“அன்னை கூறிய புன்னையின் சிறப்பு’
மு. பாலசுப்பிரமணியன்
இன்றைய உலகை ஆட்டுவிக்கும் அல்லது இயக்கும் ஆற்றலான பெட்ரோலியப் பொருள்கள் இன்னும் கொஞ்ச நாளில் படிப்படியாக மறைந்து போகும் என்பதை அனைவரும் அறிவர்.
இதற்கு மாற்று எரிபொருள்களைத் தேடுவதில் உலக நாடுகள் அனைத்தும் போட்டி போடுகின்றன. நீடித்த, சுற்றுச்சூழலைக் கெடுக்காத ஆற்றல் வளங்கள் பற்றிய ஆய்வுகள் நடந்து வருகின்றன. அதில் ஒன்றான செடியின எரிபொருள்களைத் தேடுவதில் அறிவியல் ஆய்வாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்தச் செடியின எரிபொருள்கள்தாம் உண்மையில் பண்டைய எரிபொருள்கள் ஆகும்.
வீட்டு விளக்குகளிலும், விளக்குத் தூண்களிலும் ஏன் கலங்கரை விளக்கங்களிலும் இவை பயன்படுத்தப்பட்டு வந்துள்ளன. இந்தப் பயிரின எண்ணெய்கள் அந்தந்தப் பண்பாட்டு, சூழல் வாய்ப்புகளுக்கு ஏற்ப பயன்படுத்தப்பட்டு வந்துள்ளன.
2000 ஆண்டுகளுக்கு முன்பே காவிரிப்பூம்பட்டினம், மதுரை, கொற்கை போன்ற பெருநகரங்களின் தெருவிளக்குத் தூண்களிலும், கோயிலின் தூண்டாமணி விளக்குகளிலும் இந்த எண்ணெய் வகைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இதற்கென்று பல்வேறு எண்ணெய் தரும் பயிரினங்கள் கண்டறியப்பட்டன.
குறிப்பாக புன்னை, இலுப்பை, ஆமணக்கு போன்றவை எரிபொருளுக்காகவே பயன்படுத்தப்பட்டன. இவை “உண்ணா எண்ணெய்’ என்ற பிரிவைச் சாரும். உண்ணும் எண்ணெய் வகைகளான எள், தென்னை போன்றவை தனி.
ஆழிப்பேரலையின் ஊழிக் கூத்தில் பாதிக்கப்பட்ட ஒரு பகுதி நாகைக் கடற்கரை. அங்கு எந்தவிதப் பாதிப்பும் இன்றி செழித்து நின்றது புன்னை மரம்.
புன்னை இலக்கியவாணர்களின் ஓர் இனிய பயிர். சங்க இலக்கியங்களில் பெரிதும் பேசப்படும் மரமும் இதுவே. குறிப்பாக நெய்தல் பற்றிப் பாட முனையும் புலவன் புன்னையைத் தொடாமல் போவதில்லை. இந்தப் புன்னை மரத்தில் காய்த்துக் கொட்டுபவைதான் புன்னங் கொட்டைகள்.
பண்டைத் தமிழ்ச் சமூகம், மரங்களையும் உடன் பிறந்தவர்களாகப் பாவித்து வந்தனர். அவ்வகையில் புன்னை மரமும் அவர்களது வாழக்கையின் அங்கமாக இருந்து வந்தது.
ஒப்பீட்டளவில் மற்ற எரிபொருள் மரங்களைவிட அதிகப் பயன் தருவதாக புன்னை மரம் உள்ளது. இதன் பொருளியல் மதிப்பைப் பார்ப்போம்.
புன்னை விதையில் இருந்து கிடைக்கும் எண்ணெயை நேரடியாக மோட்டார்களில் பயன்படுத்த முடியும். வெளியாகும் புகையின் அளவும் குறைவாக இருக்கும். எண்ணெயின் தேவையும் டீசலை ஒப்பிடும்போது குறைவாகவே உள்ளது. அதாவது ஒரு மணி நேரம் இயங்குவதற்கு 900 முதல் 1000 மிலி டீசல் தேவை எனில் அதுவே புன்னை எண்ணெய் 600 மிலி என்ற அளவே போதுமானதாக இருக்கிறது. அத்துடன் கரும்புகையின் அளவு டீசலில் அதிகமாக இருப்பதுடன் மிக எரிச்சலூட்டும் நெடியும் இருக்கும். ஆனால் புன்னை எண்ணெயைப் பயன்படுத்தும்போது புகை குறைவாக வரும். அத்துடன் விரும்பத்தக்க மணமும் இருக்கும்.
அதாவது ஒரு கோயிலினுள் இருக்கின்ற உணர்வு ஏற்படும். எந்திரத்தில் எந்த மாற்றமும் செய்ய வேண்டியதில்லை என்பது அதைவிட கூடுதல் பயன்.
எடுத்துக்காட்டாக டீசல் விலை லிட்டருக்கு 33 ரூபாய். அதேசமயம் சந்தையில் புன்னை எண்ணெயின் விலை லிட்டருக்கு 40 ரூபாய். ஆனால் ஒரு மணி நேரம் இயக்குவதற்கு 600 மிலி புன்னை எண்ணெய் போதுமானது. எனவே இதன் உண்மையான விலை 24 ரூபாய் மட்டுமே!
ஒரு பண்ணையாளர் தமக்குத் தேவையான அனைத்து ஆற்றல் தேவைகளுக்கும் தனது பண்ணையில் வளரும் புன்னை மரத்தைக் கொண்டே நிறைவு செய்து கொள்ள முடியும். அவர் பிற மின்சாரத் தேவைகளுக்குக்கூட அரசு நிறுவனங்களையோ தனியார் நிறுவனங்களையோ அண்டியிருக்க வேண்டியதில்லாத சுயசார்பு உள்ளவராக மாற முடியும்.
முந்தைய காலங்களில் வண்டிகள் செய்வதற்கு இந்த புன்னை மரத்தையே பயன்படுத்தி உள்ளனர். இது கனமற்ற ஒரு மரம். அத்துடன் இதில் உள்ள எண்ணெய்ச் சாரம் பூச்சிகள், கரையான்கள் இவற்றின் தாக்குதலுக்கு இலக்காகாமல் இருக்கும் தன்மை கொண்டது.
இப்போது மண்வெட்டி போன்ற வேளாண்மைக் கருவிகளுக்கு கைப்பிடிகளாக புன்னை மரம் பயன்படுகிறது.
இம்மரம் வளரும் இடங்களில் நிலத்தடி நீர் வளம் அருகில் இருக்க வேண்டும். அவ்வாறு இருக்குமெனில் இதற்கு நீர் எடுத்து ஊற்ற வேண்டிய அவசியம் இல்லை. நிலத்தடி நீர் வளம் குறைவான இடங்களில் நீர் எடுத்து ஊற்றி வளர்க்க வேண்டும்.
இம்மரம் பசுமைமாறா மரவகையைச் சேர்ந்தது. எனவே எப்போதும் இது பச்சை இலைகளோடு காணப்படும். இலைகள், காம்புகளில் பால் வடியும் தன்மை உள்ளது. அதனாலேயே வளப்பான பச்சையம் பெற்றிருக்கிறது. அதிக அளவிற்கு ஒளிச்சேர்க்கையில் ஈடுபடுகிறது.
இந்த மரத்தில் எப்போதும் பூக்கள் இருக்கின்றன, காய்களும் இருக்கின்றன. காட்டாமணக்கு, புங்கை போன்று அல்லாமல் எல்லாக் காலத்திலும் காய்கள் கிடைத்துக் கொண்டே இருக்கின்றன. இதன் அறிவியல் பெயர் “கோலோபில்லம் ஐனோபில்லம்’.
தமிழ்நாட்டின் சிறப்புப் பயிரான இம் மரத்தை அதிக அளவில் பெருக்கினால் நாட்டின் மாற்று எரிபொருள் தேவையை நிறைவு செய்து விடலாம். கோடிக்கணக்கில் பெட்ரோலியப் பொருள்களை இறக்குமதி செய்யும் செலவும் மிச்சமாகும்.
புன்னை மரங்களை அதிக அளவில் வளர்ப்பதன் முலம் நல்ல வளமான காடுகளையும் உருவாக்கிவிடலாம். இது சுனாமி போன்ற கடலோரப் பேரழிவைத் தடுக்கும் அரணாகவும் விளங்கும். தமிழகத்தின் 700 கி.மீ. தொலைவு நல்ல கடலரண் ஒன்று கிடைக்கும்.
அன்றைய சங்கத் தமிழ்த்தாய் சொன்ன புன்னையின் சிறப்பை இன்று நாம் உணர்ந்து பயன்படுத்துவோம்.