சிபு சோரன் தனிச்செயலர் கொலை செய்யப்பட்டது ஏன்?
புதுதில்லி, டிச. 11: ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவர் சிபுசோரனின் ஊழல் விவகாரங்கள் உள்ளிட்ட ரகசியங்களை சதிநாத் ஜா தெரிந்துவைத்திருந்ததால் அவரை திட்டமிட்டு கடத்திச் சென்று கொலை செய்துள்ளனர்.
மேலும் ரகசியங்களை அம்பலப்படுத்துவேன் என சசிநாத் ஜா அடிக்கடி சிபுசோரனை மிரட்டி பணம் பறித்து வந்ததும் தெரியவந்துள்ளது.
சசிநாத் ஜா கொலை வழக்கில் சிபு சோரன் மற்றும் 4 பேருக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து அண்மையில் தீர்ப்புக் கூறியுள்ளது.
ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவர் சிபு சோரனின் தனிச் செயலராக இருந்த சசிநாத் ஜா, 1993-ம் ஆண்டு சிறுபான்மை அரசாக இருந்த பி.வி.நரசிம்ம ராவ் அரசைக் காப்பாற்ற சிபு சோரன் லஞ்சம் பெற்றது உள்ளிட்ட பல்வேறு ரகசியங்களைத் தெரிந்துவைத்திருந்தார்.
1993-ம் ஆண்டு பி.வி.நரசிம்மராவ் தலைமையிலான சிறுபான்மை அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. நரசிம்மராவ் அரசை காப்பாற்ற சிபுசோரன் கோடிக் கணக்கில் லஞ்சம் பெற்றார். இதில் ரூ.30 லட்சத்தை அவர் பஞ்சாப் நேஷனல் வங்கியின் நௌரோஜி நகர் கிளையில் டெபாசிட் செய்திருந்தார். இந்த தொகையில் ரூ.15 லட்சத்தை சசிநாத் ஜா கேட்டார். ஆனால் இதற்கு உடன்பட சோரன் மறுத்துவிட்டார்.
சசிநாத் ஜாவின் இரு மகள்களான கவிதா, ப்ரீத்தி ஆகிய இருவரையும் விடுதியில் தங்கிப் படிப்பதற்கான செலவை ஏற்றுக்கொள்ள சிபுசோரன் முன்வந்துள்ளார்.
தனக்கு எதிரான வழக்கை வாபஸ் பெற கொலையுண்ட சசி நாத் ஜாவின் சகோதரர் விஜயநாத் ஜாவுக்கு ரூ.4 லட்சம் தர சிபுசோரன் முன்வந்துள்ளார். ஆனால் அதற்கு அவர் மறுத்துவிட்டார்.
சிபுசோரன், தில்லியில் எமஸ்ஸர்ஸ் சிமெக்ஸ் இன்டர்நேஷனல் என்ற வர்த்தக நிறுவனத்தை முதல் போட்டு தொடங்கினார். இதில் சசிநாத் ஜா, அவரது மனைவி, சுசில் குமார் என்பவர், மகன் ஹேமந்த் ஆகியோர் பங்குதாரர்களாகச் சேர்க்கப்பட்டனர். ஆனால் 1994-ல் இந்நிறுவனத்திலிருந்து ஜா நீக்கப்பட்டார்.
இதையடுத்து ரகசியங்களை அம்பலப்படுத்தப்போவதாக சிபு சோரனை மிரட்டி சசிநாத் ஜா பணம் பறித்து வந்தார். ஒரு கட்டத்தில் பணம் தர மறுத்த சோரன், அவரை கடத்திச் சென்று தீர்த்துக் கட்ட முடிவு செய்துள்ளார் என்று தில்லி நீதிமன்ற கூடுதல் செஷன்ஸ் நீதிபதி பி.ஆர்.கெடியா தனது 191 பக்க தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.