Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Nasser’ Category

Empton Magan – Tamil Cinema Movie Review

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 19, 2006

எம் மகன்: விமர்சனம்

மனோஜ்கிருஷ்ணா

தந்தை -மகன் உறவு எப்படி இருக்க வேண்டும் என்பதையும், தந்தையின் கண்டிப்புக்குப் பின்னால் கரிசனம் இருக்கும் என்பதையும் பாசம், காதல், சென்டிமெண்ட், நகைச்சுவை கலந்து ஆபாசமில்லாமல் கூறியிருக்கும் நல்ல படம்.

நாசர் பலசரக்கு கடை வைத்திருப்பவர். அவருடைய மகன் கல்லூரியில் படிக்கும் பரத். கல்லூரி நேரம் போக மீதி நேரத்தில் கடையில் வேலை பார்க்கிறார். சின்ன சின்ன விஷயங்களைக் கூட பெரிதுபடுத்திப் பார்க்கும் தந்தையிடம் அடிக்கடி அடி வாங்குகிறார். இவ்வாறான சூழ்நிலையில் இருக்கும் பரத்துக்கு ஒரே ஆறுதல்… அவருடைய முறைப் பெண்ணின் நினைவுகளே. அவர் கோபிகா. ஆனால் நாசருக்கும், கோபிகாவின் தந்தைக்கும் நீண்ட கால குடும்பப் பகை. ஒரு சந்தர்ப்பத்தில் இரண்டு குடும்பங்களும் சந்திக்க நேரிட… அடுத்து என்ன நடக்கிறது என்பதே கதை.

படத்தில் நாசர் நடிக்கவில்லை. வாழ்ந்திருக்கிறார். அனைவரையும் ஈர்க்கும் அற்புதமான நடிப்பாற்றல்! நாசர் பேசும் இயல்பான வசனங்கள், பாடி லாங்வேஜ் மூலம் அவர் காட்டும் விதவிதமான முக பாவனைகள், அவருடைய ஒப்பனை போன்ற அம்சங்கள் அவரை சிறந்த கலைஞர் என அடையாளம் காட்டுகின்றன.

பரத் நன்றாக நடித்திருக்கிறார். தன்னுடைய வளர்ச்சிக்குக் காரணமாக தந்தையின் உழைப்பை உதாரணமாகக் காட்டும்போதும், கோபிகாவுடனான காதல் காட்சிகளிலும் நல்ல நடிப்பு. நடனக் காட்சிகளிலும், சண்டைக் காட்சிகளிலும் விறுவிறுப்பு காட்டியிருக்கிறார்.

பரத்தின் தாய் மாமனாக வரும் வடிவேலு படத்துக்கு பெரிய பலம். அவர் வரும் அனைத்துக் காட்சிகளிலும் கலகலப்பு. நகைச்சுவையிலும், குணச்சித்திரத்திலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். யதார்த்தமான நடிப்பில் மிளிர்கிறார் சரண்யா. கோபக்கார கணவருக்குத் தெரியாமல் தாய் வீட்டுக்குச் சென்று தன்னுடைய சொந்த பந்தங்களோடு மனம் விட்டுப் பேசும் காட்சிகள், சாமியாட்ட காட்சிகள் போன்றவை சிறப்பு. கோபிகா கிராமத்துப் பெண்களுக்கேயுரிய சுபாவங்களைத் தன்னுடைய நளினமான நடிப்பால் வெளிப்படுத்தியிருக்கிறார். பரத்தின் கல்லூரித் தோழியாக வரும் கஜாலாவின் நடிப்பில் நல்ல முதிர்ச்சி. தந்தையிடம் தோழமை உணர்வோடு அவர் பேசும் காட்சிகள் சிறப்பு. கோபிகாவின் தந்தையாக வரும் சண்முகராஜன், படத்தில் ஆங்காங்கே தலைகாட்டும் சின்னத் திரை கலைஞர்கள் ஆகிய அனைவரும் யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்கள்.

பாஸ்கர் சக்தியின் வசனங்கள் ரசிகர்களைப் படத்தோடு ஒன்றச் செய்கின்றன. வித்யாசாகரின் இசையில் “கோலிகுண்டு’, “வர்றாரு’ பாடல்கள் ரசிகர்களைக் கவரும். பின்னணி இசையும் சிறப்பு.

படத்தை சலிப்பூட்டாமல் விறுவிறுப்போடு இயக்கியிருக்கிறார் “மெட்டி ஒலி’ திருமுருகன். ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் மிக உன்னிப்பாகத் தேர்ந்தெடுத்து அனைவரையும் நன்கு பயன்படுத்தியிருக்கிறார். சாவுக்குக் காத்திருக்கும் “என்னத்த’ கன்னையா சம்பந்தப்பட்ட காட்சிகளில் மனம்விட்டு சிரிக்கலாம். பல காட்சிகளில் “திரைக்கதை வித்தகர்’ கே.பாக்யராஜின் சாயல் தெரிகிறது. இடைவேளைக்குப் பிறகு சிறிய தொய்வு. சில பாடல்கள் படத்தின் வேகத்தைக் குறைப்பதைத் தவிர்த்திருக்கலாம்.

“எம் மகன்’ பெரிய திரையில் வலம் வருவோம் என்ற கனவோடு உலா வந்துகொண்டிருக்கும் சின்னத் திரை கலைஞர்களுக்கு “நம்மாலும் முடியும்’ என்ற நம்பிக்கையை விதைத்திருக்கிறார் திருமுருகன்.

Posted in Bharath, Dinamani, Em Magan, Empton Magan, Ghajala, Gopika, Kollywood, Metti Oli, Movie, Nasser, Picture, review, Tamil, Tamil Cinema, Thirumurugan, Vadivelu | Leave a Comment »

South Indian Film Chamber Elections

Posted by Snapjudge மேல் ஜூலை 31, 2006

விறுவிறுப்பான வாக்குப் பதிவு அமைதியாக நடந்த நடிகர் சங்கத் தேர்தல்

சென்னை, ஜூலை 31: தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் பெரிய பிரச்சினைகள் ஏதுமின்றி அமைதியாக நடைபெற்றது.

2006-2009 பதவிக் காலத்துக்கு நிர்வாகிகளைத் தேர்ந்தெடுப்பதற்கான நடிகர் சங்கத் தேர்தல் தியாகராய நகரிலுள்ள நடிகர் சங்கத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதில் வாக்குரிமை உள்ள மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 1898. தபால் வாக்குரிமை உள்ளவர்கள் 576. வாக்குப் பதிவு காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை விறுவிறுப்பாக நடைபெற்றது.

ஆயுள் கால உறுப்பினரான ஜேப்பியார் காலை 8.10 மணியளவில் முதல் நபராக வந்து வாக்களித்தார். சரத்குமார் காலை 8.30 மணிக்கும், விஜயகாந்த் காலை 10.40 மணிக்கும் வந்து வாக்களித்தனர்.

இதைத் தொடர்ந்து நடிகர்கள் நெப்போலியன், விக்ரம், விஜய், ஸ்ரீகாந்த், பார்த்திபன், விவேக், விணுசக்கரவர்த்தி, கரண், பரத், எஸ்.வி.சேகர், திருநாவுக்கரசர் (பாஜக), ராதாரவி, சின்னிஜெயந்த், விஜயகுமார் உள்ளிட்ட பலர் வாக்களித்தனர்.

நடிகைகளில் மனோரமா, ராதிகா, ஸ்ரீபிரியா, ரேவதி, சந்தியா, எம்.என்.ராஜம், வெண்ணிற ஆடை நிர்மலா, மும்தாஜ், விந்தியா, தேஜாஸ்ரீ, மஞ்சுளா உள்ளிட்ட பலர் வாக்களித்தனர்.

சலசலப்பு:இவர்கள் தவிர வெளியூர்களில் இருந்து வந்து ஏராளமான சினிமா மற்றும் நாடக நடிகர், நடிகைகளும் வாக்களித்தனர்.

அப்போது நடிகர் சங்க வளாகத்துக்குள் வெளியூரிலிருந்து வந்தவர்களை அமர வைக்கக் கூடாது என்று பொருளாளர் பதவிக்குப் போட்டியிடும் நல்லதம்பி தெரிவித்தார்.

அவர்களும் உறுப்பினர்கள்தான்; அவர்கள் அமருவதில் தவறு ஏதுமில்லை என்று நடிகர் செந்தில் கூற அங்கு சிறு சலசலப்பு ஏற்பட்டது. பின்னர் சரத்குமாரும், போலீஸôரும் தலையிட்டு பிரச்சினையைப் பெரிதுபடுத்தாமல் பார்த்துக்கொண்டனர்.

நடிகர் சங்கத் தலைவரான விஜயகாந்த் இந்தத் தேர்தலில் போட்டியிடாததால் அப்பதவிக்கு நடிகர்கள் சரத்குமாரும், நாசரும் போட்டியிட்டனர்.

நாசர் திடீரென தனது வேட்பு மனுவை வாபஸ் பெற்றதால் சரத்குமார் ஏற்கெனவே ஒருமனதாக நடிகர் சங்கத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டார்.

சங்கத்தின் மற்ற நிர்வாகிகளைத் தேர்ந்தெடுக்க நடைபெற்ற இத் தேர்தலில் பொதுச் செயலாளர் பதவிக்கு ராதாரவி, மன்சூர் அலிகான் ஆகியோரும், துணைத் தலைவர்கள் பதவிக்கு விஜயகுமார், மனோரமா உள்ளிட்ட ஐந்து பேர் போட்டியிடுகிறார்கள்.

பொருளாளர் பதவிக்கு நல்லதம்பி, கே.என்.காளை ஆகியோர் போட்டியிடுகிறார்கள். 24 செயற்குழு உறுப்பினர்கள் பதவிக்கு சத்யராஜ், பிரஷாந்த், சிலம்பரசன், அப்பாஸ், செந்தில், முரளி, ஸ்ரீபிரியா, மும்தாஜ், விந்தியா, அலெக்ஸ், சார்லி உள்ளிட்ட 46 பேர் போட்டியிடுகிறார்கள்.

சரத் அணிக்கு விஜயகாந்த் ஆதரவு: இத் தேர்தலில் சரத்குமார் அணி சார்பாக போட்டியிடும் நிர்வாகிகளுக்கு விஜயகாந்த் ஏற்கெனவே ஆதரவு தெரிவித்திருந்தார்.

தேர்தலில் சரத் அணி சார்பாக போட்டியிடும் நிர்வாகிகளுக்கே வெற்றி வாய்ப்பு அதிகம் என்று தெரிகிறது.

எம்.கே.வி.ராஜாமணி தலைமைத் தேர்தல் அதிகாரியாக பொறுப்பேற்று சங்கத் தேர்தல் அமைதியாக நடைபெற உதவினார்.

ஆகஸ்ட் 4-ல் புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்பு: தேர்ந்தெடுக்கப்படும் புதிய நிர்வாகிகள் ஆகஸ்ட் 4-ம் தேதி பதவியேற்கிறார்கள்.

Posted in Actors, Dinamani, Election, Nasser, Sarathkumar, Tamil | Leave a Comment »