நில பிரச்சினை கிராம மக்களுடன் மோதல் இல்லை: மன்சூர் லிகான் விளக்கம்
சென்னை, பிப்.8-
நடிகர் மன்சூர் அலிகான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
நான் குன்றத்தூர் அருகே நல்லூர் என்ற இடத்தில் 5 வருடங்களுக்கு முன் 2 1/2 ஏக்கர் நிலம், முன்னாள், தி.மு.க. குன்றத்தூர் தலைவர் குப்புச்சாமி என்பவர் மூலமும், நல்லூர் முன்னாள் ஊராட்சித் தலைவர் பிரகாஷ் மூலமும், என்தம்பி பெயருக்கு வாங்கி ஸ்ரீபெரும்புதூர் பதிவாளர் அலுவலகத்தில் முறையே பத்திரம் எண் 1174/92, 405/மிக்ஷி/03 பதிவாகி இருக்கிறது.
இத்தனை வருடமும் அந்த இடத்தை பராமரித்து வந்தோம். சமீபத்தில் ரெட்டை ஏரி குடியிருப்பு மக்களுக்கு நல்லூர் அருகே அரசாங்கம் இடம் ஒதுக்கியது. அங்கு ஒரு வயோதிகர் மரணமடையவே, நல்லூர் மக்கள் அங்கே புதைக்க அனுமதி மறுத்ததால், அங்குமிங்கும் அலைந்து கடைசியில் எனது இடத்தில் புதைத்துவிட்டு சென்றிருக்கின்றனர்.
எனக்கு இந்த விஷயம் இரண்டு நாள் முன்புதான் தெரியும். எனவே எனது இடத்திற்கு சென்று, அந்த ஊரில் வேலைக்கு வந்த மக்களை வைத்தே, எல்லையை சீர் செய்தேன். ஊர்மக்களுடன் எந்த பிரச்சனையும் இல்லை. நீர், மோர் கொடுத்து, ஊர்மக்கள் அன்போடு உபசரித்தார்கள்.
விசாரணைக்கு வந்த அதிகாரிகளும் டாகுமென்டை வைத்து நிலத்தை அளந்து சரிபார்த்து சென்று விட்டார்கள். நானும் அதிகாரிகளிடம், புதிய குடியிருப்பு மக்களுக்கு வேறு இடத்தில் சுடுகாடு ஒதுக்குமாறு கேட்டு கொண்டேன்.
நேற்று முழுவதும், எனது புதிய படத்தின் பாடல் பதிவில் இருந்தேன். இன்றுதான் சம்பந்தப்பட்ட அமைச்சர் பெருமக்களை சந்தித்து புதிய குடியிருப்பு மக்களுக்கு சுடுகாடு அமைக்க இடம் ஒதுக்குமாறு வேண்டுகோள் வைக்க இருந்தேன். அதற்குள் வேறுமாதிரி செய்திகள் வந்திருப்பது எனக்கு வேதனையாக இருக்கிறது.
இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.