ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: அறிவாற்றலுக்கு – உரைமருந்து!
பேராசிரியர் எஸ். சுவாமிநாதன்
என் மகனுக்கு ஏழு வயதாகிறது. படிப்பதிலும், வாசிப்பதிலும், எழுதுவதிலும் போதிய வேகம் இல்லை. டி.வி. கார்ட்டூன் பார்க்க அதிக ஆர்வம் காட்டுகிறான். பள்ளிக்குச் செல்வதற்கு, சிணுக்கம், பயம் கொள்கிறான். மற்றபடி பொதுவாக துறுதுறுப்பும் அறிவும் உள்ளவனாகவும் இருக்கிறான். அவனது மெலிந்த உடல் தேறவும், எழுத்து மற்றும் படிப்பில் திறம் பெறவும் வழி கூறவும்.
தனக்குப் பிறந்த குழந்தை நல்ல அறிவாற்றலோடு நீண்ட ஆயுளுடன் மகிழ்ச்சியுடன் வாழவேண்டும் என்று ஒரு தாய் நினைப்பது இயற்கையே. இவை அனைத்தையும் பெற அந்தக் காலங்களில் உரை மருந்து ஒன்றைத் தயாரித்து சிசுக்களுக்கும் கொடுப்பார்கள். இந்த உரை மருந்து இன்று மறந்துபோய்விட்டது. அதை நீங்கள் உங்கள் குழந்தைகளுக்குப் பிறந்த 10-15 நாட்களிலிருந்து 5-7 வயது வரை தொடர்ந்து கொடுத்து வந்திருந்தால் நீங்கள் கூறும் உபாதைகள் அனைத்தையும் தவிர்த்திருக்கலாம். காலதாமதமானாலும் பரவாயில்லை, இப்போதும் அந்த உரை மருந்து தங்கள் மகனுக்கு உதவக்கூடும்.
கடுக்காய், சித்தரத்தை, சுக்கு, ஜாதிக்காய், மாசிக்காய், வசம்பு என்ற ஆறு கடைச்சரக்குகள். நெல்லைப் புழுக்குவதற்கு வேக வைக்கும்போது நெல்லுடன் இவற்றை அப்படியே வெள்ளைத்துணியில் முடித்து வைத்துவிடவும். அரை வேக்காடு ஏற்பட்டதும் (காய்களை அழுத்தினால் அழுந்தும் பதம் வந்தவுடன்) எடுத்து நிழலில் உலர்த்தி வைத்துக் கொள்ளவும். உரை மருந்து தயார்.
கை அகலத்திலுள்ள உரைகல் ஒன்று தேவை. அதில் வெந்நீர், வெற்றிலைச் சாறு, துளசிச் சாறு, ஓமகஷாயம், இஞ்சிச் சாறு இவற்றில் ஒன்றைவிட்டு ஒவ்வொன்றையும் வயதிற்கேற்றபடி 2-15 தடவை உரைத்து வந்த விழுதைத் தேன் அல்லது சர்க்கரை சேர்த்துக் கொடுக்கவும். வாயு, சளி -வெந்நீர்; சளி, மப்பு -வெற்றிலைச்சாறு, துளசிச் சாறு, தேன்; வயிறு மந்தம், வயிற்றுப்போக்கு-ஓமகஷாயம், தேன். மப்பு, ஜ்வரம், வாந்தி -இஞ்சிச்சாறு, தேன் என்று மாற்றி அமைத்துக்கொள்ளலாம்.
கடுக்காய் :
நல்ல ஜீரண சக்தி, பசி தரும். மலத்தை இளக்கும். புளிப்பு(வயிற்றில்) அதிகமாவதைத் தடுக்கும். அஜீரண பேதியைத் தடுக்கும். குடல், இரைப்பை, கல்லீரல் சரியே இயங்கச் செய்யும்.
சுக்கு :
வயிற்றில் வாயு சேர விடாது. வயிறு உப்புசம், மலஜலம் சரியாக வெளியேறாதிருத்தல், மப்பால் வயிற்றுவலி, அஜீரணம், வாந்தி இவற்றைப் போக்கும். ஆனால் வயிற்றில் அழற்சி, கடுப்புடன் சீதத்துடன் மலம் வெளியாதல் ரத்தப்போக்கு போன்றவை இருந்தால் சுக்கை உரைத்துக் கொடுக்கக்கூடாது.
சித்தரத்தை :
தொண்டை மார்பு இவற்றில் கபக்கட்டு, உடலில் கடுப்பு வலி இவற்றில் நல்லது. எண்ணெய் தேய்த்தால் ஜ்வரம் சளி பிடிக்கும் என்ற நிலையில் இதனைத் தொடர்ந்து கொடுக்கலாம். தொண்டை-வாய்ப்புண், வறட்டிருமல், வயிற்று வேக்காளம் உள்ள நிலையில் சித்திரத்தையைக் கொடுக்கக்கூடாது. கபக்கட்டுள்ள நிலையில் இதனையும், சுக்கையும் அதிகம் உபயோகிக்கலாம்.
ஜாதிக்காய் :
இரைப்பையை நன்கு தூண்டி, ருசி சுவை கூட்டி பசி ஜீரண சக்தி தரும். சிடுசிடுப்பு, பரபரப்பு, காரணம் புரியாத அழுகை முதலியதைக் குறைத்து அமைதியாகத் தூக்கம் வரச் செய்யும். இளகிச் சூட்டுடன் அடிக்கடி மலம் போவதை இது தடுக்கும்.
மாசிக்காய் :
வேக்காளத்தைக் குறைக்கும். வாய்ப்புண், இரைப்பைப் புண், குடல் புண் இவற்றைக் குறைக்கும். பற்களைக் கெட்டியாக அழகாக வளரச் செய்யும். உடலில் விஷசக்தி பரவாமல் தடுக்கும். சிறுநீர் தாராளமாக வெளியாகும். தொண்டைச் சதை வளர்ச்சி, உள்நாக்கு வளர்ச்சி, சீத ரத்தத்துடன் மலப்போக்கு, வாயில் உமிழ்நீர் அதிகம் பெருகுதல் இவற்றைக் கட்டுப்படுத்தும்.
வசம்பு :
இதுவும் கடுக்காயும், பிள்ளை வளர்ப்பான் என்ற பெயர் பெற்றவை. பசியின்மை, சுறுசுறுப்பின்மை, ருசியின்மை இவற்றைப் போக்கும். பரபரப்பு, சிடுசிடுப்பு, அமைதியின்மை இதனைச் சீராக்கும். பால் ஜீரணமாகாமல் வெளுத்து மலம் போவது, கீரிப்பூச்சி, உப்புசம், வயிற்றுவலி, மார்பில் கபச்சேர்வை இவற்றைப் போக்கும். உடல் சீராக வளர உதவும்.
கார மருந்து என இதற்குப் பெயர். அதனால் உரைத்த மருந்தை சிறுகச்சிறுகச் புகட்ட வேண்டும். தேன் சர்க்கரை சேர்த்து இனியதாக ஆக்கிக் கொள்ள வேண்டும். சிறு சிசுவிற்கு 10-15 உரைப்பு வரை தேவைப்படும். மூளைக்கும் குடலுக்கும் நல்ல செயல் திறனைத் தரும் இம்மருந்தை நீங்கள், உங்கள் மகனுக்கு ஏழு அல்லது எட்டு வயது முடியும் வரை தொடர்ந்து கொடுத்து வரலாம். எழுத்து மற்றும் படிப்பில் திறமை வளரும்.