Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘National Police Commision’ Category

Corrections required for the Correctional Force – Prison Reforms

Posted by Snapjudge மேல் ஜூலை 9, 2007

தேவை, சிறைத்துறையில் மாற்றங்கள்

குற்றவாளிகளும் மனிதர்கள்தான் என்பதை முதலில் நாம் ஏற்றுக் கொள்கிறோமா? வாக்குரிமை பெற்றுள்ள அவர்களும் இந்தியக் குடிமக்கள்தானே? அப்படியானால், அவர்கள் ஏன் விலங்கினும் கீழாக நடத்தப்பட வேண்டும்? சிறைச்சாலைகள் ஏன் மாட்டுக் கொட்டகைகளைவிட மோசமான நிலையில், கவனிப்பாரற்று இருக்க வேண்டும்? ~ இதுபோன்ற கேள்விகள் சமூக ஆர்வலர்களால் அடிக்கடி எழுப்பப்படுகின்றன.

சிறைச்சாலைகளை நவீனப்படுத்தவும், புதிய சிறைச்சாலைகளை நிறுவவும் மத்திய அரசு 75 சதவிகித மானியம் வழங்குகிறது. தனது பங்குக்கு வெறும் 25 சதவிகிதம் செலவு செய்தால் போதும் என்கிற நிலைமையிலும் பெருவாரியான மாநிலங்கள், சொல்லப்போனால் அத்தனை மாநிலங்களுமே, அந்தச் சலுகையைப் பயன்படுத்திக் கொள்வதில்லை.

உலகிலேயே சிறைத்தொகை விகிதம் குறைவான நாடு இந்தியாதான்; லட்சம் பேரில் வெறும் 30 பேர்தான் சிறைகளில் இருக்கிறார்கள். அமெரிக்காவின் விகிதம் 737. ரஷியாவில் 613 பேர். குற்றம்புரியும் மனப்பான்மை இந்த அளவுக்குக் குறைவாக இருந்தும், நமது சிறைகள் நிரம்பி வழிகின்றன. மேலே சொல்லப்பட்ட புள்ளிவிவரமே முழுமையாகச் சரியானது என்று சொல்லிவிட முடியாது. காரணம், நமது சிறையில் அடைக்கப்படும் குற்றவாளிகளில் பலர், இன்னும் தீர்ப்பு வழங்கப்படாமல் காத்திருக்கும் அப்பாவிகள். குற்றம் நிரூபிக்கப்படாமலேயே பல ஆண்டுகள் காராகிரகத்தில் இருக்கும் குற்றவாளிகளின் எண்ணிக்கை மிகமிக அதிகம்.

அது ஒருபுறம் இருக்க, சிறைகள் இருக்கும் நிலைமையைப் பற்றிக் கேள்விப்படும்போது அதிர்ச்சியாக இருக்கிறது. எந்தவித அடிப்படைச் சுகாதார வசதிகளும் கிடையாது; துர்நாற்றமும், பராமரிப்பின்மையும் இணைபிரிக்க முடியாமல் இணைந்திருப்பவை; குண்டர்கள் மற்றும் ரௌடிகளின் அட்டகாசத்திற்குக் கணக்கு வழக்கே இல்லை; சிறைத்துறை அதிகாரிகள் மற்றும் காவலர்களின் உதவியோடு தடைசெய்யப்பட்ட எல்லாமே தங்குதடையின்றி சிறையில் புழங்குதல் – இப்படி நாம் கேள்விப்படுவதெல்லாமே உண்மை. உண்மையைத் தவிர வேறில்லை.

இந்த நிலைமைக்கு என்ன காரணம்? உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு இந்தியா என்று மார்தட்டிக் கொள்கிறோமே, நமது நாட்டில் சட்டதிட்டங்கள்தான் அதற்குக் காரணம். 1894-ஆம் ஆண்டு இயற்றப்பட்ட சிறைச்சாலைச் சட்டம்தான் இப்போதும் அமலில் இருக்கிறது என்று சொன்னால் ஆச்சரியமாக இல்லை? காலனி ஆதிக்கத்தில் இருந்தபோது இயற்றப்பட்ட சட்டத்தை அடிப்படையாகக் கொண்டு சுதந்திர இந்தியச் சிறைகள் செயல்படுகின்றன.

காலனி ஆதிக்கம் பிறப்பித்த சட்டம் என்பதால், சிறை என்பது பொதுமக்களின் பார்வைக்கு அப்பாற்பட்ட, பத்திரிகைகள் மற்றும் பொதுநல ஆர்வலர்களின் புலன் விசாரணைக்கு உட்படாத பகுதியாக இப்போதும் இருந்து வருகிறது. சிறைக்குள் நடப்பதைப் படம்பிடிக்க முடியாது. எழுத முடியாது. கேள்வி கேட்க முடியாது. அந்த நான்கு சுவர்களுக்குள் என்ன நடந்தாலும் அது வெளியே வராது, தெரியாது என்கிற நிலைமை தொடர்ந்தால், சீர்திருத்தம் எப்படி நிகழும்?

இந்த நிலைமை சமூக விரோதிகளுக்கும், சுயநலவாதிகளான சில அதிகாரிகளுக்கும் சௌகரியமாக இருக்கிறது. அதேபோல, காவல்துறையினருக்கும் இந்த நிலைமை தொடர்வது வசதியாக இருக்கிறது. வெளியே காவல்நிலையங்களில் தங்களால் பழி வாங்க முடியாத, பழிதீர்த்துக் கொள்ள முடியாதவர்களை ஏதாவது காரணம் காட்டி கைது செய்து சிறையில் அடைத்துவிட்டால், அவர்களை வழிக்குக் கொண்டு வருவது காவல்துறையினருக்கு எளிதாக இருக்கிறது. ஆனால், காவல்துறையினர் மறந்துவிடும் விஷயம் என்னவென்றால், இதுவே சமூக விரோதிகளுக்கும், குற்றவாளிகளுக்கும் இடையில் நட்புறவை வளர்த்துக் கொள்ளப் பயன்படுகிறது என்பதை.

நீதிமன்ற மேற்பார்வை நடப்பதில்லையா என்று கேட்கலாம். நடக்கிறது. ஆனாலும், சிறைகளின் நிலைமை இப்படி இருக்கிறதே என்று நாம் யாரிடம் போய் கேட்பது? மேற்பார்வை சரியாக இருக்குமானால், இந்தச் சீர்கேடுகள் நிலவுவானேன்? இத்தனை விசாரணைக் கைதிகள், தாங்கள் எதற்காகச் சிறையில் அடைக்கப்பட்டு வாழ்கிறோம் என்று மறந்துபோன நிலையில் சிறைப் பறவைகளாகத் தங்கள் வாழ்க்கையைத் தொடருவானேன்?

தேர்தல் சீர்திருத்தம் பற்றி, நிர்வாகச் சீர்திருத்தம் பற்றி, பொருளாதாரச் சீர்திருத்தம் பற்றி, சமுதாயச் சீர்திருத்தம் பற்றியெல்லாம் நாளும் பொழுதும் பேசிக்கொண்டிருக்கிறோமே, நாம் மறந்துவிட்ட முக்கியமான விஷயங்கள் சில உண்டு. அவற்றில் தலையாயவை காவல்துறை, நீதித்துறை மற்றும் சிறைத்துறைச் சீர்திருத்தங்கள்.

மக்களாட்சியில் மக்களின் பார்வையிலிருந்து யாரும் எதையும் மறைத்து வைப்பது என்பது மக்களாட்சித் தத்துவத்துக்கு இழுக்கு!

————————————————————————————-

காவல் துறை சீர்திருத்தங்கள்

என். ரமேஷ்

பொதுமக்களின் நியாயமான புகார்களைப் பதிவு செய்ய மறுப்பது; முதல் தகவல் அறிக்கை தராமல் இருப்பது, காவல் நிலையச் சாவுகள், ஆளுங் கட்சியினரின் அத்துமீறல்களைக் கைகட்டி வேடிக்கை பார்ப்பது, போலி “மோதல் சாவுகள்’, வாக்குமூலம் பெற கொடுமையான வழிமுறைகள் என அப்பட்டமான மனித உரிமை மீறல்கள் குறித்து, காவல் துறையின் மீது பல புகார்கள்.

காலனியாதிக்க அடக்குமுறையை அடித்தளமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட 1861-ஆம் ஆண்டு காவல் துறைச் சட்டம் மற்றும் விதிமுறைகளின் அடிப்படையிலேயே, இன்றைக்கும் செயல்படுகிறது காவல் துறை.

இந்நிலையை மாற்றும் நோக்கில் 1977-ஆம் ஆண்டு ஜனதா கட்சி ஆட்சிக் காலத்தில் முன்னாள் ஆளுநர் தரம் வீரா தலைமையில் அமைக்கப்பட்ட தேசிய காவல் ஆணையம் (National Police Commision்) எட்டு அறிக்கைகளை அளித்தது. ஆனால், இந்த அறிக்கைகள் அளிக்கப்பட்டு 27 ஆண்டுகளாகியும், இதன் அடிநாதமான அம்சங்கள் அமல்படுத்தப்படவில்லை.

இந்நிலையில், ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி பிரகாஷ் சிங் தேசிய காவல் ஆணையப் பரிந்துரைகளை அமல்படுத்தக் கோரி உச்ச நீதிமன்றத்தில் 1996-ல் மனுத் தாக்கல் செய்தார். இதை விசாரித்த உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ஒய்.கே. சபர்வால் தலைமையிலான பெஞ்ச் 22-9-2006-ல் முக்கியத் தீர்ப்பை அளித்தது. இதில், ஜனநாயக அமைப்புக்கு உகந்த காவல் சட்டங்களை மத்திய, மாநில அரசுகள் இயற்றும்வரை, நடைமுறைப்படுத்தப்பட வேண்டியவற்றை 6 அம்சங்களாகப் பிரித்து உத்தரவு பிறப்பித்தது.

வெளிப்படைத்தன்மை, மாநில அரசின் சட்டவிரோத நிர்பந்தங்களுக்கு அடிபணியாமை, சட்ட அடிப்படையிலான காவல் துறையின் செயல்பாடு ஆகியவற்றை உறுதி செய்வதற்கான மாநில பாதுகாப்பு ஆணையம் அமைக்கப்பட வேண்டும். முதல்வர் அல்லது உள்துறை அமைச்சரைத் தலைவராகக் கொண்டும், மாநில காவல் துறை தலைமை இயக்குநரைச் செயலராகக் கொண்டும் செயல்படும் இதில் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர், தன்னார்வ அமைப்புகளின் பிரதிநிதிகள் இடம் பெற வேண்டும். தகுதி அடிப்படையில் காவல் துறை தலைமை இயக்குநர் (டிஜிபி) நியமிக்கப்படவும், ஒருவர் குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகள் அப் பதவி வகிப்பதையும் உறுதி செய்ய வேண்டும். மண்டல ஐ.ஜி, எஸ்.பி., இன்ஸ்பெக்டர் ஆகியோரது பதவிக்காலமும் குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகளாக இருக்க வேண்டும்.

சட்டம்- ஒழுங்குப் பிரிவு, விசாரணைப் பிரிவு ஆகியவை தனித்தனியாகப் பிரிக்கப்பட வேண்டும். காவல் துறையினரின் இடமாற்றம், பதவி உயர்வு, பணி நியமனம் ஆகியவற்றை முடிவு செய்ய, மேல்முறையீடுகளை விசாரிக்க பணிநிலை வாரியம் அமைக்க வேண்டும். டி.எஸ்.பி. வரையிலான காவல் துறை அலுவலர்கள் மீது பொதுமக்கள் அளிக்கும் புகார்களை விசாரிக்க மாவட்ட நிலையில் ஓர் ஆணையமும், எஸ்.பி. முதல் உயர்நிலை அதிகாரிகள் வரையிலானோர் மீதான புகார்களை விசாரிக்க மாநில ஆணையமும் அமைக்கப்பட வேண்டும். இவற்றுக்கு முறையே ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதிகள், உயர் நீதிமன்ற நீதிபதி தலைவராக நியமிக்கப்பட வேண்டும். மத்திய அரசு தேசிய பாதுகாப்பு ஆணையத்தை அமைக்க வேண்டும். இவற்றை 2006 டிசம்பர் 31க்குள் நிறைவேற்ற வேண்டும் என உத்தரவிடப்பட்டது. பின்னர், இக் காலக்கெடு 2007 மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டது.

தமிழக அரசு இந்த ஆணைகளில் மிக முக்கியமானவற்றை அமல்படுத்த முடியாது எனக் கூறிவிட்டது. காவல் துறையை, அரசியல் தலையீட்டிலிருந்து பாதுகாப்பதற்காக உருவாக்க வேண்டிய மாநில பாதுகாப்பு ஆணையத்தை (State Security Commision) அமைப்பதற்கு ஆட்சேபம் தெரிவித்துள்ளது. மனித உரிமைகளைக் காப்பது என்ற கோணத்தில் முக்கியத்துவம் வாய்ந்த, காவலர்கள் புகார் ஆணையம் (Police Complaints Authority) அமைப்பது குறித்தும் மாறுபட்ட கருத்தைத் தெரிவித்துள்ளது. புதிய அமைப்பு மற்றொரு “இணையான அதிகார மையமாக’ செயல்படுவதால் இரட்டிப்புச் செலவு ஏற்படும் என மாநில அரசு கூறியுள்ளது. இது ஏற்க முடியாத வாதம்.

புதிய காவல் துறை சட்டத்தை உருவாக்கத் தொடங்கிவிட்டதாக உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது தமிழக அரசு. சோலி சோரப்ஜி தலைமையிலான குழு உருவாக்கித் தந்துள்ள மாதிரி காவல் சட்டம், மாநில பாதுகாப்பு ஆணையத்துக்கு இணையான, மாநில போலீஸ் வாரியம் அமைக்கப் பரிந்துரைத்துள்ளது.

மிக முக்கியமாக, காவல் துறையினர் மீதான பொதுமக்களின் புகார்களை விசாரிக்கவும், துறை சார்ந்த விசாரணைகளை மேற்பார்வையிடவும் அதிகாரம் பெற்ற ஓய்வு பெற்ற நீதிபதிகளைத் தலைவர்களாகக் கொண்டு மாவட்ட, மாநில ஆணையங்கள் அமைக்கப்பட வேண்டும் எனவும் மாதிரிச் சட்டம் பரிந்துரைத்துள்ளது. எஃப்ஐஆர் பதிய மறுப்பது, சட்டவிரோத கைது- பிடித்து வைத்தல்- தேடுதல் உள்ளிட்ட சில “வழக்கமான’ போலீஸ் அத்துமீறல்களுக்கு கிரிமினல் தண்டனை வழங்கவும் மாதிரிச் சட்டம் வகை செய்கிறது.

புதிய காவல் சட்டத்தில் இதுபோன்ற முக்கிய அம்சங்கள் இடம் பெறுவதை உறுதி செய்ய வேண்டியது அரசியல் கட்சிகளின் கடமை மட்டுமல்ல; குடிமக்களின் கடமையும்கூட

Posted in Analysis, Citizens, Civil, Correctional, Courts, Criminal, HC, Jail, Judges, Justice, Law, National Police Commision, Op-Ed, Order, Police, Police Complaints Authority, Prison, reforms, SC, Society, solutions, State Security Commision, Suggestions | Leave a Comment »