அன்டன் பாலசிங்கம் காலமானார்
![]() |
![]() |
அன்டன் பாலசிங்கம் |
தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் அமைப்பின் அரசியல் ஆலோசகரும் தலைமைப் பேச்சுவார்த்தையாளருமான ஆண்டன் பாலசிங்கம் அவர்கள் இன்று இலண்டன் நகரில் உடல் நலக் குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வயது 68.
இருபத்தைந்து ஆண்டு காலத்துக்கும் மேலாக விடுதலைப் புலிகள் அமைப்பின் பல்வேறு முக்கிய அரசியல் நிகழ்வுகளில் முக்கிய பங்காற்றியதாகக் கருதப்படும் ஆண்டன் பாலசிங்கம் அவர்கள், இலங்கை அரசுடனான சமாதானப் பேச்சுவார்த்தைகளில், விடுதலைப் புலிகள் குழுவின் தலைமைப் பேச்சுவார்த்தையாளராகவும் அவர் இருந்திருக்கிறார்.
பல ஆண்டு காலமாக இலண்டன் நகரில் வசித்து வரும் ஆண்டன் பாலசிங்கம் சில மாதங்களாகவே கடுமையாக நோய்வாய்ப்பட்டிருந்தார்.
விடுதலைப் புலிகளின் இரங்கல்
தமிழீழத்தின் ராஜகுருவாக திகழ்ந்த அன்டன் பாலசிங்கத்தை பிரிந்து தமிழ் இனம், ஆற்றுப்படுத்த முடியாத துயரில் மூழ்கியுள்ளது என்று அன்டன் பாலசிங்கத்தின் இல்லத்தில் இருந்து விடுக்கப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அன்டன் பாலசிங்கம் ஈழத் தமிழர்களின் வரலாற்றில் நிலைத்து நிற்பார் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
பாலசிங்கத்தின் மறைவால் தமிழ் தேசமே சோகத்தில் முழ்கியுள்ளதாக விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இளந்திரையன் தமிழோசையிடம் தெரிவித்தார்.
விமர்சகர் கருத்து
பாலசிங்கத்தின் மறைவு விடுதலைப் புலிகளின் பேச்சுவார்த்தைக் குழுவில் ஒரு வெற்றிடத்தை உருவாக்கும் என்று கனடாவில் இருக்கும் பத்திரிகையாளரும் ஆய்வாளருமான டி பி எஸ் ஜெயராஜ் தெரிவித்தார்.
![]() |
|
முதலில் இடது சாரி சிந்தனையாளராக இருந்த பாலசிங்கம், பிறகு தமிழ் தேசிய சிந்தனையாளராக மாறியதாகக் குறிப்பிட்ட டி பி எஸ் ஜெயராஜ், போராட்டத்தில் விடுதலைப் புலிகளுக்கு சிக்கல்கள் வரும்போதெல்லாம், அந்த சிக்கலில் இருந்து புலிகளை அரசியல் ரீதியாக மீட்க பாலசிங்கம் பாடுபட்டார் என்றார்.
ஆனால் அதே சமயம், ஆயுதப் போராட்டத்தை அரசியல்ரீதியாக வழிநடத்துவதற்கு பதிலாக, ஆயுதப் போராட்டத்தை நியாயப்படுத்தினார் என்ற குற்றச்சாட்டு அவர் மீது கூறப்பட்டதாகவும் டி பி எஸ் ஜெயராஜ் தெரிவித்தார்.