இலங்கையின் வடகிழக்கு வன்செயல்களில் குறைந்தது 10 பேர் பலி
![]() |
![]() |
இலங்கையின் வடக்கே இன்று யாழ்குடா நாட்டில் இடம்பெற்ற வெவ்வேறு வன்செயல்களில் இரண்டு பொதுமக்கள் உட்பட 7 பேர்வரை கொல்லப்பட்டதாக அங்கிருந்து கிடைக்கும்செய்திகள் கூறுகின்றன.
யாழ் குருநகரைச் சேர்ந்த வர்த்தகராகிய 40 வயதுடைய பிரான்ஸிஸ் பிலிப் என்பவர் இன்று காலை யாழ் இராசவின் தோட்டம் பகுதியில் இனந்தெரியாதோரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
அதேவேளை இன்று காலை 9.30 மணிக்கு மற்றுமொருவர் அடையாளம் தெரியாதோரால் கச்சேரி- நல்லூர் வீதியில் வைத்துச் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். இந்த இரண்டாவது சம்பவத்தில் கொல்லப்பட்டவர் இன்னமும் அடையாளம் காணப்படவில்லை.
இதற்கிடையே, முகமாலை இராணுவ முன்னரங்க பகுதியில் இன்று அதிகாலை 5 மணியளவில் விடுதலைப் புலிகளின் முன்னரங்க பதுங்கு குழிகள் மீது இராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் 5 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டுள்ளதாகப் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
![]() |
![]() |
யாழ் நகர் |
இதன்போது ஏற்பட்ட சண்டையில் இராணுவச் சிப்பாய் ஒருவர் காயமடைந்து பலாலி இராணுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது,
மன்னார் இராணுவ முன்னரங்க பிதேசமாகிய பெரியபண்டிவிரிச்சான், நரிக்குளம் ஆகிய பகுதிகளில் இராணுவத்தினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் நேற்று இடம்பெற்ற வெவ்வேறு மோதல் சம்பவங்களில் 7 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டுள்ளதாக தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் கூறியுள்ளது.
எனினும் இந்த மோதல் சம்பவங்கள் தொடர்பாக விடுதலைப் புலிகள் தரப்பிலிருந்து உடனடியாகத் தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.
இதேவேளை, மன்னார் பெரியதம்பனை பகுதியில் இராணுவத்தினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் இடம்பெற்ற மோதலில் கொல்லப்பட்ட 6 விடுதலைப் புலிகளின் சடலங்களும் வவுனியா வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டு, இன்று சர்வதேச செஞ்சிலுவைக் குழுவினரின் ஊடாக விடுதலைப் புலிகளிடம் ஒப்படைக்கப்பட்டதாக இராணுவம் தெரிவித்துள்ளது,
இந்த மோதல் சம்பவத்தில் இராணுவச்சிப்பாய் ஒருவர் கொல்லப்பட்டதுடன், மேலும் இருவர் காயமடைந்ததாக இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.
அதேவேளை கிழக்கே அம்பாறை மாவட்டத்தில் இடம்பெற்ற சம்பவம் ஒன்றில், இலங்கை விசேட அதிரடிப்படையினரின் துப்பாக்கிப் பிரயோகத்தில் 3 பேர் கொல்லப்பட்டுள்ளார்கள்.
செமினிக்குளம் என்னும் இடத்தில் காட்டுப்பகுதியில் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் உழவு இயந்திரத்தில் பயணித்த நிலையில் சுட்டுக்கொல்லப்பட்டவர்கள், விடுதலைப்புலிகள் அமைப்பின் உறுப்பினர்கள் என்று இராணுவத்தினர் கூறுகிறார்கள்.