால், இது ஒரு தாற்காலிக நிவாரணமாகவே அமையும்.
அதேபோல், அமெரிக்காவின் புதிய ஆர்டர்களுக்கு 3 சதவிகித அளவுக்கு விலையை உயர்த்தி வருகிறார்கள் என்று திருப்பூர் உள்ளிட்ட பல பகுதிகளில் செயல்படும் ஜவுளி வியாபாரிகள் தெரிவிக்கிறார்கள்.
ஜவுளித்துறையில் நீண்டகாலத்துக்கு உத்வேகம் ஏற்பட வேண்டுமானால், தொழிலியல் ரீதியாக நவீனமயமாக்கல், கட்டமைப்பு மேம்பாடு, காலமாற்றத்துக்கேற்ற புதிய புதிய வணிக உத்திகள் ஆகியவை உடனடித் தேவை. அத்துடன், நெசவு முதல் ஆடைகளைத் தைத்து முடிப்பதுவரை ஒரே இடத்தில் ஒருங்கிணைந்த உற்பத்திக் கூடங்கள் அமைக்கப்பட வேண்டும்.
இதைக் கருத்தில்கொண்டு, சர்வதேசத் தரத்துக்கு ஜவுளி ஆலைகளை நிறுவுவதற்காக ஒருங்கிணைந்த ஜவுளி பூங்காக்களை மத்திய அரசு அமைக்கிறது. இத்திட்டத்தில் 30 ஜவுளி பூங்காக்களை அமைக்க ஏற்கெனவே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ரூ. 2 ஆயிரத்து 897 கோடியில் அமையும் இத் திட்டத்தில் மத்திய அரசின் பங்குத்தொகை ரூ. 1,055 கோடி என்று மத்திய ஜவுளித்துறை இணை அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்திருப்பது நம்பிக்கை ஊட்டுவதாக உள்ளது.
(கட்டுரையாளர்: சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியாவின் முன்னாள் துணைப் பொது மேலாளர்).