சர்வதேச மகளிர் சம்மேளன துணைத் தலைவராக இந்தியப் பெண் தேர்வு
புது தில்லி, ஏப். 25: சர்வதேச ஜனநாயக மகளிர் சம்மேளனத்தின் துணைத் தலைவர்களில் ஒருவராக, இந்திய தேசிய மகளிர் சம்மேளனத்தின் பொதுச் செயலர் ஆன்னி ராஜா (படம்) தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
சர்வதேச சம்மேளனத்தின் 14-வது மாநாடு, வெனிசூலா தலைநகர் காரகாஸில் சமீபத்தில் நடைபெற்றது. அதில், இந்திய சம்மேளனத்தின் தலைவர் சாரதாமணி, ஆன்னி ராஜா, கிருஷ்ணா மஜும்தார், பி.வி. விஜயலட்சுமி, ஆந்திரத்தின் பஸ்யா பத்மா, கேரளத்தின் கமலா சதானந்தன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். வெனிசூலா அதிபர் ஹியூகோ சாவேஸ் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.
பெண்களுக்கு அதிக அதிகாரம் அளிக்க வேண்டும் என்றும், ஏழை மக்களைப் பாதிக்கும் தாராளமயக் கொள்கைகளுக்கு எதிராகவும் இந்த மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சர்வதேச சம்மேளனத்தின் தலைவராக பிரேசில் நாட்டைச் சேர்ந்த மர்கியா கேம்போஸ் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்தியாவின் ஆன்னி ராஜாவுடன், பாலஸ்தீனம், அங்கோலா, ஆர்ஜென்டீனா, சைப்ரஸ் நாடுகளின் பிரதிநிதிகள் துணைத் தலைவர்களாகத் தேர்வு செய்யப்பட்டனர்.