ஒரிசாவில் பரிதவிக்கும் ஆதிவாசிகள்
டி.புருஷோத்தமன்
நமது நாடு 9 சதவீத பொருளாதார வளர்ச்சியை நோக்கி பீடுநடை போடுகிறது; அன்னியச் செலாவணி இருப்பு திருப்திகரமாக இருந்து வருகிறது.
ஆனால் அடிப்படை வசதியோ, அடுத்தவேளைக்கு உணவோ இன்றி அவதிப்படும் கோடிக்கணக்கான ஆதிவாசி மக்கள் நமது நாட்டில் இருக்கிறார்கள் என்பதை எண்ணிப்பார்த்தோமா என்று கேள்வி எழுப்பினால், இல்லை என்றுதான் பதில் அளிக்கவேண்டியுள்ளது.
நமது நாட்டில் பொருளாதார வளர்ச்சியிலும் கல்வி முன்னேற்றத்திலும் பின்தங்கியுள்ள மாநிலங்களில் ஒரிசாவும் ஒன்று. தலைநகர் புவனேசுவரத்தில் அரசு போக்குவரத்து அறவே இல்லாத அவலம். சாலைகள்தோறும் ஆட்டோக்கள்தான். அரசு பஸ் போக்குவரத்துக் கழகம் திவாலாகிவிட்டதாக கொசுறு செய்தி.
இப்படிப்பட்ட ஒரிசா மாநிலத்தில் மக்களின் வாழ்க்கைத்தரம் எவ்வாறு இருக்கும் என்பதை எண்ணிப்பார்த்தால் கண்ணீரும் கவலையும்தான் மிஞ்சும்.
ஒரிசாவில் வனப்பகுதிகளும் மலைகளும் அதிகம். இதனால் மாநிலத்தின் மக்கள் தொகையில் 32 சதவீதம் பேர் மலைவாழ் மக்கள். ஆண்டாண்டுக் காலமாக எவ்வித முன்னேற்றமும் இன்றி அவர்கள் வறுமையில் வாடுகின்றனர். கனிம வளங்கள் ஏராளமாக இருந்தும் பொருளாதார வளர்ச்சித் திட்டங்களின் பயன்கள் அவர்களைச் சென்றடைவதில்லை. போதாக்குறைக்கு மலைவாழ் மக்களிடையே பிளவு வேறு.
ஒரிசா மாநிலத்தின் தெற்குப் பகுதியில் கந்தமால் பகுதி அமைந்துள்ளது. இதன் மக்கள் தொகை 6 லட்சம். இதில் சுமார் 75 சதவீதம் பேர் “குயி’ மொழி பேசுகின்ற “கோந்த்’ என்ற பழங்குடி (எஸ்.டி.) இனத்தவர்களாவர். அடுத்து “பானா’ என்கின்ற தாழ்த்தப்பட்ட (எஸ்.சி.) மக்கள். “குயி’ மொழி பேசும் இவர்கள் 20 சதவீதம் பேர் ஆவர்.
கோந்த் சமூகத்தினர் மிகவும் வறிய நிலையில் இருந்து வருகின்றனர். எந்த அரசு பதவிக்கு வந்தாலும் இவர்களைக் கண்டுகொள்வதே இல்லை. கல்வியறிவும் இல்லாத காரணத்தால் அறியாமையில் மூழ்கிக் கிடக்கின்றனர்.
கோந்த் சமூகத்தினரின் அறியாமை, ஏழ்மை, படிப்பறிவின்மை போன்ற பலவீனங்களைப் பயன்படுத்திக் கொண்டு அவர்கள் மீது பானா சமூகத்தினர் ஆதிக்கம் செலுத்தி வருவதுதான் வேதனை அளிக்கும் விஷயமாகும்.
பானா சமூகத்தினர் பலர் கிறிஸ்தவர்களாக மதம் மாற்றப்பட்டுவிட்டனர். மிஷினரிகளின் உதவியால் கல்வி, வேலைவாய்ப்புகளைப் பெற்று பொருளாதார ரீதியில் வலுவாகிவிட்டனர். மதம் மாறிய பிறகும் எஸ்.சி.க்கான சலுகைகளைப் பெறுவதற்காக போலி சாதிச் சான்றுகளைப் பெறுகின்றனர். இதன்மூலம் அரசின் சலுகைகளையும் அரசு வேலைகளையும் பெற்றுவிடுகின்றனர்.
கோந்த் பழங்குடியினர் எண்ணிக்கையில் அதிக அளவு இருந்தும் கூட பொருளாதார ரீதியில் வலுவாக இல்லாத காரணத்தால் பானா சமூகத்தினரை விட பன்மடங்கு பின்தங்கிய நிலையிலேயே இருந்து வருகின்றனர். பானா சமூகத்தினரின் சுரண்டலால் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் கோந்த் சமூகத்தினர்தான் என்பது குறிப்பிடத்தக்க விஷயமாகும்.
மாவட்ட மக்கள்தொகையில் பெரும்பான்மையினராக இருந்தும்கூட கோந்த் சமூகத்தினர் எவரும் இதுவரை சட்டமன்ற உறுப்பினராகவோ அல்லது நாடாளுமன்ற உறுப்பினராகவோ தேர்ந்தெடுக்கப்படவில்லை. இதனால் அரசியல் செல்வாக்கு அறவே இல்லாதவர்களாகிவிட்டனர்.
அதேசமயம் பானா சமூகத்தினர் அரசியல் செல்வாக்குடன் திகழ்கின்றனர். தங்களுக்குத் தேவையான சலுகைகளை அரசிடமிருந்து பெற்றுவருகின்றனர்.
கோந்த் சமூகத்தினரை அடக்கி ஆள்வதே குறிக்கோள் என்ற ரீதியில் புல்பானி சட்டமன்ற உறுப்பினரும் ஒரிசா அமைச்சரவையில் உருக்கு மற்றும் சுரங்கத்துறை அமைச்சராக இருந்தவருமான பத்மனாப பேஹ்ரா செயல்பட்டு வந்தார்.
கடந்த ஆண்டு டிசம்பர் 23 ஆம் தேதி கோந்த் பழங்குடி இனத்தவர்கள் மீது பானா சமூகத்தைச் சேர்ந்தவர்களும் நக்சலைட்டுகளும் பயங்கர ஆயுதங்களுடன் தாக்குதல் நடத்தினர். இதில் கோந்த் இனத்தைச் சேர்ந்த காகேஸ்வர் மாலிக் என்பவர் கொலை செய்யப்பட்டார். பிரம்மணிகால் என்ற கிராமத்தையே வன்முறைக் கும்பல் தீக்கிரையாக்கியது.
நிலைமை கட்டுக்கடங்காமல் போவதைக் கண்ட ஒரிசா முதல்வர் நவீன் பட்நாயக் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவருவதற்காக கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டார். அதிரடி நடவடிக்கையாக அமைச்சர் பதவியிலிருந்து பத்மனாப பேஹ்ராவை நீக்கினார்.
எனினும் கோந்த் இனத்தவருக்கும் பானா இனத்தவருக்கும் இடையிலான மோதல் நீருபூத்த நெருப்பாகவே இருந்து வருகிறது. அது எப்போது மீண்டும் வெடிக்கும் எனத் தெரியவில்லை.
வெவ்வேறு இனத்தைச் சேர்ந்த மானும் சிங்கமும் சேர்ந்து ஒரு துறையில் தண்ணீர் குடிக்கவில்லை என்றால் பரவாயில்லை என கூறிவிடலாம். ஆனால் ஒரே இனத்தைச் சேர்ந்த மானும் மானுமே சேர்ந்திருக்கவில்லை என்பதைக் கேட்கும்போது வேதனைதான் மிஞ்சுகிறது.
நகர மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதில் காட்டும் ஆர்வத்தில் சிறு துளியையாவது ஆதிவாசிகளின் முன்னேற்றத்திலும் அரசியல் தலைவர்கள் காட்ட வேண்டும். அரசு அதிகாரிகளும் ஆதிவாசிகளின் நலனில் அக்கறை காட்டி அவர்களுக்கான வளர்ச்சித் திட்டங்களை சரிவர நிறைவேற்ற உதவ வேண்டும். அப்போதுதான் நமது நாட்டின் பூர்வகுடிகளான ஆதிவாசிகளின் வாழ்வில் ஒளிபிறக்கும்.