கல்கியின் சிரசாசனம்
சேந்தன் அமுதனுக்கு சிம்மாசனம்
– கல்கி இராஜேந்திரன்
கல்கி குடும்பத்தின் நலனில் அக்கறை உடைய நெருங்கிய நண்பர் ஒருவர், சென்ற இதழில் வெளியான கட்டுரையைப் படித்து விட்டு (நாவல் பிறந்த கதை) போன் செய்தார்.
“கல்கி சக எழுத்தாளர் ஒருவரின் நாவலைக் குறை வாக மதிப்பிட்டு அலட்சிய மாகப் பேசியதாக எழுதி யிருக்கிறாய். உன் சகோதரி ஆனந்தி, பதிலுக்கு, கல்கி அவர்களின் சிவகாமியின் சபதத்தையே குறைத்து மதிப்பிட்டது போலவும் எழுதியிருக்கிறாய். இதெல் லாம் எனக்கு ஒப்புதலாய் இல்லை’ என்று கருத்து தெரிவித்தார்.
சொன்னவர், கல்கி அவர்களை நன்கு அறிந்தவர். எனவே என் எழுத்தில்தான் ஏதோ குறை இருக்க வேண்டும் என்று எனக்குத் தோன்றுகிறது. அவரைப் போலவே வேறு பலரும் நினைக்கக்கூடும். ‘இதனால் அறியப்படுவது யாதெனில்’ என்று உணர்த்துவதுபோல எழுதுவதில் எனக்கு ஆர்வம் இல்லை. இருந்தாலும் சில சமயம் அது அவசியமாகிறது என்று உணர்கிறேன்.
கல்கி அவர்கள் சக எழுத்தாளரை மதிக்காமலில்லை. அப்படி இருந்தால் அவருடைய நாவலைப் படித்தே இருக்க மாட்டார். சிலரது எழுத்தை மதிக்கா விட்டாலும் எழுதியவரை மதிப்பவர் கல்கி. ஆனந்தியிடம் அவர் பேசியது ஒரு வாதத்தைக் கிளறுவதற்காகத்தானே தவிர, சக எழுத்தாளரைக் குறைத்து மதிப்பிடு வதற்காக அல்ல. அதேபோல சகோதாரி அவருக்குப் பதிலளித்தது, எங்களுக்கு அப்பா அளித்திருந்த சுதந்திரத்தின் வெளிப் பாடுதானே தவிர, அவளுடைய அதிகப் பிரசங்கித்தனம் அல்ல. சிவகாமியின் சபதத் துக்கு சிறப்பாயிரம் எழுதக் கூடியவள் ஆனந்தி. விஷயம் என்னவென்றால், கல்கி அவர்களுக்கு விவாதங்களில் நம்பிக்கைஉண்டு. கலந்துரையாடலும் அதில் இடம் பெறக்கூடிய வாதப் பிரதிவாதங்களும், தயிரைக் கடைந்தால் வெண்ணெய் திரள் வதுபோலத் தெளிவை உண்டாக்கும் என்பதை உணர்ந்தவர். ராஜாஜியுடன் அரசியலை விவாதிப்பார்; டி.கே.சி.யுடன் இலக்கியக் கருத்துப் பரிமாற்றங்கள் நடக் கும். ஒரு பொருளாதார விஷயம் பற்றி எழுத வேண்டுமென்றால் அது குறித்த விஷயஞானமுள்ளவரிடம் பேசுவார்; விவாதிப்பார். தொடர்கதை எழுதுமுன்னர் என்னிடமும் சகோதரியிடமும் கதை சொல்லுவார். எங்கள் முக பாவங்களை உற்று நோக்குவார். அதன் மூலமே கதை யின் சுவாரஸ்யத்தை எடை போடுவார்.
சிறு வயதிலேயே கதாகாலட்சேபங் கள் பலவற்றைக் கேட்டுக் கேட்டு, கிராமத்தில், வீட்டுத் திண்ணையில் நின்று, ஊர் மக்களுக்குக் கதை சொல்லி மகிழ் வித்தவர் கல்கி. ஆனந்தியும் நானும் குழந்தைகளாக இருந்தபோது, ஊஞ்சலில் அவருக்கு இருபுறமும் அமர்ந்து ராமா யணம், மகாபாரதம் உள்பட பல கதைகள் கேட்போம். கொஞ்சம் எங்களுக்கு வயதான பிறகு, அவர் எழுதப்போகும் தொடர்கதைகளையே பல்வேறு உணர்ச்சி கள் தொனிக்கச் சொல்வார். கேள்விகளை வரவேற்பார். கதை மேலே தொடரும். சில சமயம் ஒரு கேள்வியின் விளைவாக கதையில் ஒரு புதிய சிந்தனை தோன்றும்; திருப்பம் ஏற்படும்.
பொன்னியின் செல்வன் ஐந்தாம் பாகம் எழுதி வருகையில், ஒரு நாள் கல்கி சிரசாசன நிலையில் இருந்தார். நேரம் பார்ப்பது என் வேலை. பாடப் புத்தகமும் கடிகாரமுமாக நான் பக்கத்தில் அமர்ந்திருந் தேன். ஐந்து நிமிஷங்களுக்குப் பதில் மூன்றாவது நிமிஷம் இறங்கிவிட்டார். நான் கவலை அடைந்து, ‘என்ன? என்ன?’ என்று சற்று பதற்றத்துடன் அவரை நெருங்கினேன்.
“ஏண்டா! சேந்தன் அமுதனை சோழ சக்கரவர்த்தியாக்கிவிட்டால் என்ன?’ என்று என்னைக் கேட்டார். சிரசாசன நிலையிலும் அவர் மனம் பொன்னியின் செல்வனில்தான் இருந்திருக்கிறது என்பதைப் புரிந்துகொண்ட நான், “லாஜிக் சரியாக அமையுமானால் செய்ய லாம்’ என்று சொன்னேன். “ஒரு ண்தணூணீணூடிண்š ணாதீடிண்ணா இருக்கும்.’
அடுத்து, சவாசன நிலையிலும் அவர் உள்ளம் சேந்தன் அமுதனிடம்தான் இருந்தது. பின்னால் அந்தப் புதிய திருப்பத்தை அவர் விவரித்தபோது கவனமாகக் கேட்டு, கேள்விகளையும் எழுப்பினேன். பதில் கூறும்போதே பிசிறுகளை நீக்கி கதை யோட்டத்தைக் கச்சிதப்படுத்தினார்.
என்னைவிடவும் என் சகோதரிக்கு கொஞ்சம் சலுகையும் அதிகம்; துணிவும் மிகுதி. சிவகாமியின் சப தத்தை உள்ளடக்கிய அவளுடைய ஓர் எதிர் வாதத்துக்காக கல்கி கோபமடையவில்லை என்பதுதான் முக்கியம். மாறாக, ஒரு சவாலாக ஏற்றுக் கொண்டார். சாதாரணமாக எல்லா நாவல்களிலுமே கதாநாயகன், கதாநாயகி, வில்லன் அல்லது வில்லி என்று கதாபாத்திரங்கள் அமையும். கல்கி இந்த முக்கோணத்தை உடைத் தெறிந்தார் தமது அலை ஓசை நாவலில் (எப்படி என்பதை சென்ற வாரமே விளக்கி யிருக்கிறேன்). இதை அவர் சாதிப்பதற்கு, ‘ராமாயணத்தின் சாயல் சிவகாமியின் சபதத்தில் படிந்திருக்கிறது’ என்று ஆனந்தி கூறியது ஒரு தூண்டுகோலாக அமைந்தது.
ஆனந்தி அவர் எழுத்தில் குறை கண்டு விமர்சித்த வேறு தருணங்களும் உண்டு. வந்தியத்தேவன், பல்லக்கில் செல்லும் நந்தினியை முதன் முதலாகச் சந்திக்கும் சாட்சி, அலெக்ஸாண்டர் டூமா எழுதிய த்ரீ மஸ்கிடீர்ஸ் நாவலில் வரும் ஒரு காட்சி போலவே அமைந்திருப்ப தாக அவள் சொன்னதை கல்கி ஒரு தார்மிகத்
துணிவுடன் ஏற்றுக்கொண்டார். “சில சமயம் இப்படித்தான் தவிர்க்க முடியாதபடி பாதிப்பு ஏற்படும்; தொடர்ந்து படித்து வா, அப்புறம் சொல்லு’ என்றார். ஆயிரம் டூமாக்கள் வந்தாலும் நெருங்க முடியாத அளவுக்கு பொன்னியின் செல்வன் தன்னிகரற்ற ஓர் இலக்கியச் செல்வமாகத் தமிழனுக்குக் கிடைத்தது.
1954 தீபாவளி சமயம், உடல் பரிசோதனைகளுக்காக கல்கி, ஜி.ஹெச்.சில் சேர்க்கப்பட்டார். மருத் துவமனையில் இருந்தபடியே தீபாவளி மலருக்காக ‘மயில் விழி மான்’ என்ற கதையை எழுதினார். அதைப் படித்த ஆனந்தி, “கதையெல்லாம் பிரமாதம்தான்; ஆனால், இது என்ன மயில் விழி மான் என்று ஒரு தலைப்பு? நீங்கள் தரக்கூடிய தலைப்பாகவே இல்லை. பகீரதன்தான், ‘தேன்மொழியாள்’, ‘குயில் குரலாள்’ என்றெல்லாம் தலைப்பு தருவார்’ என்றாள்.
கல்கி ‘இடிஇடி’ என்று சிரித்துவிட்டு “அப்படியா! பகீரதன் என்னிடமிருந்து கற்றுக்கொள்வதற்குப் பதில் அவனிட மிருந்து நான் கற்றுக்கொள்ள ஆரம் பித்துவிட்டேன் போலிருக்கு!’ என்று கூறி, உடல் உபாதைகளையும் மறந்து மேலும் சிரித்தார்!