மத்திய திட்டங்களை செயல்படுத்துவதில் குஜராத்தின் மோடி அரசு மெத்தனம்: மத்திய அரசு குற்றச்சாட்டு
வடோதரா, ஜன. 17: குஜராத்தை ஆளும் பாஜக தலைமையிலான நரேந்திரமோடி அரசு, மத்திய திட்டங்களை செயல்படுத்துவதில் மெத்தனப்போக்கைக் கடைப்பிடிக்கிறது என மத்திய செய்தி, ஒலிபரப்புத் துறை அமைச்சர் பிரியரஞ்சன் தாஸ் முன்ஷி குற்றம் சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:
- தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாத திட்டம்,
- சர்வசிக்ஷ அபியான் (அனைவருக்கும் கல்வி) திட்டம்,
- ராஜீவ் காந்தி கிராமப்புறங்களில் மின்சார வசதி ஏற்படுத்தும் திட்டம் போன்ற மத்திய திட்டங்களை செயல்படுத்துவதில் மோடி அரசு மெத்தனம் காட்டுகிறது.
அரசியல் அடிப்படையில் இந்தக் குற்றச்சாட்டை கூறவில்லை. குஜராத் என்றில்லாமல் பல்வேறு மாநில அரசுகளும் இதில் மெத்தனப்போக்கையே கடைப்பிடிக்கின்றன.
குஜராத் அரசுக்கு பாரபட்சம் காட்டுவதாக பாஜக எம்பிகள் கூறியுள்ள குற்றச்சாட்டை மறுத்துள்ள அவர், சர்தார் சரோவர் அணையை உயர்த்தும் பிரச்சினை, பூகம்பத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மறுவாழ்வு அளிப்பதில் உதவி, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைந்து நிவாரணம் வழங்கியது என எப்போதும் மத்திய அரசு குஜராத்துக்கு உதவி புரிந்து வருகிறது என்றார்.
வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதியை, குஜராத்தின் பஞ்சமகால் மாவட்டத்தில் தவறாகப் பயன்படுத்தியாகவும் புகார் வந்துள்ளதாக தாஸ்முன்ஷி கூறியுள்ளார்.